அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

புகாரி


வெள்ளிக் கால்கொலுசு
வீதியெல்லாந் தாளமிட
முல்லைச் சிரிப்புதிர்த்து
முந்தானைக் கையசைத்து

வெள்ளிப் பெளர்ணமியே
விரைகிறாயடி – மனதைக்
கிள்ளித் தவிக்கவிட்டே
மறைகிறாயடி

அல்லிக் குளத்தினிலே
அந்தியொளி மஞ்சளிலே
மெல்ல நீரிறைத்து
முகப்பூவை ஈரமாக்கிப்

புள்ளி இளமானே
நிற்கிறாயடி – நெஞ்சை
அள்ளிப் பனிமடியில்
வைக்கிறாயடி

உள்ளக் கனவுகளை
ஒருவருக்கும் சொல்லாமல்
நெல்லி மரத்தடியில்
நெடுநேரம் தலைசாய்த்து

மெல்ல வேறுலகம்
நுழைகிறாயடி – என்பால்
உள்ளம் உருகுவதை
ரசிக்கிறாயடி

கள்ளக் கண்ணோட்டம்
கண்மணியே போதுமினி
உள்ளம் எனக்கென்றே
உருகிவரும் சத்தியத்தைக்

கிள்ளை மொழியாலே
சொல்லிவிடடி – என்னைக்
கொல்லும் தவிப்பினையே
கிள்ளிவிடடி

*

அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி