விடையற்ற வியப்புக் குறிகள்!!!

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

ராமலக்ஷ்மி


‘உன் வயிற்றில்

உதித்த நான்-

உத்தமனாய் வாழ்ந்து காட்டி-

உன் பெயரை

ஊர் உலகம்-

உயர்வாகப் போற்றிடச்

செய்வேனம்மா! ‘

**

மரித்திட்ட

தன் தாய்க்கு-

தந்திட்ட வாக்குதனை-

வேதமெனக் கொண்டு;

வேலை தேடி-

வீதி வழி நடந்தானே!

**

நெஞ்செல்லாம்

இலட்சியக் கனவோடு-

அஞ்சாது செய்திட்ட

சத்தியத்தின் நினைவோடு-

சென்றவனின்

கண்ணிலே பட்டவன்தான்-

பிக்பாக்கெட் தொழிலினிலே

பிரபலக்கேடி!

**

விழிமுன்னே மற்றவரின்

பர்சு ஒன்று-

பரிதாபமாய்

பறி போவதைப்

பார்த்திட்ட அவனுமே;

‘எவன் சொத்தோ போகுதடா

எனக்கென்ன கவலையடா ? ‘

என்று-

இன்று இப்

புனிதப்

பூமியிலே-

போற்றிக் காக்கப்படும்

பொன்னான கொள்கை-

புரியாதவனாய்-

பாய்ந்தோடிக்

கேடியினைப் பிடித்தானே!

**

கேடியெனும்

பட்டமெல்லாம் சும்மாவா ?

கில்லாடியான அவன்-

கிட்டத்தில் ஓடிவந்த

காவலரின்

கரத்தினையே-

தேடிப் பற்றி

சம்திங் தந்தானே!

**

நீதி

காக்க வேண்டிய

காவலரோ-

கரன்சி செய்த வேலையினால்-

கமுக்கமாகச் சிரித்தபடி-

கயவனவன் முதுகினிலே-

‘செல் ‘லுமாறு

செல்லமாகத்

தட்டி விட்டு;

அப்பாவியான இவன்

கழுத்தினிலே கை போட்டு-

‘அட

நடடா, இது புது கேசு ‘

என்றாரே!

****

மலர வேண்டிய பருவத்திலே

மடிய நேரும்

மொட்டுக்கள்!!!

**

கலர் கலராய்

கண்ட கனவுகள்

கருகிப் போகும்

சோகங்கள்!!!

**

பழி ஓரிடம்

பாவம் ஓரிடம்-

பரிதாபப் பட

யாருமின்றி

பரிதவிக்கும்

பலியாடுகள்!!!

**

‘அவரவர் விதி ‘யென்றும்

அவன் தலைச் சுழி ‘யென்றும்-

ஆராய அவகாசமின்றி

அவசர கதியில்

அள்ளித் தெளிக்கப் படும்

ஆழமற்ற

அனுதாபங்கள்!!!

**

ஆங்கோர் பக்கம்-

சி.பி.ஐ

ஆதாரங்களுடன்

கைதாகும்

கனவான்கள்-

சில மணியில்-

சிரித்தபடி

சிறை விட்டு

விடுதலையாகி

வெளியேறும்

விநோதங்கள்!!!

**

அவருக்காக

குரல் கொடுத்துக்

கவலைப் பட

கணக்கற்ற

கூட்டங்கள்!!!

**

இப்படி

ஏராளமாய்

இருக்கின்றன-

விடையற்ற

வியப்புக் குறிகள்!!!

****

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி