வருகல் ஆறு

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

நெப்போலியன் சிங்கப்பூர்


கிழக்கே களப்பு
வடக்கே வன்னி
நடுவே பதட்டமாய்
வருகல் ஆறு.

கரையோர அதிர்வுகள்
கண்களுள் அபாயமிட
கண்ணீர் நுரைப்புடன்
வருகல் ஆறு.

இலை தளை
சுமந்த
என் மேல் உடம்பில்
இனி
தலை பல விழுமோ ?
என்றே திகிலுடன்
வருகல் ஆறு.

ஆண்டாண்டு வீரம்
அர்த்தமற்றுப் போனால்
மீண்டும் அகதியாகும்
ரத்தச் சகதியாகும்
வருகல் ஆறு.

கூட்டமாய் கட்டிய
கோட்டையில் ஓட்டையா ?
வேண்டாம்….
வேட்டை நாய்களின்
விருந்தாகிப் போகும்
வெட்கியபடியே
வருகல் ஆறு

புரட்சியும்
இயக்கமும்
பொய்யாகிப்போனால்
போய்ச் சேர்ந்த
போராளிகளுக்கென்ன பதில் சொல்ல ?
என்றே புலம்பலில்
வருகல் ஆறு.

போராளித் தாகம்
மாறாகிப் போனால்
வீணாகிப்போகும்
வருகல் ஆறு.

தண்ணீரின் இடமோ
தமிழ் ரத்தமாகும்
தவிப்பினில்
பயத்துடன்
வருகல் ஆறு.

நண்டுக் கதையாய்
துண்டு படாமல்…
ஒரே ஒலியாய்
ஓசை முழங்க…
கெஞ்சிக் கதறுது
வருகல் ஆறு.

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்