வாசங்களின் வலி

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

திலகபாமா, சிவகாசி


அட்சய பாத்திர கருப்பைகளை
பிச்சைப்பாத்திரங்களாக்கிக் போகும்
கணவன் பாத்திரங்கள்

தாலிகளெல்லாம் விந்து தானம்
தந்து போகும், வியாசர்களையல்லவா
விதைத்து போகின்றது

கொதித்து குழம்பி
மணந்து தயாராகி
ஆறிக் கிடக்கும் அன்னமென
விரைத்து கிடக்க
வாடிய பின் வந்து சேரும் நீ
வாசத்திற்கென கசக்கிப் பார்க்கின்றாய்
வந்து சேரேன் ஒரு முறையாவது
வாடுவதற்கு முன்

குசேலனின் அவலுக்காக
காத்திருந்த கண்ணன்களெல்லாம்
ஒரு முறை, ஒரே ஒரு முறையாவது
நான் கொண்டு வரப் போகும்
பாரி ஜாதத்திற்காக வழி பார்த்திருக்கட்டுமே

கடவுளுக்கு இணையாக
தராசில் வைக்க முடியாது போனது
மட்டுமல்ல
என் காத்திருப்புகளுக்கு
நிகராக எதிர்திசையில்
எத்தனை கண்ணன்கள் நிறுத்தப் போகிறாய்

பூத்து விரிந்த பூக்களின்
வாசத்திற்குள் வலியிருப்பதை
மழை இரவில் வேம்பூ உதிர்த்த
நட்சத்திரங்கள் சொல்லிப் போக
உணராத நிலவு சூரிய ஒளி
உண்டு குளிர்ந்து சுவடு மறைத்து போகும்

mahend-2k@eth.net

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி