கல்வெட்டுகள்

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

ருத்ரா


கல் இல்லை.

உளி இல்லை.

சன்னமாய்

இந்த ஒலி மட்டும்

எங்கிருந்து கசிகிறது ?

கீறல்களாய்

மெளனத்தின் விளாறுகளில்

காயங்களின் ரங்கோலிகள்.

பிசைகின்ற வலிகளில்கூட

பட்டாம்பூச்சிகளின்

பிருந்தாவனங்கள்.

பச்சாிசி மாங்காய்

புளிப்பது போல் புளித்து

மறைவாய்

ஒரு சுவைப்பு தரும்.

அந்த மாவடுக்களை

காக்காய் கடிகளில்

பங்கிட்டு தந்த

குயில்பாட்டு இனிப்புகள்

இங்கு

இன்னும் இன்னும்

குற்றாலம் தான்.

வயதுகளின் அருவியில்

நனையும் உயிருக்கு

ஆடைமாற்றும்

நினைவுகள் !

வாய்க்கால் கரையோரம்

நடக்கும்போது

பார்த்திருக்கின்றேன்.

வாய் பிளந்து கிடக்கும்

அந்த தூரத்து

மலைக்கூட்டங்கள் !

தினம் தினம்

சூாியனை துப்பி

சூாியனை முழுங்கி…

மெல்லவும் மாட்டாமல்

விழுங்கவும் மாட்டாமல்

என்ன அவஸ்தை

இந்த மலைகளுக்கு ?

மேகங்களைப் பிடிக்கும்

மோகமோ ?

கல்லிடைக்குறிச்சியின்

கன்னடியன் கால்வாயில்

கால்கள் அளைந்து கொண்டு

அந்த நீர்ச்சுவடுகளில்

தேடுகிறேன்.

அவள் முகம்

இதில் தானே

பிம்பமாகி

நெளிந்து நெளிந்து

நிழல் காட்டியது.

அவளைத்தேடி

கரையோரத்து

ஊமை மருத மரங்கள் கூட

பித்து பிடித்து

தவம் கிடந்தன.

என் ஓர்மைகள்

அதன் ஒவ்வொரு இலையிலும்

நெய்து கிடந்தன.

தூாிகை அசைவுகளாய்

அவள் கள்ளச்சிாிப்புக்குள்

வண்ணங்கள்

பற்றியொியும் ஓவியக்காடுகள்.

சம்மதமா

என்று அவளும் கேட்கவில்லை.

சம்மதம்

என்று நானும் சொல்லவில்லை.

கால ஓட்டத்தின்

கடிகாரங்கள் கூட

நரைகண்டு

அந்த சுவர்மீது

தொற்றிக்கொண்டு கிடக்கின்றன.

நீண்டு நீண்டு

துடிக்கும் விநாடிகளில்

நூற்றாண்டுகளின்

தாடி விழுதுகள்.

ஆனாலும்

அந்த பெண்டுலங்களுக்கு

துரு பிடிக்கவில்லை.

எங்கள் இதயங்கள் அல்லவாஅவை !

ரணம் சொட்டும்

அந்த ஊஞ்சல்களில்

இன்னும்

ரசம் சொட்டும் கனவுகள்.

காத்திருப்புகளின்

மாணிக்கத்தருணங்கள்

விதையூன்றி விதையூன்றி

இந்த சிதைகளின் நடுவிலும்

ஒரு சிங்கார வீணையை

விருட்சங்கள் ஆகின.

பழைய நினைவுகள்…

சூடும் ருசியுமாய்

அந்த பழைய நினைவுகள்…

முண்டு முண்டாய்

பாறைகளிடையே

ஆற்று நீர்த்துளிகளில்

பளிங்குப் பாய் விாித்து

அந்த நினைவுகளோடு

கைகோர்த்த கனவுகள்…

அம்பாசமுத்திரம்

‘எாிச்சடையார் ‘ கோவில்

படிக்கட்டுகளில்

கவிதை ஊறும்

அந்த பொருநை ஆற்றை

தொட்டுக்கொண்டு

ஊறுகாய் ஆக்கி

கூட்டாஞ்சோறு

பிசைந்து தின்ற பழைய நினைவுகள்….

அந்த தாமிரபரணியையே

சுவைக்குழம்பாக்கிய

சாித்திரப்புத்தகங்கள்

அந்த பழைய நினைவுகள்.

வெடுக் வெடுக்கென

அவள் எறிந்த சொற்கள்

இன்றும்

அங்கே கூழாங்கற்களாய்

கிடக்கும் வைரங்கள்.

மணிமுத்தாறும் தாமிரபரணியும்

கல்யாணம் செய்துகொண்டு

களித்துக்கிடக்கும் காட்சி

அந்த ‘வைராவிக்குளத்தில் ‘

ஒரு வைரமுத்துக்கவிதை.

குடமுருட்டி சங்கரன்கோவிலில்

நீர்த்திவலைகள்

தபசு புாியும்

அந்த மெளனப்பிழம்பு

என்னை மட்டும்

ஒரு எாிமலை லாவாவாய்

உருக்கி

ஓட ஓட விரட்டுவதேன் ?

வயதுகளின்

சுள்ளிகளைக்கொண்டு

இந்த வேள்வித்தீ

எாிந்து கொண்டிருக்கிறது.

அதில்

அந்த நிலவுகளைப்

பிய்த்துப்போடுங்கள்.

அடித்துத் துவைத்து

அந்த

‘வண்ணாத்தி ‘ப்பூச்சிகளை

ஆகுதியாக்குங்கள்.

மின்னல்விழுதுகளில்

குடம் குடமாய்

நெய் பெய்து

இந்த பித்தம் பிடித்த

நெருப்பில்

சத்தம் போட்டு

சத்தம் போட்டு

சாம்பல் பூக்களிலும்

மகரந்தங்கள் தேடுங்கள்.

சாகப்போகிற…..வெறும்

சாய்வு நாற்காலிகளின்

சாமவேதங்களா

இந்த கீதங்கள் ?

இருபது முப்பது நாற்பது

ஐம்பது….

வருடங்கள் எனும்

அந்த மைல்கற்களை

பிடுங்கியெறியுங்கள்.

வட்டமிடும் வல்லூறுகளை

தூர விரட்டுங்கள்.

தீப்பிடித்து எாியும்

பழைய நினைவுகளின்

அக்கினியை ருசிபார்க்க

காத்திருக்கும்

இந்த வரட்டிகளில் கூட

வசந்தங்கள் துளிர்க்கட்டும்.

ஆம்..

வசந்தங்கள் துளிர்க்கட்டும் !

***
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா