மாலைநேரத்தின் பிரவேசம்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சத்தி சத்திதாசன்


மனதிலோர் மயக்கும் சங்கீதம்
மிதக்கும் மெல்லிய
உணர்வுகள்
மணக்கும் மல்லிகை வாசம் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்

அந்திவானத்திலே
அழகுச் செந்நிறக்கீறல்
அரவணைக்கும் அந்த
அமைதியான தென்றல் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்

இரவோடு போரடி
வெற்றிவாகைசூடி
பகலெனும் வீதியில் வலம்
வந்து
சிந்திய இரத்தம் மேனியைச்
சிவப்பாக்க , ஒளிரும் ஆதவன் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்

ஏரோட்டிச்
சோறுபடைக்கும் அந்த
ஏற்றமிகு உழவத் தோழன்
களைப்பாற இல்லம் ஏகும் நேரம் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்

நெஞ்சச்சிறையினில்
அடைத்த காதலை
அவிழ்த்து , உள்ளம் பொங்க
இனிய கதை பலபேச
கடலின் ஓரத்திலே
காத்திருக்கும்
காதலர் கூட்டம் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்

விடியலை நோக்கி ஏங்கும்
விதி வீழ்த்திய
கூட்டமொன்று தமக்கு
நாளைய பொழுது
நன்றாகவே விடியும் எனும்
நம்பிக்கை துளிர் விடும் நேரமது – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்

உலகம் ஓய்வின்றி
உருளுது
காலங்கள் இங்கே
காற்றாய்ப் பறக்குது
இரவுகள் இருளுது
விடியல்கள் வெளிக்குது
மாலைகள் இனிக்குது
ஆனால் தோழனே !
எனக்கும் உனக்கும் அந்த
மலைநேரப் பிரவேசம் ?

காத்திருப்போம்.
—-

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சத்திதாசன்

சத்தி சத்திதாசன்