அப்பாவும் நீயே

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

சத்தி சக்திதாசன்


அப்பா என்
அறிவின்
ஆசானே

தெளிந்த சிந்தனை
சிரித்த முகம்
ஆயிரம்
கருத்துச் செறிந்த
இனிமையான
வாதங்கள்
அறியவில்லையே
என் தந்தையே அந்த
இளம்
வயதினில் உன் மகிமையை

முட்டாளின் மூளையிலே
முன்னூறு பூ
மலரும்
இந்த முட்டாளின் மூளையில்
உன் அறிவுப் பூக்களில்
ஒன்று கூட
விரியவில்லையே

சுதந்திரத்திற்கும்
சுவாசக்காற்றிற்கும்
தன் குடும்பத்தில் இட்ட
அத்திவாரத்திலே
வரைவிலக்கணம் இட்ட
என் அன்பு
அப்பாவே

உன்னை நான் தெய்வம்
என்று
கூறமாட்டேன் ஏனென்றால்
தெய்வத்தை நேராக
கண்டவரை நான் இன்னும்
காணவில்லையே
என் கண் முன்னெ
எனக்கு
அறிவை அன்பால்
புகட்டிய உன்னை
எப்படி
நான் தெய்வம் என்று ?

பொறுமைக்கு மற்றுமொரு
பதம் கேட்டார்
தமிழ் பரீட்சையிலே
அந்த வினாவிற்கு
பூஜ்ஜியம்தான் எனக்குக்
கிடைத்த புள்ளிகள்
அப்பா என்பதல்லவா நான்
எழுதிய விடை

எல்லோரையும் பகைக்காமல்
சமாளிக்க
பலவிதமாய் நடந்திடுவார்
ஆனால்
உன்னோடு மட்டும் எதுவிதமான
அச்சமின்றி பழகிடுவார்
எதையும் தாங்கும்
இரும்பு
இதயமல்லவா நீ கொண்டது

சிரிக்காமல் ஓர்நாளும் நீ
இருந்து
கண்டதில்லை உன் மகன் நான்
வாழ்க்கையினிலே வெற்றியடைய
நீ பட்ட துயரங்கள்
ஆயிரமாய் கொண்டிருந்தும்
அவற்றின் நிழல் கூட
எம்மீது தெறிக்காமல்
பாதுகாப்பாய்
வளர்த்தெடுத்தாய்

சுற்றியிருந்தோர்கள் வளமான
வாழ்வுதேடி
கடல்கடந்து சென்றாலும்
தாய்நாட்டு வாழ்வொன்றே
சுகமென்று
வாழ்ந்திருந்தாய்

அம்மாவின் மகிழ்வொன்றே
உன் கொள்கை
என்றிருந்தாய்
ஆன்மீகத் தத்துவங்கள்
ஆயிரமாய்
எடுத்துரைத்தாய்
பாழும் என்மனதினில்
வழுவாக
விழவில்லை

என் வாழ்க்கைப் பயணத்தில்
பல மைல்கள்
கடந்தபின்னே
திரும்பிப் பார்க்கின்றேன்
நான் நடந்த பாதையில்
நான்கு பாதச்சுவடுகள்
தந்தையே என்னையே அறியாமல்
உன் பாதச்சுவடுகளைத்தான்
நான் தொடர்ந்திருக்கின்றேன்

வாழ்க்கையெனும் இந்த
பேராசை
ஓட்டப்பந்தயத்தில்
ஓடிக்களைத்தபின் அப்பா
உன்னைத் தேடுகின்றேன்
உன் தேவை உணர்கின்றேன்

குடும்பம் எனும் கலைக்
கோயில்தனிலே
வீற்றிருக்கும்
தெய்வங்கள் சூடும் மாலை
கண்டிப்பு எனும் நூலில்
பாசம் எனும் மல்லிகையின்
நட்பு எனும் வாசத்தை
கொண்டதாகும்
என்று நித்தியமும்
விளக்கிய என்
நல்லாசிரியனே

சிரித்தபடியே வாழ்க்கைத்
தத்துவத்தை
தத்ரூபமாக வடித்துக்
காட்டியவனே
உறுதியாக ஒன்று மட்டும்
கூறுவேன்
வாழ்க்கை பயணமதில்
அரைக்காதை
தூரத்தை அமைதியாக
கழித்தேனெனில்
தந்தை உன் தங்கமெனும்
அறிவுரையால்தான்.

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்