நான் உன் ரசிகன் அல்ல..

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

ருத்ரா


(சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த அவர்களை வாழ்த்தி எழுதிய கவிதை)

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்
எனும் கலைஞனே!
உன் பிறந்த நாள் விழாவுக்கு
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
ஆனாலும் நான் உன் ரசிகன் அல்ல.

உன் பிறந்த நாளை முன்னிட்டு
இந்த தமிழ்மண்ணில்
தூள் பறந்தது.
வாழ்த்தொலிகள்
புழுதி கிளப்பின.
தமிழ் மொழியின்
மழலை மொழியே
கன்னடம்
என்று
நினைப்பவர்கள் நாங்கள்.
அதனால்
நீ பிள்ளை மனம் கொண்டவன் என்று
நாங்கள் அறிவோம்.
இலட்சக்கணக்கான
எங்கள் நாட்டுப்பிள்ளைகூட
உனக்கு ‘பிள்ளைத்தமிழ் ‘ பாட
குவிந்து வந்தனர்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘
என்று
கன்னடத்தில் மொழிபெயர்க்காமலேயே
எங்கள் சங்கத்தமிழ்
உன் நெஞ்சை தொட்டிருக்கும்
என்பதை நாங்கள் அறிவோம்.

‘இமேஜை ‘ப்பற்றி
கவலைப்பபடாத
நடிப்பு மன்னன் நீ.
கவலைப்படுவதெல்லாம்
அந்த
குல்லாக்களும்
கருப்புக்கண்ணாடிகளும் தான்.
உன்னை
மூடிமறைத்துக்கொண்டு இந்த
மூங்கை மனிதர்களை
ஆளமுடியவில்லையே என்று

சினிமாப்புகழின்
சிகரம் ஏறிநின்றபின்
அரசியலில்
சிம்மாசனம் ஏறி
உட்கார்ந்தவர்களைப்பற்றி
எங்களுக்கு தொியும்.
நான் ஆணையிட்டால்
என்று
சவுக்கை சுழட்டிக்கொண்டு வந்து
சட்டசபைகள் வெறும் செட்டிங்குகள் அல்ல
என்று புாிந்து கொண்டபோதும்
குட்டையை குழப்பிவிட்டுப்போனவர்களின்
தந்திரங்கள்
உனக்கு ஏன் இன்னும்
புாியவில்லை என்பது தான்
எங்களுக்கு இன்னும்
புாியவில்லை.

அரசியல் நாற்காலி
முட்கள் நிறைந்தது என்று
நீ அச்சப்படுகிறாயோ ?
இந்த வாக்குப்பெட்டிக்குள்
முடங்கிப்போய்
அதன் பிறகு அதிலிருந்து
அதிகாரத்தின் ‘டிராக்குலாக்களாய் ‘
பீறிட்டுக்கிளம்பவேண்டுவது
அவசியம் தானா
என்று
நினைக்கிறாயோ ?
ஒருமுறை
பாதை இடறி
ஒரு தவறான பெட்டியின்மீது
நீ தடுக்கிவிழுத்தது தான்
இது வரை
நீ நடித்த நகைச்சுவைக்
காட்சிகளையெல்லாம் விட சிறந்தது.

அதுவும் ஒரு வகையில் உண்மைதான்.
ஜனநாயகம் என்ற சிந்தனையே
ஒரு சிறுபான்மையிடம் தான் இருக்கிறது.
பொிய மந்தைகளிடம் மாட்டிக்கொண்ட
அறியாமை எனும்
பெரும்பான்மைக்கு தான்
இன்னமும்
இந்த (தேர்)தல் திருவிழா
நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சூட்சுமம் புாிந்து கொண்டுதான்
நீ அடிக்கடி
இமயமலைக்குப்போய்
ஒளிந்து கொள்கிறாயோ ?

நீ உன் தலையை
வழுக்கையிலும் நரையிலும்
வைத்துக்கொண்டே
இந்த தமிழ்மக்களுக்கு
மணிமகுடம் அல்லவா
சூட்ட விரும்புகிறாய்.
உன் பெயாில் பாதியை
வைத்துக்கொண்டவர்கள் கூட
தங்கள் அாிதாரப்பேச்சுகளை
வைத்துக்கொண்டு
அரசியல் சாசனம் பற்றி
அடுக்குமொழிபேசி கொண்டிருக்கிறார்கள்.
அவரது ‘குடைக்குள்
உன் மழை பெய்யும் ‘ என்ற
நப்பாசைதான்.
இந்த பினாமி அலைகள்
ஒன்று சுனாமி அலைகள் அல்ல
புரட்சியை உண்டு பண்ண.

மொழியில் அந்நியன் என்று
உனக்கு
கொடிபிடிப்பவர்கள் கூட
அந்நியப்பட்டுப் போனார்கள்.
ஏனெனில்
அந்த மொழி உச்சாிக்கப்படுவது
அவர்கள் உதட்டுப்பிரதேசத்தில்
மட்டுமே.
உள்ளப்பூர்வமாய்
தொகுதிப்பங்கீடுக்கு
தூண்டில் போடும்
சுராமீனகள் அவர்கள்.
பதவி வாசனைக்கு
மீன்களே
கடலைப்பிடிக்க
தூண்டில்வீசும்
அதிசய பூமி அல்லவா அரசியல்.

பிறக்கின்ற குழந்தைக்கும்
பொக்கைவாய் பொிசுகளுக்கும்
உன் ‘ஸ்டைல் ‘ பிடிக்கும்.
வாயினால்
சிகரெட்டை சுழற்றுவது.
தீக்குச்சியில்லாமலே
பற்ற வைப்பது.
பாம்பை பிடித்து
முண்டாசுகட்டிக்கொள்வது.
ஒரு பெண்ணின்
‘பாத் ரூம் ‘ காட்சியைப்பார்த்து விட்டு
பகவானின் விஸவரூபக்காட்சியையே
பார்த்தது போல்
ஊருக்கெல்லம் சொல்லி
பரவசப்படுத்துவது.
ஒற்றையாளாய்
ஒல்லிக்குச்சியாய்
இருந்து கொண்டு
நூறுகுண்டர்களை கூட
புரட்டி எடுப்பது.
நியூட்டனின்
புவீஈர்ப்பு விதியையே
பொய்யாக்கி
வானத்துக்கும் பூமிக்குமாய்
பறந்த்து பறந்து தாக்குவது…
இன்னும் என்னவெல்லாமோ
….
இந்த கார்ட்டூன் காட்சிகள்
சினிமா சாித்திரத்தின்
உன்
கல்வெட்டுகளாய்
இந்த இரசிகர்களின்
நெஞ்சுகளில்
செதுக்கப்பட்டுவிட்டன.
இவை எப்போது அழிக்கப்படுமோ
அப்போது தான்
இவர்களுக்கு விடியும்
என்று நீயும்
மனப்பூர்வமாய் நம்புகிறாய்.

கல்லாப்பெட்டிகள் பிதுங்க பிதுங்க
நீ நிறைத்துக்கொடுத்தாலும்
செல்லாித்துப்போன சமுதாயத்தின்
எலும்புக்கூடுகளும்
அங்கே கிடப்பது
உனக்கு மட்டுமே தொியும்.
இந்த நிழல்பூக்கள்
எந்த மகரந்தங்களையும்
எந்த கனிகளையும்
தந்து விடப்போவதில்லை
என்று நீயே
இந்த ரசிகர்களுக்கு
பால் புகட்டுவது போல்
புகட்டியிருக்கிறாய்.
உனது அந்த நேர்மைக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
உன் வீட்டைப்பார்.
உன் நாட்டைப்பார்.
என்னை பார்த்தது போதும்
என்று கூட
உன் ரசிகர்களுக்கு
அறைகூவல் விடுத்து உள்ளாய்.
ரஜனிகாந்த என்ற மனிதனிடமிருந்து
ஒளிவீசும்
அந்த மனசாட்சிக்கும்
அந்த மனித நேயத்துக்கும்
என் ஆயிரம் வணக்கங்கள்.

உனது ‘பஞ்ச் டயலாக்குகள் ‘
எத்தனையோ
செம்மறியாடுகளுக்கு
அன்றாட தீவனங்கள் ஆகியிருக்கின்றன.
பஞ்சை பராாியான
இந்த மக்களின்
பஞ்சம் போக்க
ஒரு டையலாக் சொல்லு.
உன் பாபாக்களின்
சின் முத்திரைகளிலும்
அபய முத்திரைகளிலும்
அடங்கியிருக்கும் மந்திரங்களுக்கு
உயிரூட்டி
இந்த ஏழைகளை
கொஞ்சம் தலைநிமிரச்செய்.

வெறும் சமஸ்கிருத உச்சாிப்புகளில்
ஒரு அரைகிலோ
ரேஷன் அாிசி கூட வாங்க முடியாது.
அந்த அாிசிக்கு
தவம் கிடக்கும்
இந்த அட்டைப்பூச்சிகளூக்கு
உன் அட்டைசாம்ராஜ்யத்தில்
விடை கிடைக்காது என்று
உனக்கே தொியும்.
அதனால் தான் நீ நழுவி ஓடுகிறாய்.
ஏமாறத் தயாராய் இருந்தபோதும்
இந்த மக்களை
ஏமாற்ற விரும்பாத
உன் உள்ளப்பண்பு
உண்மையிலேயே
இமயங்களுக்கெல்லாம்
இமயம் தான்.

தமிழ்நாடு எனும் தேசத்துக்குள்
சினிமா என்பது
வெறும் கொட்டகைதான்.
அந்த கொட்டகையே
இப்போது
தமிழ்நாடு ஆகிப்போன
அவலம் கண்டு
நீயே கூட
ரகசியமாய்
ரத்தக்கண்ணீர் வடித்திருப்பாயோ ?
இந்த போஸ்டர்களைக்கொண்டு
ஒரு புதியயுகம்
படைக்க முடியாது என்றுதான்
பகடைக்காய் உருட்டும்
இவர்களின்
விளையாட்டை விட்டு விட்டு
அந்த ருத்ர பிரயாகை
ஆற்றங்கரையில்
அமைதி தேடுகிறாய்.
உனக்குள்ளேயும்
ஒரு புனித லட்சியம்
புதைந்துதான் கிடக்கிறது.

சினிமா காமிராக்களின்
குருட்டுக்கண்களுக்கு
அது வெறும்
குத்து டான்ஸ்கள் தான்.
டூப்புகளால்
நடத்தப்படும் அந்த
குருட்சேத்திர சண்டைகளின்
குழிகளில் தான்
நம் மகாபாரதம்
சமாதியாகிக்கிடக்கிறது.
நாலாபுறமும் பறந்து வந்து
துளைத்த
பண வசூலின்
அம்புபடுக்கையில்
படுத்துகிடந்து
கண்ணீர் விட்டது போதும்.
ஒரு புதிய பீஷ்மராய்
புறப்பட்டு வா !

கட கடத்த அச்சு எந்திரத்துக்கு
எழுத்து கோர்ப்பது போல்
ஒர் சினிமாப்படத்தின்
இசைக்கருவிகளின்
அரக்கத்தனமான வாய்களுக்கு
தீனி போட
இந்த எழுத்துக்களை
நான் இங்கு தூவி விட வரவில்லை.
வைரமுத்துக்களும்
பா.வி(ஜய்) களும்
இன்னும்
எத்தனையோ
பேனாக்களும்
அன்னத்தூவிகளாய்
உன்னை வருடிக்கொடுக்க
காத்திருக்கும் போது
இந்த முகம் தொியாத
ருத்ராக்களை கண்டு
நீ சஞ்சலப்பட தேவையில்லை.

உன் மனக்குகையில்
தீப்பிடித்துக்கொண்டிருக்கும்
கண்ணுக்குத்தொியாத
அந்த நெருப்பு
இந்த பொய்மைகளை
பொசுக்க
என்றேனும்
புறப்பட்டுவரும்
என்ற நம்பிக்கையே
எனது இந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை.
இந்த நீடுழிகள்
உன்னுடன் ஓடி ஓடி வந்து
களைத்துப்போகும் அளவுக்கு
நீ நீடூழி வாழ்க.
ஆம்
நீடூழி வாழ்க நீ.

==
ருத்ரா
epsi_van@hot.mail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா