கால பூதம்…

This entry is part of 57 in the series 20030717_Issue

ராம்பால்


என்னை மண் என நினைத்து
பானை செய்ய மனமில்லாது
அங்குமிங்கும்
உருட்டிக் கொண்டிருக்கிறது
பொழுது போகாத
குயவன் போலும்..

எல்லா கணங்களிலும்
எவரோ எறிய
எவரோ அடிக்க
இலக்கில்லா
பயணித்து எங்கோ
விழுகிறேன் ஒரு பந்து போலும்…

எதன் மீதிருந்தோ
ஆரவாரமாய் தள்ளி விட்டு
ஏளனம் செய்கிறது..
மரத்தைப் பிரிந்த
இலையை அடித்துச் செல்லும்
காட்டாறு போலும்..

பரமபதமான
வாழ்க்கையில்
என் காய்க்கு மட்டும்
உருட்டப்படும் பகடை
பாம்பால் மாத்திரமே தீண்டப்பட
கிளம்பிய இடத்திற்கே வந்து சேருமாறும்..

இரக்கமற்ற
சிறைக்காவலனின்
கண்காணிப்பில் இருக்கும்
அப்பாவி கைதியாயும்..

என்னை அலைக்கழித்து
உருக்குலைய வைக்கப்
பார்க்கிறது காலம்
ஒரு கொடிய பூதமாய்..

Email: rambal@operamail.com

Series Navigation