அன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)

This entry is part of 42 in the series 20031023_Issue

சி. ஜெயபாரதன், கனடா


என்றும் தன்நலம் பேணி,
ஏது காரண மின்றி
தாறுமாறாய்
எவ்வித நியாயமு மின்றி
ஒவ்வாது நடப்பர் மாந்தர்!
ஆயினும்
மன்னித்து விடுக மாந்தரை!

அருட்பணி செய்துநீ வருகையில்,
சுயநலம் பேணி முடிவில்,
சுருட்ட போவதாய் உன்மேல்
குற்றம்
சுமத்துவர் மாந்தர்!
ஆயினும்
அருட்பணி ஒன்றே மேற்கொள்!

சாதனை புரிந்து வெற்றிநீ பெற்றால்,
போலி நண்பர் சிலர் ஒட்டுவார்!
மெய்யான பகைவர் சிலர் கிட்டுவார்!
ஆயினும்
வெற்றியை நோக்கியே முற்படு!

நேர்மையாய் நடந்து
வெளிப்படையாய்ப் பேசி
பணி செய்யும் உன்னை
ஏமாற்றி விடுவர் மாந்தர்!
ஆயினும்
நேர்மையாய் நட!
வெளிப்படையாய் பேசு!

பல்லாண்டு கட்டிய உந்தன் மாளிகையை
யாராவ தொருவர்
துண்டாக் கிடுவர் ஓர் இரவில்!
ஆயினும்
உண்டாக் கிடுவாய் மீண்டும்
உனதருள் மாளிகை தன்னை!

பணியில் மூழ்கி உன் நெஞ்சில்
அமைதி காணும் போது,
ஆனந்தம் மேவும் போது
உன் மீது
பொறாமைப்படுவர் மாந்தர்!
ஆயினும்
ஆனந்தம் அடைந்திடு அருட்பணியில்!

இன்று புரிந்த உனது
நல்வினைப் பணிகளை எல்லாம்
அடுத்த
நாளே மறப்பர் மாந்தர்!
ஆயினும்
நல்வினைப் பணியே மேற்கொள்!

உன் முழுத்திறப் பணியைத் தினமும்
உலகுக் களித்த போதும்
இன்னும் தேவை பணிக்கு
இருந்தே தீரும் புவிக்கு!
ஆயினும்
உன்னால் இயன்ற அருட்பணியை
முழுத்திறமுடன்
உலகுக் களிப்பாய் நீயே!

***********
jayabar@bmts.com

Series Navigation