கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

பாவண்ணன்


தன் மனத்தை வாட்டியெடுக்கும் நோய் தீர்ந்து உயிர்பிழைக்கவேண்டுமென்றால் உடனடியாக தன்னை ஆயர்பாடிக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று தன்னைச் சூழ்ந்திருப்பவர்களைப் பார்த்துக் கேட்கும் தலைவியொருத்தியின் குரலாக நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பத்துப் பாடல்களை எழுதியுள்ளார். கண்ணன் நடமாடும் பூங்காக்களிலிருந்து வீசும் காற்று என்மீது படவேண்டும். கண்ணன் குரல் கேட்கவேண்டும். கண்ணன் வாசிக்கும் குழலோசையால் என் மனம் நிறைவடையவேண்டும். கண்ணன் விரல்கள் என்மீது படர்ந்து வருடித் தரவேண்டும். அது போதும். எனது நோய் பறந்துபோய்விடும். நான் உயிர்த்தெழுந்துவிடுவேன். ஆகவே, அவன் கால்நடைகளோடு நடமாடுகிற யமுனைக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மனமுருகும்படி மன்றாடிக் கேட்கிறாள் அத்தலைவி. “நாணி இனியோர் கருமமில்லை நாலயலரும் அறிந்தொழிந்தார். பாணியாது என்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க உறுதிராகில் மாணி உருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமறியும் ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்” என்பது அவள் பாடிய பாடல்களில் ஒன்று.
அறுபதாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் தன் பதின்பருவ வயதில் பார்த்து, காதல்வயப்பட்டு மனம்பறிகொடுத்த இளைஞனைக் காணவேண்டுமென்று சொல்லி தன்னை அழைத்துச்செல்லும்படி மன்றாடும் லண்டன் தேசத்துப் பாட்டி கேட்டுக்கொள்ளும் காட்சியை மதராசபட்டணம் படத்தில் பார்த்தபோது இந்த ஆண்டாளின் பாடல்தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. அந்தப் பாட்டிக்குள் ஒளிந்திருக்கும் இளம்பெண்ணைப் பொருத்தவரையில் மதராசபட்டணம் என்பது ஒரு நகரத்தின் பெயர்மட்டுமல்ல. அன்பின் உறைவிடம். நிறைவேறாத காதலின் படிமம். அடிநெஞ்சில் பொங்கிப் பரவும் ஊற்று. லண்டன் நகரத்துப்பெண்ணின் ஆயர்பாடி. (பட்டணம் என்னும் தமிழ்ச்சொல்லை இயக்குநர் பட்டினம் என்று மாற்றிய காரணம் புரியவில்லை)
முதல் காட்சி ஒரு கல்லறையில் தொடங்குகிறது. கணவரைப் பறிகொடுத்த மூதாட்டியின் முகம் உறைந்திருக்கிறது. தேவாலயப் பூசைக்குப் பிறகு, சவப்பெட்டி அடக்கம் செய்யப்படுகிறது. சுற்றிலும் நல்ல மழை. மூதாட்டியின் மனத்திலும் பழைய நினைவுகள் முட்டிமோதி மழையெனப் பொழிகின்றன. சுயநினைவே இல்லாமல் மயங்கி விழுந்துவிடும் அளவுக்கு இளமை நினைவுகள் அவளை ஆக்கிரமித்துவிடுகின்றன. இறுதிக்காட்சியும் ஒரு கல்லறையில் நடைபெறுகிறது. அறுபதாண்டுக் காலமாகத் தன் மனத்தில் நிறைந்திருந்தவனைத் தேடிவந்த முயற்சி வெற்றியா தோல்வியா என்று பிரித்தறிந்து சொல்லமுடியாத தவிப்பான சூழல். இளம்வயதில் மனத்தைக் கொள்ளைகொண்டவன் உயிருடன் இல்லையென்றாலும் அவன் வாழ்ந்த இடத்தையும் அவன் நடமாடிய அறையையும் புல்வெளியையும் கண்டதால் மனபாரம் குறைந்துபோகிறது. இனம்பிரித்துச் சொல்லமுடியாத ஒருவிதமான நிறைவுணர்வும் தன் மனம் கவர்ந்தவன் தன்னையே வாழ்நாளெல்லாம் நினைத்து தன் கனவுகளையெல்லாம் நனவாக்கிப் பொருள்பொதிந்த வாழ்வை வாழ்ந்துவிட்டுச் சென்றதைக் கண்கூடாதக் கண்டதால் உருவான ஆனந்தத்தால் விம்மித் தளும்பும் பூரிப்பும் மூதாட்டியின் நெஞ்சில் நிரம்புகின்றன. அந்த ஆனந்தத்தாலோ அல்லது அவனுடன் இணைந்து வாழமுடியாமல் போனதையொட்டி உருவான தன்னிரக்கத்தாலோ மனம்தளும்ப அவன் கல்லறையைப் பார்த்தபடி இருக்கும்போதே அவள் உயிர் பிரிந்துவிடுகிறது. வாழ்வோ சாவோ எது நடந்தாலும் இந்த மண்ணில்தான் என்பது அந்த இளைஞன் அன்பின் உச்சத்தில் அவளைப் பார்த்து எப்போதோ சொன்ன ஒரு வாக்கியம். இந்த மண்ணில் வாழ்கிற பேற்றை வழங்காவிடினும் சாகிற பேற்றையாவது வழங்கும் காலம் காதல்சொல்லை உண்மையாக்கிவிடுகிறது.
கவர்னர் மாளிகைத் துணிகள் உட்பட அந்த வட்டாரத்துத் துணிகளையெல்லாம் துவைத்துத் தருகிற சலவைத்தொழிலாளிகளின் குடியிருப்பில் வசிப்பவனும் லண்டனிலிருந்து இந்தியாவைப் பார்க்கவரும் கவர்னர் மகளும் தற்செயலாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அந்தப் பார்வை படிப்படியாக வளர்ந்து காதலாக மலரும் கட்டங்கள் நம்பகத்தன்மையோடு உள்ளன. தொடக்கக்காட்சியில் பாதைச்சரிவில் நிறுத்தப்பட்ட அவள் வாகனம் ஆளில்லாமல் மெல்லமெல்ல நகர்ந்து, கழுதைகளின் மேய்ச்சல் பகுதியைநோக்கி ஓடுவது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சியானாலும் எதிர்காலத்தில் அவள் மனப்போக்கில் ஏற்படப் போகும் ஈர்ப்பைக் குறிப்பாக உணர்த்தக்கூடிய காட்சியாக உள்ளது. அவன் தைரியத்தை அவள் மெச்சுவது, கழுதைக்குட்டியைக் கட்டித்தழுவும் அவன் அன்பைப் பார்த்து அவள் புன்னகைப்பது, ஊரைச் சுற்றிக்காட்டும் அவன் அப்பாவித்தனத்தைக் கண்டு அவள் மனம் கரைவது, காவல்துறையினரோடு எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட மோதலில் அவனை உயிர்பிழைக்க வைப்பது எனப் படிப்படியாகவே அவள் ஈர்ப்பு வளர்கிறது. அவன் மனத்தில் ஏற்படும் மாற்றமும் அத்தகையதே. நன்றி என்கிற தமிழ்ச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல்லை அறிந்துகொண்டு, அதையும் போதைத்தடுமாற்றத்தில் மறந்து, தப்பும்தவறுமாக அவளிடம் நன்றி தெரிவிக்க நிற்கும் தருணத்தில் அவன் மனத்தில் காதலின் சுவடு இல்லை. “வாட் ஈஸ் யுவர் நேம் செல்வி” என்று தன் ஆங்கில அறிவை தன் தங்கையிடம் காட்டி அவனடையும் பெருமிதமே காதலாகச் சுடர்விடுகிறது. அத்தருணத்துக்குப் பொருத்தமாக அடுப்பில் தீ பட்டென்று மூண்டு சுடர்விட்டு எரியும் காட்சி அழகாக உள்ளது.
இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் காட்சி மாற்றங்களில் உள்ள கச்சிதம் குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய ஒன்று. கழிவுக்கடலாகக் காட்சியளிக்கும் இந்தக் காலத்துக் கூவம் நதியின் பாலத்தருகே நின்று நிலைகுத்தி நிற்கும் மூதாட்டியின் கண்கள் தன் சுற்றத்தினரிடமிருந்தும் காவல்துறையிடமிருந்தும் தப்பித்துச் செல்லும் முயற்சியிலும் மனத்துக்குப் பிடித்தவனோடு சேர்ந்து வாழும் ஆசையிலும் பரிதாபமாகத் தோல்வியுற்றதும் படகில் ஏற்றிவந்த காதலனை ஆற்றில் தள்ளிப் பிழைக்கவைத்துவிட்டுச் சென்ற பழைய காலத்துப் பாலத்தை நினைத்து உறைந்துபோகும் காட்சி மனத்தில் பதிந்த மென்மையான காட்சிகளில் ஒன்று. காதலும் ஏக்கமும் வேகமும் வன்முறையும் வலியும் நிறைந்த அக்காட்சிகளை அவள் துல்லியமாக நினைவுவைத்திருப்பதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை. அவளைப் பொருத்தவரையில் அந்தத் தருணம் அவள் கனவையும் வாழ்வையும் ஒருங்கே தொலைத்த இடமல்லவா?
ஒருபுறம் நள்ளிரவில் கிடைக்கப்போகும் சுதந்திரத்துக்கான விழாமனப்பான்மையும் வெற்றிக்கொண்டாட்டமும். இன்னொருபுறம் மனத்தால் இணைந்து தப்பித்துச் செல்ல விரும்பும் காதல் உள்ளங்களின் போராட்டம். மற்றொருபுறம் அவர்களைப் பிரித்து, தனக்குச் சொந்தமானவளை மயக்கி அழைத்துச் செல்ல நினைத்த இளைஞனைக் கொல்லத் துடிக்கும் காவல் அதிகாரியின் வெறித்தனமான தேடல் முற்றுகை என மூன்று வெவ்வேறு தளங்களிலும் ஒரே நேரத்தில் சம்பவங்கள் மாறிமாறி நடைபெறுகின்றன. சிறிதும் தொய்வில்லாமல் பின்னப்பட்டிருக்கிற இச்சம்பவங்கள் மெல்லமெல்ல உச்சத்தைநோக்கிச் செல்லும் பயணம் கலைத்தன்மையோடு உள்ளன.
ஒரேவிதமான காட்சி இருவிதமாகப் பொருள்படும்படி இரண்டு வெவ்வேறு தருணங்களில் கையாளப்பட்டிருக்கிற விதத்திலும் கலையழகு தென்படுகிறது. எடுத்துக்காட்டாக சில காட்சிகளைக் குறிப்பிடலாம். சலவைக்கார இளைஞன் தன் இனக்குழுவைச் சேர்ந்த இளைஞர்களோடு குஸ்திப் பயிற்சியில் ஈடுபடுவதும் தன் வலிமையாலும் கிடுக்கிப் பிடியாலும் மற்றவர்களை அந்த இளைஞன் வெல்வதுமான காட்சி ஓர் இடத்தில் இடம்பெறுகிறது. எதிர்பாராத விதமாக சலவைக்காரர்களை வெளியேற்றி அந்த இடத்தில் கோல்ப் மைதானத்தை அமைக்க விரும்பிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக கலகம் உருவாகிறது. அடக்கஅடக்க கலகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்தக் கலகத்தை தனிப்பட்ட யுத்தமாக மாற்றிவிடுகிறான் காவல் அதிகாரி. குஸ்தி யுத்தத்தில் தன்னை வென்றுவிட்டால் வெளியேறவேண்டிய அவசியமில்லை, மாறாக தானே வெற்றியடைந்துவிட்டால் அக்கணமே அனைவரும் வெளியேறவேண்டும் எனச் சூளுரைக்கிறான். இப்போது மீண்டும் அதே குஸ்திக்களம் காட்சிப்படுத்தப்படுகிறது. முதல் காட்சியில் அது வெறும் பயிற்சியாக இருப்பது இரண்டாம் காட்சியில் கடுமையான யுத்தமாக மாறிவிடுகிறது. இரண்டிலும் இளைஞனே வெற்றியடைகிறான்.
இன்னொரு காட்சி. லண்டன் பெண்ணுக்கு டிராமில் நகரத்தைச் சுற்றிக் காட்டிவிட்டு கீழே இறங்கிச் செல்லும் இளைஞனிடம் தன் நன்றியையும் விருப்பத்தையும் தெரிவிப்பதற்காக மணியின் கயிற்றை இழுத்து ஓசையெழுப்பி அவனைத் தன்னைநோக்கிக் கவனிக்கும்படி செய்கிறாள் அவள். அந்த ஓசையை அவன் மனம் அப்படியே உள்வாங்கிப் பதித்துக்கொள்கிறது. அவளை நினைவுபடுத்தும் படிமமாக அவன் மனத்தில் உறைந்துவிடுகிறது. பின்னொரு சந்தர்ப்பத்தில் சுதந்திரநாள் இரவில் மதராஸபட்டினத்திலிருந்து தில்லிக்கு தந்திரமாக அழைத்துச் செல்லும் குடும்பத்தின் பிடியிலிருந்து தப்பித்து மீண்டும் மதராஸபட்டினத்துக்கு வந்து, கண்காணிக்கும் காவல்துறையினரின் கண்களில் விழுந்துவிடாமல் தப்பித்து ஓடிவந்து டிராமுக்குள் ஏறிவிடுகிறாள் அவள். தன் காதலனைக் கண்டுபிடிக்கும் வழியறியாது தவிக்கும்போது தற்செயலாக கும்பலிடையே அவனைக் கண்டு உற்சாகத்தின் மிகுதியால் டிராம் மணியின் கயிற்றை இழுத்து ஓசையெழுப்புகிறாள். ஓசையைக் கேட்டதுமே அவளோ என ஐயத்தோடு அவன் திரும்புவதும் பின் அவளே எனத் தௌiந்து களித்துத் துள்ளுவதும் அழகான காட்சி.
மற்றொரு காட்சி. சுதந்திரப் போராட்ட வீரர்களையும் எதிரிகளையும் அடையாளமில்லாமல் அழித்தொழிக்க தன் மாளிகைக்குப் பின்னால் தந்திரத்தோடு கட்டியெழுப்பி வைத்திருக்கும் கோட்டைமைதானம் முக்கியமான இடம். உலகப்போரை விவரிக்கும் அயல்நாட்டுப் படங்களில் கைதிகளை இரக்கமே இல்லாமல் கொன்று குவிக்கும் காட்சிக்கு நிகரான காட்சி இது. செங்குத்தாக நிற்கிற பல கம்பங்களுக்கு நடுவே ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருக்கிறான் ஒருவன். அதிகாரியின் ஆணைக்குக் காத்திருக்கும் துப்பாக்கி வீரர்கள் ஒவ்வொரு கம்பத்தையும் சுட்டு வீழ்த்தி, அவன் கட்டுகளையும் தெறித்துவிழும்படி செய்து, உயிராசையோடு அவனை ஓடவைத்து, பின்னங்காலில் சுடுகிறார்கள். சுடப்பட்டு தடுமாறி விழும் செயற்கைக்குளத்தில் ஏற்கனவே இறந்து மிதக்கும் பிணங்களைக் கண்டு அதிர்ச்சியில் தடுமாறி, யோசிக்க நேரமில்லாமல் மதிலையொட்டித் தொங்கும் கயிற்றைப் பிடித்துத் தப்பிக்க முயற்சிசெய்யும்போது, மதில் உச்சியில் கைப்பிடிக்கத் தோதாக நீட்டிக்கொண்டிருக்கும் கம்பத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி அவனைப் பிணமாக்கி விழவைக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொருத்தவரையில் அவன் கதை முடிந்துபோனதே தெரியாமல் முடித்துவைக்கப்படுகிறது. புகைவண்டி நிலையத்தருகே வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதாகி, அங்கே அழைத்துவரப்படுகிற சுதந்திரப் போராட்ட இளைஞன் தந்திரமாக இப்படி கொல்லப்படுவதுதான் முதலில் காட்டப்படுகிறது. தனக்கு மனைவியாகப் போகிறவளின் மனத்தில் இடம் பிடித்து, அவள் தன்னை வெறுக்கும்படி வைத்துவிட்டதை தாங்கமுடியாமல் வெறிகொண்டு கூவும் அதிகாரி, அந்த இளைஞனை அதே கொலைமைதானத்தில் கொல்ல முயற்சி செய்வது மற்றொரு இடத்தில் சித்தரிக்கப்படுகிறது. அதே கம்பங்கள். அதே குண்டுமழை. அதே ஓட்டம். அதே குளம். அதே விதமான தப்பிக்கும் முயற்சி. கடைசித் தருணத்தில் பிணம் விழப்போகிறது என்று அதிகாரிக்கூட்டம் காத்திருக்கும்போது, அவன் நண்பர்கள் அவனைக் காப்பாற்றிவிடுகிறார்கள். மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பத்தை அவன் கை பற்றும் முன்பாக , தன் கைகளைப் பற்றும்படி நீட்டி உயிர்பிழைக்கவைக்கிறார்கள்.
திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பவை அறுபதாண்டுக்கு முந்தைய நகரத்தை அப்படியே கண்முன்னால் கொண்டுவந்திருக்கும் காட்சியமைப்புகள். இறந்த காலத்தின் பதிவு அவ்வளவு துல்லியமாக இருக்கிறது. கலைஇயக்குநர் செல்வகுமாரின் உழைப்பும் இயக்குநர் விஜயின் கனவும் பாராட்டுக்குரியவை. காட்சிக்கு உயிர்த்தன்மையோடு உணரவைக்கும் பிரகாஷின் இசையின் பங்களிப்பும் முக்கியமானது. சின்னச்சின்ன பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பவர்கள்கூட மனத்தில் இடம்பெறுகிறார்கள். வாய்பேச முடியாமல் காவல் அதிகாரிகளிடம் உதைபடும் நண்பன், “எங்க தொறய திருப்பித்தருவிங்களா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்கும் சிறுமி, குடிகார ஓவியர், “அம்மா சொல்லிட்டாங்கண்ணே..” என்று அம்மாவின் தாலியின் முன்னால் கைகூப்பி வணங்கிவிட்டுச் சொல்லும் சிறுமி, விமானத்தின் சத்தத்தைக் கேட்டதும் குண்டு விழப்போகிறது என்று புரளியைக் கிளப்பும் ஆள், ஆங்கிலம் சொல்லித்தரும் ஆசிரியர் எனப் பலரும் மறக்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். கண்களை உருட்டியும் வசனங்களை தனக்கேற்றபடி வளைத்து நீட்டிப் பேசியும் உடல் அசைவுகளைப் புலப்படுத்தியும் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடிக்கும் ஹனீ·பாவை இனிமேல் பார்க்கமுடியாது என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எல்லாக் காட்சிகளிலும் அவர் முகத்தில் படர்ந்திருக்கும் இளநகையும் தந்திரமும் சுறுசுறுப்பும் இறுதிக் காட்சியில் தலைகீழாகிவிடுகிறது. கதாநாயகனின் நண்பர்களோடு அமர்ந்துவரும் அக்காட்சியில் அவர் முகத்தில் மௌனம் உறைந்திருக்கிறது. கொலைகார மைதானத்தில் உள்ள மின்சாரத்தூணைப்பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தியதால் உருவான மனபாரத்தின் விளைவாக எழுந்த அச்ச மௌனம் அது. கிட்டத்தட்ட மரணபயம் என்றே சொல்லவேண்டும். மரணபயத்தை இவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துபவர்கள் மிகக்குறைவு.
எல்லாவிதமான கலையழகோடும் இப்படத்தை அமைத்திருக்கும் விஜய் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டுக்குரியவர். லகான், டைட்டானிக் போன்ற பல படங்களை நினைவுபடுத்துகிற காட்சிகள் மதராசபட்டணத்தில் உள்ளன என்றாலும் குறையாக எண்ணத் தோன்றாதபடி மையக்கதைக்குப் பொருத்தமாகவே அவை அமைக்கப்பட்ருக்கின்றன.
*
paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்