சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

ஜோதிர்லதா கிரிஜா



ஆர். சூடாமணி எனும் இயற்பெயரில் தமிழிலும், தன் தந்தையாரின் பெயரைத் தன்னுடையதுடன் இணைத்துக்கொண்டு, சூடாமணி ராகவன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டிருந்த மாபெரும் எழுத்தாளர் மறைந்துவிட்டார். எண்பது அகவைகளைக் கடந்துவிட்ட நிலையிலும் – தள்ளாத உடல் நிலையிலும் -– விடாது அவ்வப்போது தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், அமரர்கள் குயிலி ராஜேஸ்வரி, மகரம் ஆகியோருடன் அவரது இல்லத்துக்குச் சென்றிருந்த முதல் தடவைக்குப் பின், 2001 இல் (என்று ஞாபகம்) இரண்டாம் தடவையாக அவரை நேரில் சந்தித்திருந்ததோடு சரி. எப்போதாகிலும் தொலைபேசிக்கொள்ளுவது வழக்கம்.

தமிழ் எழுத்தாளர்களில், மனத்தத்துவத்தின் அடிநாதத்துடன் எழுதிக்கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் சூடாமணி. இவருடைய உன்னதமான கதைகள் மொழிபெயர்க்கப்படும் போது இந்த அடிநாதம் உள்ளபடி ஒலிக்காமல் போவதுண்டு. அந்த அளவுக்கு மனத்தத்துவத்தின் அரிய நுட்பங்களுடன் எழுதிக்கொண்டிருந்த ஒரே தமிழ் எழுத்தாளர். இந்த விஷயத்தில், இவருக்கு ஒப்பாரும் இலர், இவரை மிக்காரும் இலர். எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களால் கொண்டாடப் பட்டவர் சூடாமணி என்பதே இதற்குச் சான்றாகும்.

இவர் சிறந்த நகைச்சுவையாளர் என்பது தொலைபேசி உரையாடல்களின் போது வெளிப்பட்டதுண்டு. ஒரு முறை டிசம்பர் மாதத்தில் அவரது தொலைபேசி இணைப்புக் கிடைக்கவில்லை என்பதையும், ‘இந்தத் தொலைபேசி உபயோகத்தில் இல்லை’ என்னும் தவறான பாட்டையே தொலைபேசி இலாகா திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்ததையும் பின்னர் அவரிடம் கூறிய போது, ‘இது டிசம்பர் கச்சேரி சீசனாச்சே! அதான் பல்லவி பாடி யிருக்கும்’ என்றார் சூடமணி.
சூடாமனியின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் என்பதாக அவருடனான முதல் சந்திப்பிலேயே தெரிய வந்தது. அவரைப் போலவேஅவருடைய தாயாரும் நன்றாக ஓவியம் வரைவார் என்று கேள்வி. கலைப் பொருள்களும் தயாரிப்பாராம்.

இலக்கியமும் அவரது குடும்பத்தின் அடிநாதமே. அவருடைய பாட்டி (ரங்கநாயகி அம்மாள் என்று நினைவு) எழுதி வைத்திருந்த புதினத்துக்கு மெருகேற்றி அதைச் சில ஆண்டுகளுக்கு முன் சூடாமணி பதிப்பித்தார்.

தமிழக அரசின் பரிசுகள், ஆனந்த விகடனின் வெள்ளிவிழாப் பரிசு போன்றவை உட்பட, ஏராளமான பரிசுகளைப் பெற்றவர். இவருடைய சகோதரி எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி என்பது பலருக்கும் தெரியும். முனைவர் விக்கிரமன் அவர்களின் இலக்கியப் பீடம் மூலம் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளுக்குச் சூடாமணி பரிசு அளித்துக்கொண்டிருந்தார்.

கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் இவருக்கு ஓர் இலட்சம் பரிசளிக்க முன்வந்தபோது, அந்தப் பரிசுக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்பதைக் கேட்டு உறுதிப் படுத்திக்கொண்டதன் பின்னரே அதை ஏற்றார்! அரசியல் கட்சிச் சார்புடையதெனில் அதை மறுதலிப்பதற்கு இருந்தவர்!

மிகச்சிறந்த எழுத்தாளரான சூடாமணி அவர்களைச் சாகித்திய அகாதெமி புறக்கணித்துள்ளது. இதன் வாயிலாக அந்த இலக்கிய அமைப்புத் தன்னைத்தானேதான் இழிவு படுத்திக்கொண்டுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இலக்கிய உலகில் சூடாமணிக்கு என்று உள்ள மிகச் சிறந்த தனியான இடத்தை எந்த அகாதெமியாலும் பறிக்க முடியாது என்பது மட்டும் உண்மை.
………

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா