ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

விநோபா


என்னை உனக்குத் தெரியாது.

மழைச் சாலையில் ஒதுங்கிய
‘பிர்ச் ‘ மரத்தின் இலைகளைப் போல்
நம்பிக்கையோடும், நம்பிக்கையற்றும்
நிறுத்தத்தில் காத்திருக்கும்
என் கருப்பு நண்ப!

உன்னையும்
உன் சகாக்களையும்
உன் சோதரர்களையும்
உன் போலவே
இன்னொரு வீதியில்
இன்னொரு ஊர்திக்காய் நின்றிருக்கும்
முற்றிலும் உதிர்ந்த
வெற்று மரங்களைப் போன்ற
உன் கிழட்டு
அம்மாக்களையும்
அப்பாக்களையும் கூட
எனக்குத் தெரியும்.

கடைசி பழுப்பையும்
உதிர்த்துப் போகிறது
நவம்பர் காற்று.

அதன் கூரீட்டிகள்
உன்னை ரணப்படுத்திவிட்டு
இலைகளற்ற மரத்தின்
பறவைகளற்ற (பழங்)கூட்டிலிருந்து
இரண்டு சுள்ளிகளை உலுப்பி சிதறிவிட்டு
இறுக்கிச் சாத்திய
என்
அழுக்குகள் படிந்த
கண்ணாடிக் கதவுகளை மட்டும்
முத்தமிட்டுச் செல்கிறது.

நேற்றும்
இன்றும்
நாளைக்கும்
இதே நிறுத்தத்தில்
அவசரக் காலையில்
மெதுவாய் நகரும்
ஊர்திச் சாரத்தின்
ஏதாவதொரு சாளரத்தின் பின்னே
படிந்த நீர்ப் புகை நீக்கி
நான் வரைந்த
பளிங்கு நிலாவின் உள்ளிருந்து
ஏனென்றல்லாம் அறியாது
உங்களோடு காத்திருக்கும்
மெளனத் தோழன்
நான்.

அதோ!
தூரத்து வளைவிலிருந்து
என்
தலைக்கு மேலே
தொங்கும் குவியாடியில் விழுந்த
மிகப் பரிச்சயமான
அரை அங்குலச் சதுர(ப்பிம்ப)ம்
உங்கள்
விழிகளையும் தீண்டி
உயிர்ப்பித்தது
சிலைகளின் அசைவிலிருந்து
புரிகிறது.

நாளையும் சந்திப்போம்.

———————-
vinobha_tamil@yahoo.co.in

Series Navigation

விநோபா

விநோபா