காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


அவளின் சொற்கள்
சொக்கவைக்கும்
‘ கள் ‘

பிச்சினிக்காடு இளங்கோ

காதல் வயப்பட்ட இருவர்
ஒருவரையொருவர்
இதயத்தில்
ஏற்றிப்பேசுவதைக்கேளுங்கள்
இதயம்கனக்க
போற்றிப்பேசுவதக்கேளுங்கள்

அவளைப்பற்றி
அவன்…

இவளின் இதழ்நீர்
பாலும் தேனும்
கலந்தநீர்

அது
உமிழ்நீரன்று
ஒப்புமையில்லா
அமுதாய் அமைந்தநீர்

சொற்களோ
பணிவில்தோய்ந்த
சொற்கள்
ஆம்!
சொக்கவைக்கும்
கள்

இவளுடன் நான்…
உடலுடன் உயிர்
உயிருடன் உடல்

நானன்றி அவளில்லை
அவளின்றி
‘நான் ‘ என்பதே இல்லை

கண்ணின் பாவையே
என்னின் பாவைக்கு
இடம் கொடுப்பாய்

அந்த
அழகிய நெற்றியாள்
அமுத மொழியினாள்
இருக்க உந்தன்
இடம் தேவை

அணிகலன்களோடும்-கவிதை
அணிநலன்களோடும்
வாழும் இவளுடன்
கூடும்பொழுதில்தான்
உடலோடு இருக்கும் உயிர்
வாழ்கிறது

பிரிகிற நேரத்தில்
இருந்தாலும் உயிர்
இறக்கிறது

விழிகளல்ல
அவை வேல்கள்
வேல்களல்ல
அவை
ஒளியின் உருவங்கள்

ஒளியுடை விழியாய்
விழியெனும் வேலாய்
உலவும் இவளின்
உன்னதப் பண்புகளை
மறத்தலே அறியாத
மறவன் யான்
மறக்கத்தான் கூடுமா ?

(இவை மறக்கமுடியாதவனின் மயக்கவரிகள்)

இதோ அவனைப்பற்றி
அவள்…

இவர்மட்டும் என்ன ?

இவர்
என்
கண்ணாக வாழ்கிறார்
கண்ணுக்குள் வாழ்கிறார்

என் கண்கள்
என்னைவிட்டு அகலக்கூடும்
இவர்
என்
கண்களை விட்டு
அகலமாட்டார்

இமைத்தாலும்
ஒரு பொருளாயிருந்து
வருத்தவும் மாட்டார்
உறுத்தவும் மாட்டார்

நுண்ணியமான ஒரு
நுட்பத்தின்
வடிவமவர்
மடிமவர்

மைதீட்டினால்
இமைக்கும் நேரத்தில்
இமைக்குள் இருப்பவர்
மறைவார் இல்லையா ?

மறைவார் எனில்
அது எனக்கு
மரணமில்லையா ?

எனக்கு
மரணமிலாப் பெருவாழ்வு
என் விழிகள்
இமைக்காப் பொழுதல்லவா ?

அதுமட்டுமா ?

கண்ணுக்கு நான்
தீட்டும் மை
கண்ணாக இருப்பவர்மீது
தீட்டுவதாகுமே!

பொன்னான மேனியில்
கருமை தீட்டினால்
கரும்புள்ளி குத்திய
கடும்பாவி ஆவேன்நான்;
கொடும்பாவி ஆவேன்நான்:
பெரும்பாவி ஆவேன்நான்

ஆக,

இமைக்கவும் மாட்டேன்
இமையில் மை
தீட்டவும் மாட்டேன்

உண்ணுந்தோறும்
சூடானவற்றை
உண்ணவும் மாட்டேன்

சூடு!
என்னை மட்டுமா சுடும்!
என்னுள்
இருப்பவரையுந்தான் சுடும்!

நான் இமைக்காதிருப்பது
நோயன்று
அது
நோன்பு

ஆனால்,என்
நோன்பறியா ஊரார்
நோயென்று முன்னுரைத்தார்
என்னவரை
இரக்கமிலா மனிதரென்றார்
எனக்கு
‘இமைக்காத நோய் ‘தந்தார்
என்றுரைத்தார்

உள்ள அறையில்
உறைந்து இருப்பவரை
மகிழ்ந்து உள்ளத்தில்
மறைந்து இருப்பவரை
அன்பில்லாதவர் என்று
அடைமொழியிட்டு அழைக்கின்றனர்

உண்மையில்
அவர்
‘அன்பில் ஆதவர் ‘
அறியார் ஊரார்

வெளிப்பட
பிறர்
கண்பட
அவர்
வெளியில் இல்லை
என்பதும் உண்மை
உள்ளத்தின் உள்ளே
இருப்பவர் பிரிவது
இயலாது என்பதும் உண்மையே

ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ