சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பா.சத்தியமோகன்.


வெள்ளைப் பூச்சு பெற்ற சிமெண்ட் சுவர்தான்
தோட்டமென யார் சொல்லினர்
வண்ணத்துப்பூச்சியிடம் ?
உட்கார்ந்து உட்கார்ந்து பறக்கிறதை
வெளியில் கொண்டு விட
எத்தனை தவிப்பு காண்போனுக்கு.
சுவரோடு சுவராக
இவன் கையும் காலுமாக
எப்படித் தொடர முடியும் ?
சித்தம் போனபடி பறப்பதெல்லாம்
முடிவில் வெள்ளைச் சுவரை
தோட்டமென நம்பத்தானா ?
வெள்ளை நீள் மலரென எண்ணி
டியூப்லைட் பரப்பில்
தேன் தேடி வாழத்தானா ?
காற்றும் வாசனையும்
தேனீயும் குதியாட்டமும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
யார் மறக்கடித்தனர்-
பால் மறக்கடிக்கப்பட்ட கன்று போல.
தேடினால் அடைவாய்
விடாமல் தேடு என
ஆழ்ந்து ஆழ்ந்து தெடினாலும்
சுவருக்குள் ஏது தோட்டங்கள் ?
கடமையை நிதம்புரி
பலனில் உரிமையில்லை என்பதற்காக
வண்ணத்துப்பூச்சி
சுவரில் மோதி வீடு கட்டி வாழ இயலுமா.
எவரேனும் ஒரு நாள் பிடித்து
வெளியே விடக்கூடும் என
பட்டாம்பூச்சி நம்பாது
தெரியவும் தெரியாது
நம்பிக்கையென்பதெல்லாம்
சொற்கள்தான் வண்ணத்துப்பூச்சிக்கு.
பழங்கருத்தெனும்
ஒட்டடைச் சரத்துக்குள்
தாஜ்மகால் தேடி சமாதானமாகாமல்
உயிர்ப்புடன் இருப்பதற்காக
சுவரில் மோதுவதில்
தப்பேதுமில்லை வண்ணத்துப்பூச்சி
நீ செய்க உன் காரியம்
விடாதிரு உன் வீரியம்.
————————————————————–
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்