வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

ருத்ரா


காலத்தின்

பிரம்மாண்டத்தைக்கண்டு

மிரண்டு எழுதிய

மின்னல் கவிதை இது.

ஆனாலும்

ஒரு பிரம்மாண்டத்தைக் கண்டு

இன்னொரு பிரம்மாண்டம்

மிரண்டு போவதா ?

நீ

காலத்தை சொல்கிறாய்

நான்

உன் கவிதையைச் சொல்கிறேன்.

உன் ஒவ்வொரு எழுத்தும்

ஆயிரம்

கவிதைத் தொகுதிகளாய்

விரிந்து கூர்ந்து ஒடுங்கி

வியக்க வைக்கும்

ஒப்பற்ற கவிதை இது.

‘எழுதி எழுதி மேற்செல்லும் ‘

அந்த பெருங்கவிஞனின்

‘விரல் அசைவுகள் ‘

உன் மைக்குளத்தில்

அலை வட்டங்கள் ஆகியிருப்பதே

இங்கு கவிதையாகி இருப்பதை

நீ அறியவில்லையா ?

ஒரு வகையில்

உன்

காலத்தின் மறு பெயரை

சிவன் என்று

வைத்துக்கொண்டால்

அதன் அடி முடி

காணக்கிளம்பிய

பிரமனையும் திருமாலையும்

பற்றிய புராணங்களை

புதுப்பித்து

புளி போட்டு விளக்கிய

பாமாலை தான் இது.

அந்த சிவனே

அண்ணாந்து பார்த்து

வியக்கும் உயரமும்

கீழே குனிந்து பார்த்து

வியர்த்துப்போகும்

ஆழமும்

உடைய து ஒன்று உண்டு.

அதுவே கவிஞனின் பேனா.

காலம் மட்டும் அல்ல

சிவன் மட்டும் அல்ல

உனது

இந்தக் கவிதையின்

வேரும் கிளையும் கூட

அப்படித்தான்.

காலம் என்ற ராட்சசனை

ஒரு கரப்பான் பூச்சியாய்

கற்பனை செய்துகொள்.

உற்றுப்பார்.

உன் கவிதைப்புத்தகத்தின்

பக்கங்களுக்கிடையில்

அதன் அழுத்தம்

தாங்காமல்

நசுங்கிக்கிடக்கும்

‘ஃபாசில் ‘ மிச்சமாய்

தெரியும் அது.

காலம் தோன்றுவதற்கு

முந்தியே தோன்றி

காலம் அகாலமாய்

அழிந்தபின்னும்

உயிர்த்து இருக்கும்

ஒரு உந்துவிசையின்

‘ஃபாசில் ‘தான் கவிதை.

வெறும் விந்து விசையின்

பசையற்ற ‘ஃபாசில் ‘ அல்ல கவிதை.

அப்படியிருக்கும் போது

உயிரின் நிலையாமை

என்று

நீர்க்குமிழித் தத்துவம்பாடும்

நீர்த்துப்போன கவிஞனா நீ ?

உன் எழுத்துகள்

அச்சு கோர்த்ததில்

எப்படி

அச்சம் கைகோர்த்தது ?

உன் பேனாவுக்குள்ளிருந்து

இப்படி ஒரு

மூளிப்பிரம்மம்

மூச்சு விட்டது கண்டு

பிரபஞ்ச விஞ்ஞானங்கள்

உனது வடுகப்பட்டி ஊர்

காது வளர்த்த பாம்படத்து ஆச்சி

பிடித்து வைத்த

சாணிப்பிள்ளையாராய்

ஒடுங்கிப்போனது.

ஒரு அழகிய

பாமரத்தனத்தை

சாமரம் ஆக்கிய கவிதையில்

உனக்கு

காற்று வீசிக்கொள்கிறாய்.

ஆனாலும்

உன் மேல் உனக்கு

ஏன் இந்த கோபம் ?

அந்த கடைசிவரிகளைத்தான்

சொல்கிறேன்.

தன் தலை மீதே

எச்சம் இட்டுக்கொண்ட

காக்கையாய்

மாறிப்போன

அக்கினிக் குயிலே!

காலத்தை நீ

விஞ்ஞான பூர்வமாய்

விண்டு பார்க்க முனைந்திருந்தால்

இந்த அஞ்ஞானத்தை

இப்படியொரு

‘கலைடோஸ்கோப் ‘ கவிதையாக்கி

எழுத்துகளை

‘டிங்கரிங் ‘ கடையின்

அடிசரக்கு ஆக்கியிருக்கமாட்டாய்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டானின் சிந்தனையில்

காலமும் வெளியும்

சவ்வுப்படலமாய்

ஒரு வினோத ஜியாமெட்ரியின்

வடிவகணித சமன்பாட்டுக்குள்

சிறைப்பட்டு போனது.

ஈர்ப்பும் வெடிப்புமாய்

விரிந்து தோன்றும்

இந்த கால சர்ப்பத்தின் படம்

சிங்குலாரிட்டி எனும்

தனிப்புள்ளியில் ஒடுங்கும் என்று

காலத்தின்

மூக்கணாங்கயிற்றை

மூர்க்கமான கணிதத்தில்

முடக்கி வைத்தவர்

டாக்டர் பென்ரோஸ்.

அதிசய மூளைநோயால்

தாக்கப்ப்ட்ட போதும்

ஒரு சக்கரநாற்காலியில்

உட்கார்ந்த்து கொண்டே

பிரபஞ்ச விஞ்ஞானத்தின்

சக்கரவர்த்தியானவர்

டாக்டர் ஸ்டாஃபன் ஹாக்கிங்.

காலமே கரைந்துபோய்

காணாமல் போய்விடும்

‘பிளாக் ஹோல் ‘ எனும்

கருந்துளை வழியே

துருவிப்பார்த்து

துருப்பிடித்த பஞ்சாங்கக்

கோட்பாட்டையெல்லாம்

தூள் பண்ணியவர் அவர்.

கருந்துளையின் வெப்பவீச்சை

(தெர்மோ-டைனாமிக்ஸ் ஆஃப் ப்ளாக் ஹோல்)

முகர்ந்து பார்த்து

சூத்திரம் ஆக்கிய சூத்திரதாரி அவர்.

அவரது கணிதக்காட்டில்

திக்கு தெரியாமல்

தன் செங்கோலை தவறவிட்டு

தொலைந்து போனது காலம்.

தினவு எடுக்கும்

கனவு முகமூடிகளை

வைத்துக்கொண்டு

காதல் பூச்சாண்டி காட்டும்

சிறு பிள்ளைத்தனத்தை

விட்டு விட்டு

விஞ்ஞான தாகம் நிரப்பிய

பேனாவைக்கொண்டு

இந்தக் ‘காலத்தினை ‘ க்கூர்ந்து

உற்றுப்பார்.

உன் பிரமைகள் கலையும்.

உன் மிரட்சிகள் தெளியும்.

சினிமாக் காதலின்

‘தசையாவதாரத்துக்கு ‘

பாட்டு மிடைந்து கொண்டிருந்த நீ

திடாரென்று

விசுவரூபம் காட்டும்

விஷ்ணுபுராண

‘தசாவதாரத்துக்கு ‘

எப்போது தாவினாய் ?

பிரபஞ்சம்

தோன்றக்காரணமான

‘பிக் பேங்க் ‘ எனும்

பெருவெடிப்பு

முதன் முதல் தோன்றியதே

காதலின்

இதயத்துடிப்பில் தான் என்று

கோட்பாடுகள் நிறுவும்

காதல் விஞ்ஞானி அல்லவா நீ!

கல் தோன்றி

மண்தோன்று முன்னரே

காதல் தோன்றியது என்று

காதலின் ‘ஜ ‘ன்ஸ் ‘ பற்றி

மரபணுவியல்

பாடியவன் அல்லவா நீ!

காலத்தை வெல்லும்

காதல்

என்று நீ

(சு)வாசித்து (சு)வாசித்து

எழுதியதெல்லாம்

எப்படி ‘சலூன் குப்பை ‘யின்

‘மயிரனையதாய் ‘

மாறிப்போனது ?

காதலுக்குள்

காலத்தையே

கரைந்துபோகும்படி

வானவில் கூடாரங்கள்

வளைத்துப் படுத்திருந்தவன் நீ.

எதற்கு

இந்த ‘கால பைரவம் ‘ பற்றிய

பாஷ்யம் இயற்றினாய் ?

இப்போது தான் புரிகிறது!

நீ அவசரம் அவசரமாய்

எழுதிக்கொடுத்த கவிதையை

குமுதம்

அச்சுப்பிழையோடு

பதிப்பித்திருக்கிறது என்று.

காதல் ‘ராட்சசியை ‘

அசைபோட்டு அசைபோட்டு

எழுதியதில்

உன் ‘காதல் ராட்சசன் ‘

கால ராட்சசனாய்

மாறிப்போனான் என்று

இப்போதுதான் புரிகிறது!

அதனால்

அடுத்த இதழில் எதிர்பார்க்கிறேன்

அதில் ஒரு ‘பிழை திருத்தம் ‘

***
ருத்ரா.

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா