மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

சுகுமாரன்


(மொழிபெயர்ப்பு)
1…பாடல்
—-

நீ விழிக்கவேண்டும்
ஒரு மலர்போலல்ல
ஒரு எரிமலையைப்போல.

நீ உயரவேண்டும்
ஒரு பறவைபோலல்ல
ஒரு சூரியனைப்போல.

நீ விழவேண்டும்
ஒரு இலைபோலல்ல
ஒரு மின்னலைபோல.

இருக்கவிடு என்னை
மலராக பறவையாக இலையாக.


2…எனது புறமும் அகமும்
—-

எனக்கு வெளியில்
மொத்த உலகமும் யுத்தத்திலும் கனவிலும் சுழல்கிறது.

ஆனால் எனக்குள்ளேயும்
அதன் குரல் எதிரொலிக்கிறது

எனக்கு வெளியில்
அவர்கள் காதலிக்கிறார்கள் கொல்கிறார்கள்
இலட்சக்கணக்கானவர்களைப் பிறப்பிக்கிறார்கள்

ஆனால் எனக்குள்ளேயும்
காதல்
கொலை
பிறப்பு
எல்லாம் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன.


3…தோழர் …க்கு ஓர் உரத்த கேள்வி
—-

எப்படி மறைப்பதென்று
உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
உங்கள் கன்னங்களின் வெளிறலைச்
சாயத்தால் மறைத்துக்கொள்கிறீர்கள்.
ஆனால்
உங்கள் ஆன்மாவின் வெளிறலை
எப்படி மறைப்பதாக உத்தேத்திருக்கிறீர்கள் ?

@


4…காகிதம்
—-

உனது பிரிவைப்பற்றி நீ எழுதுவதை நான் விரும்பவில்லை
உனது தேவதைக்குப் பொருத்தமானதல்ல பிரிவு
உனது கவிதை
தொலைதூர நட்சத்திரத்தின் குளிரேறிய
சமிக்ஞைகளைப் பரிமாறுகிறது.

ஒரு துண்டு வெள்ளைக் காகிதம், முழுவெள்ளை,
நீலக் கறை, ஓரங்களில் நீலக்கறை,
அவளது பிரிவுக்காக நீ ஒதுக்கியிருப்பது
இந்தக் கவிதையைத்தானா ?


5…மோசமானதாக இருக்கலாம்
—-

ஒவ்வொரு நாள் காலையிலும்
ஒரேபோல விழித்தெழுவது
மோசமானதாக இருக்கலாம்.

ஆனால்
ஒருநாளின் முடிவை
காலைக் கண்களுடன் பார்ப்பது
அதைவிட இன்னும் மோசம்.


6…ஒரு கணம் பொறுத்திரு
—-

ஒரு கணம் பொறு,
எனக்குள்ளே காய்ச்சல்கள் பாடிக்கொண்டிருக்கலாம்
மூளையின் உச்சிகளிருந்தோ
இதயத்தின் ஓட்டைகளிருந்தோ
சின்ன முனகல்கள் கேட்கும் நுட்பமாக.
இது முறிவின் காலம்.
என்னிடமிருந்து விலகி இரு.
என்னைப் பார்க்காதே,
கொடூர அழகோடிருக்கிறேன் நான்.
நீ குருடாக்கப்படுவாய்…

ஒளிநடுங்கும் கண்ணீர்த்துளிகள்
முலையின் ஆழத்தில்
ஒளிர்ந்து விழுகின்றன.
அதைப் பார்க்கும் கண்களுடன்
என் முகம் அழுகிறது.

அழகின் மர்மமே,
உனது பாலைநிலச்சோலையிலிருந்து
நீரை உறிஞ்சியெடுக்கிறது உன் இரை
மலர்கிறது, உனக்குள்ளேயே அடங்குகிறது.
அது என்னவென்று இப்போது
என் நினைவுக்கு வருகிறது.
நான் வெறுத்தது எதுவோ
உயிரைப் பிடித்துக் காத்திருந்தது எதற்கோ
அதுதான் அது.
சுயமறிதலின் புயலால் வீழ்த்தப்பட்ட
மரங்கள்போல
என் நினவு என்னைத் துண்டுதுண்டாக்கியிருக்கிறது.

கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிடு
குழந்தைகளை அப்புறப்படுத்து
அவர்கள் பார்க்கவேண்டாம்
காய்ச்சல்கள் தொடங்கிவிட்டன; நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
நாளங்களில் தேவதைக் குருதியுடன்
ஸ்பின்ங்சாக மாறும் இந்தச் செயலில்
கொடூர அழகோடிருக்கிறேன் நான்.
கூர்மையான வேதனைகளைச் சகிக்கிறேன்
விலகி இரு!
நீ குருடாக்கப்படுவாய்…
அழகின் மர்மமே,
உனது பாலைநிலச்சோலையிலிருந்து
நீரை உறிஞ்சியெடுத்தது உன் இரை
மலர்ந்தது, உனக்குள்ளேயே அடங்கியது.


7…மரணம்
—-

நிரந்தரமான, நீக்கமற நிறைந்த மெளனமே,
உன்னிடமே திரும்பும் ஒரு சூழலில்
உனக்குள்ளிருந்தே நான் எழுந்தேன்.

ஆனால்,
திரும்பிபோவது மிகக் கடினம்.

அப்போது நான் குழந்தை
வளர்ந்திருக்கிறேன் இப்போது.


8… திறந்த கதவுகளுள்ள மனநல விடுதி
—-
எங்கள் அன்பர்களே,
மண்டையோடுகள் அகற்றப்பட்ட
நடமாடும் மனநலவிடுதிகளே,
எங்களை விட்டுவிட்டு
என்றென்றைக்கும் என்று நினைத்து
நீங்கள் போகிறீர்கள்.
எது உங்களுடையதும் எங்களுடையதும்
நம்முடையதுமாக இருக்கிறதோ
அந்த மனநல விடுதியிலிருந்து நழுவுகிறீர்கள்.

எனது புனிதமான பைத்தியங்களே,
நான் ஒருபோதும் உங்களிடமோ
நீங்கள் ஒருபோதும் என்னிடமோ
பேசியதில்லை எனினும்
நான் உங்களை நேசிக்கிறேன்.

நான் உங்களுக்காகவோ
நீங்கள் எனக்காகவோ
காத்திருக்க முடியாது.
ஆனால்,
சடங்குகள் அப்படிப்பட்டவை.
ஒருவரையொருவர் வெறுக்காமல்
ஒருபோதும் நாம்
நேருக்குநேர் பார்ப்பதில்லை.
பைத்தியங்கள்
ஒருவரையொருவர் நேசிப்பதன் நோக்கமும் அதுதான்.
உன்மத்தமாகச் சிரிக்கும்போது
நமது கன்னங்களில் வழிந்தோடுகிறது கண்ணீர்.

எங்களது பிரத்தியேக உன்மத்தத்தால்
துன்புறும் சக பைத்தியங்களே,
ஒரே ஒரு விஷயத்தின்மேல்
கண்களை நிலையாகநிறுத்தி
தலைமறைவின் பின்னணியாகிறீர்கள்.
அது ஒருபோதும் பார்க்கப்படுவதில்லை,
ஒருபோதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை
எனது சந்தேகம்
அது ஒருபோதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேயில்லை.

அதிலிருந்து விலகுங்கள், வெளியேறுங்கள்,மறையுங்கள்…
இடம்விட்டு இடம்…நாடுவிட்டு நாடு…
சூரியன் காலம் தாழ்த்தி
மேற்கில் மறையும்போது
எங்கள் மனநல விடுதியிலிருந்து
கிறீச்சிடும் எதிரொலிகள்.

என்ன சோகம்!
வெறும் சுவர்கள்
தொடுவானத்தை எப்போதும் மறைக்கும் சுவர்கள்
முடியாத வானத்தை மிச்சமாக்குகின்றன.

நடுநிசிக்குப் பிறகு அங்கே
விசும்பல்கள் அடங்குகின்றன
எவரோ தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்
என்னவானாலும் அல்பேனியர்கள்
எங்கே இருந்தாலும் தங்கள் பைத்தியத்துடனேயே இருக்கிறார்கள்.


9…நீ ஒரு முட்டாள்
—-

முன்பொரு சமயம்
கவர்ச்சியாக இருந்த ஒரு முகம்
இப்போது சிதைந்திருக்கிறது.
நீ இழந்த பெண்கள்,
நீ யாரை விட்டுவந்தாயோ அவர்கள்,
உணர்ச்சிப் பிச்சை பெற்று
எங்கேயாவது பிழைக்கலாமென்று
உன்னிடமிருந்து தப்பினார்களே அவர்கள்
உனக்கு ஏற்படுத்திய மரணத்தை
உனது சுவடுகளில் எதிர்கொள்கிறேன்.

சிதைந்து சந்தேகத்தால் நசிந்துபோயிருந்தாலும்
இன்றும் கவரக்கூடிய ஒரு முகம்.
நீ இழுத்துக்கொண்டலைந்து
சபிக்கப்பட்ட மண்ணில் புதைபடும் ஓர் உடல்.
ஒரே சமயம் பொருத்தமானதும் இரக்கத்துக்குரியதுமானவை
உன் அடையாளங்கள்.
அபத்தத்துக்குப் பொருள் தருவதுபோல ஒரு வளையம்
உன் காதில்.

ஒவ்வொரு நாளும்
ஒரு நட்சத்திரத்தின் ஏதோவோர் இயல்பைப்
பணயம்வைத்துச் சூதாடுகிறாய்
நீ மணலில் தேய்கிறாய்.
ஒவ்வொரு இரவும்
மரண நித்தியத்தின் சில இயல்புகளை
வெற்றி கொள்கிறாய்.
நீ இப்போது காலாவதியாகிக்கொண்டிருக்கிறாய்
நீ இறந்துகொண்டிருக்கையிலும்
நோயுற்ற மெளனத்தின் உணர்விழைகளைக்
காற்றில் வீசுகிறாய்
நீ பற்றியிருக்கும் சவுக்கால்
சொடுக்குகிறாய்…இழுக்கிறாய்…சிக்கவைக்கிறாய்…
உணர்வற்ற உடலை
சுத்திகரிக்கப்பட்ட உதடுகளால் பணியச்செய்கிறாய்.

உனது துர்நடத்தையை,ஒழுங்கீனத்தை,
உனது எதிர்மறை வெளிப்பாட்டை, கறையை,
கள்ளத்தனத்தை,கபட நியாயத்தை,
எதையும் உருவாக்க முடியாத தத்தளிப்பை,
உனது இருப்பின் நிலையற்ற சுவடுகளை
நான் அவ்வப்போது எதிர்கொண்டிருக்கிறேன்.

அழிவின் சாரம் நிறைந்த உன் ஆடம்பர உணர்வுகள்
கைவிடப்பட்ட பெண்களின் முலைகளில்
பூனைகளைப்போலப் பிறாண்டுகின்றன.
ஓர் அருமையான உயிர் கட்டற்று அலைகிறது…
தொடர்ந்து அதை வழிதவறச் செய்கிறாய்.
எப்படி நடந்துகொள்வதென்று தெரியும் உனக்கு
ஆனால்
உனது ஆன்மாவில் நீதியில்லை.

நான் உன்னுடையவள்.
எப்போதும்போல
ஆதரவாக, சுவாசமாக, இருண்ட சந்திலிருந்து விலகி நடக்க
என்னை நீ எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால்
நீ ஓர் அடிமுட்டாளென்பதையோ
அதனால்தான்
நான் உன்னை ஆவேசமாக நேசிக்கிறேனென்பதையோ
நீ புரிந்துகொள்வதே இல்லை.


10… அம்மாவுக்குக் கடிதம்
—-

அம்மா,
வேறு எவரிடமும் காட்டாமல்
நீ மட்டுமாக இந்தக் கடிதத்தை வாசி.
இது ரகசியமானது என்பதனால் அல்ல;
நான் உன்னிடம் என்னசொல்கிறேன் என்பதைப் பற்றி
எனக்கே போதிய உறுதியில்லை என்பதனால்.

டிரானா பழையதுபோலத்தான்
குறுகிய சந்துகள், குட்டையான வீடுகள்,
ஓய்ந்துபோன குளிர்காலச் சாலைகள்.
மத்தியில்
எனது கனவுலகம்போல ஒரு பதினைந்தடுக்குக் கட்டிடம்.
தூதரகங்களுக்கு அருகே தெரு முனைகளில் காவல்காரர்கள்
தேயும் ஜூன் மாதத்தின் போலீஸ்கார மரங்கொத்திகள்.

அம்மா,
என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்கிறேன்.
அரசாங்கம் மக்களுக்கு இவ்வளவு எதிரானதாக
ஒருபோதும் இருந்ததில்லை.
வஞ்சகம் மனிதரிடையே இவ்வளவு மோகத்துக்குரியதாக
ஒருபோதும் இருந்ததில்லை.
ஆழ்ந்த தூக்கத்தில் கசிந்து மறைவதுபோல
இவ்வளவு பெண்கள்
ஒருபோதும் காணாமலோ காலியாகவோ போனதில்லை.

அம்மா,
உன்னிடம் சொல்கிறேன்
பசித்த காதலின் பல்லில்லாத புன்னகையுடனும்
அதன் இயல்பில் ஒரு விரிசலுடனும்
ஆபத்து என்னை அழைத்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் எனக்கு வேலைதரச் சித்தமாக இருக்கிறார்கள்
அநேகர் என் நண்பர்கள், பரிச்சயக்காரர்கள்.
சமூகத்தில் பெரும் பெயர் பெற்றவர்கள்
ஆனால்
வாழ்வின் பதற்றம் குறைந்தவர்கள்.
என்னை உபயோகித்து ஏணியேற
எனக்கு உதவுபவர்கள்
ஆனால்
அது என்னை வீழ்த்தும்; என்னை உயர்த்தாது.

அன்புள்ள அம்மா,
நான் சொல்வதைக் கேள், கவலைப்படாதே!
என் கவிதைகளால்
நான் அவர்களை வெட்டித் துண்டாக்குவேன்
நொறுக்கிப் பொடியாக்குவேன்,
ஓர் அரவை எந்திரத்தைப்போல.


Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்