….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

…. அனந்த் ….

<>o<>o<>o<>o<>o<>o<>o<><>o<>o<>o<>o<>o<>

கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு!
காலமெல்லாம் பட்டதுயர் களைந்திடவே கண்ணுறங்கு!

மண்ணிலே பிறப்பதற்கு மாதங்கள் பலமுன்னே
கண்திறவா நிலையிலன்னை கருவில்நீ கிடக்கையிலே
எண்ணமென்னும் பெருவலையை ஏற்கனவே பின்னிநிதம்
புண்பட்ட வேதனைகள் போகஇன்று கண்ணுறங்கு!

கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு!
காலமெல்லாம் விழித்திருந்து களைத்துவிட்டாய், கண்ணுறங்கு!

எத்தனை உணர்வுகளோ எத்தனை நினைவுகளோ
அத்தனையும் நீஇன்று அசைபோட அசைபோடப்
பித்தனாய் மாற்றுமுனைப் பேதைநீ பேசாமல்
மெத்தென்ற நெஞ்சகத்தில் மெல்லவே கண்ணுறங்கு!

கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு!
கண்டுவிட்ட காட்சிகளைக் களைந்துவிட்டுக் கண்ணுறங்கு!

ஆசைகள் ஆயிரத்தை நீவளர்த்தாய் உன்மண்ணில்
வாசமலர் பூக்கவில்லை வந்ததெல்லாம் பூண்டெனினும்
வீசிஅதை எறிந்துவிட்டு வேறுவழி தேடுமுன்னே
ஓசையின்றி நீயடங்கி ஒருநிமிடம் கண்ணுறங்கு!

கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு!
கண்டபடி கனவேதும் காணாமல் கண்ணுறங்கு!

உண்மைஎது பொய்எதென்று உணருவதில் ஓய்ச்சலுற்றுத்
திண்ணமாய் எதனையுமே சிந்திக்கத் திராணியற்றுப்
புண்ணியமும் பாவமெனப் போவதெல்லாம் பார்த்துன்றன்
கண்இருண்டு போகுமுன்னே கண்மணியே கண்ணுறங்கு!

கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு!
கடந்ததெல்லாம் அவன்செயலாய்க் கருதிஇன்று கண்ணுறங்கு!

கண்ணுறங்கி எழுந்தபின்னே கண்டிடுவாய் உன்இதயம்
தண்ணென்ற அன்பரும்பும் தாமரையாய் மாறியந்த
விண்ஒளியில் மலர்வதையும் வேதனையால் நீபட்ட
புண்மறைந்து போவதையும் பொன்மனமே! கண்ணூறங்கு!

கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு!
கண்ணுறங்கி உனைநீயே கண்டிடுவாய், கண்ணுறங்கு!

<>o<>o<>o<>o<>o<>o<>o<><>o<>o<>o<>o<>o<>
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்