புஹாரி, கனடா
ஆடை துளைத்து…
தோல் துளைத்து…
தசைகள் துளைத்து…
இரத்த நாளங்கள் துளைத்து…
இருதயம் துளைத்து…
உயிர் துளைத்து…
இதோ
உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிட்டது
அந்தக் கனடியக் குளிர்…
ஓ…
தீக் குழம்பே…
நீதான்
எத்தனைச்
சுகமாகிப் போனாய்
இப்போது…
உன்னையே
ஆடையாய் நெய்து
நான்
உடுத்திக் கொள்ளத் தவிக்கிறேன்
இந்தக் குளிருக்கு….!
காற்றே…
உனக்குக் குளிர் தாளாவிட்டால்
வேறு
எங்கேனும் போய்த் தொலை…
கதறிக் கொண்டு வந்து
என்னை ஏன் குதறுகிறாய்… ?
நானோ
துளைகளே இல்லாத
இன்னுமோர்
கவசத் தோல் கேட்டு
இங்கே
தவமிருக்கிறேன்…!
O
திமு திமுவென வந்திறங்கும்
வேற்றுக் கோளின்
வெள்ளைப் சிப்பாய்களாய்
எங்கும் பனி
கொட்டுகிறது…
கொட்டுகிறது…
அன்று
பூத்துப் பூத்துக் குலுங்கிய
பூக்களெல்லாம்
இன்று எங்கே… ?
சிகப்பும் மஞ்சளுமாய்
வர்ணங்கள் மாறி… மாறி…
சின்னச் சின்னக் கன்னியராய்
கைகோர்த்தும்
முகம்முட்டியும்
ஆடி… ஆடி…
உள்ளத்தின் உட்தளங்களையும்
கொள்ளையடித்த
அந்த
இலைகள் எங்கே… ?
எழிலத்தனையும் இழந்துவிட்டு
எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும்
மூளி மரங்களே
இன்று மிச்சம்…!
உயிர்களை
வேர்களில் ஒளித்து வைத்துக் கொண்டு
இன்னும்
எத்தனை நாட்கள்தாம்
தங்களையே கரங்களாய் உயர்த்தி
அந்த வானதேவனிடம்
யாசித்து நிற்குமோ
இந்தப் பச்சை ஜீவன்கள்…!
O
அங்கிங்கெனாதபடி
எங்கும் பனியின் படர்வு…
எண்ணிக்கையில் அடங்காத
வெள்ளை வெள்ளைப் பிரமிடுகளாய்…
வெண்ணிற முகமூடிக்குள்
ஒளிந்து கொண்டு
குளிர் மூச்சு விடும்
ராட்சச பூதங்களாய்…
சிறைப்பட்ட வசந்தங்கள்
வானிலிருந்து சிந்தும்
வெள்ளை இரத்தமாய்…
எங்கும் பனியின் படர்வு…
எப்படி…
என் கண்கள் பார்த்திருக்க…
இந்தக்
காடு மலை மேடுகளெல்லாம்
ஒரே நாளில்
வெள்ளை ஆடைகட்டி
விதவைகளாகிப் போயின… ?
ஆடைகளும்
ஆடை உடுத்திக் கொள்ளும்
இந்த நாட்களில்….
ஆள் அரவமில்லாத
அனாதை வீதிகளில்
காற்று மட்டும்
கட்டறுந்து ஓடுகிறது…
காது மடல்களை
கண்ணில் அகப்படாத
கொடிய மிருகம்
தன் விஷப் பற்களால்
கடித்துத் துப்பியதுபோல்
ஒரு சுளீர் வலி
நிரந்தரமாய் நீள்கிறது…
தொடு உணர்வுகளெல்லாம்
எங்கோ தொலைந்துபோயின…
கால்களைத் தொட்டுப் பார்க்கக்
கைகளை நீட்டினால்…
கால்களையும் காணவில்லை…
தொடப்போன
கைகளையும் காணவில்லை…
இதயத்துக்குள்
இனம்புரியாத ஏதோ ஓர்
இக்கட்டு நிலவுகிறது…
நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடு கட்டுகின்றன…
பனிக்குள் காணாமல்போன
போக்குவரத்துச் சாலைகளில்…
ஓடமறுக்கும் காருடன்
ஒரு பொழுது
சிக்கிக் கொண்டால்
கடைசி ஆசை
என்னவென்று கேட்காமலேயே
கொண்றுபோடும் இந்தக் குளிர்…
O
வீதியெங்கும் வெள்ளைச் சகதி…
சாலைகளில் உப்பைத்தூவி
உழுது உழுது நின்றால்தான்
இங்கே
கார்கள் ஓடும்…
குளிர்ப்பதனப் பெட்டிக்குள்
அமர்ந்து
இருக மூடிக்கொண்டுவிட்டால்…
இந்தக்
கனடியக் குளிரிலிருந்து
கொஞ்சம் தப்பிக்கலாமோ
என்றுகூடத் தோண்றுகிறது…!
ஒரே ஒருநாள்
இந்த மின்சாரம்
தன் மூச்சை
நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும்
மூச்சின்றிப் போவார்களோ
என்ற பயம்
என்னை முட்டுகிறது…
O
பூமியே…
கொஞ்சம் வேகமாய் ஓடு…
மீண்டும் அந்த
கனடிய வசந்தங்களில்
எங்களைத் தவழவிடு…
அங்கேயே
நீ
நிதானமாய்
இளைப்பாறலாம்.
buhari2000@hotmail.com
- புராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்
- எட்டாத தொலைவு
- பனி
- குழவிக் கூடு குவலயம்..
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை
- காஷ்மீர் புலாவ்
- சிந்தி காய்கறி கூட்டு
- கண்ணுக்குள் உடலின் கடிகாரம்
- பாஞ்சாலி ராஜ்யம்
- தேடுகிறேன் தேவதையே !
- விளையாட்டுப் பொம்மை
- மீட்டிங்…
- கொடியேற்றம்
- முகங்கள்
- குளிர்! குளிர்! குளிர்!
- எதற்கும் தயாராகி நிற்போம்!
- தெளிவு
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)
- பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை
- குரு தட்சிணை