இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஆகஸ்ட் 15, 2000 அன்று, தக்கலையில் மைலாஞ்சி (மருதாணி) கவிதைநூல் கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்வில் வெளியிடப் பட்டது. எனது உம்மா எம்.ஜெமீலா பீவி வெளியிட முனைவர் முத்து மோகன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு பேசினார். இரண்டு மாதங்களுக்குப்பிறகு 1.11.2000 வெள்ளிக்கிழமை ஜம்மா தொழுகை முடிந்தவுடன் ஒரு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதனை திருநெறி தொண்டர்குழு சார்பில்
செ.முஹம்மது முஸ்தபா வெளியிட்டிருந்தார். அதில் முன்பக்க குறிப்பு இவ்வாறாக இருந்தது: மைலாஞ்சி என்ற புதுக்கவிதை புத்தகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் நெறிகளுக்கு மாறாகச் சில பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை மார்க்க சம்பந்தப்பட்டவை என்பதன் காரணமாக கருத்துக்கூற தயக்கமாக இருக்கிறது. மார்க்க அறிஞர்களாகிய உலமாக்கள்தான் அதற்கு விளக்கம் தரவேண்டும். இந்த
வேண்டுகோளுடன் மைலாஞ்சி தொகுப்பின் அஸா, அகீகா, அல்லாவின் மொழி, வந்துதிக்காத ஓர் இனத்தின் நபிபற்றி, ஹைளு, மைக்குட்டி யின் மரணம், திரும்பதிரும்ப துரத்தும் ஷைத்தான்கள், தொப்பி போட்ட ஷைத்தான், நபிஇபுராகீமிடம், திடீரென காணாமல் போன நபிகள் நாயகம் எனத்துவங்கும் கவிதைகளையும் இணைத்து எட்டுப்பக்க அளவில் அப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. இதனை தமிழகமெங்கும்
பரவலாக பள்ளிவாசல்கள், முஸ்லிம் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் என விநியோகம் செய்தனர்.

25.11.2000 அன்று மைலாஞ்சி எதிரொலி 1கவியரங்கத் தோழருக்கு கனிவான ஒருமடல் எனும் பிரசுரமும் வெளிவந்தது. இதனை அரபி இலக்கிய மொழிபெயர்ப்பாளர் ஆலிம்கவிஞர் தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி எழுதியிருந்தார்: ஒரு பெண் நபி ஏனில்லை, அகீகா கொடுப்பதற்கு பெண் என்றால் ஒரு ஆடு, ஆண் என்றால் இரண்டு ஆடு என்பது பாரபட்சம் ஆகிய உங்கள் கவிதைவரிகள் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக
வாழ்வோம் இந்த நாட்டிலே எனும் பாரதிபாடலை வேதவரிகளாக மதித்து ஈமான் கொண்ட உங்கள் இதயத்தை திறந்து காட்டுகிறது. ஆண்பெண் சமத்துவம் எனும் வறட்டு வேதாந்தம் வாழ்வின் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? நிச்சயமாக ஆகாது. ஏனெனில் ஆண்பெண்னைப் படைத்த ஆண்டவனே இந்த சமத்துவ வாதத்தை ஏற்கவில்லை யென்பது திருக்குர்ஆனின் தீர்ப்பாகும். அதற்காக இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு
அடிமையாக்குகிறது என்பது பொருளல்ல…

27.12.2000 அன்று எம்.ஏ.ஷாகுல்ஹமீது எழுதிய அஸ்தஃபி ருல்லா பிரசுரம் வெளிவந்தது. ஆலிம் கவிஞரின் மொழிநடைக்கு முற்றிலும் மாற்றமான ஒரு பகடிதொனியை இது வெளிப்படுத்தியிருந்தது. மைக்குட்டியின் மரணம் கவிதை தொடர்பான விமர்சன வரிகளை இதற்கு உதாரணப்படுத்தலாம். மைக்குட்டிகளுக்காக நீங்கள் இனியும் புலம்புவதால் பயனில்லை. பரிகாரம் இதோ. மைக்குட்டிகளுக்கு கலிமா சொல்லிக்
கொடுங்கள், சுன்னத் செய்துவிடுங்கள், பிறகு அவை இறந்தால் நீங்களே இமாமாக நின்று ஜனாஸா தொழுகை நடத்துங்கள் யாரும் ஆட்சேபிக்க முடியாது. நவூதுபில்லா

மார்ச் 2001 சிந்தனைச்சரம் இதழில் அபூஆஷிக் எழுதிய கட்டுரையை திருநெறி தொண்டர்குழு 14.3.2001ல் மறுபிரசுரம் செய்திருந்தது. இதில் ஒருபகுதி, வட்டாரம் சார்ந்த இஸ்லாமிய நாட்டார் மரபுகளை பதிவு செய்திருந்த மைலாஞ்சியின் கவிதைகளை இவ்வாறு விமர்சனப்படுத்தி இருந்தது: அல்லாசாமி ஊர்வலம் என்று மாற்றாரால் வர்ணிக்கப்பட்ட பஞ்சா எடுத்தல், தீக்குளி மிதித்தல் எனும் இந்த அஞ்ஞான
ஆட்டங்களையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள். மாற்றாரின் சடங்குகளை எவர் செய்கின்றார்களோ அவர்கள் என்னைச்சார்ந்தவர்கள் அல்ல என்ற நபிமொழியை மக்கள் தெரிந்து கொண்டார்கள். ஆனால் அது தெரியாத கவிஞர் ஐயகோ இந்த கடுவாபுலி ஆட்டமெல்லாம் நின்றுபோனதால் இஸ்லாத்தின் அடையாளங்களே அழிந்துபோய்விட்டதே, வானமே இருண்டுவிட்டதே என்று கூக்குரலிடுவது அபத்தத்தின் உச்சகட்டம்.

ஆகஸ்ட் 2001 முஸ்லிம் முரசு இதழில் கத்தார் கே.எம்.முஹம்மது சுலைமான் எழுதிய கட்டுரையும் திருநெறி தொண்டர் குழுவால் மறுபிரசுரம் செய்யப்பட்டது. மொழிகடந்து, இனம்கடந்து, அழைக்கத்தான் அல்லாஹ் என்கிற பொதுமொழியைத் தந்தான். தமிழனும், மலையாளியும், ஆந்திரனும், இந்தியனும், அரபியும், ஆங்கிலேயனும் அல்லாஹ் என்ற ஒற்றைச் சொல்லில் ஒன்று கூடத்தான் அந்தப் பொதுமொழி.
தாய்மொழியில்தான் வேண்டுமென பிரிவினையைத் தூண்டுவது சைத்தானின் வழி.

மைலாஞ்சி கவிதைகள் சாத்தானிய கவிதைவரிகள் என்பதாக வெளியிப்பட்ட விமர்சனங்களையும்விட இந்த பிரசுரம் தனிநபர் வசவுமொழிகளால் படைப்பாளியைத் தாக்கியிருந்தது. இப்பிரசுரங்கள், குமரிமாவட்டத்தின் ஜமாஅத்துகளின் பள்ளிவாசல்களில் மட்டுமல்ல தமிழகத்தின் பிற ஜமாஅத்துகளுக்கும், சிங்கப்பூர், துபாய் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாட்டு தமிழ் முஸ்லிம் களுக்கும்
சென்று எட்டியிருக்கிறது. பத்துமாதகாலமாக இந்த பிரசுரங்களின் வழியிலான கருத்து யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மைலாஞ்சி கவிதைகளுக்காக தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேசன் ஜமாஅத் என்மீதான விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கியது. மைலாஞ்சிக்கும், படைப்பாளிக்கும் எதிராக மக்களை உசுப்பிவிடும் போக்குகளும் உள்ளுர் அளவில் எழும்பத்துவங்கின. எனது இருப்பின் சாத்தியங்கள் அலைதலுற ஆரம்பித்தன. வெள்ளிக்கிழமைகளில் பல தொழுகைப்பள்ளிகளில்
ஆலீம்கள் மூலமாக மைலாஞ்சி கவிதைகளை உதாரணம் காட்டியும், கடுமையாகத் தாக்கியும், படைப்பாளியைக் கண்டித்தும், பயான்கள் (சொற்பொழிவுகள்) நிகழ்த்தப்பட்டன. இஸ்லாத்தின் பெயரால் உணர்ச்சிநிலையில் போலியாக கோபங்கள் உருவாக்கப்பட்டன.

இக்கவிதைகளுக்கு விளக்கம் கேட்கும் தோரணையில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஜமாஅத் நண்பர்கள் 2000 நவம்பரின் ஒரு முன்னிரவில் வீடுதேடி வந்தனர். இரண்டுமணி நேரமாக கடுமையாக விவாதம் செய்து திரும்பிச் சென்றனர். நான் மிகவும் அமைதியுடன் நட்புரீதியாக கையாண்டதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே ஜமாஅத் சட்டதிட்டங்களுக்கும், ஷரீஅத் நெறிமுறைகளுக்கும் எதிராக
மைலாஞ்சி கவிதைகள் இருப்பதாகவும் என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 120 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று தக்கலை அபீமுஅ ஜமா அத்திற்கு (ஊர்சபை) வழங்கப்பட்டது.

மைலாஞ்சி கவிதை நூலின் பிரசுரவரிகளையும் சல்மான் ருஷ்டியையும் மேற்கோள்காட்டி சமுதாயத்தையும் அல்லாஹ்வையும் இஸ்லாமிய மார்க்கத்தையும், அண்ணல் நபிகளையும் நிந்தித்தாக கூறி 13பேர் கையெழுத்திட்ட நான்குபக்க மனுவை வளைகுடா நாடு மஸ்கட்டிலிருந்து அனுப்பி என் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரினர். எதிர்ப்புகளும், தகவல்களும் வெகுவாக பரிமாறப்பட்டன.

இதற்கிடையே ஜமாஅத் ஆலீம் முன்னிலையில் நிர்வாகத்தினர் என்னை ஒரு குற்றவாளியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பிரச்சினைக்குள்ளாக்கப்பட்ட ஏறத்தாழ 20கவிதைகள் பற்றி என்னிடம் விளக்கம் கேட்டனர். அந்த இரவின் எல்லை முடியும்வரை இது நீடித்தது. இவ்விளக்கங்கள் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஊர் விலக்கு நிகழ்ந்திருக்கும். இது பெற்றோர்,
குடும்பம், ஊர், அதன் நிகழ்வுகள், நல்லது கெட்டது காரியங்கள் எல்லாவற்றிலிருந்தும் படைப்பாளியையும், அவரது மனைவி, குழந்தைகளையும் விலக்கி வைக்கும் நிகழ்வாகும்.

எனது 12 பக்க விளக்கங்கள் ஜமாஅத்திற்கு அளிக்கப்பட்டது. கவிதைப் படைப்பை சரியா / தவறா என உரசிப் பார்க்கவும், முடிவெடுக்கவும் இங்கே உலமாக்கள் கைவசம் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இது குறித்து பெறப்படும் உலமாசபையின் பத்வா (இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு) அடிப்படையில் ஜமாஅத் பொதுக்குழுவில் என்மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மைலாஞ்சி தொடர்பாக ஜனநாயகப்பூர்வமாக கருத்துப்பரிமாற்றம் செய்வதும், விவாதிப்பதும், பிரசுரங்கள் வெளியிடுவதும் ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் இவ்விவாதங்களின் முடிவு படைப்பாளியை பழிவாங்குதல், புத்தகத்தை தடை செய்தல், படைப்பாளியை குடும்பத்தோடு ஊர்விலக்கம் செய்தல் என்பதான எல்லைகளை நோக்கிச் சென்றதுதான் துக்கரமானதாகும்.

மைலாஞ்சி கவிதைகள் பிரச்சினை இவ்வாறாக ஊடக அளவில் கடந்து செல்வதற்கான சாத்தியங்களைப் பெற்றது. படைப்பாளிகள், ஜமாஅத் நிர்வாகத்தினர் நேர்காணல் / களஆய்வு விவரங்கள் சேகரிப்பு அடிப்படையில் பீர்முகமது எழுதிய புலனாய்வு கட்டுரை செப். 19, 2001 இந்தியா டுடே வார இதழில் வெளியானது.

இன்னொரு சாத்தானின் கவிதைகள் என்ற தலைப்பிட்டு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய மைலாஞ்சி (மருதாணி) கவிதைத் தொகுப்பு இஸ்லாத்துக்கு விரோமானது என்று முஸ்லிம் பழமை வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கவிஞரும் அவரது குடும்பத்தாரும் அஞ்சி நடுங்குகிறார்கள் என்கிற முன்னுரைக் குறிப்போடு செய்திக்கட்டுரை வெளியானது. இதில் ஜமாஅத் நிர்வாகத்தினர் ஜமாஅத் பொதுக்குழு கூடி
எஞ்சியிருக்கும் மைலாஞ்சி நூல்களை ஜமாஅத்திடம் ஒப்படைக்கும்படி ரசூலிடம் கூறியது. ஷரீஅத்திற்கு எதிராக எழுதியதற்கு வருத்தம் தெரிவிக்குமாறும் கூறினர். இதற்கு கட்டுப்படவில்லை என்றால் ஊர்விலக்கம் செய்வோம் என்ற மறைமுக எச்சரிக்கையும் விடப்பட்டது.

கவிஞர் ஹாமீம் முஸ்தபா, மரபுகள் என்று முஸ்லிம்கள் பின்பற்றும் சில பழக்கங்களை மைலாஞ்சி கேள்விக்குள்ளாக்குகிறது. இஸ்லாத்தை அல்ல எனவும், ஜெயமோகன், வைக்கம் பஷீர்போல ரசூல் போன்றவர்கள் இஸ்லாத்தின் சொத்து. இவர்களை நிராகரித்தால் எதுவும் மிஞ்சாது எனவும் சுந்தர ராமசாமி ஒரு எழுத்தாளன் பாதிக்கப்படும் போது பிற எழுத்தாளர்கள் அவனுடன் இணைந்துநின்று போராடவேண்டும்
எனவும் பதிவு செய்திருந்தனர். முஸ்லிம் பெண்களதும் குழந்தைகளதும் மொழியில் பேசிய ரசூலின் மைலாஞ்சி கவிதைகள் இன்று அவரது சமூகத்தில் தடைசெய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவரை ஊர்விலக்கம் செய்வதாக அச்சுறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். தமிழ் சமூகத்தில் இன்னமும் எழுத்தாளன் தனக்கான நெருக்கடிகளைத் தனிநபராக நின்றே சந்திக்க வேண்டியிருப்பது
மிகவும் கொடுமையான நிதர்சனமாகும் என்பதாகவும் பீர்முகமதுவின் மதிப்பீடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா டுடே செப் 26, 2001 இதழில் கவிஞர் கனிமொழி கறுக்கும் மருதாணி தலைப்பில் ஒரு பதிவினை செய்திருந்தார். ஒரு படைப்பாளியின் சுதந்திரம் பற்றி யாருக்கும் சந்தேகங்கள் இருக்க முடியாது. இஸ்லாமிய பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ள சில ஆணாதிக்க வழக்கங்களை முன்வைத்து எழுப்பப்படும் இந்த கேள்விகள் மெலிதானவை. ஆனால் இதற்காக ரசூல் எதிர்கொண்ட எதிர்ப்பு மிகக் கடுமையானது
என அதில் எழுதியிருந்தார்.

அக்.-03.2001 இந்தியா டுடேயில் ஜெயமோகன், ரசூலின் மைலாஞ்சியை சல்மான் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளது தவறான புரிதல்களை உருவாக்கக்கூடும். சாத்தானின் கவிதைகள் எள்ளல்தொனியுடன் இஸ்லாத்தையும் அதன் சாரமான அறஒழுக்க அடிப்படைகளையும் விமர்சிப்பது. மைலாஞ்சி இஸ்லாத்தின் சாரமான ஆன்மீகத்தை முழுக்கமுழுக்க ஏற்றுக்கொண்டு சடங்கு நம்பிக்கைகளை
மட்டும் நவீனப்படுத்த முயற்சிப்பது ஆகும் என எழுதியிருந்தார். ஆனால் இஸ்லாமியர் சிலரின் உள்கட்டமைப்பு பண்பாட்டு புரிதல் இவ்வாறாக இருக்கவில்லை என்பதை அனைத்து நிகழ்வுகளும் வெளிப்படுத்தின.

நக்கீரன் 21.09.2001 வார இதழில் நபிகள் நாயக சர்ச்சை மிரண்டுபோன கவிஞர் என்பதான செய்திக்கட்டுரையை வெளியிட்டது. இதில் அப்போதைய ஜமாஅத் தலைவர் செய்யது முகமது, திருநெறிதொண்டர்குழு நைனா முகமது உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஏழாம் நரகத்தில் எரிந்து கொண்டிருந்த மக்களுக்காய், அழுது கொண்டிருந்த நபிகள் நாயகம் என ஒருகவிதையில் வரும் படிமத்தை நபிகள்
நாயகத்திற்கு எதிரான சர்ச்சையாக கண்டு இந்த ஆள்மட்டும் கேரளாவில் இருந்திருந்தால் தலையைத் துண்டித்திருப்பார்கள் என நைனாமுகமது தெரிவித்திருந்தார். நாவலாசிரியர் பொன்னீலன், ஒரு கவிஞனின் பார்வையைத்தான் ரசூல் சொல்லி யிருக்கிறார். நபிகள் நாயகத்தை கருணையின் வடிவமாகத்தான் பார்த்திருக்கிறார். ஏழாவது நரகத்தில் எரிந்து கொண்டிருப்பவர்களும் உய்வடைய வேண்டும்
அதுவே நிஜமான உய்வு. கருணையும் மீட்பும் கடைக்கோடி மக்களுக்கும் வேண்டும். கறுப்பர்கள், அடிமைகள் எல்லோரும் உய்ய வேண்டும் என்கிற இந்தப் பேருணர்வு என தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

கவிஞர் இன்குலாப் அக்டோபர் 17, 2001 இன்தாம் இணையதளத்தில் மைலாஞ்சி குறித்து எழுதும்போது இவ்வாறாக தலைப்பிட்டிருந்தார். ரசூலின் தலையைத் துண்டிக்கலாம் கேள்விகளை என்ன செய்வீர்கள்? என்று. ரசூல் தனித்து நிற்பதாக கருத வேண்டாம். அவரை ஊர்விலக்கி வைக்கலாம். உலகம் விலக்கி வைக்காது. இன்னும் துணிவாகவும் ஆழமாகவும் சமூகத்தின் அடக்குமுறையை மனதார உணர வேண்டும் அப்படி
உணர்ந்தால் தான் ஒசா (இஸ்லாமிய நாவிதர்) ஏன் இப்படி நடத்தப்படுகிறார் என்று கேள்வி கேட்கத் துணிவார். அதுமாதிரி இருப்பவர் யார் என்பதை பார்க்கத் துணிவார். ரசூல் ஆதிக்கசக்தியோடு சமரசம் செய்து கொள்வதை விட விலக்கி வைக்கப்படுவது மேலானது என்று கருதுகிறேன் என்பதாக அந்த கருத்தாடலை இன்குலாப் முடிக்கிறார்.

ஜனியர் விகடன் 14.10.2001 இதழில் எஸ்.பி.லட்சுமணன், எரிகிறது மைலாஞ்சி தலைப்பில் விரிவானதொரு கட்டுரையை எழுதியிருந்தார். கேரளத்திலும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மருதாணியைத்தான் மைலாஞ்சி என்றழைப்பார்கள். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது என்று இஸ்லாமிய பெருமக்கள் ஆர்வத் தோடு பயன்படுத்தும் மைலாஞ்சி இன்று அந்த சமுதாயத்தினர் மத்தியில் சூட்டைக்
கிளப்பியிருக்கிறது என்கிற அறிமுகத்தோடு மைலாஞ்சி அல்லாவை ஆணாக அழைக்கு மொழி, பெண் நபி, ஆண்குழந்தை பெண் குழந்தை பாரபட்சம், தலாக், மாதவிடாய் தீட்டு தொடர்பான பிரச்சினைகளை மையப்படுத்திய விவாதமாக எதிர்தரப்பினர் சார்பில் அசன், செய்யது அலி, நைனா முகமது கருத்துக்களோடு அக்கட்டுரை வெளியாகி இருந்தது.

கவிதை எழுதியதற்காக ஊரைவிட்டு ஒதுக்க நினைக்கிறார்கள் என்ற தலைப்பில் குமுதம் 12.11.01 இதழில் மணா ஒரு பதிவை எழுதினார்.

பீசிணியுட நிழலில் ஒரு கவி என்ற தலைப்பில் இந்தியா டுடே அக். 3, 2001 இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. அதில் வெளிப்பட்ட பல கருத்துகளுக்கு மத்தியில் நாவலாசிரியர் தோப்பில் முகமது மீரான் மதத்தின் அடிப்படையான நம்பிக்கைகளை கேள்வி கேட்கும்போது அதிக கவனம் தேவை. என்றாலும் ரசூலுக்கு எதிராக ஜமாஅத்துடைய நிலைபாட்டினை நான் முழுமையாக எதிர்க்கிறேன் என்பதாக
மலையாளத்தில் இக்கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை தினமலர் வாரமலர் அக்.14, 2001 இதழில் அரிச்சந்திரனின் விவகாரம் என்ற தலைப்பில், செல்லமகள் கேட்டாள், இத்தனை இத்தனை ஆண்நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா இல்லை ஒரு பெண்நபி என்பது போன்ற வரிகள் இஸ்லாத்திற்கு எதிரானவை என்கின்றனர் உலமாக்கள். இந்தநிலையில் குமரி மாவட்ட எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும்
ரசூலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். ஆனால் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் ஜமாஅத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு சிறிய ஊரில் வாழ்ந்துகொண்டு அந்த ஊரில் வாழும் சமூகத்தினரின் நம்பிக்கைக்கு எதிராக ஒரு எழுத்தாளன் எழுதலாமா… பொறுப்புணர்ச்சி வேண்டாமா என்று கேட்கிறார் மீரான் என எதிர்மறையாக தமிழில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் 2002ல் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கக்கோவையில் ஜெ.ஹாஜாகனி, ஹெச்.ஜி.ரசூலின் சாத்தானியக் கவிதைகள் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மைலாஞ்சி கவிதைகள் திருக்குர்ஆன், மற்றும் நபிவழியில் சொல்லப்பட்ட கருத்துக்கள் குறித்து சில விமர்சனக்கேலிகளை வைக்கின்றன. அதேநேரம் திருக்குர்ஆன், மற்றும் நபி வழிக்கு
முரணாகச் சில முஸ்லிம்களிடையே உள்ள மூடபழக்கங்களை நியாயப்படுத்தவும் செய்கின்றன. பாமரபுரிதல் பன்முகவாசிப்பு, பிரதியின் குரல், இறைச்சிப்பொருள், சர்ரியலிசம், மேஜிக் ரியலிசம் போன்ற மேதாவி வார்த்தைகளைக் கூறி மிரட்டுவதன் மூலம் நச்சிலக்கியங்களை நல்லிலக்கியங்களாக நியாயப்படுத்திவிட முடியாது என்றும் எழுதுகிறார்.

ஆனால் இதற்கு மாற்றான கருத்துக்களை சில முஸ்லிம் படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் தொடர்ந்து தெரிவித்தே வந்துள்ளனர். 2007ல் சென்னையில் நிகழ்வுற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கிற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட கட்டுரை முனைவர் தி.பரமேசுவரி எழுதிய பெண்ணியப் பார்வையில் மைலாஞ்சி என்பதாகும். பின்னர் ஆய்வாளர் மற்றும் ஆய்வரங்க பொறுப்பாளர்களுடன் போராடி
வாசிக்கப்பட்டிருந்தது.

அபாபீல் இஸ்லாமிய படைப்பாளிகள் குழு ஆகஸ்ட் 2001ல் வெளியிட்ட சின்னசின்ன புறாக்களும் சிலதுப்பாக்கிகளும் என்ன பேசுகின்றன ஹெச்.ஜி. ரசூலின் மைலாஞ்சி கவிதைகள் என்ற 36 பக்க குறுவெளியீட்டில் 19 படைப்பாளிகளின் பதிவுகளும், பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகை விமர்சனங்களும் இதில் தொகுக்கப்பட்டிருந்தன.

மைக்குட்டிகளின் மரணம் கவிதை இஸ்லாமிய வழிபாட்டை கேலி செய்கிறது என்ற பார்வையை மீறி கவிஞர் பழமலை கூறுகிறார்: மைக்குட்டிகளின் மரணம் என்றொரு அருமையான படைப்பு முருங்கைமரக் கம்பளிப்பூச்சிகளின் சாவுக்கு வருந்துகிறது. யாரும் தொழுவதில்லை/மைக்குட்டிக்காக/ ஜனாஸா தொழுகை / இல்லை. மைக்குட்டிகளின் மரணத்திற்காக இறை வணக்கத்தை இக்கவிதை மூலம் ரசூல் செய்துவிடுகிறார்.
என்ன உள்ளம் அன்புள்ளம், அருள் உள்ளம் வள்ளலார் உள்ளம், ஓர் இஸ்லாமிய சித்தர் (சூபி) உள்ளம் நம்கவிஞர் ரசூல் உள்ளம்.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம்: பக்கரும், மீரானும், மைதீனும், சுல்தா னும், பர்வீனும், உம்மம்மாவும், பூட்டியும் கதையாய் நம் வாழ்வின் பிரதிகளாய் நம் அச்சத்தின் அதே முகத்தொனிப்பில் நம்முன் அர்த்தமாகிறார்கள். சமயச்சடங்குகள், நம்பிக்கைகள், நெறிகள் குறியீடுகள் மீது கேள்விகளை எழுப்பும் இக்கவிதைகளை ஒருமதவாதி தன் அதிகாரத்தின் மீதான பதற்றமாகவே முதலில் உணர்வார். ஆனால்
தம்மக்களின் வேதனைகளை, மிஞ்சிய இருப்பைக் கண்டுகொண்டவர் இவற்றின் கேள்விகளை தன் இறை அனுபவத்தின் தீராத பக்கங்களில் வைத்து உய்த்துணர்வார்.

நாவலாசிரியர் முஜிபுர்ரகுமான்: ரசூல் தமிழ் முஸ்லிம்களில் குமரிவாழ் முஸ்லிம்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை, நம்பிக்கையை, கலாச்சாரத்தை, மொழியை வெளியே கொண்டு வருகிறார். மைலாஞ்சியின் ஊடே அத்தனை கவிதைப்பிரதிகளும் முன்மொழிகின்ற ஒரேவிஷயம் மனித உரிமைகளே! அடக்குதலையும், ஒடுக்குதலையும், சுரண்டலையும் எதிர்க்கும் மனிதத்தன்மையே மதம், மொழி, கலாச்சாரம்,
நம்பிக்கை போன்ற தளங்களில் நின்று பிரதிகளில் பன்முகக் குரல்கள் ஒலிக்கின்றன. இந்தக்குரல்கள் யாவும் ஒரேதொனியில் இருக்கின்றதே ஒழிய ஒரே குரல் அல்ல என்பதுதான் மைலாஞ்சி சொல்லும் முக்கிய சேதியாகும். மைலாஞ்சியில் தமிழ்ச்சூழலிலான சித்தர் கலகக்குரல் இருக்கிறது என்று சொல்லலாமா?

எச்.பீர்முகமது: மைலாஞ்சி முதலில் பச்சையாகிறது. பின்பு சிவக்கிறது. இவ்விரு நிகழ்வுகளும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்றை வெளிப்படுத்தும்பொழுது நாம் மற்றொன்றை மறைத்துக் கொள்கிறோம். கவிதைக்கான இயங்கு தளம் என்பது சிறந்த வாசிப்புக்கான இடத்தைக் கொண்டது. இதிலிருந்து ஓர் வாசிப்பு மற்றொரு வாசிப்பின்மீது ஆதிக்கம் செலுத்தும் போதுதான் அங்கே
சிக்கல் எழுகிறது.

ச. அனந்த சுப்பிரமணியன்:மக்கள் சார்பாக நின்று, இபுலீசுகளின் நாக்குகளும், சைத்தானின் இருப்பும் கவிதைகளில் காட்டப்பட்டுள்ளன. சைத்தான் ஒற்றைதள இயங்குவரிசையில் இயங்கவில்லை.சைத்தான் இடம்விட்டு இடம் வந்து கொண்டிருக்கின்றான். சைத்தானின் மொழி பிரித்தறிய முடிய இயலவில்லை. முகம் மறைத்து ஓடுகின்ற மைதீன் பிள்ளைகளுக்கு சைத்தான் யாரென்று கவனிக்கும் திறன்
சிதறடிக்கப்படுகின்றது. இதையும் மீறி மினாவில் கல்லெறிதலின்போது பேசும் பேச்சு இபுலீசின் வாக்குமூலமாகிறது. மனப்பிறழ்வின் நிலைகள் திரும்பதிரும்ப துரத்தும் சைத்தான்களாக சித்திரப்படுத்தப்பட்டுள்ளன. பிறப்பு, இறப்பு, என்ற எதிர்வுகளின் இடையேயான வாழ்க்கை நிகழ்வுகள் கவிதை முழுமையும் பரவிக் கிடக்கிறது

. கவிஞர் நட.சிவகுமார்: கைத ஓலையை எடுக்கும் போது அந்த முள் கையை கீறிவிட்டுவிடுவது ஒரு சுகம். அதுமாதிரி ஒவ்வொரு கவிதையிலுள்ள அந்த வாழ்விற்குள்ளும் அந்த கையில் பட்ட முள் தடம் மாதிரி முனங்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இது ரசூலின் கவிதைவெற்றி பீரப்பா பிறந்த மண்ணிலிருந்து அற்புதமாக சமூக அக்கறையுடன் பேனா பிடித்த ஒரு கவிஞனுக்கு தமிழ் இஸ்லாமிய சமூகம் என்ன
வெகுமதி கொடுக்கப்போகிறது என்ற கேள்வி எனக்குள் வந்துவந்து போகிறது. தமிழில் புதுக்கவிதை தோன்றிய பிற்பாடு வெற்றிடமாக ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கு மேலாக யாராலும் குறிப்பாக பல இஸ்லாமிய கவிஞர்களால் கூட நிரப்ப முடியாமல் கிடந்த வெற்றிடத்தை ரசூல் காலம்பேசும் அளவுக்கு நிரப்பியுள்ளார்.

நாகூர் ரூமி மைலாஞ்சி கவிதைகளின் பலமும் பலவீனமும் குறித்த விரிவானதொரு கட்டுரையை எழுதியிருந்தார். புது எழுத்து இதழிலும் இது வெளிவந்திருந்தது. இதில் இடம் பெற்றிருந்த மைலாஞ்சி கவிதைகளுக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதில் அளித்த மாற்று உரையாடல் விமர்சனமொன்றை பொதிகைச்சித்தர் வே.மு.பொதியவெற்பன் சூபியப் பின்புலப்புரிதல்களோடு ஜனவரி 2002 காலக்குறி இதழில்
முன்வைத்திருந்தார். பொதிகைச் சித்தரின் சில மதிப்பீடுகள் ஒரு படைப்பை வாசகன் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும், அப்பிரதி உருவாக்கும் அர்த்த உற்பத்தி தொடர்பாகவும் சில குறிப்புகளை கீழ்கண்ட உரையாட லாக சொல்லிச் செல்கின்றன: மைலாஞ்சி இஸ்லாமியத் தமிழில் ஆன இனவரைவியல் ஆவணம் மட்டுமல்லாமல் அரபி மரபு மலையாளப் பிரயோக ஊடாட்டங்களோடு இஸ்லாமிய தமிழ்
மரபு தேடலாகவும் வெளிப்பட்டுள்ளது. விலக்குகளையும் விளிம்பு நிலையினையும் சித்தரிப்பதாயும் அதேவேளையில் விலக்கப்பட வேண்டிய அபாயங்கள் குறித்த எச்சரிக்கையுடனும் உட்செரிக்க வேண்டிய உபாயங்கள் குறித்த ஓர்மையுடனும் இயங்குவதாகின்றது.

அல்லாஹ்வின் வார்த்தைகளை அல்லாஹ் உடையதாகவும், இபுலீசின் வாக்கியங்களை, இபுலீசின் வாக்கியங்களாகவுமே மைலாஞ்சி முன்வைக்கிறது எந்தளவிற்கு என்றால் இபுலீசேகூட தன்பக்க நியாயத்தை இந்த அளவிற்கு முன்வைக்க இயலாது என மதவாத நோக்கில் எதிர்வினை வரும் அளவிற்கு. இதற்கு மேல் என்ன சொல்ல. இதுவும் ரசூலின் வெற்றி. இதுவே மற்றதை மற்றதாக அங்கீகரிக்கும் பின்னை நவீன மாண்பு.

ஹிண்டுவில் 2001 டிசம்பர் 2ல் அம்பை Poems in the oral tradition தலைப்பில் மைலாஞ்சி கவிதைகள், விவாதங்களின் சாரம் குறித்தும், சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் எழுதியிருந்தார். த நியூஸ் பேப்பர் டுடே டாட்காம் 1692001 இதழில் எல்.ஆர்.ஜெகதீசன் Tamil poet facing wrath of lacal jamath. Orthodox muslims என்றொரு பதிவையும் செய்திருந்தார். மாமல்லன் இணையதளத்தில் (மார்ச் 16, 2006) அல்லாவின் மொழி கவிதையை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்து வெளியிட்டிருந்தார். ப.செளரிராஜன் ஸமர்லோக் இந்தி இதழில் வந்துதிக்காத ஒரு இனத்தின் நபி பற்றி கவிதையை மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.

அம்பலம் இணையதள 2002 இதழில் பெண் சார்ந்த பகிர்வும் பதிவும் என்ற தலைப்பில் மைலாஞ்சி தொடர்பான படைப்பாளியின் விரிவான நேர்காணல் இடம் பெற்றிருந்தது. மனுஷ்யபுத்திரன் அம்பலம் 1592001 இதழில் கலாச்சாரக் கங்காணிகள் என்ற தலைப்பில் மைலாஞ்சி பிரச்சினை குறித்த ஒரு பதிவினை மேற்கொண்டிருந்தார். ரசூல் தனது நூலில் எழுப்பும் கேள்விகள் எளிமையானவை அவரது கவிதைத்தளம் இஸ்லாமிய
மரபுகளையும், வாழ்க்கை முறையையும் மறுப்பதோ அதன் பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிராக நிற்பதோ அல்ல. மாறாக நவீனச் சமூக மதிப்பீடுகள் எல்லாச் சமூகப்பிரிவினரின் வாழ்நிலைகளிலும் உணர்வுநிலைகளிலும் ஏற்படுத்தும் சில உடைவுகளை ரசூல் இஸ்லாமியப் பின்னணியில் இருந்தும் எதிர்கொள்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக உலகை கட்டியாளும் ஒரு நம்பிக்கை, ஒரு பிரமாண்டமான அமைப்பு ஏன்
ஒருகவிதையைக் கண்டு அஞ்சுகிறது எனவும் அந்த பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார். அயல்நாடுகளில் வாழ்ந்த எழுத்தார்வமிக்க முஸ்லிம்களையும், தமிழர்களையும் மைலாஞ்சியின் உரையாடல் ஒருங்கிணைக்க எத்தனித்தது. துவக்கு இலக்கிய அமைப்பின் கவிஞர் இசாக், துபாய் ஐக்கிய அரபு அமீரக விமர்சகர் சடையன் அமானுல்லா, ஹாங்காங் அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா அப்துல்கலாம் ஆசாத்
ஆகியோரது பதிவுகள் இவற்றில் குறிப்பிடத்தகுந்தவையாகும்.

பாங்காங் மாலீக் தனது பதிலில் இவ்வாறாக எழுதுகிறார்: வார்த்தையில் சவுக்கடி நிகழ்த்திருக்கிறது. மனிதர்கள் இபுலீசாகிவிட்டதும் வாழ மீனின் வயிறே தேவலாம் எனப்போகும் சிந்தனை, ஷைத்தானின் வாள், அல்லாவை தாய்மொழியில் அழைப்பதெப்படி என்ற உள்மன அங்கலாய்ப்பு, அல்லாஹ்வின் ஷைத்தானின் வாக்கியங்களில் ஒற்றுமைத் தோற்றம், தர்காவில் துப்பாக்கியோடு அலையும் வெறி, ரகசியத்தை
அம்பலப்படுத்தியிருக்கும் விதம், வெடிக்கப்போகும் தலைகள், ரத்தபலிகேட்கும் நாவுகள் போன்ற கவிதைகளில் உங்களின் உயரம் அறியமுடிகிறது. அநேக அவலங்களோடும் முதுகெலும்பு நிமிர திராணியற்றும் இருளில் கிடந்து மாயும் சமுதாயத்தில் இதுபோன்ற வெளிச்சப் பிளம்புகள் காலந்தோறும் தோன்றவேண்டும். ஏனெனில் இனி நபிமார்கள் வருகை இல்லை என்பதாலும் இறக்கிவைக்கப்பட்ட வேதத்தில்
நம்பிக்கை இழந்து நிற்கும் மந்தையிலிருந்து வழிதவறிய ஆடுகளுக்காகவும்,

ஸ்ரீலங்கா டி.மலர்ச்செல்வன் தனது நீண்ட கடிதப்பதிவில் ஈழத்தில் புரட்சிக்கமால் மொக்காடு எதற்குப் பெண்ணுக்கு என்ற ஒரு கவிதை அவருடைய தொகுப்பில் வருகிறது. ஆனால் இன்று புரட்சிக்கமால் முஸ்லிம்கவிஞர்களில் முக்கியமானவர். அவர் காலம் சென்றுவிட்டார். (மர்ஹம்) அவர் கவிதையோடு உங்கள் கவிதைகளை ஆராயலாம் என்கிறார். இஸ்லாமிய ஆய்வியல் அறிஞர் முனைவர் எம்.எஸ்.எம். அனஸ் தனது
கடிதப்பதிவில் மைலாஞ்சி பார்த்தேன். பண்பாட்டையும் தற்போது எழுந்துள்ள முரண்பாட்டையும் சொல்வதில் நீங்கள் கையாண்டுள்ள கவிதைநடை சிறப்பாக உள்ளது என்பதாக எழுதிச்செல்கிறார்.

தமிழ் முஸ்லிம் பிரதர்ஸ் அட் கூகிள் குரூப்ஸ் டாட்காம் இணையப்பக்கத்தில் எனது சென்னை சேரிவாழ் முஸ்லிம்கள் குறித்த விமர்சனக் கட்டுரை இடம் பெற்றிருந்தது. இக்கட்டுரைக்கு மறு மறுபதிவாக ஏப்ரல் 9, 2009 தேதியில் சூரங்குடி ஷேக் முஹம்மது எழுதியிருந்த வரிகளில் மைலாஞ்சி குறித்து மீண்டும் விளக்க கோரியிருந்தார். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளைக்
குறித்து இவ்வளவு ஆழமாக ஆர்வத்துடன் ஆய்வு செய்யும் நீங்கள் சமுதாயத்தில் உங்களைக் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு விளக்கம் தர மட்டும் பாராமுகம் காட்டுவதேன். உங்கள் மின்னஞ்சல் முகவரியோடு இணைத்து வைக்கும் அளவிற்கு நீங்கள் எழுதிய மைலாஞ்சி தொகுப்பின்மீது உங்களுக்கு பற்று இருப்பது தெரிகிறது எனவே முதலில் மைலாஞ்சி தொகுப்பு குறித்த சமுதாயத்தின் சந்தேக
எண்ணங்களுக்கு விளக்கம் அளிக்க முன் வாருங்கள் என அவர் இப்பதிவினை செய்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மைலாஞ்சி குறித்த விவாதம் திரும்பவும் எழுந்தது. ஆறுமாதங்களாகத் இடம் பெற்ற சர்ச்சைகள் எதிரும் புதிருமாக, இஸ்லாமிய கருத்தியல்கள், பண்பாடு, கவித்துவம், படைப்பின் உருவாக்கம், வாசிப்பின் அரசியல் குர்ஆனிய ஹதீஸ், தப்சீர் மற்றும் சமகால இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தியல்கள் சார்ந்து சில நேரங்களில் அதீத தனிநபர் தாக்குதல் என்பதான திசைவழியில் கூட
பயணித்தது. அல்லாவின் மொழி, ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி, அகீகா, உள்ளிட்ட கவிதைகள் சார்ந்து இது நடைபெற்றது. இவ்விவாதங்களின் உச்சகட்டத்தில் என்னை குழுமத்திலிருந்து வெளியேற்றுவது என்பதான நோக்கமே மிஞ்சியிருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. ஜனநாயகமான விவாதங்களுக்கான இடம் குழுமத்தில் உண்டு என்பதான நம்பிக்கை சிதையும் அளவுக்கு போகப்போக குழும
மட்டுறுத்தினர்களின் நிலைபாடு வெளிப்பட்டது. எனினும் முற்றுப்பெறாத வாக்கியங்களாகவே இவ்விவாதம் தற்காலிகமாக ஒருமுடிவுக்கு வந்தது.

முனைவர் மொ.இளம்பரிதி தொகுத்தளித்து டிசம்பர் 2008ல் வெளிவந்த அண்மைய புனைவுகள் நவீனவாசிப்புகள் நூலில் நாவலாசிரியர் கீரனூர் ஜாகிர்ராஜா மைலாஞ்சியில் விரியும் இஸ்லாமிய வாழ்வு என்ற கட்டுரையை எழுதியுள்ளார். மைலாஞ்சி கவிதைகள் இதுவரை அறியப்படாத உலகின் பல சாளரங்களைத் திறந்து வைத்து அழகும் புதிரும் மாந்திரீகமுமான பலநூறு விதானங்களைக் காட்சிப்படுத்துகின்றன. அது
கலாச்சாரத்தொன்ம அடையாளங்களுடனும் பண்பாட்டு கூறுகளுடனும் காத்திரமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற கவிதைத்தொகுப்பை ஒரு இனத்தின் அடையாள ஆவணமாகவும் பாதுகாக்க வேண்டிய அவசியமுள்ளது. இதை விடுத்து கவிதைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு பிறிதொரு பொருள் கற்பித்து சர்ச்சைக்குள்ளாக்குவதும் படைப்பாளியை குடும்பத்தை ஊர்விலக்கம் செய்து சந்தியில்
நிறுத்துவதும் பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடுகளாகும். கால வெள்ளத்தில் நனைந்து கசங்கிவிடாத கவிதைகள் மைலாஞ்சியில் உள்ளன.

மேலும் இக்கட்டுரையில் ஜாகிர்ராஜா, சமகால பிரச்சினைக்குரிய படைப்பாளியின் இருப்பின் தகர்வையும் கூறுகிறார். உயிர்மை இதழில் ரசூல் எழுதிய இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்னும் கட்டுரையோ ஒருபடி அதிகமாகப் போய் ஊர்விலக்கத்துடன் மதவிலக்கமும் பெற்றுத் தந்தது. ரசூல் உள்ளுரில் அடிப்படைவாதி களுடன் போராடி நீதிமன்றத்திற்கும் சென்றார் என்பதாக சுட்டிக்
காட்டுகிறார். இந்தப்போராட்டம் தொடர்கிறது.

– ( வெளியாகவிருக்கும் மைலாஞ்சியின் மறுபதிப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரையிலிருந்து…..)
நன்றி
புதுவிசை காலாண்டிதழ்
ஜூலை – செப்டம்பர் 2010

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்