இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர் என்பதால் ஒருவித Myth உருவாகியுள்ளது. எதிர்பாராத எல்லா மரணங்களும் மாயைகளை கட்டமைப்பதில் வல்லவை. இறந்த உயிர்சார்ந்து மாயையின் ஆகிருதி தீர்மானிக்கப்படுகிறது. மாயையியின் மைய்யப்பொருள் பெண்ணென்கிறபோது பூடகத் தகவல்களுக்குத் தடங்கலின்றி ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்ணெனில் அவர் கூடுதலாகக் கவனம் பெறுவார். கற்பனைகளுக்கு கலைச்செழுமை கிடைத்துவிடுகிறது. “அற்ப ஆயுளில் போன கழுதை ஆயுசுமுடியறவரைக்கும் சுத்துவா” என்ற தமிழ் சொல்வடையை நம்பும் ஐரோப்பியர்களும் இருக்கவே செய்கிறார்கள். இருள்கவிந்த சேன் நதிகரையோரம் மென்மையும் மேட்டிமையும் கொண்ட டயானாவின் காலடிஓசை நுண்ணுணர்வு கொண்டோர்க்கு வாய்ப்பதாகக் வதந்திகள். அண்மையில் லேடி ‘டி’யென்று விசுவாசிகளால் அழைக்கப்பட்ட டயானாவைக் கருப்பொருளாகக்கொண்டு இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.

முதலாவது நாவல் புனைவின்படி எண்பதுகளில் ழாக்-ஹாரி லாம்பெர்த் (Jacques -Henri Lambeyerte) என்பவர் பிரெஞ்சு அதிபராக இருக்கிறார். ‘லேடி பாட்’ என்கிற சீமாட்டி பத்ரீசியா( Lady Patrecia) வேல்ஸைச் சேர்ந்த கர்டீ·ப் இளவரசி. இவ்விருவருக்கும் இடையேயான காதலை நாவல் பேசுகிறது. கதைத் தலைவன் லாம்பெர்த் மனைவியை இழந்தவர். கதைத் தலைவி பத்ரிசியா கணவனாக வர இருப்பவன் தந்த அதிர்ச்சித் தகவலிலிருந்து மீள முடியாமற் தவிப்பவள். திருமணத்திற்கு பன்னிரண்டு நாட்கள் இருக்கிறபோது கணவராக வர இருப்பவன் அவளிடம் தனக்கொரு காதலி இருப்பதாகவும் திருமணத்திற்குப் பிறகும் அவளுடனான உறவை தொடர இருப்பதாகவும் கூறியிருக்கிறான். பத்ரிசியாவுக்கு பெரிய இடத்தும் மருகளென்ற வகையிலும், ஆட்சி அதிகாரங்களால் துதிக்கபடுகிற மனிதரின் திருமதி என்பதாலும் சில கடமைகள் இருக்கின்றன. அதுவன்றி பால்வினை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுதல், கண்ணிவெடிக்கு எதிரான நடவடிக்கைகளென வேறு பணிகளுமுள்ளன. இளவரசி பத்ரிசியாவுடன் கொண்டுள்ள காதலுக்கிடையிலும் ஐப்பத்தாறு சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக நாட்டின் அதிபராக தேர்வு பெற்றுள்ள லாம்பெர்த்துக்கு அதிபருக்கான கடமைகள் காத்திருக்கின்றன. நாவலின் பெரும்பான்மையான பக்கங்கள் லாம்ம்பெர்த்தும் பத்ரிசியாவும் சந்திக்கவும் காதல்கொள்ளவும் நேர்ந்த வாய்ப்பு விவரணைகள் அடங்கியவை. பெருமக்களுக்கான முறைமைகளின்படி இருவர் நெருக்கத்திற்கும் அரசியலும் அதிகாரமும் ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் கணிசமாகவே அமைகின்றன. ரம்பூய்யே கோட்டை அரண்மணைகுறித்து நூலாரியர் தரும் நுணுக்கமான வர்ணணைகள் பிரம்மிப்பூட்டுபவை. பதவிக்காலத்தில் அக்கோட்டை நூலாசிரியருக்கு (அதிபருக்கு) இரண்டாவது தங்குமிடமாக இருந்திருக்கிறதென்கிறார்கள். அங்கே தங்கியிருந்த காலங்களில் வேட்டையில் ஆர்வங்கொண்ட அதிபர் பெரிய அளவில் அதற்கான ஏற்பாடுகளைசெய்வித்து வேட்டைக்குச் சென்றிருக்கிறார். “வேட்டைக்கான ஏற்பாடுகளும், வேட்டையும் விருந்தோடு ஒப்பிடக்கூடியவை” என்பது நூலில் ஆசிரியர் தரும் ஒப்புதல் வாக்குமூலம்.

நாவலை எழுதியிருப்பவர் பிரெஞ்சு மொழிச் சங்கத்தின் மூத்த அறிஞர்பெருமக்களில் ஒருவரும் பிரான்சு நாட்டின் முன்னாள் அதிபருமான வலெரி ழிஸ்க்கார் தெஸ்த்தெங் (Valery Giscard D’Esteing). ‘லேடி பாட்’ என்று சொல்லப்பட்டுள்ள கதைநாயகி வேறுயாருமல்ல லேடி டயானா என்கிறார்கள். 1994ம் ஆண்டு (பிரான்சு)அதிபர் ழிஸ்க்கார் இளவரசி டயானா நடத்திய தொண்டு நிறுவனப்பணிகளில் தீவிர ஆர்வம் காட்டியிருக்கிறார். கதையில் நாயகன் நாயகியைச் சந்திக்கிற ராம்பூய்யெ கோட்டையிலேயே டயானாவை அதிபரும் சந்தித்திருக்கிறார். கோட்டை குறித்த தகவல்களும், பிற விபரங்களும் அட்சரம் பிசகாமல் நாவலில் இடம் பெற்றிருக்கிறதென்று நாட்டின் புகழ்பெற்ற சஞ்சிகையான ·பிகாரோ(Figaro) எழுதுகிறது. நாவலின் தொடக்கவரிகளுக்கிடையே நம் கவனத்தை ஈர்ப்பது, “கொடுத்த வாக்கைக் காப்பாற்றியிருக்கிறேன்” என்ற வரி. அவ்வரிக்கான பதில் “நீங்கள் என்னிடம் கூறிய கதையை எழுத்து வடிவில் கொண்டுவரலாமாவென்று கேட்டீர்களில்லையா? மனப்பூர்வமாக சம்மதம், ஆனால் நீங்கள் எனக்கொரு வாக்களிக்கவேண்டும்” என்று நாவலில் பின்னர் கிடைக்கிறது. ஆக டயானவை வைத்து வம்புபேச ஆசிரியருக்கு ஆசை அவ் வம்பில் தம்மையும் இணைத்து குளிர்காய்வதில் சுகம் காண்கிறார். பெண்மணியின் கடந்த காலமும், உலகப் புகழும், போற்றிப்பாடலும், நாவலின் புனைவுத்தன்மையை அசலென்று நம்பவைக்கிறது அல்லது உண்மைகளுக்கு புனைவு முலாம் பூசப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் ஆளுமையும், நுட்பபார்வையுடன் இடங்களை விவரிக்கும் போக்கும் உண்மைக்கு வெகு அருகாமையில் வாசகர்களை நாவல் நிறுத்தியிருக்கிறது. வாசகர்கள் புனைவின் வசீகரத்திற்கு கீழ்ப்படியாதவரை இந்நிலை தொடர்கிறது. பற்றார்வ கதைசொல்லலிருந்து விடுபட்டு அரசியல் தளத்தில் நூலாசிரியர் கதையை முன் நகர்த்திச்செல்கிறார், அவரொரு அரசியல்வாதியென்ற எதார்த்தம் காரணமாகவிருக்கலாம். நாவலை படித்து முடித்ததும் எழுகிற கேள்வி இவைகள் உண்மையா? கட்டுக்கதையா? பெண்களை தங்களோடு இணைத்து நாயகப் திறனைக் கட்டமைக்க முயலும் (பலவீனமான) ஆண்களின் வழமையான உத்தியா? உண்மையையும் பொய்யையும் கலந்து எழுதுகிறபோது அதற்க்கான விகித்தாசாரமென்ன? நினைவும் புனைவும் அதனதனளவில் நாவலை முன்நகர்த்த வழங்கும் பங்களிப்புகள் எவை? வாசகர்களை குழப்புகின்ற இது போன்ற கேள்விகளுக்கு நூலாசிரியர்கள் மட்டுமே பதிலளிக்கமுடியும். அவ்வாறான பதில்கள் பெறப்படாதவரை புனைவின் கதைமாந்தர்கள் மட்டுமல்ல புனைவே கூட ஒரு மாயையாக வடிவெடுப்பதை தவிர்க்கமுடிவதில்லை.

இளவரசி டயானாவை மையப் பொருளாகக் கொண்டு வந்துள்ள இரண்டாவது நாவல் ஒரு மொழி பெயர்ப்பு நாவல், மூலம் ஸ்பானிய மொழி. நூலாசிரியர் ஜூலியன் ரியோஸ் (Julian Rios). ஸ்பெயின் நாட்டவர் என்ற போதிலும் பிரான்சு நாட்டில் வசித்துவருகிறார். இன்றையதினம் ஜேம்ஸ் ஜாய்ஸ் தடத்தில் பயணிக்கும் நவீன எழுத்துவெளியின் நம்பகமான புதுமை-பித்தர்களில்(Avant-Gardistes) தவிர்க்க முடியாதவர். “Toute bonne technique porte en elle une metaphysique” (நுண்பொருளென்பது நுட்பத்தின் சிறப்பு அம்சங்களைக் கொண்டது) என்கிற சார்த்ருவின் கூற்றை மெய்பிக்க முனைபவர். இவரது படைப்புகளுள் 1983ம் ஆண்டு வெளிவந்த லார்வா (Larva) ஓர் சிறந்த படைப்பு எனப்படுகிறது. பெரும்பாலான இலக்கிய விமர்சகர்களுக்கு ரியோஸ், படைப்பில் நுணுக்கமான புதுமைகளைக் கையாளும் சமகாலத்து ஸ்பானிய எழுத்தாளர்களுள் தலையாயவர். அவர்களில் சிறுபாண்மையினருக்கு அவரது சொல்விளையாட்டும், புனைவு உத்திகளும் காலம் கடந்தவை. சொந்த நாட்டில் ரியோஸ் படைப்புகள் குறித்து கருத்துமோதல்கள் இருப்பினும், மேற்கத்திய படைப்புலகிற்கு ஜேம்ஸ் ஜாய்ஸ்( James Joyce) அர்னோ ஷ்மித்(Arno Schmidt) வரிசையில் ஸ்பெய்ன் நாட்டிற்கு ஜூலியன் ரியோஸ் (Julian Rios). ஜாய்ஸ்ஸ¤டனும் ஸ்மித்துடனும் ஒப்பிடும் வகையால் ரியோஸ் படைப்புகளை வாசிக்கும் அனுபவம் மலையேற்றத்துக்கு ஒப்பானதென்று அறிகிறோம். ரியோஸ¤டைய இலக்கிய சிகரத்தைத் தொட கடும்பயிற்சியும் ஆரோக்கியமான மனமும் வாசக நண்பர்களுக்குப் பொதுவானதொரு தேவை.

இளவரசி டாயானா பற்றிய ரியோஸ் நாவலுக்கு வருவோம். அவரது சொற்களிலும் வாக்கிய அமைப்பிலும் (ஒன்றுக்குள் ஒன்றென வாக்கியங்கள் தொடர் விளக்கங்களுடன் சங்கிலித் தொடர்போல நீள்கின்றன) பொறுமையுடன் கவனம் செலுத்தினால் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகைமை சர்ந்தது. டயானா குறித்த இந்த நாவலுக்குப் பெயர் பாலம் -அல்மா(Pont d’Alma). சுமார் 153 மீட்டர் கொண்ட பாலம் -அல்மா பாரீஸ் நகரத்திலுள்ள முக்கியமான பாலங்களுள் ஒன்று, வரலாற்று புகழ்வாய்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போரொன்றின் நினைவாகக் கட்டப்பட்ட பாலத்தில் நான்கு போர்வீரர்களின் சிற்பங்களுள் ஒன்று வெடிகுண்டுகளைக் கையாளும் படைவீரனுக்குரியது. ஒருவகையில் நாவலின் பிற்பகுதியில் ஆசிரியர் எழுப்பும் சந்தேகத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதென கருதலாம். நாவலுக்குப் பாலத்தின் பெயரைச் சூட்ட வேறுகாரணங்களும் ரியோஸ¤க்கு உள்ளன. இப்பாலத்தருகேதான் டயானா வாகனவிபத்துக்குள்ளான சுரங்கச் சாலை இருக்கிறது. தவிர அமெரிக்கச் சுதந்திரதேவியின் கரத்திலிருக்கும் சுடர் அளவில் தத்ரூபமாக எழுப்பட்டுள்ள சிற்பமொன்றும் அங்கே உள்ளது. மேற்குறிப்பிட மூன்றுமே நாவலுக்கான ஆதாரசேர்க்கைகள். ரியோஸ் அவ்வழியாக ஒரு நாள் தற்செயலாக நடந்துசெல்கையில் விபத்துக்குள்ளான டயானாவை நினைத்துக்கொள்கிறார், அந்நினைவு கணத்தில் வெறொரு நினைவை சீண்டி எழுப்புகிறது: பத்தாண்டுகளுக்கு முன்பாக லண்டன் வீதியொன்றில் சிவப்பு விளக்கு சமிக்கைக்காக் காத்திருந்தபொழுது அங்கே பச்சை நிற ஜகுவார் வாகனத்தையும் வாகன ஓட்டியிடத்தில் டயானாவை பார்த்த காட்சி. தொடர்ந்து அடுக்கடுக்காக வேறு நினைவுகள். நினைவுப் படிமங்களைக்கொண்டு ரியோஸ் ஒருவகையான கொலாஜ்வகைச்சித்திரத்தை வடிவமைக்கிறார். புனைவில் 1997ம் ஆண்டு டயானாவோடு விபத்தில் மாண்ட அவரது காதலர் டோடி அல்-·பயெட், ரிட்ஸ் ஓட்டலின் தலைமை பாதுகாவலரும் விபத்தின்போது வாகன ஓட்டியாகவுமிருந்த ஹென்ரி போல் ஆகியோரோடு புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியரான கமில் கொரோ (Camille Corot), மர்செல் ப்ரூஸ்டு(Marcel Proust)வைப்போல இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்குடனிருந்த பிரெஞ்சு புனைகதை எழுத்தாளரும் மருத்துவருமான செலின் (Celine), அயர்லாந்து எழுத்தாளரான ஜொனாத்தன் ஸ்வி·ப்ட்(Jonathan Swift) போன்ற படைப்புவாதிகளை புனைவுக்குள் ரியோஸ் அழைத்துவருகிறார். புனைவில் டாயானவும், அவருடன் மாண்ட மற்றவர்களும் துணை மாந்தர்களென்ற விளிம்புநிலைக்குத் தள்ளபட்டிருக்கிறார்கள். அவர்களை முன்வைத்து பிறபடைப்பு மாந்தர்களின் கலை,இலக்கிய வெளிகளை வாசிப்புக்கு உட்படுத்துகிறார். டயானவின் எதிர்பாராத மரணமும், அதனடிப்படையில் தோற்றமெடுக்கும் நம்பிக்கையும் ரியோஸை பொறுத்தவரை ஒருவகையான மூலாதாரங்கள். அடுத்தடுத்த அத்தியாய தளங்களில் அவரது பிரம்மிபூட்டும் சொல்வழிப்போக்கைச் செறிவூட்டுவதற்கு பெரிதும் அவை கைகொடுக்கின்றன. செலின் மரணித்த தினத்தன்றுதான் டயானா பிறந்திருக்கிறாறென்ற வரலாற்று உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்ட ரியோஸ் எழுத்தாளரின் உயிர்வாழ்க்கை நீட்சியை இளவரசியிடம் தேடுகிறார். இருவருக்கிடையேயான பேத அபேதங்கள் இலக்கிய தரிசனங்களாக வாசகர்களுக்குக் கிடைக்கின்றன. நூலாசிரியரின் சொல்லாடலும், தர்க்கமும் வாசிப்பது இட்டுக்கட்டப்பட்டதென்கிற மனநிலையிலிருந்து நம்மை முற்றாக விடுவித்துவிடுகிறது. நாவலில் பிறிதொரு இடத்தில் ரசமான சம்பவம்: சேன் நதியில் படகொன்றில் ஏற்பாடு செய்யபட்டக் கொண்டாட்டத்தில் டயானாவுடன் பொதுலேர்(Baudelaire)’, பிராக்(Braque), மொரிக்கான்(Maurican) கலை இலக்கிய பிதாமகர்கள் கலந்துகொள்கிறார்கள். டயானா தயவில் (ரியோஸ்?) சில படைப்புவாதிகளின் அறிமுகம் நமக்கு வாய்க்கிறது. டயானாவுக்கும் பிறருக்கும் என்ன உறவு? எப்படி சந்திக்க முடிந்தது? அனைவரும் ஆகஸ்டு 31ந்தேதி மரணித்தவர்கள். நாவலில் மிகவும் முக்கியமான பகுதியென இதைச் சொல்லவேண்டும். பொதுலேர், பிராக், மொரிக்கான் போன்ற கலை இலக்கிய பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல, அவர்களின் மறைவுகள், திடீர்மரணங்களெனச் சொல்லபடுகிற விவரணைகளின் அடிப்படையில் ரியோஸ் முன்வைக்கும் நுட்பமான பார்வைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

டயானாவின் எதிர்பாராத மரணம் ரியோஸ¤க்கு வேறொரு விபத்தும் அதுசார்ந்த மரணத்தையும் ஞாபகமூட்டுகிறது. ருடோல்·ப் டீசல் (Rudolf Diesel) பொறியாளர்,’டீசல் எந்திரத்தின்’ தந்தை. பெற்றோர் ஜெர்மனியிலிலிருந்து வெளியேறி பிரான்சு நாட்டில் வாழ்ந்துவந்தவர்கள். ஐரோப்பிய வானில் முதல் உலக யுத்தத்துக்கான மேகங்கள் திரண்ட காலத்தில் தமது கண்டுபிடிப்பான டீசல் எந்திரத்தை நீர்மூழ்கிக் கப்பலுக்குகென வணிகப்படுத்தவென்று லண்டனில் அதுசம்பந்தப்பட்ட அமர்வொன்றில் கலந்துகொள்வதற்காக இங்கிலீஷ் கால்வாய் வழியாக பொறியாளர் டீசல் ஹார்விச் நோக்கிப் பயண்பட்டுக்கொண்டிருந்தார். 1913ம் ஆண்டு செப்டம்பர் 29ந்தேதி சம்பவத்தன்று இரவு வழக்கம்போல உறங்கச் சென்றவரை பத்து நாட்களுக்குப்பிறகு கடலில் சிதைந்த உடலாகக் கண்டெடுத்தனர். இன்றுவரை அவரது திடீர்மரணம் மர்மமாகவே இருக்கிறது. டீசல் எஞ்சினின் பிறப்புக்குக்காரணாமான ஒருவர் யுத்த சூழலில் இங்கிலாந்து செல்வதை எப்படி அனுமதிக்கமுடியும் என்ற கேள்வி அம்மரணத்தில் அடங்கிக் கிடக்கிறது. டயானாவின் இறப்பின்வழி ஏற்கனவே உலகமறிந்த வதந்திகளுடன் புதிய ஊகங்களையும் இணைத்து ஊல்லிசெஸ் (Ulysses) மரபில் சொல்லவந்த ரியோஸ¤க்கு, மர்மமான முறையில் டீசல் இறந்து 84 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த டயானாவின் வாகனவிபத்து ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் சதியாக இருக்குமென்கிற சந்தேகம். இளவரசி டயானா கண்ணிவெடிகளுக்கு எதிரானதொரு அரசு சாரா இயக்கத்தை உருவாக்கி முழுமூச்சாக அதற்கென உழைத்துக்கொண்டிருந்தவரென்பது ரகசியமல்ல. இச்சந்தேகத்தை ரியோஸிடம் விதைத்தவர் தற்காலிகமாக டயானா ஜோதியை தரிசிக்கவந்த ஓர் அமெரிக்க குடிமகன். நாவலில் அவரை ஆசிரியர் Ti.Piயென அழைக்கிறார். விபரம் தெரிந்தவர்கள் அவரை அமெரிக்க எழுத்தாளரும், ஊடகங்களெனில் தலைகாட்டாதவருமான தாமஸ் பின்ச்சன்(Thomas Pynchan) என்கின்றனர். ரியோஸ் நாவலில் வேறொரு புதுமையும் இருக்கிறது ‘என்பெயர் சிவப்பு’ நாவலில் ஒரான் பாமுக் ஓவியத்தைக்குறித்துப் பேசியிருந்தபோதிலும் ரியோஸ் அளவிற்கு ஆழமான தேடல்கள் இல்லை, கலைநுட்பங்களைப் பற்றிய விவரணைகளில்லை. ஓவியங்களைப்பற்றிய தகவல்களும், ஓவியக்கலை அடிப்படையில் நாவலில் இடம்பெறும் கலைஞர்கள் குறித்தும் ரியோஸ் தரும் விவரணபாணி நாவலை ஒரு கலைக்களஞ்சியமாக உருவாக்கியிருக்கிறது.

மரணமிலா பெருவாழ்வில் அவநம்பிக்கைக்கொண்ட எதிர்பாராத மரணங்கள் அனைத்துமே மர்மங்கள் அடங்கியவை. அவிழ்த்திடாத சூட்சமங்கள் கொண்டவை. மரணம் தவிர்க்கமுடியாததென்பதும், வரவேண்டிய காலத்தில் வந்தே தீருமென்பதும் உண்மை. ஆனால் அம்மரணம் இயற்கையாய்(?) நிகழாதபோது ஐயங்கள் ஈரங்கண்ட விதைபோல, முளை விடுகின்றன. காம வயப்பட்ட உடல்போல நான்காம் நாள் தளிரும் கொடியுமாய் குப்பையா, கொழுகொம்பாவென்கிற எதிர்பார்ப்புகளின்றி விழுந்து புரள்கின்றன அல்லது தொற்றிக்கொள்கின்றன. ரியோஸ் இம்மரணங்களை இலக்கிய களத்தில் நிறுத்தி விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்கிற கடப்பாட்டுடன் செயல்பட்டிருக்கிறார், அவ்வகையில் தமிழ்ச் சித்தர்களின் மனப்பாங்கினை அவரிடம் காணமுடிகிறது. இந்திய மெய்யியலை ஜூலியன் ரியோஸ் வாசிக்க நேர்ந்திருந்தால் படைப்பு கூடுதலாகப் பிரகாசித்திருக்கும்.

நன்றி -அம்ருதா

———————————————————-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா