பெரிய கருப்பு

This entry is part of 48 in the series 20031010_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


பெரிய கருப்புக்கு
கோடையில் கொடை.

எட்டுப்பட்டி சனமும்
பத்து நா கூடி நிக்கும்
ரா முழுக்க கூத்துப் பாக்க
வண்டி கட்டி வந்து சேரும்.

புதுக்கோட்ட தெலகவதி
கொட்டாம்பட்டி பழனிச்சாமி
கரகாட்டம் காததிரும்.
காரக்குடி சின்னப்பா
கோவில்பட்டி சீதேவி
வள்ளித் திருமணம்
வக்கணையா அரங்கேறும்.

நெல்ல முருகேசு
நாயனம் ஊதுறப்ப
கண்ணு முழி ரெண்டும்
அடிச்ச கள்ள தேக்கி நிக்கும்.
தேக்கம்பட்டி சுந்தராசு
தெம்மாங்கு பாட்டுப் பாட
தெருவெல்லாம் சதிராடி
நையாண்டு நக்கலிக்கும்.

அல போலக் கட நூறு
வக வகயா விளையாட்டு
அம்பூட்டு சனக்கூட்டம்
ஆர்ப்பாட்டம் உற்சாகம்.

கரகாட்டக் கொறத்திக்கு
மார்பு சாக்கெட்டுல
ரூபா நோட்டுக் குத்த
வெட்டிக்கிட்டான் ரெண்டு பய.

பத்து வருசமாச்சு
கருப்புக்கு
கொட போச்சு……

பன்னிக் கறிக்கும்
பட்ட சாரயத்திற்கும்
நாக்கத் தொங்கப் போட்டு
பொட்டல் வெயிலிலே
பொசுங்குறாரு…….பெரிய கருப்பு!
— நெப்போலியன்
சிங்கப்பூர்

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation