என் சாளரத்தின் வெளியில் .. நீ

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

ஆ. மணவழகன்


—-

நான் உன்னைப் பார்க்கிறேன்..
நீ அழகாக இருக்கிறாய்!
மீண்டும் உன்னைப் பார்க்கிறேன்
நீ அழகாகவே இருக்கிறாய்!

மேகம் மூடிய நீ – வாழ்வின்
சோகம் சூடிய சுவடு என்றான்
ஒருவன்!

நீ தேய்வது ..
நிச்சயித்து நிரந்தரப்படுத்துவது – இப்புவியில்
ஏதுமில்லை என்பதால் என்றான்
ஒருவன்!

நீ வளர்வது..
வந்த துன்பம் வாழ்வில் என்றும்
நிலைப்பதில்லை என்பதால் என்றான்
ஒருவன்!

நீ தேய்வதும் தேய்ந்தும் வளர்வதும்
இன்ப துன்பத்தின் சமநிலை என்றான்
வாழ்ந்து பார்த்த
ஒருவன்!

தன்னுள் களங்கம் வைத்து – அது
உன்னுள்ளும் உள்ளதென்றான்..
வாழத்தெரிந்த
ஒருவன்!

இல்லாமல் போவது
உனக்கும் இருக்கிறதாம்
தேற்றிக்கொண்டான் – தன் தேவையுணர்ந்த
ஒருவன்!

உன்னை,
விட்டெறிந்த இட்லி என்றான்…
வெட்டிப் போட்ட நகம் என்றான்..
சுட்டெறிந்த அப்பளம் என்றான்..
வானிற்குத் தோன்றிய கொப்புளம் என்றான்..
தோழியர் சூழ வரும் மங்கை என்றான்..
தோழர் சூழ வரும் மன்னன் என்றான்..
—- —- —- என்றான்..
—- —- —- என்றான்..

எப்போதும் போல என் சாளரத்தின் வெளியில் நீ!
எல்லோரும் உன்னைப் பார்க்க – நீ
மட்டும் என்னைப் பார்க்கிறாய்!

நான் நிலவைப் பார்க்கிறேன் – அது
அழகாக இருக்கிறது – அது
அதுவாக இருக்கிறது!

***
ஆ. மணவழகன்
manavazhahan_arumugam@yahoo.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்