திருமாவளவன்
யமன் திசையில்….
மழை இரவு
இரவின் இருள் பாதி
மழையின் ஈரம் மீதி
துளித்துளியாய் துாங்குகிறது
மரக்கிளைகளில்
இரவெல்லாம் மின்னல் முழக்கம்
மழை
பெருங்காற்று
அச்சம் விரவ கிடுகிடுத்த நடுக்கம்
மழை விட்டகாலை அசாத்திய அமைதி
முகிற் துண்டால் ஈரம் உலர்த்திய
வானம்
வேலிக் கிளுவையிலே
சிறகை அகல விரித்து வெய்யில் காய்கிறது
மஞ்சள் குருவி
நாயொன்று
ஏதோ ஒன்றை இழுத்துச் செல்கிறது
காகங்கள் பின்தொடர
முற்றத்தரையெங்கும் புள்ளிகளைப் பரப்பி
ஓவ்வொன்றாய் அடைத்து
அவள் வரைந்த கோலம்
கலைத்து
இன்று மழை வரைந்த கோலம்
அலையலையாய்
புதிது
சூரியப் பெட்டை
நீர்சொட்டும் ஈரக் கூந்தலை அள்ளி முடிந்தபடி
புள்ளிகளை அடைக்கத் தொடங்குகிறாள்
புதியதொரு நாளுக்காய்
அன்றைய நாளில்தான்
ஊரிழந்து துயர் சுமந்து
விழி ஒழுகக்
காட்டுவழி நடந்தோம்
யமன் திசையில்
இன்னும் துளித்துளியாய் துாங்குகிறது
என் நரை மயிர்களில்
துயரிற் பாதியும் நினைவில் மீதியும்
********************************
இலையுதிர் காலம் -2001
செக்குமாடு
எழுப்பாதீர்கள்!
இவன் சற்றுநேரம் உறங்கட்டும்
என்னிடம் ஒரு சாமரம் கொடுங்கள்
இவன் கண்வளர
காற்றை வரவழைப்பேன்
பெரியதொரு வீட்டுக்கு சொந்தக்காரன்
இக் கட்டாந் தரையில்
காட்டுமிருகம் போல் வீழ்ந்து உறங்குகிறான்
எனத் துயரங்கொள்ளாதீர்கள்.
இவனுக்காய் இரக்கப்படுங்கள்
தொந்தரவு செய்யாதீர்கள்
தினமும் மூன்றிடத்தில் வேலை:
உலகே போர்வைக்குள் குடங்குகிற
பின்னிரவில்
தெருவெல்லாம் அலைந்து செய்தித் தாள்களை
விநியோகித்தல்
பகல் முழுவதும் உணவு விடுதி
எண்ணெய்க் கொப்பறையில்
கோழியின் ஊளைச்சதையை பொரித்துக் குவித்தல்
கிடைத்ததை வயிற்றுக்குள் வீசிவிட்டு
இரவு இவ் இயந்திரங்களோடு
முழுநேர மாச்சல்
ஓய்வுக்கு மணியடித்த சிறுதுளிப் பொழுதுள்
வீழ்ந்த இடத்தில் உறங்கிவிட்டான்
வீட்டில் உறங்க நேரம் இல்லை
இருந்தென்ன
பெரிய வீட்டிற்கு சொந்தக்காரன்
இதுவொன்றே போதாதா
ஒரு மனிதனுக்கு
போர் துடைத் தெறிந்த
ஏமக்கெல்லாம்
இப்படியாயிற்று வாழ்வு
எழுப்பாதீர்கள்
இவன் சற்றுநேரம் உறங்கட்டும்
********************************
முதுவேனில் -2001.
பிஞ்சுகள் சிதறிய நிலம்
கத்தரி வெய்யில்
வெய்யில் கழிந்தால் தொடரும்
விடலைச் சோளகம்
சோளகக்காற்றில் அடியுண்ட மாவின்
பிஞ்சுகள் சிதறிய முற்றம்
காலைக் கருக்கலில் எழுந்து
குளித்து
பூக்கொய்கிறாள் பாட்டி
முற்றத்து செவ்வரத்தையில்
மூலைப் பனையில்
வட்டிடுக்கி பதம்பார்த்து
பாளை கசக்கி சீவுற சத்தம்
நாவூறும்
காய்வெட்டிக் கள்ளு
வீறுகொண்டெழுப்பும்
தலை கிறுகிறுக்க
இப்பொழுதுங் கூட
பதம் பார்த்து
கசக்கி எடுத்து காக்கிக்குள் புகுத்தி
சீவுகிறார்கள்
சின்னப்பொடியள் குருதியில்
வீறுகொண்டெழுகிறது
வீரம்
செவ்வரத்தம் பூக்கொண்டு
வயிரவர் சூலத்தை சுற்றிய
பாட்டி
இப்பொழுதும் சுற்றுகிறாள்
பைத்தியமாய்
பேரப்பிள்ளையின் கல்லறையில்
********************************
கோடை 2002.
வெப்புசாரம்
நீண்ட உறைதலுக்குப் பின்
இன்றைய காற்றில் சிறிது வெப்பமிருந்தது
சிறகை விரித்து இறகுகளை அலகால் கோதி
வெய்யிலில்
உலர்த்திக் கொண்டிருக்கிறது
இன்றைய நாள்
திரைவிலக்கி
சன்னலைத் திறந்தேன்
ருதுகாலம்
மகரந்தக் காற்றால் நிறைகிறது
நெஞ்சறை
கிடைத்த துளிவெப்பப் பொழுதில்
புணர்ந்துவிடத் துடிக்கின்ற அவசரம்
இலைவிரிக்கு முன்னாலே
மொட்டவிழ்த்து
இதழ் விரித்துக் காத்திருக்கு
மரஞ்செடிகள்
வண்ணத்துப் பூச்கிகளுக்கும் தேனீக்களுக்கும்
ஓச்சலில்லாத அலைச்சல்
மரக்கிளையிருந்து
பேடைக்குக் குரல்கொடுத்து
மையலுக்கழைகிறது
சின்னக் குருவி
அவசரஅவசரமாக வந்து இறங்குகின்றன
பரதேசம் சென்றிருந்த
கூஸ் பறவைகளும் மற்றவையும்
எனக்குள்ளும்
பொறி கிளர்த்தி பற்றி எரிகிறது
என்தேசம் மீண்டு திரும்புகிற
ஆவல்
புயலெங்கே சூல் கொள்ளும்
எத்திசையில் நகரும்
எவர் குருதி மண்ணுறையும்
என்பதறியா
மானுடன் நான்
அடிவயிற்றிருந்து ஆழப் பறிகிறது
வெப்புசாரம்
********************************
இளவேனில் 2002.
பனியில் கூத்து
மயான வெளி
பனி விரித்த பாயில்
துயில்கிறது
பெளர்ணமி நாளின் முன்னிரவு
மயானத்தின் பின்புறம்
கீழ் வானத் தொடுவிழும்பில்
கடல் கொணர்ந்து எறிந்துவிட்டுப் போன
பிணம்
உடல் உப்பிப் பருத்து
எற்றுண்டு கிடக்கிறது
நிலவென்ற பெயரில்
நிலாப்பிணத்திருந்து
சதை அழுகி வழியத் தொடங்குகிறது
நல்ல பால் போல
ஊன்
கண்களை மூடித் திறக்கிறேன்
இலை சொரிந்து நிமிர்ந்த மரங்கள்
எலும்புக்கூடுகளாக
பிணத்தின் மீது கெலியுற்று
கைகளை உயர்த்தி அசைத்து
அங்கலாய்த்து
பிணத்தின் ஊனை அழைந்து
அள்ளிப் பருகப்பருக
உச்சம் கொள்கிறது போதை
காற்று மெல்லெழுந்து
குழலெடுத்தொலிக்கிறது
தொடங்கிற்று
எலும்புக்கூடுகளின் கூத்து
ஊழியோவென ஜயுறு வண்ணம்
உக்கிர தாண்டவம்
அன்று மின்கம்பத்தில்
உயிரைப் பறிகொடுத்தது பறித்தது
இரண்டும் கட்டிப்பிடித்து களிகொண்டாடுகிறது
வல்லுறவில் மாண்டது வல்லுறவு
செய்தவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமிடுகிறது
கூத்தின் உச்சத்தில்
போதையேறிய
சின்னஞ் சிறிய பாலன் கூடுகள்
அறியாப் பருவத்தில் வீழத் தப்பட்டோமெனக்
கண்ணீர் வடிக்கின்றது
வெள்ளி முழைக்க மெல்ல இறங்குகிறது
பனித்திரை
காலையிலே
வானத்தின் மறுபுறத்து மூலையிலே
எலும்புக் கூடாய் கிடக்கிறது
நிலவு
********************************
முன்பனிக் காலம்-2001
kudil35@hotmail.com
***
தட்டச்சும் தொகுப்பும்: ஜெயரூபன் மரியதாஸ்
jeyaruban@sympatico.ca
- ஆதங்கம்..
- சகடையோகம்
- திருமாவளவன் கவிதைகள்
- சென்னை நாடக சந்திப்பு
- A Collections of Two Short Stories of Eelam Tamil Writers
- ‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)
- வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)
- தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……
- மெக்சிகோ பாணி கோழி டாக்கோ
- அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)
- விண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- விழி, மொழி, பழி
- எதிர்பார்ப்பு
- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )
- காவிரீ!
- கடல் பற்றிய நான்கு கவிதைகள்
- நீ.. நான்… அவன்…
- நானும், தாத்தாவும் வேப்பமரமும்.
- பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்
- சின்னப் பயல்கள்
- சென்னை நாடக சந்திப்பு
- கொடுப்பதும் கொள்வதும் கொடுமை
- மன்னியுங்கள், ஞாநி
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- கனடாவில் வீடு