கீதாஞ்சலி (39) புனிதனே ஒளிமயமாய் வா! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


ஈரம் வரண்டு இதயம் கடினமாய்
இறுகும் போது, நீ
மேனி அனைத்தையும் ஒருங்கே
குளிப்பாட்ட வா,
கனிவு மழை பொழிந்து!
வாழ்க்கையின் நளினம் மங்கி
வற்றிப் போனால்,
உள்ளத்தில் கீத
வெள்ளம் அடித்திட
விரைந்தோடி வா!
அரவத் தொல்லை எழுப்பும்
வேலைக் கொந்தளிப்பு
நாற்புறமும்,
சிறையிட் டென்னை அப்பால்
நகரத் தடைசெய்தால்,
மெளன அதிபதியே!
உந்தன் மோன அமைதி
ஏந்தி என்னிடம்
வந்துவிடு!

மண்டி யிட்டுக் கையேந்தி
அண்டி யாசிக்கும்
என்னிதயம்
முக்கு ஒன்றிலே
சிக்கிக் கொண்டால்,
என்னரும் வேந்தே!
கதவை யுடைத் தென்னைக்
காண வா,
மங்கலச் சடங்குகள் முழங்கிடும்
வேந்தன் போல்!
மண் புழுதிகள் படிந்து
மயக்கம் தரும்,
மாய இச்சைகள் எனது
நெஞ்சைக் குருடாக்கி விட்டால்,
துஞ்சாமல் கண் விழிக்கும்
தூயனே!
ஒளிமயமான உன்னுருவில்,
என்னிடம் வா
மின்னல் இடியோடு!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 4, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா