காற்றுப் பிரிந்த போது. .

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

நவஜோதி ஜோகரட்னம்.


(லண்டன்.)

அவள்
மனதால் அழகானவள்
மென்மையின் வதனத்தை அணைக்கின்றாள்
வாழ்வின் தோழி என்பதால்
வன்மையின் வேதனையை வெறுக்கிறாள்
சாவின் சாவி என்பதால்
அவளுள் மென்மை
வன்மையை வெல்கிறது
அவளுள் மணம் பரப்பும்
மென்மையான மலர்கள். .
மென்மையான ஸ்பரிசத்தால்
உயிர் பெறுகின்றாள்
வன்மை வலிக்கின்றது. .

இயல்பான எளிமையை
இறுக்குகின்ற அணைப்பு
எளிமை
அழகானது
ஆனந்தம் தருவது. .

அவளுக்குப் பிடித்தமான
நாமத்தை
நாளுக்கு நாள்
இதயத்தில்
செதுக்க செதுக்க
இனிமை கசிகிறது. .
மகிழ்ச்சி தெரிகிறது
மனசு வலிக்க வலிக்க
பரந்து கவிந்த
பயங்களோடு
ரம்மியமான மாலைப்பொழுதில்
இயற்றியதோர் பாடல்
முறியடித்து முத்தி செய்கிறது

பிரமிப்பின் பார்வையில்
பிரபஞ்சம்
வெறுமை. .
ஓவ்வோர் அசைவுகளிலும்
கண்ணீர் மச்சங்கள்
வெற்றிகள் . . ?
காற்றுத் துருத்தி
காலியாக இருக்கின்றது. .
வெறுமை எளிமையாக இருக்கிறது. .
வற்றாமல் வாரி வழங்குகிறது
காற்றை. .
அவள் சுவாசிக்கின்றாள்
தென்றல் இல்லாமல். .
சுவாசத்தில்
சுகந்தம் சுகம் தருகிறதா ?
சுகமும் சோகமும்
சுகம் கிடைக்கின்றது ஆனால் அவள். .

அந்தக் காற்று
அவளை விட்டும்
அவனை விட்டும்
எழுந்து போகும் போது
எல்லாமே
முடிந்துதான் போகும். . .

(8.1.2003)

Series Navigation

நவஜோதி ஜோகரட்னம்

நவஜோதி ஜோகரட்னம்