ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

மலர்மன்னன்


1943 ஆம் ஆண்டு ஈ.வே.ரா. அவர்களின் சொந்த ஊரான ஈரோட்டில் ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. ஹிந்து விரோதியான ஈ.வே.ரா. வுடன் அண்ணா இணைந்து தொண்டாற்றி வந்த நேரம் மட்டுமல்ல, ஈரோட்டில் ஈ.வே.ரா.விடம் அவர் பணியும் புரிந்துவந்த காலகட்டம்.

ஈ.வே.ரா. தம்மை நாத்திகர் என அறிவித்டுக்கொள்வாரேயன்றி பொதுவாகக் கடவுள் மறுப்பைக் காரண காரியங்களுடன் விளக்குவதைவிடக் குறிப்பாக ஹிந்துக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வங்களை மிகவும் இழிவாகவும் தரக் குறைவாகவும் பேசுவதிலேயே பொழுதைச் செலவிடுபவர். அதிலும் பக்திக்குரிய ஸ்ரீ ராமபிரானைத் தூற்றுவதில் அவருக்கு ஆர்வம் மிகுதி. ராமனைத் தூற்றும் நீங்கள் ராமசாமி என்று பெயர் மட்டும் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டதும் சட்டென்று ஆமா நானு ராமனுக்கே சாமி என்று பதில் சொன்னவர் அவர்.

ஹிந்துக்களில் சைவம்தான் உயர்வு என்று ஒரு பிரிவினரும் வைணவம்தான் மேல் என்று இன்னொரு பிரிவினரும் சச்சரவிட்டுக்கொண்டு பிளவுபட்டுக் கிடக்கையில் அவர்கள் தமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஹிந்து என்கிற ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கென்றே நாத்திக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ஈ.வே. ராமஸ்வாமி நாயக்கர் என்று ராஜாஜி ஈ.வே.ரா.வின் முழுப் பெயரையும் ஸ்பஷ்டமாக உச்சரித்துக் கூறுவதுண்டு. இது உண்மைதான் என்றாலும் ஹிந்து சமூகத்தை பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று நிரந்தரமாகவே பிளவுபடச் செய்த கைங்கரியம் ஈ.வே.ரா.வினது என்பதை மறுக்கவியலாது. ஹிந்து சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தனிமைப்படுத்தி அவர்கள் மீது மற்ற பிரிவினர் அனைவருக்கும் விரோதம் உண்டாகுமாறு துவேஷப் பிரசாரம் செய்த ஈ.வே.ரா.வுடன்தான் எவரிடமும் துவேஷமற்ற அண்ணா அன்று இணைந்திருந்தார்; ஆனால் அப்போதுங்கூட எந்த அளவுக்கு ஈ.வே.ரா. வுடன் அவர் கருத்தொற்றுமை கொண்டிருந்தார் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

முன்பே குறிப்பிட்ட்டதுபோல, 1943 ஆம் ஆண்டு ஈரோடு நகரில் முகாமிட்ட டி.கே.எஸ். நாடகக் குழுவினர் அப்போது மிகவும் பிரபலமாக விளங்கிய தங்களின் நாடகங்களில் முக்கியமான ராமாயணத்தை நடத்தத் திட்டமிட்டனர்.

ராமபிரானாக டி.கே. சண்முகமும், பிற்காலத்தில் திராவிட இயக்கத்தில் இணைந்திருந்த டி.வி.நாராயணசாமி லட்சுமணனாகவும் எஸ். எஸ். ராஜேந்திரன் பரதனாகவும் வேடம் தரித்த நாடகம் அது.

ராமனைத் தூற்றும் தமது ஊரிலேயே டி.கே.எஸ். சகோதரர்களின் ராமாயண நாடகம் மக்களின் அமோக ஆதரவுடன் நடைபெற்று வருவதாகக் கேள்வியுற்ற ஈ.வே.ரா., ஒரு குறிப்பிட்ட நாளில் நாடகக் கொட்டகைக்கு முன்னால் ராமாயண நாடகத்தை நடத்தக் கூடாது என்று கண்டன மறியல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். மறியலுக்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாள் வந்ததும் டி.கே.எஸ். சகோதரர்களில் மூத்தவரான டி.கே. சங்கரன் எக்காரணம் கொண்டும் ராமாயண நாடகத்தை நிறுத்தக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார். மறியலைச் சமாளிக்கக் கொட்டகை வாசலில் வழக்கத்தைவிட அதிகமாகக் காவலர்கள் நிறுத்தி வைக்கப்படிருந்தனர்.

நாடகம் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. மறியலுக்கு ஈ.வே.ரா.வின் தொண்டர்கள் பெரும்படையாகத் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள அனைவரும் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் மறியல் செய்ய ஒரு நபர் கூட இறுதிவரை வரவே இல்லை. என்றும்போல் அன்றும் ராமாயண நாடகம் சீராக நடந்தேறி ஈரோட்டில் ஸ்ரீ ராமபிரான் மீதான மக்களின் பக்திப் பெருக்கு கரை புரண்டு ஓடச் செய்தது.

ஈ.வே.ரா. ஏற்பாடு செய்த ராமாயண நாடக எதிர்ப்பு மறியல் நடைபெறாமல் போனதில் அனைவருக்கும் ஆச்சரியம். பிடிவாதக்காரரான ஈ.வே.ரா. தாமாக முன்வந்து மறியலைக் கைவிடக் கூடியவர் அல்லவே!

அதன் பிற்குதான் தெரிய வந்தது, ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை நடைபெற வொட்டாமல் சாமர்த்தியமாகத் தடுத்து நிறுத்திவிட்டவர் அண்ணாதான் என்பது!

பொருத்தமான சமாதான்ம் ஏதேனும் கூறியே அண்ணா அவர்கள் அந்த மறியலைத் தடுத்திருக்க வேண்டும். டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகக் கலையைச் சிறப்பாக நடத்தி வருபவர்கள். ஈரோட்டுக்கு தமது நாடகங்களை நடத்த வந்துள்ள அவர்களை விருந்தினராகக் கருதுவதுதான் பண்பாடு. அவர்கள் நடத்தும் நாடகம் எதுவாக இருந்தாலும் அதற்கு இடைஞ்சல் எதுவும் செய்யக்கூடாது என்று அண்ணா தம் தோழர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை மறியல் நடத்த்ச் செல்லாமல் தடுத்து விட்டிருக்கக் கூடும். எப்படியோ, ஈ.வே.ரா.வின் விருப்பத்திற்கு மாறாக அவரது சொந்த ஊரில் ராமாயண நாடகம் எவ்வ்விதத் த்டங்கலும் இன்றி நடைபெற்று வந்தது!

1968 ஆம் ஆண்டு முதலமைச்சராக அண்ணா இருந்தபோது, உடல் நலம் குன்றி அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்த சமயம், அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் அண்ணாவின் கலை ஆர்வம் குறித்துப் பேசுகையில், ”அன்று மறியல் நடைபெறாதபடித் தடுத்து நிறுத்தியவர் அறிஞர் அண்ணா அவர்கள்தான் என்று அறிந்தபோது ந்சாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம்” என்று இச்சம்பவத்தைத விவரித்தார். இதில்.நான் தரும் இன்னொரு சுவையான தகவல் இந்த விவரத்தை சண்முகம் தெரிவிக்க வாய்ப்பளித்த கருத்தரங்கம் ஈ.வே.ரா. வின் திராவிடர் கழகம் அவர் நினைவாக உருவாக்கிய பெரியார் திடலில்தான் நடந்தது!

அண்ணாவுக்கு ஹிந்து சமயத்தின் மீது சிறிதளவும் துவேஷம் இருந்ததில்லை என்பதை நிரூபிப்பதுபோல் இன்னொரு நிகழ்ச்சியினையும் டி.கே.சண்முகம் அநதக் கருத்தரங்கில் நினைவு கூர்ந்தார்.

1943-ல் ராஜாசர் அண்ணாமலை செட்டியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதலானவர்கள் முன்னின்று தமிழிசைச் சங்க மாநாட்டை நடத்தினார்கள். தமிழிசைச் சங்கம் கூத்தபிரானாம் நடராசப் பெருமானின் திருவுருவையே தனது இலச்சினையாகக் கொண்டிருந்தது. அதையொட்டி, மாநாட்டு மேடையில் நடராசரின் திருவுரு பிரதானமாக விளங்கியது. இது ஈ.வே.ரா.வுக்குப் பிடிககவில்லை.

ஈ.வே.ரா., நடராசப் பெருமானின் திருவுருவில் உள்ள கலைச் சிறப்பையோ நடராசத் தத்துவத்தின் உட்பொருளையோ அறிந்தவரல்ல. அறிந்துகொள்ளும் நாட்டமும் அவருக்கு இருந்ததில்லை.

அந்தச் சமயத்தில் ஈரோட்டில் டி.கே.எஸ். சகோதரர்கள் முதலாவது நாடகக் கலை மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டனர். மாநாட்டின் வரவேற்புக் குழுவிற்கு ஈ.வே.ரா.வின் அண்ணன் ஈ.வே. கிருஷ்ணசாமி தலைவராக இருந்தார். மாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஆர்.கே.சண்முகம் செட்டியார் அழைக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் உரையாற்றவும் பங்கு கொள்ளவும் பம்மல் சம்பந்த முதலியார், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர், நவாப் ராஜ மாணிக்கம் எனப் பலருடன் அண்ணாவும் இடம் பெறிருந்தார் என்பதோடு மாநாடு சிறப்பாக நடந்தேறுவதில் ஈடுபாடும் கொண்டிருந்தார்.

நடராசர் திரு உருவை இலச்சினையாக ஏற்ற தமிழிசைச் சங்கத்தில் தொடர்புடைய ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஈரோட்டில் நடைபெறும் நாடகக் கலை மாநாட்டிற்குத் தலைமை ஏற்பதை ஈ.வே.ரா. விரும்பவில்லை. இது குறித்து சென்னையில் நடந்த கருத்தரங்கில் இவ்வாறு தெரிவித்தார், டி.கே. சண்முகம்:

“ஆர்.கே. சண்முகம் அவர்களை ஈரோட்டில் நாடகக் கலை மாநாட்டிற்குத் தலைமை தாங்கவிடாமல் தடுப்பதென்று பெரியார் திட்டமிட்டார்.
நாங்கள் அந்த மாநாட்டைக் கட்டணம் வைத்து நடத்தினோம். நாங்கள் நடித்து வந்த அரங்கிலேயே மாநாடும் நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆர்.கே.சண்முகம் அவர்களைத் தலைமை தாங்கக் கோரும் தீர்மானத்தை ஒருவர் முன்மொழியும்போது நாங்கள் ஆர்.கே.சண்முகம் தலைமை ஏற்பதை எதிர்க்கிறோம் என்று கூறுவதற்காகப் பல நண்பர்களை பெரியார் ஏற்பாடு செய்திருந்தார். அவர்களை முன்கூட்டியே அனுமதிச் சீட்டு வாங்கச் செய்து குழப்பம் விளைவிக்கப் பெரியார் ஏற்பாடு செய்திருப்பதாக அறிந்தோம், வருந்தினோம்.

மாநாட்டன்று காலை பெரியார் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இப்படி நாங்கள் சந்திக்க வருவோம் என்பதை அறிந்த அவர் அன்று சேலத்திற்குப் போய்விட்டார். அன்று பெரியார் எதிர்பார்த்தபடி குழப்பம் ஏதும் நடைபெறவில்லை.”

தமிழிசைச் சங்கம் நடராசப் பெருமானின் திருவுருவைத் தனது அடையாளச் சின்னமாக ஏற்றுள்ளது என்பதற்காக அச்சங்கத்துடன் தொடர்புகொண்டிருந்த ஆர்.கே.சண்முகம் செட்ட்டியார் ஈரோட்டில் நடைபெறும் நாடகக் கலை மாநாட்டிற்குத் தலைமை தாங்க விடலாகாது என்கிற எண்ணத்துடன் ஈ.வே.ரா. செய்திருந்த முன்னேற்பாடு முறிந்துபோனதன் பின்னணியிலும் அண்ணாதான் இருந்திருக்கிறார்!

இது குறித்து மேலும் தகவல் தந்தார், கருத்தரங்கில் பேசிய டி.கே.சண்முகம்:

”மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்.கே.சண்முகம் செட்டியார் அதிகாலையில் வந்தவுடனேயே (அவரது தலைமை வேண்டும் தீர்மனம் முன்மொழியப்படுகையில் குழப்பம் விளைவிக்க பெரியார் ஏற்பாடு செய்துள்ளார் என்ற) இந்தச் செய்தியை அண்ணா அவர்கள் முன்கூட்டியே அவருக்குத் தெரிவித்து விட்டதால் தலைவர் பிரேரணை, ஆமோதிப்பு எதுவும் இல்லாமலே ஆர்.கே. சண்முகம் அவர்கள் தலைவராக அமர்ந்து நடவடிக்கைகளைத் தொடங்கினார். தலைவர் பிரேரணை நடைபெறவில்லையே என்று பெஞ்சிலிருந்து சிலர் கூச்சலிட்டனர். அப்போது எங்கள் அண்ணா டி.கே. முத்துசாமி அவர்கள் முன்னே வந்து, “ இவையெல்லாம் பழைய சம்பிரதாயங்கள். தலைவர் யார் என்பதை முன்பே தீர்மானித்து விளம்பரப்படுத்தியிருக்கிறோம். எனவே அவரை ஒருவர் பிரேரேரிப்பதும் மற்றொருவர் ஆமோதிப்பதும் தேவையற்ற வழக்கங்கள். மூடப் பழக்க வழக்கங்களை எதிர்க்கும் நாம் இதனை விரும்புவதில் பொருளில்லை. எனவே தலைவர் அவர்கள் இப்போது பேசுவார்கள்” என்றார். அவர் இவ்வாறு கூறியதும் பெருத்த கைதட்டலோடு அமைதி நிலவியது. கூச்சலிட்டவர்களைத் தொடர்ந்து குழப்பம் விளைவிக்க யாரும் முன்வரவில்லை. மாநாடு சீரிய முறையில் நடைபெற்றது. அறிஞர் அண்ணா அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். குழப்பம் விளைவிக்க முயன்றோர் சிலராகவும் நடவ்டிக்கைகளை ஆதரிப்போர் பலராகவும் இருப்பதற்குக் காரணம் அறிஞர் அண்ணா அவர்களின் முயற்சிதான் என்பது எங்களுக்குப் பின்னால் தெரிய வந்தது.”

அண்ணாவைப் பற்றிய அரிய தகவல்கள் பலவும் அவ்வப்போது நினைவுக்கு வருகிற போதும், கேள்விப்படுகிறபோதும் உடனுக்குடன் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது எனக்கு மகிழ்வூட்டும் தருணம்.

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்