ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

சாரங்கா தயாநந்தன்


திருநகரே உந்தன்
திசை தொழுங்கால் மகிழுகின்ற
என் உயிரின் இசை கேட்கிறதா ?
எழுந்து வான் தொடும் கட்டிடங்களிடையே
விழுந்து ஊருகின்ற
புழுதிகாணாப் பெருந்தெருக்களிலே
அழுந்தாது பாவுகின்ற
சப்பாத்துக்களுள் வசிக்கின்ற
என்பாதங்கள்
உன் வெண்மேனி அளைந்திருந்த
விபரிக்கவியலா சுகத்தை மீட்டு
இரவுகளைக் கனதியாக்குகின்றன.
நிரவப் படமுடியாத
நீண்ட இடைவெளிகளுக்கு அப்பால்
நின்றுகொண்டிருக்கின்ற
அன்னியக் கலாச்சாரத்தின்
வால் பற்றி இழுபடும்
உன் பிள்ளைகளுக்காய்
ஒருமுறை இரங்குவாயா நீ ?
உன்னிடத்தில் வாழ்கையிலே….
மரங்கொஞ்சிய தென்றல்
மஞ்சள் வண்ணத்து
வயிறு மேடிட்ட சிறு பறவை
நெஞ்சு குளிர இறங்கும் மழை
நிதமும் ஒளிகாலும் சூரியன் என
விரிந்திருந்த வாழ்வின் ரசிப்பாறு
வற்றிக் கிடக்கிறது.
என்னருமைத்தாய் நாடே !
உன்னிடத்தில் ஒன்று கேட்பேன்.
புலம்பெயர்ந்த அந்நாளில்
புல் பரந்த வெளியொன்றில்
ஆட்காட்டிப் பறவையொன்று
அடைகாத்திருக்கையிலே
அக்கூட்டின் முட்டையொடு உயிர்துடிக்கும்
என் சின்னஞ்சிறு இதயத்தையும்
விட்டுவிட்டு வந்திருந்தேன்

சிரிப்பு எல்லாமும்
சிலிர்க்கும் உயிர்ச் சந்தோஷம் எல்லாமும்
சேர்த்திறுகப் பூட்டிய
சிறு இதயம்….
கண்டாயா ?
கனிவோடு அதைக் காப்பாயா ?
பொறியகன்ற ஒரு நாளில்
புலம் அகன்று….
நான் மீளும் நாள் வரைக்கும்.

—-
nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்