கூட்டுக்கவிதை

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

விக்ரமாதித்யன்-லஷ்மி மணிவண்ணன்-சங்கர ராம சுப்ரமண்யன்.


கவிதை வரவில்லை
கவிதை வரவில்லை
கண்மணிகளே கவிதை வரவில்லை

கவிதை
கண்மணிகளுக்கு வராது

கண்மணிகள்
கவிதையின் சொரூபங்கள்
காற்றில்லாத பொழுது
கவிதை எப்படி வரும்
காற்று
கவிதையின் சொரூபம்

வேசியின் காற்று
மற்றவனுக்கு குசு
குசுவில்லாத காற்று
ஒன்றுமில்லை

என்ன பேசுகிறாய்
எவ்வளவு குடித்திருக்கிறாய்

வேசி உயிர்த்தெழுந்தாள்
உயிர்த்தெழுந்த வேசிக்கு
கவிதை ஒரு குசு
காற்றும் ஒரு குசு

இரண்டு பேருக்கும்
இல்லாத கவிதை
தெருவில் கிடக்கிறது
லாரியில் அடிபட்டு சாக

இப்படியெல்லாம் பேசினால் எப்படி
மொழி தெரிய வேண்டும்
நாகரிகம் தெரிய வேண்டும்
மொழி நாகரிகம் தெரியவேண்டாம் ?

பனையேறியென்றால்
பனையேறத் தெரியவேண்டும்
ஒன்றும் தெரியாமல்
ஏன் இப்படி
எங்கள் கழுத்தை அறுக்கிறாய்

பனையேறி
பனையிலிருந்து பார்த்தான்
முக்குவன் கடலுக்குள் செல்வதை
கடல் பனையேறுவதை
இரண்டு பேருக்கும்
இல்லாத பனையேற்று
விழுந்து தொலைத்த
முக்குவன் உயிர்த்தெழுந்து
மூக்குபீறியின் பதனீர்காட்டி
விழுந்து செத்தான்
பனைமரத்தடியில்
பன்னிமாடசாமி
எல்லோரையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்

எல்லாம் மாயை
எல்லாம் நிசம்.

**************

ஒரு பாக்தாத் நகரம் எரிகின்றது

——–கூட்டுக்கவிதை
லஷ்மி மணிவண்ணன்
சங்கர ராம சுப்ரமண்யன்
விக்ரமாதித்யன் நம்பி

இப்படி ஆரம்பிக்கலாமா
எப்படியும் ஆரம்பிக்கலாம்
விறைத்த குறிகள்
யோனி தேடி அலையலாம்

யோனியின் முடிவு
விறைத்த குறிகளை தேடாமலிருக்கலாம்

பாக்தாத் நகரம் எரிகிறது
எரிகிறது நகரில் ஆயிரம்
குறிகள் விறைத்தபடி எரிகிறது

கவிஞர்கள் விறைத்த குறிகளோடு
தெருவில் அலைகிறார்கள்

தெரு பல்வேறு
சந்துகள் கொண்டது
அந்த சந்தில் ஒரு கல்யாணி
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்

ஒரு பாக்தாத் நகரம் எரிகின்றது

*

எப்பொழுதுமே
எரிந்து கொண்டிருக்கிறது
சீதை தீக்குளித்த தீ
கண்ணகி ஸ்தனத் தீ

தொலைபேசி வருகிறது
ஒரு பெண் குரல்
கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறது
எதற்கு
யார் பேசுவது
யார் கேட்பது

தெரியும் தெரியும்
ஏற்கெனவே சொல்லப்பட்ட
வரிகளே எல்லாம்

நட்சத்திர வலைகளுக்கு கீழே
நான் வாழ்கிறேன்
பூமியில்
இந்த பூமியில்தான்
விதைகள் முளைக்கின்றன
செடிகள் வளர்கின்றன
வன விருஷங்கள்
வானைத் தொட விளைகின்றன
மேகங்கள் சூழ்கின்றன
மழை பொழிகிறது

யாருக்கென்ன பிரச்னை
யாருக்குத் தெரியும்
தமாஷை
தமாஷாகவே பார்ப்போம்

அம்மாவுக்கு
அடிமைப்பட்டவனிடம்
என்ன பேச இவன்

அம்மா உள்ளத்தில்
குடியிருப்பவர்கள் இவர்கள்
அம்மாவை மனத்தில்
குடிவைத்திருப்பவர்கள் இவர்கள்
அம்மாவைப் போலவே மனைவி
அமையவேண்டுமென்று
ஆசைப்பட்டவர்களும் இவர்கள்தாம்
ஆனால்
அம்மா தப்பித்துவிட்டாள்
மனைவி மாட்டிக்கொண்டாள்

செம்பருத்திப்பூவின் நிறம்
தேடிக் கண்டடைந்த காற்று
கையில் கிடைத்த காசு

*

அன்றொரு நாளில்
என் சிறுவயதில்
என் தங்கையுடன்
நான்
இந்த நகரத்திற்கு
வந்திருக்கிறேன்

மதிய வெயிலின் ஒவ்வாமையுடன்
அப்பாவை பயத்துடன் பார்க்கிறேன்
நகரம்
தந்தையைப் போல
அப்போதைய தோற்றம் அமைந்திருக்கிறது

பொது குளியலறைகள்
உணவகங்கள்
தங்குமிடங்கள்
என கடக்கும் இடமெல்லாம்

அம்மா
அடிக்கடி விடுதியிலிருந்து
வந்து
போய்க் கொண்டிருந்தாள்

*

பாக்தாத் எரியும் போது
நான் பீடிபற்றிக் கொண்டிருந்தேன்
என் பேனாவின் கசிவில்
என் மனைவியின் யோனி
நிமிர்ந்து கொண்டிருந்தது

ஒரு போதும்
ஒரே ஆளாக
இல்லாத நான்
என் சிகரெட் புகையில் கரைந்து
கொண்டிருந்தேன்

எவரையும் வெறுக்க இயலாது
என்னை நேசித்த குரல்
நான் மூத்திரம் பெய்வதுவரையில்
உதவாகியிருந்தது
மூத்திரம் பெய்தபோதோ
பாக்தாத் எரிந்து கொண்டிருந்தது.

*****************

Series Navigation

ஜான் பாபுராஜ், நா.முத்துக்குமார், சங்கர ராமசுப்ரமணியன், லஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன்.

ஜான் பாபுராஜ், நா.முத்துக்குமார், சங்கர ராமசுப்ரமணியன், லஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன்.