தெய்வமனம் அமைந்திடுமோ!

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

கரு.திருவரசு


பார்வையிலோர் ஓவியமும்
பவளவிதழ் சிரிக்கின்ற
பான்மையிலோர் காவியமும்
பதுமையென இயிஇருக்கின்ற
சீர்மையிலோர் சிற்பமதும்
செய்திடுவேன்! அவையெல்லாம்
சிந்திடுமோ மழலைமொழி
சிறுகுழந்தாய் உனைப்போலே!

தடுமாறும் நடைகண்டு
தரமான நாட்டியமும்
தடதடெனத் தளிர்க்கைகள்
தட்டுவதில் தாளங்களும்
திடுமெனநீ அழும்போது
தேனிசையும் கற்றிடலாம்!
சிறுதுயிலில் நின்முகப்பூ
செய்நடிப்புத் திறம்வருமோ!

சிந்தியமு துண்பதிலே
சிறப்பீகைப் பெருங்குணமும்
தந்தைக்கும் சடைநாய்க்கும்
தரும்முத்தச் சமத்துவமும்
உந்தியுந்தி முயல்வதிலே
ஊக்கத்தின் உயர்வடிவும்
உணர்ந்திடலாம்! உலகிலினி
உன்பருவம் கிடைத்திடுமோ!

கரித்துண்டால் கீறுவதில்
கன்னியர்செய் கோலங்களும்
பிரித்துவைத்து நூல்படிக்கும்
பேரழகில் இயிலக்கியமும்
சிரித்தழுது விழுந்தெழுந்து
திரிவதிலே செயல்திறமும்
தெரிந்திடலாம்! உனக்கிருக்கும்
தெய்வமனம் அமைந்திடுமோ!

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு