மடையசாமி மாட்டிகிட்டான்…

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

வேதா


என் பேரு மாடசாமி
எனக்கு ஒரு தம்பி சாமி
ரெண்டு பேரும் ஒண்ணாத்தான்
ஊருக்குள்ள பொறந்து வந்தோம்!

பள்ளிக்கூடப் பல்லி அடிப்பது
பழக்கமாகிப் போனதால
‘அஞ்சாப்பு ‘வரைக்கும் நாங்க
அடுத்தடுத்து பாஸானோம்!

அப்புறமா அப்பாரு
அடிச்சடிச்சுப் பாத்தாரு
இருந்தாலும் மண்டையில
எதுவுமே ஏறலைங்க!

இருந்த ரெண்டு எருமையும்
எழவாகிடப் போவுதுன்னு
இழுத்துக்கட்டி தலைப்பாகை
எறக்கவே இல்லைங்க!

தானா படிச்ச தம்பி
தடுமாறித் தடுமாறி
தகுந்த படிப்பு படிக்கணும்னு
கடல் தாண்டிப் போனாங்க!

பண்ணையும் பஞ்சமும்
பழகிப் போயிட்டதால
எருமைகளும் நானுமாக
என்னமோ இருந்தோங்க!

வேண்டாம்னு சொல்லியும்
வீடு விட்டுப் போன தம்பி
வேலையில சேர்ந்துகிட்டு
வெளுநாட்டில் இருந்தாங்க!

ஆயிரந்தான் இருந்தாலும்
தாய்நாடும் தமிழ்மண்ணும்
தரணியில தங்கம்னு
தம்பிக்கு சொன்னேங்க!

ஏழை பணக்காரன்
எந்தவொரு வித்தியாசமும்
எங்க ஊரில் இல்லைங்க
எல்லாத்துக்கும் ‘வரி ‘தாங்க!

உள்ளங்காலில் நடந்தாக்கா
உள்ளபடியே வரியாங்க!
உரிமையைக் கேட்டாக்கா
ஊருக்கெல்லாம் வரியாங்க!

உறைமோருக்கு உள்ளே ‘வரி ‘ங்க!
உறைஞ்சா தயிருக்கு
இன்னொரு வரியாங்க!

மடியில இருந்துகிட்டா
சில்லறை வரியாங்க!
தொடையில இருந்துகிட்டா
சில நூறு வரியாங்க!

வயசாகி ‘போனாக்கா ‘
வரி மட்டும் இல்லீங்க!
வயசாகி வாழ்ந்தாக்கா
‘வயசான ‘ வரியாங்க!

வயசுப் பசங்கன்னா
வாலிபத்து வரியாங்க!
வயசுக்கு வரலைன்னா
‘பொதுவா ‘ வரியாங்க!

படுத்தாக்கா பொறந்தாக்கா
பொஞ்சாதிக்கு வரியாங்க! – முந்தானை
பிடிச்சாக்கா விட்டாக்கா
புருசனுக்கு வரியாங்க!

எண்ணின சீட்டையே
எண்ணி எண்ணிப் பாக்கச் சொல்லி
எப்படியும் அவங்க சனம்
செயிக்க வெப்பாங்க!

கட்டின பாலத்தை
கல்விக் கூடத்தை
‘சரியா ‘ன்னு தரம் பாக்க
‘சட சட ‘ன்னு இடிப்பாங்க!

வாசலுக்கு வந்தவன்ட்ட
வாங்கி வாங்கித் தின்னு
வருசம் ஒரு நாள் மட்டும்
‘விரதம் ‘ இருப்பாங்க!

வாழ்நாள் முழுவாக
உழைச்ச சனங்களுக்கு
உலகம் விட்டுப் போனாதான்
உள்ளதையே கொடுப்பாங்க!

இனி, ஆற நூறாக்க
அலைஞ்சாலும் முடியாதுங்க!
ஓடும் ஆற , ஆயிரமா
ஆக்க தினம் சண்டைங்க!

‘பக்கத்துக் குடித்தனம் ‘னு
பாசம் வெச்சாக்கா
‘தேசம ‘ி பேசினாக்கா
‘தேடித் தேடி ‘ வர்றாங்க!

இருந்தாலும் எங்க ஊரில்
எத்தனையோ விசயத்தை
‘ஏன் ? ‘னு ஒரு பயலும்
கேக்கவே மாட்டாங்க!

அடுத்தடுத்த ஜென்மத்திலும்
ஆயிரம் பிறவியிலும்
அரசாங்கத்த நம்பி மட்டும்
யாரும் பொறக்காதீங்க!

அவனவன் ஆகாரம்
அவனவன் பொங்கலுக்கு
யாரும் இங்க வேண்டாங்க
அனுபவிச்சு சொல்றேங்க!

மாடசாமி இப்போ
மடையசாமி ஆனேனுங்க!

பேசிப் பேசி இருந்ததில
பொழுதெல்லாம் போனதுங்க!
பொழச்சிக் கடந்தாக்கா
புதுசா எதும் பேசலாங்க!

அறுபது வயசு வரை
இதுதான் பொழப்புங்க!
அறுபதைத் தாண்டிட்டா
அப்புறம் பாக்கலாங்க!
*******

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா