வளர்ந்தேன்

This entry is part of 37 in the series 20030530_Issue

ஆதர்ஷ் ராவ்


அடித்தவனுடன் அடுத்த கணமே குலாவினேன்
திட்டியவை மறந்து மழலையில் கொஞ்சினேன்

கொஞ்சமே அடித்த அம்மாவிடம் சிணுங்கி
நொடிநேரக் கொஞ்சலில் காலைக் கட்டினேன்

கோலி திருடிய நண்பனை ‘போறது போ ‘ வென
மன்னித்து கையிலிரு கோலி கொடுத்தேன்

உன் பேச்சு ‘கா ‘ வெனக் கூறிவிட்டு மாங்காய்க்கென
பழம்விட்டேன்; தின்றவுடன் ‘கா ‘ வென்றேன்

வளரவளர அத்தனையும் தொலைத்து முகமூடிமேல்
முகமூடி அணிந்து இயல்பை இழந்தேன்

நினைத்தாலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது
வேலைக்காரி எடுத்துவிட்ட பத்து ரூபாயை

‘பணத்துக்காக இல்லைங்க திருட்டு இல்லையா ? ‘ யென
எனக்கே அருவெறுப்பான வாதங்கள் பண்ணினேன்

நேற்றென்னைப் பார்த்தும் முகம்திருப்பிய அண்டை
வீட்டு ராகவனுக்கு பதிலடியாய் இன்றுநான் திருப்பினேன்

மெளனமாய் தியானித்தபின் ‘இயல்பு ‘க்கு மாறினேன்
தெருவில் குழந்தைக்கு இணையாய் ஓடினேன்

கோலியுடன் பம்பரமுமாய் கோதாவில் இறங்கினேன்
ஊரோடு சேர்ந்து என்குடும்பமும் ‘பைத்தியம் ‘ என்றது!

itsaadharsh@hotmail.com

Series Navigation