ஒற்றைச் சிறகு

This entry is part of 37 in the series 20030530_Issue

ஆ. மணவழகன்


புல் முளைத்திருக்கும் – மண்ணில்
புதைத்து வைத்திருந்தால்!
எருக்கு முளைத்திருக்கும் – மனதில்
எடுத்து எறிந்திருந்தால்!

சுரண்ட முடியா சுவடுகளாய் – உள்ளே
சுற்றி சுற்றி வரும் கனவு!
பருவம் பல பல கடந்தும்,
பதியம் போடும் சில கனவு!

பெரும் பயணத்திலும்
பேருந்து ஓட்டத்திலும்,
கண்ணில் படும் பலகையின் – பெயரைக்
கண்டு மனம் பதைபதைக்கும் – அவள்
‘வாழ்க்கைப்பட்டது ‘ இவ்வூரோ ?

பேடை முட்டையிட
கூடுகட்ட குச்சி பொறுக்கும் குருவி,
நினைவு படுத்தும்,
‘மழலையாய் கொஞ்சியவள் ‘
மழலையைக் கொஞ்சுவாளோ ?

சிறகில் உதிர்ந்து – காற்றின்
திசையில் பறக்கும் ‘ஒற்றைச் இறகு ‘
உறுதிப்ிபடுத்தும்..
உதிர்ந்து போன நம் உறவை!

காணும் தெருக்கோலம் – நான்
கண்ட திருக்கோலம்…
திண்ணையில் வரைந்த கோலம் – உன்
திருமணத்தை நினைவுகொள்ள
வாசலில் கலைந்த கோலம் – என்
வாலிபத்தை நினைவு கொள்ளும்!

குஞ்சோடு கோழி
குப்பையைக் கிறுக்குவது..
குறுக்கிட்டு நினைக்க வைக்கும்!
காலால் நீ கிறுக்கியதையும்
கவிதை என்று நான் கிறுக்கியதையும்!

எதிர்ப்பார்த்துக் களைத்து
ஏமார்ந்து இருக்கும் வேளை
ஏதோ ஓர் சுற்றில்
எதேச்சையாய் உனைக் காண்பேன்!

கயலோ என்றிருந்த
கண்கள் படபடக்க..
காமன் வில்லோ என்றிருந்த
இமைகள் மேல் சரிய…
கோவைப் பழமோ என்றிருந்த
இதழ்கள் துடிதுடிக்க…

‘எப்படி இருக்கிங்க ‘
எனைப் பார்த்து நீ கேட்பாய்!
புரிந்த உணர்வுக்காக
புன் சிரிப்பை உதிர்த்திடுவேன்!

வாழ்த்துரை வழங்குவாய் – உன்
வாழ்க்கைத் துணையைப் பற்றி!
சொல்லாமல் உணர்ந்து கொள்வேன் -நீ
சுகம் சுகமாய் சுமந்த உறவை!
சொந்தமென்று அள்ளி எடுப்பேன்!
சோகம் அனைத்தும் துறந்திருப்பேன்!

சொல்ல மறந்தேனே
‘இவர் கவிதை என்றால் எனக்கு உயிர் ‘ என்பாய்
கர்வப்பட்டுப் போவேன்
கவிதை வேறு நான் வேறா ?

உன் கொழுநனுடன்
கொஞ்ச நேரம்!
உன் குழந்தையுடன்
‘ கொஞ்சும் ‘ நேரம்!
இடையிடையே நீயும் – உன்
நினைவில் நின்றவையும்!

தோற்றதால் காதலா ?
தோற்பதே காதலா ?
ஒரு நாள் இன்பம்
ஒரு யுகம் தாங்கும்!
இதயம் விட்டு
இடம் பெயர்வேன்! – நான்
இன்ினுமொரு சுற்றிற்காக!

**********
a_manavazhahan@hotmail.com

Series Navigation