பொங்கல் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

சேவியர்


சிந்தையில் தை.

0

இதோ
தை மாதக் குதிரையில்
வருகிறது திருவிழா.

வாசல்களே,
உங்கள்
குப்பைகளைக் கழித்து
கோலத்தின் முத்ததுக்காய்
குளித்துக் காத்திருங்கள்.

சுவர்களே
உங்கள் அழுக்கு ஆடைகளை
சுண்ணாம்பு
வேட்டிகளால்,
சுற்றி மறையுங்கள்.

கொட்டில் மாடுகளே
வாருங்கள்,
உங்கள் தொட்டில்
முற்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

புதிய பானைகளே
பொறுத்திருங்கள்,
உங்கள் உள்ளம் பொங்கி வழிய
இதோ
நாள்காட்டிகளும்
பட படக்கின்றன.

வயல்காற்றே வாருங்கள்
எங்கள்
வியர்வையின் ஈரத்தை
உணவின் சாரமாக மாற்றியது
நீங்கள் தான்.
திண்ணையில் வந்தமருங்கள்.

பூமித் தாயே
பெருமிதம் கொள்,
நீ உமிக்குள் ஒளித்து வைப்பதை
இன்னும் எங்கள்
கணிணிக் கூடங்களால்
தயாரிக்க இயலவில்லை.

எல்லோரும் வாருங்கள்,
மனம் பொங்க மகிழுங்கள்
இது
தமிழர் கலாச்சாரத்தின்
தனி அடையாளம்.

அறுவடையின் ஆனந்தத்திலும்,
வறுமையின் வேதனையிலும்,
நன்றி மறக்காத
என் தமிழ்த் தலைமுறையின்
தன்மான அடையாளம்.

கலாச்சார வேர்களை
ஆழ உழுது வை.
வயலில்லையேல் செயலில்லை
என்பதை
சிந்தையில் தை.

இதோ
வந்து விட்டது தை.

0

கரும்பு விழாக் கரையோரம்…

0

பொங்கல்…

பூக்களை மட்டுமே
பூஜிக்கும் பூமியில்
வேர்களுக்குக்
கிளைகள் எடுக்கும்
கலை விழா.

மோதிரங்களின் தாலாட்டில்
விரல்களை
மறந்து விட்டவர்களுக்கு
பாதங்கள் நடத்தும்
பாராட்டு விழா.

தனக்குத் தானியம் தந்த
வயல்களுக்கு
வரப்புகள் விரிக்கும்
வாழ்த்து விழா.

பணப்பை கள் பார்க்கத் தவறிய
கலப்பைகளுக்கு,
கிராமச் சாலைகள் நடத்தும்
கோலாகல விழா.

நாடுகள்
கிரீடப் போட்டிக்கு
கவசங்களோடு அலைய,
இங்கே
மாடுகளின் தலையில்
முடிசூட்டு விழா நடக்கும்.

தங்கத் தட்டுகளை வெறுத்து
செங்கல் மீதில்
திங்களைப் பார்த்து
பொங்கல் பானை
பொங்கிச் சிரிக்கும்.

நம்பிக்கைகளை நன்றாகிய
பச்சைக்கு
கும்மிக்கைகள் ஒன்றாகி
குதுகெலமாய் நன்றி சொல்லும்.

நல்ல நிலத்தில்
விதை விழுந்தால்,
ஆயிரம் விதைகள் பயிராகும்
என
களஞ்சியங்கள் ஒப்புக்கொண்டு
கையெழுத்திடும்.

வாருங்கள்,
அனுபவக் கலப்பைகள்
உழுது முடித்த உள்ளத்துள்
நல்லெண்ண விதைகளை
ஆழமாய் ஊன்றுவோம்.

இன்னோர் பொங்கலுக்காய்
இதயம் தயாரிப்போம்

0
Xavier_Dasaian@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்