சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

அக்னிப்புத்திரன்


ஒரு நடிகரின் தந்தை இயக்கும் “ பாசக்கார அப்பன்” – இது நிழல் படமல்ல. நிஜப்படம்! இயக்குநர் சந்திரசேகரின் பாசக்கார மகன் நடிகர் விஜய். தன் மகனை எப்படியாவது அரசியலில் ஒரு உயர்ப்பதவியில் உட்கார வைத்திட வேண்டும் என்ற எண்ணம் இயக்குநர் சந்திரசேகரிடம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அதற்கும் காரணமில்லாமல் இல்லை. ஒரு சுமாரான முகத்தை அதாவது எப்போதுமே தூங்கி எழுந்தது போல இருக்கும் ஒரு ‘மொந்தை’ முகத்தை மேக்கப் சாதனங்களின் துணையுடன் திரையில் காட்டி அந்த முகத்திற்கும் பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி ஒரு முன்னணி நடிகர் என்ற பெருமையை நடிகர் விஜய்க்கு வாங்கிக் கொடுத்தவர் இயக்குநர் சந்திரசேகர் என்று கூறினால் அதில் மிகையில்லை.
முதன்முதலில், நடிகர் விஜய்யை திரையுலகில் அறிமுகப்படுத்த யாருமே துணியாதபோது சொந்த படங்கள் தயாரித்து அதில் தனது மகனை கதாநாயகனாகப் போட்டு விஷப்பரீட்சை எழுதினார் தந்தை. பரீட்சையில் பாஸ் மார்க் வாங்கி வெற்றியும் பெற்றார். அதன் பிறகு கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட நடிகர் விஜய் நடனம், சன்டை போன்றவற்றில் ஓரளவு திறமைகளை வளர்த்துக்கொண்டு சில வெற்றிப் படங்களையும் தந்தார்.
அக்காலகட்டங்கள் நடிகர் ரஜினிகாந்திற்குப் போதாத காலமாக இருந்த நேரம். பாபா என்கின்ற திரைப்படம் தோல்விப் படமாக அமைந்ததும் அதன் வழியாக அரசியல் எதிர்ப்புகளை நடிகர் ரஜினி சந்தித்த நேரம் அது.
அந்த இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் நடிகர் விஜய். தமிழில் நாலு வார்த்தைகள் ஒழுங்காகப் பேசத் தெரியாத விஜய் சொந்த சரக்கு எதுமில்லாமல் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்து அவர் பாணியிலேயே நடிக்கத் தொடங்கினார். நகைச்சுவை நிறைந்த கதாநாயகன் பாத்திரத்திரமேற்று நடிக்கும் ‘ரஜினி பார்மூலாவும்’ கைகொடுத்தது. சில வெற்றிப் படங்களும் வெளிவந்தன. பாலாபிஷேகம் செய்யுமளவு ரசிகர்களின் பட்டாளமும் உருவாகியது.

இயக்குநர் சந்திரசேகருக்கும் ஒரு பெருமிதம். தன் திறமையால், சுமாரான திறன் கொண்ட தன் மகனை ஒரு பெரிய ஹீரோவாக மாற்றி விட்டோம், பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டோம் என்று புளங்காகிதம் அடைந்தார்.
இந்த காலகட்டத்தில்தான் திமுக அனுதாபியான சந்திரசேகர், திமுகவைப் பயன்படுத்திக்கொண்டு மகனை மேலும் உயர்த்த முயன்றார். மத்திய அரசு வரை செல்வாக்கு பெற்று, அஞ்சல் ஸ்டாம்பு வெளியீடு வரை கதை நீண்டது. ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கூட வழங்கிய கூத்துகள் எல்லாம் அரங்கேறியது. எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் விதி யாரை விட்டது?
பாவம் இயக்குநர் சந்திரசேகர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். நடிகர் ரஜனி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து தன் மகனின் சினிமா வாழ்க்கைக்கு ஆப்பு வைப்பார் என்று! ஒரிஜினல் வந்ததும் டூப்ளிக்கேட் தேவைப்படாததால் நடிகர் விஜய்க்கு வரிசையாகப் பல தோல்விப் படங்கள். நடிகர் விஜய் கதை முடிந்தது என்று பலரும் கூறத் தொடங்கினார்கள். இவரைக் கேலி செய்து ஊடகங்களில் செய்திகள் பரவத்தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்க ஒரு கேலிச்செய்தி குறுஞ்செய்தியாக பரவலாக அனைவரது செல்போனிலும் உலா வரத் தொடங்கியது. “நடிகர் கமல் ஒரே படத்தில் பத்து வேடங்களில் நடிப்பார். ஆனால், நடிகர் விஜய் பத்து படங்கள் நடித்தாலும் அனைத்திலும் ஒரே வேடத்தில் நடிப்பார்” என்ற இந்த நகைச்சுவைத் துணுக்கு மிகப் பிரபலமானது.
நடிகர் விஜய் பெரிதும் சோர்ந்து நொந்து போனார். நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கங்களின் கதையைக் கேட்டு தேர்வு செய்பவர் அவரது தந்தை இயக்குநர் சந்திரசேகரே என்பதால் தந்தையிடம் மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விஜயிடம் விட்ட சவால்தான் திரைப்படங்களை மட்டும் இயக்கிய ஒரு இயக்குநரை நிஜ வாழ்க்கையையும் இயக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது.
திரு.சந்திரசேகர் தமது மகனிடம் விட்ட சவால் இதுதான், “ சினிமாவுக்கு ஏற்ற வசீரகமான முகமும் திறமையும் அவ்வளவாக இல்லாத உன்னை திரையுலகில் ஒரு உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தவன் நான்தான். அதே போல அரசியலில் உன்னை உயர்ப்பதவியில் உட்கார வைக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. பொறுத்திருந்து பார்” என்று சூளுரைத்தார் இயக்குநர் சந்திரசேகர். மகனுக்கு ஆறுதல் கூறிச் சமாதானம் செய்தார்.
அவரது சினிமா முளை சிந்திக்கத் தொடங்கியது. திமுக ஆதரவு போக்கு தமது மகனை ஓரளவே செல்வாக்கு பெற வைக்கும். பெரிய பதவியில் அமர வைக்க இயலாது என்பதை உணர்ந்தார். திமுகவில், கட்சியிலோ ஆட்சியிலே அவ்வளவு சீக்கிரமாக ஒருவர் பெரிய பதவிக்கு வருவது என்பது முடியாத காரியம். கலைஞரின் மகன் ஸ்டாலினே துணைமுதல்வர் பதவி பெறுவதற்கே முப்பது வருடங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அங்கே ஸ்டாலின், அழகிரி, தயாநிதி என்று ஏகப்பட்ட வாரிசுகள். பணபலமும் அதிகார பலமும் மிகுந்த திமுகவிடம் தனது பருப்பு வேகாது என்பதை அவரது சினிமா முளை உணர்ந்தது.
இந்த சமயத்தில்தான் காங்கிரஸ் கட்சி சரியாகப்படுமா என்று எண்ணி திரு.ராகுல்காந்தியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு, சிவாஜிக்குப் பிறகு திரைப்படநடிகர்கள் யாரும் சரியாக அமையாததால் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகலாமா அதன் வழி ஆதாயம் ஏதும் அடைய வாய்ப்பிருக்கிறதா என்று சிந்தித்தார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக உலகம் முழுவதும் பரவியிருக்கிற இலங்கைத் தமிழர்கள் அதற்கும் ஆப்பு வைத்தனர். காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள். நடிகர் விஜய்க்கு எதிர்ப்புக்குரல் உலமெங்கும் எழுந்தது. அவர் திரைப்படங்களை தோல்வியடையச் செய்வோம் என்ற குரல், தமிழர்கள் புலம்பெயர்ந்த பல நாடுகளில் எழுந்தது. உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்பது போல ஏற்கனவே படம் ஊத்திக்கொள்கிறது. இது வேறு ரோதனையா என்று இப்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை என்று அவசரம் அவசரமாக செய்தியாளர்களைக் கூட்டி நடிகர் விஜய் அறிவிக்க வேண்டிய கட்டாயச்சூழல் எழுந்தது. முதல் முறையாக அவரது அரசியல் பிரவேச முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த சமயத்தில்தான் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தை சன் டிவி குழுமம் வாங்க முயற்சி செய்ததாகவும் அதன் வழி பல பிரச்சினைகள் தோன்றி திரைப்படம் வெளியீடு தாமதமானதாவும் பல செய்திகள் ஊடகங்களில் வரத் தொடங்கியது. ஒரு தனியார் தொலைக்காட்சி வியாபார நிமித்தமாக ஏற்படுத்திய பிரச்சினைகளை அரசியலாக்கிட இயக்குநர் மூளை சிந்தித்தது. இதுதான் சரியான நேரம். படத்தை வெளியிட முடியாமல் ஆளும் திமுக அரசு சதி செய்கிறது என்கின்ற ரீதியில் செய்திகளை அப்பாவும் மகனும் கசியவிட்டனர். திரைப்படத்திற்கும் நல்ல விளம்பரம் கிடைத்தது.
இந்த சமயத்தில் பலத்த தொடர் தோல்விகளால் சோர்ந்துகிடந்த அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதாவும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். இயக்குநர் முளை சட்டென்று சிந்திக்கத் தொடங்கியது. ஆகா இதை ஏன் மறந்தோம்? அதிமுக அடிப்படையில் ஒரு சினிமா கம்பெனி. அங்கே சினிமா சம்பந்தபட்டவர்களே தலைமைப்பொறுப்புக்கு வர இயலும். நடிகர் எம்ஜிஆர் அப்புறம் நடிகை ஜெயலலிதா. அந்த வரிசையில் ஏன் நடிகர் விஜய் வரக்கூடாது? சுறுசுறுப்பாக மூளை திட்டம் போட்டது. எதேச்சையாக சந்திப்பதுபோல ஒரு விழாவில் நடிகர் விஜய் செல்வி ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்தார் இயக்குநர் சந்திரசேகர். “என்ன விஜய் நலமா?” என்று அம்மையார் வினவ, நடிகர் விஜய்க்கு அளவில்லாத ஆனந்தம். அப்புகைப்படம் செய்திதாட்களில் வந்தன. இதுவரை திமுக ஆதரவாளர் என்று இருந்த நிலை மாறி முதன் முதலாக நடிகர் விஜய் அதிமுக ஆதரவாளர் என்ற எண்ணத்தை அதிமுகவினரிடம் பரப்ப இது உதவியது.
இயக்குநரின் இப்போதைய திட்டம் அதிமுக கட்சி தலைமையிடம் மிகவும் நெருக்கமாக இருப்பது போல காட்சிகளை உருவாக்குவது. இதற்காகவே இயக்குநர் சந்திரசேகர் பலமுறை ஜெயலலிதாவைச் சந்தித்துப்பேசினார். நடிகர் விஜயகாந்த் கட்சியை அதிமுகவுடன் இணைக்க தூதுவர் பணியும் மேற்கொண்டார். அதிமுகவிடம் மூன்று தொகுதிகளை கேட்டுப்பெறுவது, வெற்றி பெற்ற பிறகு அதிமுக ஆட்சி அமைய வாய்ப்பிருந்தால் அதிமுகவுடன் தங்கள் இயக்கத்தை இணைத்து அதிமுகவுடன் ஐக்கியமாவது. நேரமும் காலமும் கூடிவரும் வாய்ப்பு ஏற்படும்போது முன்பு எப்படி ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றினாரோ அதேபாணியில் அதிமுவைக் கைபற்றுவதுதான் தற்போதைக்கு இயக்குநர் இயக்க இருக்கும் அரசியல் கதைவசனத்தின் காட்சிகள். ஏன்னென்றால் அதிமுகவினர் சினிமா நடிகர்களின் பின்பே அணிவகுப்பார்கள் என்பது ஊரறிந்த, உலகமறிந்த இரகசியம்.

ஒருவேளை வரும் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவினால் இருக்கவே இருக்கிறார் கலைஞர். ஒரு மஞ்சள் துண்டை கலைஞருக்கு போர்த்திவிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுகவில் இணைந்து எதோ ஒரு பெரிய பதவி பெற்றுக்கொண்டு ஆறுதல் அடையலாம். தேர்தல் முடிவுகளில் யாருக்கும் அறுதிபெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பில்லாவிட்டால், ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிகளுக்கும் ராஜமரியாதை கிடைக்கும் என்பதை அறியாதவர் அல்ல இயக்குநர் சந்திரசேகர்.
இவரின் கணக்கு இப்படிப்போகிறது என்றால் அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதாவின் கணக்கு எப்படியோ? நடிகர் விஜய்யைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு அவரின் ரசிகர்களின் ஆதரவையும் ஓட்டையும் கச்சிதமாகப் பெற்றுக்கொண்டு வெற்றி அடைந்தபின் கறிவேப்பில்லையைத் தூக்கி எறிவதுபோல தூக்கி எறிந்து விடலாம் என்று கணக்குப் போடலாம். அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. முன்பு ஒரு தேர்தலில் திரு,ராஜீவ் காந்தியின் அகால மரணத்தால் எழுந்த அலையால் வெற்றி பெற்று முதல்வரானர் செல்வி ஜெயலலிதா. ஆனால், பிறகு யாருடைய அனுதாப அலையினாலும் நான் வெற்றி பெறவில்லை என் சொந்த பலத்தாலேயே வெற்றி பெற்றேன். இது என் தனிப்பட்ட வெற்றி, ராஜீவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றி அல்ல இது என்று பகிரங்கமாகவே கூறியவர்தான் இந்த ஜெயலலிதா.
ஆளாளுக்கு ஒரு கணக்குப்போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள். ஆனால் மக்கள் என்ன கணக்குப் போடப்போகிறார்கள் என்பதை வரும் தேர்தல் முடிவுகள்தெரிவித்துவிடும்.
-அக்னிப்புத்திரன்

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்