‘கவிதையும் கழுதையும் ‘

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

கரு.திருவரசு


பெண்ணே கவிதை!

மகளானாய்! மாண்புநிறை மனையானாய்! வந்த
மருமகளாய் அவளுக்கு மாமியாரும் ஆனாய்!
அகலானாய் வீட்டுக்கே! அக்காளாய் தங்கை
அண்ணியுமாய் ஒருமுறையில் நாத்தியுமாய் ஆனாய்!
பகலான பெண்ணேநீ பதமாக எவனும்
படைக்காத படைத்தாலும் முடிக்காத கவிதை!

குழந்தையே கவிதை!

சித்திரமே! சிரிக்கின்ற விசித்திரமே! பேசும்
தேன்மலரே உன்பேச்சு தேன்சுவைக்கே வண்ணம்!
மெத்தைகளாம் மேகங்களில் தத்திவரும் நிலவே!
மென்மைக்கும் பெண்மைக்கும் மேலெனும்நல் லழகே!
புத்தகத்தில் படிக்காத புதுச்சுவைகள் எல்லாம்
பொதிந்துவரும் தவழ்ந்துவரும் புத்தகமே! எந்த
வித்தகனும் விளக்காத தத்துவமே! உலகில்
விலைவைக்க முடியாத குழந்தாய்நீ கவிதை!

குழந்தைதான் கவிதை!

இருக்கின்ற பொருளிலெலாம் இருக்கிறது! சந்தம்
எடுத்துவைக்கும் திறமையிலே நடக்கிறது கவிதை!
சிரிக்கின்ற பெண்ணழகு சிறந்ததொரு கவிதை!
சின்னஞ்சிறு குழந்தையுமோர் சிரிக்கின்ற கவிதை!
சிறக்கின்ற பெண்களுக்குள் திசைமாறும் அறிவால்
சிறுமைகளால் திருமறைந்து பெயர்மாறும் கழுதை!
பிறக்கின்ற பிழைவென்ற எனைவென்ற குழந்தை
பிறக்காத எவனுமின்னும் வடிக்காத கவிதை!

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு