விதியை மேலும் அறிதல்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

மலர்மன்னன்


விதியை அறிதல் ஓர் ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுக்கு அடிகோலும் போலத் தெரிகிறது.

கனடா ஸ்ரீ சி. ஜயபாரதன் இயற்பியலிலும் பிரபஞ்சவியலிலும் ஆழ்ந்த அறிவு பெற்றவர். இவை தொடர்பாக அவர் சலிப்பின்றி நீண்ட தொடர்களை எழுதிவருவது, எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தமிழுக்கு அவர் செய்துவரும் சிறந்த தொண்டு. இதற்காகத் தமிழ்ச் சமூகம் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது.
விதியை அறிதலை ஒட்டி அறிவியல் ரீதியாக அவர் விரிவாக எழுதியிருப்பது என் கட்டுரையை மேலும் செழுமைப் படுத்துவதாகவே உள்ளது.

இறைவன் சொக்கட்டான் ஆடுவதில்லை என்று சொன்ன ஐன்ஸ்டைனும் இயற்பியலிலும் பிரபஞ்சவியலிலும் தேர்ச்சி மிக்கவர்தான். அணுப் பிரமாணப் பிசகும் இன்றிப் பிரபஞ்சம் இயங்குமாறு ஓர் ஏற்பாடு இருக்குமானால் அது சொக்கட்டான் ஆட்டத்தில் கட்டைகளை உருட்டிப்போட்டு என்ன விழுகிறதோ அதற்கு ஏற்பக் காய்களை நகர்த்துவதுபோன்ற பொழுதுபோக்கு ஆட்டமாக இருப்பதற்கில்லை. எனினும் ஒழுங்கு தவறாத பிரபஞ்ச இயக்கத்திலும் எங்கோ எப்படியோ சிறிதேபோல் தட விலகல் நிகழ்ந்து அதன் விளைவு பல தொடர் நிகழ்வுகள் நடைபெறச் செய்துவிடுகிறது. நம் சூரியனுக்கு ஒரு குடும்பம் உருவானதும் இவ்வாறான நிகழ்வினால்தான் போலும். எனில் இதனை விபத்து என்கிற எதிர்மறைப் பொருள் தரும் சொல்லால் விவரித்தல் சரியா? ஆக, சமயங்களில் இவ்வாறான தட விலகல் களும் ஒரு நோக்கத்துடன் இறையருளால் விதிக்கப் பட்டவைதாம்.

கனடா ஜயபாரதன் ஊழை இறைச் சக்தியெனக் கொள்வதாகக் கூறிவிட்ட பிறகு மேற்கொண்டு இதில் பேசுவதற்கு அவசியம் இல்லைதான். ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன?

நமக்கு நன்கு பரிச்சயமானது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பூமியேகூடப் பல ரகசியங்களைத் தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டிருக்கிறது. இதோ, வெகு சமீபத்தில் ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் நில நடுக்கமும் அதன் விளவாக ஆழிப் பேரலையும் நிகழ்ந்தபொழுது கண்ணுக்கு எதிரில் நேர்ந்த பேரழிவுகளைப் பார்த்துப் பதறிக்கொண்டுதான் நம்மால் இருக்க முடிந்திருக்கிறது. எனக்குப் பழைய மால்தஸ் கோட்பாடு தான் நினைவுக்கு வருகிறது. பூமித்தாய் தனது பாரம் அதிகரிக்கையில் தானாகவே எப்படியெல்லாமோ அதைக் குறைத்துச் சமன் செய்து கொள்கிறாள் என்று நமது சாஸ்திரங்கள் கூறுவதை அவர் மக்கள் தொகைப் பெருக்கம் ஏதோ ஒருவகையில் சமன் செய்யப்படுகிறது என்கிறார். இந்த சமன் செய்தல் மனித இனத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. இதுவும் பொது நலன் கருதி ஸ்ரீ ஜயபாரதன் கண்ணோட்டப்படியிலான ஊழ் என்கிற இறைச் சக்தியின் ஏற்பாடு என்றுதான் கொள்ள வேண்டும்.

முதல் உலகப் பெரும் போரிலும் இரண்டாம் உலகப் பெரும் போரிலும் ஜப்பான் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை இப்போது அது மிகவும் சங்கடமான நிலையில் இருக்கிறபொழுது குத்திக் காட்டுவது முறையல்லதான். ஆனால் என்ன செய்வது, என்போன்றவர்களுக்கு அவற்றின் நினைவு தவிர்க்க இயலாமல் வரவே செய்கிறது. முக்கியமாகத் தன் சார்பில் போரிடும் சிப்பாய்களின் மன மகிழ்வுக்காகவும் போரினால் அவர்கள் அனுபவிக்க நேரிடும் சித்தத் தடுமாற்றங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் வடிகால் பெறுவதற்காவும் கொரியப் பெண்களும் சீனப் பெண்களும் பர்மியப் பெண்களும் முகாம் வைத்து நிர்பந்தம் செய்யப்பட்ட செய்திகள் யாவும் ஞாபகத்திற்கு வரவே செய்கின்றன. ஜப்பான் அதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மூதாட்டிகளாகிவிட்ட நிலையிலும் வற்புறுத்தியதும் நினைவுக்கு வரவே செய்யும். நான் இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவதற்காக யாரும் கோபிக்கக் கூடாது. எதையும் ஒளிவு மறைவின்றிப் பேசிவிடுவதே சுபாவமாகி அதனாலேயே நிறைய விரோதிகளைச் சம்பாதித்துக்கொள்வது எனது வழக்கமாகிவிட்டது!

எனக்கு இயற்பியல், பிரபஞ்சவியல் என்ன, அடிப்படை விஞ்ஞானமே தெரியாது. நமது பாரம்பரியச் சிந்தனைப் போக்கின் பிரகாரம் எனக்குத் தெரிந்தவரை விதியைப்பற்றி ஒரு வாசகரைத் திருப்தி செய்வதற்காகச் சமாதானம் சொன்னேன், அவ்வளவே. அதுவும் அவர் இடைவிடாது என்னிடம் வினவிக் கொண்டிருந்ததால்தான்! அவனன்றி/அவளின்றி ஓர் அணுவும் அழையாது என்றிருக்கையில் ஊழ்வினையும் அதற்கு உட்பட்ட தாகத்தானே இருக்க முடியும்? ஆனால் சுயேற்சையான சங்கற்பம் செய்துகொள்ளும் சுதந்திரமும் அருட் கொடையாக இறைச் சக்தியால் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான சுயேற்சை சங்கற்பமும் யோசிக்கும் வேளையில் அந்த ஊழின் ஓர் அங்கமாகவே இருப்பது புலனாகிறது. வள்ளுவர் சொற்படி ஊழையும் உப்பக்கம் காண்பதும்கூட ஊழின் சம்மதம் காரணமாகவே சாத்தியமாகிறது!

விதியை அறிதல் என்று எழுதுகையில் விதியும் சுயேற்சையான சஙகற்பமும் வெவ்வேறல்ல என்றுதான் சொன்னேன். இவ்வளவும் சொல்லக் காரணம் உள்ளுறையும் ஆன்மிக ஒளியை உணரும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே. அந்த ஒளியின் வழிகாட்டுதலில் நம்மால் சரியான பாதையில் செல்ல முடியும்.. மெய்ஞானத்தின் வழிகாட்டுதலுடன் விஞ்ஞானம் செல்லாததால்தான் விபரீதங்களையும் அது விளைவித்து விடுகிறது.

கடந்த இருநூறு ஆண்டுகளில் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியால் கோடிக் கணக்கான ஆண்டுகள் எடுத்துகொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை வளங்கள் எல்லாம் பகாசுரப் பசியுடன் சுரண்டப்பட்டுவிட்டன. இந்த வளங்களைச் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாது. எனவே பற்றாக்குறை ஏற்படுகிற பொழுது மாற்று வளங்களைத் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. ருசி கண்டு விட்டோம் அல்லவா? வேண்டாம், அனுபவித்தவரை போதும் என்று இருக்க இயலாதே!

மெய்ஞானப் பக்குவத்துடன் விஞ்ஞானம் தொடருமானால் வளங்களையும் பலன்களையும் பயன் படுத்திக்கொள்வதில் தானாகவே ஒரு நிதானம் இருக்கும். போட்டி பொறாமையின்றி வளங்களின் பகிர்வும் இருக்கும். இன்ன இயற்கை வளத்தை வெளிக்கொணர்வதில் நான் முனைகிறேன், பின்னதை வெளிக்கொணர்வதில் நீ முயற்சி செய் என நாடுகளிடையே ஒரு சமரச மனப்பான்மை இருக்கும். இதனால் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் ஓர் ஒழுங்கு சாத்தியமாகி, கேடு விளைவிக்கும் பின்விளைவுகளும் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும்.
மனித உடலுக்கு ஓர் அளவுவரை தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் இருப்பதுபோல பூமிக்கும் ஏதேனும் ஊறு நேருமானால் தன்னைத்தனானே சரி செய்துகொள்ளும் ஆற்றல் ஓர் எல்லைவரை இருக்கிறது அல்லவா? தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாமல் நிதானத்துடன் இயற்கை வளங்களைப் பயன் படுத்திக்கொள்கிறபொழுது அதனால் விளைகிற தவிர்க்க முடியாத ஊறுகள பூமியின் சரிசெய்துகொள்ளும் ஆற்றலுக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் இவ்வாறான நிதானம் சாத்தியமாக வேண்டுமானால் விஞ்ஞான முயற்சிகளோடு இணைந்து ஆன்மிகத் தேடலிலும் கவனம் செல்ல வேண்டும்.

உடல் என்பது வெறும் ரசாயனச் சேர்க்கை. ஆகையால் அது அழிவுக்கு உட்பட்டதுதான். சாவு என்கிற அழிவிற்கு அது இலக்காகிறபோது அத்துடன் எல்லாம் முடிந்தது என்று விஞ்ஞானம் சொல்வது உடலைப் பொருத்தமட்டில் சரிதான். உடம்புதான் சகலமும் என்கிற முடிவுடன் இருப்பதால் அது அழிவதோடு அது சமபந்தமான எல்லாம் முற்றுப்பெற்று விடுவதாகத் தோன்றுகிறது. உடம்பு ஒரு கருவிதான் என்கிற பிரக்ஞை ஆழப் பதிந்திருக்குமானால் எல்லாக் கருவிகளுக்கும் உள்ளதுபோல் அதற்கும் தேய்மானம் உண்டு, அந்தத் தேய்மானம் சீர் செய்யமுடியாத அளவுக்குக் கூடுதலாகி விடுகிறபொழுது அது முற்றிலுமாகச் செயலிழந்து போகிறது, அதைத்தான் மரணம் எனக் கொள்கிறோம் என்ற எண்ணமும் இருக்கும். உடலோடு எல்லாம் முடிந்து போய்விடுவதில்லை என்கிற சிந்தனையும் தோன்றும். உடல் என்னும் கருவியை நன்கு பராமரித்து வர வேண்டும் என்கிற ஆர்வமும், அந்தக் கருவியை முறையாகப் பயன்படுத்திப் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியும் தானாகவே ஏற்படும். நமது சுயேற்சை சங்கற்பம் இதன் அடிப்படையில் தன்னை அமைத்துக் கொள்ளும்போது, விதியின் போக்கும் சாதகமாகவே அமையும்.

விதியை அறிதலில் இதைத்தான் முன்வைத்தேன். எனவேதான் விஞ்ஞானத்தில் தேர்ச்சி மிக்க கனடா ஸ்ரீ சி. ஜயபாரதனால் தாம் எழுதுவது எனது கட்டுரைக்கு மறுப்புரை அல்ல என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாகத் தெரிவித்துவிட முடிகிறது.

ஸ்ரீ விருட்சம், கடிதங்கள் பகுதியில் கண்ணகி என்ன பாவம் செய்தாள், அவள் ஏன் விதிவசத்தால் அல்லல் பட்டாள் என்கிற பொருள்பட என்னிடம் கேட்டிருப்பதையும் படித்தேன்.

சிலப்பதிகாரத்தைப் பல ஆண்டுகளுக்குமுன் படித்ததுதான். மறு ஆய்வு செய்ததில்லை. ஆனால் சிலம்பு தெரிவிக்கும் தமிழ்ச் சமூகச் சூழல், கானல்வரிப் பாடல் தரும் செய்தி என்றெல்லாம் கட்டுரைகள் சுஜாதா முன்ன்னின்று நடத்திய அம்பலம் என்ற இணைய இதழில் எழுதியிருக்கிறேன். அந்த நினவை வைத்துத்தான் இவருக்கு சமாதானம் சொல்ல வேண்டி யிருக்கிறது.

கண்ணகி என்கிற கதா பாத்திரம் பெண்களால் ஆதர்சமாகக் கொள்ளத் தக்கது அல்ல என்பதுதான் எனது கருத்து. நமது தொன்மையான மரபு, மனைவி கணவனுக்கு அமைச்சனாக இருக்க வேண்டும் என்றுதான் விதிக்கிறது. கணவன் ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆட வேண்டும் என்றோ, அவன் விருப்பப்படியே அவனது மனம் கோணாமல் நடந்து வர வேண்டும் என்றோ நமது மரபில் விதிக்கப் படவில்லை. மாற்று சமய கலாசாரத் தாக்கங்களால்தான் மனைவியானவள் கணவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. நமது தொன்மையான மரபில் விவாக ரத்து என்கிற கருதுகோள் இல்லாமற் போனமைக்குக் காரணமே மனைவி கணவனுக்கு ஓர் அமைச்சனாகவும் இருக்க வேண்டும் என்கிற கடமை விதிக்கப்பட்டிருந்ததுதான். அந்தக் கடமையிலிருந்து தவறினால் அதன் பலனை அனுபவிக்க வேண்டியதுதான். சில சமூகங்களில் தாலியை அறுத்துக் கட்டும் சம்பிரதாயம் ஏற்படக் காரணம், இவ்வாறான கடமைகள் பற்றிய புரிதல் இன்றி, திருமணத்தை ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளும் போக்கு இருந்ததுதான்.

கோவலன் ஒரு காரணமும் கூறாது தன்னை நீத்துச் செல்கையில் கண்ணகி ஒரு பொறுப்பபுள்ள மனையாளாக அவனிடம் ஒரு வார்த்தைகூடக் காரணம் கேட்டதாகச் சிலம்பில் தகவல் இல்லை. அவள் தன் மாமனார்-மாமியாரிடம் நியாயம் கேட்டதாகவோ, பிறந்தகம் சென்று பெற்றோரிடம் பரிகாரம் காண உதவுமாறு கோரியதாகவோ குறிப்பு இல்லை. கோவலன் திரும்பி வந்த போதும் அவள் ஒரு கேள்வியும் இன்றி அவன் விருப்பத்திற்கு இணங்கவே இயங்குகிறாள். அவள் தனது சுயேற்சை சங்கற்பத்தை அவ்வாறு மேற்கொண்டமைக்கு ஏற்பவே அவளது விதியும் அமைந்தது. இதில் முரண்பாடு ஏதும் இல்லை.

கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை என்று விதியின் மீது பழிபோடல் சரியாக இருக்காது. அது வெறும் சமாதானம்தான். வம்பை விலைக்கு வாங்குவதுபோலத்தான் கோவலன் அவனாக விரும்பி, சோழ மன்னனிடமிருந்து மாதவி பரிசாகப் பெற்ற மாலையை ஆயிரத்தெட்டுக் கழஞ்சு கிளிச் சிறைப் பசும்பொன்னை விலையாகக் கொடுத்து வாங்கிக்கொண்டு மாதவியின் இல்லம் சேர்ந்தான்.

சிலம்பிலிருந்து பெற வேண்டிய படிப்பினை வேறு. ஆனால் வலியுறுத்தப்படுகிற படிப்பினையோ அதற்கு முற்றிலும் மாறாக உள்ளது!

மதுரை நெடுஞ்செழியப் பாண்டியனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட கண்ணகி பதில் சொல்லவேண்டிய கேள்விகள் நிறையவே இருக்கின்றன. மாசறு பொன்னே, வலம்புரி முத்தே என்று கொண்டாடிய புருஷன் ஒரு வார்த்தை சொல்லாமல் கடைத் தெருவில் கூனி விற்ற மாலையை விலை கொடுத்து வாங்கி அவள் பின்னால் மாதவியைத் தேடிப் போய்விட்டான் என்றால் அதற்கு என்ன காரணம்? அவள் தன் கணவனை அப்படிப் போக விட்டது ஏன்?

கணவனைப் பிரிந்த சோகம் கண்ணகியை வாட்டியதாகத்தான் சிலம்பு சொல்கிறது. அவளைப் போலவே பல மனைவிமார் துன்புற்று வந்ததாகவும் அது விவரிக்கிறது. சிலம்பின் தகவல்படி இதுதான் அன்றைக்கு இருந்த நமது தமிழ்ச் சமூகம்! கணவனின் சபலம் ஒரு பக்கம் மன்னிக்கக் கூடாத பிழையாக இருந்தாலும், அமைச்சுப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய மனைவிமார் பலர் இருந்திருப்பதையே இது உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும்.

திருமணத்தின்போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டுதான் என்கிறது, சிலம்பு. கோவலன் வயது பதினாறு. கண்ணகியின் அழகைப் பற்றி வர்ணிக்கும் சிலம்பு அவளது கல்வி கேள்வித் தேர்ச்சி பற்றி ஏதும் பேசவில்லை. விவரம் அறியாத வயது. கோவலனும் விடலைச் சிறுவன். சீமான் மாசாத்துவான் பெற்ற செல்லப் பிள்ளை. கோவலன் கண்ணகி இருவருக்குமே இல்வாழ்க்கையைத் தொடங்குவதற்கான பக்குவம் உள்ள வயது வந்தாகவில்லை. நியாயப்படிப் பெற்றோரின் நேரடி கவனிப்பில் தான் அவர்களது ஆரமப கால வாழ்க்கை நடந்திருக்க வேண்டும். அப்படியொரு கட்டுப்பாட்டில் அவர்களின் இல்லறம் கூட்டுக் குடும்பப் பாங்கில் தொடர்ந்திருந்தால் கோவலன் சர்வ சாதாரணமாக வீட்டை விட்டுப் போக வேண்டிய சந்தர்ப்பமே வாய்த்திருக்காது. ஆனால் திருமணம் நடந்தேறிய ஒரு சில ஆண்டுகளிலேயே, மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்குப் பதினைந்தும் அவனுக்குப் பத்தொன்பதுமாக இருக்கையில் அவர்களுக்குத் தனிக் குடித்தனம் நடத்தக் கோவலனின் பெற்றோரே, குறிப்பாகக் கோவலனின் தாயாரே ஏற்பாடு செய்துவிட்டதாகத்தான் சிலம்பு தகவல் தருகிறது.

விவரம் அறியாத இளம் வயதுத் திருமணம். கூட்டுக் குடித்தனம் என்கிற அமைப்பில் கிட்டும் சரியான வழிகாட்டுதலுக்கு வாய்ப்பில்லாத தனிக் குடித்தனம் கோவலன்-கண்ணகி வாழ்க்கையையே சிதைத்து விட்டது.

அன்றைய தமிழ்ச் சமூகம் பக்குவம் வராத வயதிலேயே திருமணம் செய்வித்து, இளம் தம்பதிகளுக்குத் தனிக் குடித்தன ஏற்பாடும் செய்யும் வழக்கத்தைக் கையாண்டு வந்ததா? அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களைப் படிக்கிறபொழுது களவொழுக்கம் என்கிற சங்கதியைப் பார்த்தால் ஆண்-பெண் இருவருமே சிறிது பக்குவம் அடைந்த வயதினராகத்தான் கூடி வாழும் விருப்பத்தைப் பெறத் தொடங்கியிருக்க வேண்டும் என யூகிக்கலாம். திருமணம் ஆனதுமே மணமக்கள் தனிக் குடித்தனம் போவதாகவும் தகவல் இல்லை. சிலம்பில் மட்டுமே இதற்குக் குறிப்பு உள்ளது. கோவலன்-கண்ணகி வாழ்க்கை சீரழிந்து போனமைக்கு அவர்களின் பெற்றோகளின் சுயேற்சை சங்கற்பமும் பொறுப்பாகிறது என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

இளம் கணவன் எப்போது மதிகெட்டு வீட்டைவிட்டுப் போனானோ அப்போதே இளம் மனைவி தன் பெற்ரோரிடமும் மாமனார் மாமியாரிடமும் வழக்கு வைத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக வீட்டுக்குள்ளேயே முடங்கி அழுதுகொண்டிருந்துவிட்டாள்!

கண்ணகிக்கு நேர்ந்த அவலம் குறித்து இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது? அவளையும் ஊழ்வினை வந்து உறுத்துவதற்கு அவளது சுயேற்சையான சங்கற்பமே காரணமாக அமைந்து விட்டது!

ஊழ்வினை, சுயேற்சை சங்கற்பம் இரண்டுமே இறைச் சக்தியின் தூண்டுதலால் விளைபவைதான். இதைப் புரிந்துகொண்டு, உள்ளுக்குள்ளாகவே இறைச் சக்தியின் மகிமையை அனுபவித்து மகிழப் பழகிக்கொண்டால் எதிலும் முரண்பாடு தோன்றாது. கடந்த மூன்று மாதங்களாக எனது வலது பாதத்தில் ஆறாத ரணம் மிகுந்த வலியைத் தந்து வருகிறது. அதை நான் மிகவும் ரசிக்கவே செய்கிறேன். இந்த ரணமுங்கூட, நானாக வரவழைத்துக் கொண்டதுதான்! உடம்பு எனும் கருவி எனக்குத் தரப்பட்டிருக்கிறது என்கிற பிரக்ஞையை ஊட்டுவதற்காகவே இந்த ரணம் ஏற்பட்டிருப்பதாகப் புரிந்துகொண்டு அதற்காக இறைச் சக்திக்கு நன்றி செலுத்தி வருகிறேன்.

படிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் சேர்ந்துவிட்டிருந்தன. எப்போது படித்து முடிக்கப் போகிறோம் என்று திகைப்பாகவே இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்தது, பாதத்தில் தோன்றிய ரணம்.

நிறையப் படிப்பதற்கு இந்த ரணம் மிகவும் உதவுகிறது என்றாலும் கணினி முன் உட்கார்ந்து எழுத அது சாதகமாக இல்லை. எழுத வேண்டியதோ நிறைய உள்ளது. ஐந்து நிமிடம் உட்காருவதற்குள் பாதம் யானையினதுபோல் வீங்கிவிடுகிறது! அதிக நேரம் காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளவும் முடிவதில்லை. யாரை விட்டாவது எழுதச் சொன்னாலோ பிழைகள் மலிந்து ஏளனத்துக்கு ஆளாகும்படியாகிறது!

தயை செய்து நம்புங்கள், ஒருகட்டத்தில் எழுத்து வேலை கெடுகிறது என்பதால் அம்மா, உடம்புக்கு நிறைய வேலை கொடுத்திருக்கிறாயே, பொழுது விரையமாகிறதே, போதுமே இந்த இடைஞ்சல் என்று என் குல தெய்வத்திடம் கோரியதும் ரணம் மளமளவென்று ஆறத் தொடங்கியுள்ளது! கடந்த பத்து நாட்களில் ரணத்தின் பெரும் பகுதி காய்ந்துவிட்டது! சுயேறசை சஙக்ற்பத்திற்கும் இநத அனுபவத்திற்கும் தொடர்பு இருப்பதால்தான் இதனை வெளியே சொல்ல நேர்ந்தது.

++++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்