புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

(கவியோகி வேதம்)


‘தாரண ‘ என்கின்ற தளிர்மகளே நீவருக!
தோரணமாய் வசந்தத்தின் துணைகொண்டே நீவருவாய்!
.
சோலையெல்லாம் மயில் ஆட, சூழ்ந்துநிற்கும் மாமரத்தில்
கோலம்செய் பூக்களிடைக் குயிலெல்லாம் இசையமைக்க,
..
மழைத்துளியை எதிர்பார்த்தே மயிலெல்லாம் தோகையினால்
இழைந்துகட் டியம்கூற,எழில்பொங்க நீவருக!
..
அதோ!வேப்ப மரம்கூட அத்தனை பூஉதிர்த்தே
பதாகை விரித்துஉன்றன் பாதம்நோ காமல்வர
..
மெல்லிய கீதமுடன் மிகசுகமாய்க் கூப்பிடுதே!
துல்லிய கருமேகம் தூவானம் தெறித்துஉன்னை,
..
வசந்த வாயில்முன் வரவேற்பு செய்கிறதே!
அசந்துநீ போகு(ம்)வண்ணம் அழகுற கவியிசைத்தோம்!
..
அழகிய ‘தாரண ‘ அருஞ்சுவையே! கால்பதித்து
ஒழுகுகின்ற எம்வேர்வை உடன்துடைக்கக் கைகொடுப்பாய்!
..
முகில்களென்னும் குழந்தைகளை முருகனின் தாய்போல
மகிழ்வோடு ஒன்றுசேர்த்து மண்ணுக்கு வரவழைப்பாய்!
..
போனவருட நங்கைதான் பொழியாமல் சென்றாலும்
ஆன உன்றன் மயல்விழியால் ‘வருணனை ‘ அரவணைத்தே,
.
தொலைபேசித் தொடர்போலத் தொடர்ந்துமழை பெயச்செய்வாய்!
அலையலையாய் எம்மண்ணில் ஆறுகள் பெருக்கெடுக்க,
.
ஏழைமகன் விவசாயி எழில்பொங்கப் பயிர்வளர்க்கக்
குழைந்துநீதான் தேவர்களைக் கூப்பிட்டு(உ)ன் நாட்டியத்தால்
..
அசத்திநின்று எமக்காக அரியவரம் வாங்கிடுவாய்!
நிசத்தைச் சொல்லுகின்றேன்! நிதம்நொந்து போனோம்யாம்,
..
நன்மைசெய்யா அரசியலால்; நாள்முழுக்கச் சலிப்படைந்தோம்!
பொன்மகளே கருணைசெய்வாய்! புயல்மழை வந்தால்தான்
..
பூமியே நனைகிறது;ஏரியெல்லாம் பொலிகிறது!
சாமியாய் உனைநாங்கள் சன்னதியில் வைத்திடுவோம்!!
..
பலவண்ணச் சந்தமதால் பாஅர்ச்ச னைசெய்வோம்!
நலம்தரும்உன் பாதத்தில் நற்சாந்து பூசிடுவோம்!
..
கைகொடுக்கும் விரலிலெல்லாம் மருதாணிக் கோலம்செய்வோம்!
செய்கையென ஒன்றுசெய்வாய்! செயமெமக்கு நீதருவாய்!
..
உன்பேரில் தானம்செய்வோம்! உடனுழைத்தே வரம்தருக!
உன்பேரில் தாரணமே ஆபரணம் தரிப்பதனால்,
..
மழையென்னும் அணிகலனும், வளமென்னும் மேகலையும்,
இழைகின்ற எம்சுகமே கால்தண்டை எனதரித்தும்,
..
தாரணப் பொன்குயிலே தளிர்நடை பழகிநிற்பாய்!
மாருதிபோல் சஞ்சீவி மழைமலையை நீகொணர்வாய்!
..
கெஞ்சுகின்றோம் அழகியே! கீற்றுப்போல் உன்உதட்டில்
துஞ்சட்டும் புன்சிரிப்பு! தொடர்ந்தெமக்கு நல்லதுசெய்!
..
சக்தியென உனைப்போற்றிச் சங்கீதம் பாடிடுவோம்!
பக்தியுடன் வரவேற்றோம்!பரவட்டும் உன்புகழே!
..
பைந்தமிழ்நீ! அமுதம்நீ! பாட்டாளி சொத்தும்நீ!
தொய்ந்த மனங்களின், துயர்துடைக்கும் தேவதைநீ!
..
தடைவிலக்கும் தாரணமே தலையசைத்தே நீவருக!
கடைவிரித்தோம் பாமாலை! கழுத்தணிந்தே நீபொலிக!
****
kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்