டீலா, நோ டீலா!

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

பா.பூபதி


”எங்களுக்கு ஓட்டு போடு, உங்களுக்கு டிவி கொடுக்கிறோம்”. ”எங்களுக்கு ஓட்டு போடு, வாசிங் மெஷின் கொடுக்கிறோம்”… டீலா, நோ டீலா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ஆட்டத்தில் நீங்கள் பங்கு கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இனி அரசியல் பாதை இந்த முறையில் தான் செல்லும்.

உணரவேண்டிய உண்மைகள்:

ஒருவரை வளர்ச்சியடையாமல் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, வெளிப்படையாக ஒருவருடைய வளர்ச்சியை தடுப்பது. இரண்டாவது, ஒருவர் தான் வளர்ச்சியடையாமல் தடுக்கப்படுக்கிறோம் என்பதை உணராத வகையில் மறைமுகமாக அவருடைய வளர்ச்சியை தடுப்பது. இதில் இரண்டாவது முறையானது வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த விசயத்தை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. இந்த விசயத்தை அனைவரும் உணரும் வரை, இந்த முறையை கையாள்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருப்பப்போவதில்லை. மற்றவர்களின் உதவியை நாம் பெருவதற்கு முன்பாக அந்த உதவியின் உண்மைத் தன்மையை நாம் உணரவேண்டியது அவசியம்.

உண்மையான உதவி:

மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றி விவேகாணந்தர் கூறுகையில், ”ஒருவருடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவது சிறந்த உதவியாகாது” என்கிறார். உதாரணமாக, ஒருவருக்கு பசி ஏற்படும்போது நாம் அவருக்கு உணவு கொடுத்து உதவி செய்கிறோம் ஆனால் இது நிலையான உதவியாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் மீண்டும் அவருக்கு பசி எடுக்கும், அப்போது மீண்டும் அவருக்கு யாராவது உதவி செய்ய வேண்டும். எனவே இதை நிரந்தரமாக உதவியாக கருத இயலாது. உதவி என்பது நிரந்தரமான உதவியாக இருத்தல் வேண்டும். அறிவு பூர்வமான உதவியாக இருத்தல் வேண்டும் என விவேகாணந்தர் வழியுருத்துகிறார். அதாவது தேவை உள்ளவர்களுக்கு மீன் பிடித்துக்கொடுப்பதைவீட எப்படி மீன் பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதுதான் நிரந்தரமான உதவியாக இருக்கும். அப்படி நாம் கற்றுக்கொடுத்து விட்டால் அவர்களுக்கு மீண்டும் அந்த விசயத்தில் யாருடைய உதவியும் (நம்முடைய உதவிகூட) தேவையிருக்காது அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்

உதவி செய்வதில் பெருபவரை பற்றி யோசிப்பதற்கு முன்பாக உதவி செய்பவர்களின் நிலையை பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். கொடுப்பவர் நிலையில் உள்ள நபர்களுக்கு எப்போதுமே ஒரு உயர்வான எண்ணம் இருக்கும். என்னதான் தானம் தர்மம் என்று அவர்கள் வசனம் பேசினாலும். அவர்கள் மனதில் நாம் கொடுப்பவர் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். நம்மைச் சார்ந்து இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிச்சயம் அவர்கள் மனதில் இருக்கும். ஒரு வேலை அவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லாவிட்டாலும், உதவியை பெற்றுக் கொள்பவர்கள் அவர்களை புகழ்வதன் மூலமாக அப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்கிவிடுவார்கள். இந்த மன நிலையில் உள்ள நபர்களுக்கு, திடிரென்று தன்னுடைய உதவி யாருக்கும் தேவையில்லை, தன்னைச் சார்ந்து யாருமில்லை என்ற நிலை ஏற்பட்டால், அந்நிலையை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. சாதாரணமான மனிதர்களுக்கே இப்படி ஒரு மன நிலை ஏற்படும்போது, மக்களை சார்ந்து வாழும் அரசியல்வாதிகளுக்கு இந்த நிலமை எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும்!.

உதவிகளாக மாறிய கடமைகள்:

ஒருவகையில் இப்படி வருத்தப்படுபவர்களை நாம் குறை சொல்ல வாய்ப்பில்லை ஏனெனில் இவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை மற்றவர்களுக்கு தானமாக தருகிறார்கள். அதனால் அவர்களுக்கு நம்மை சார்ந்து பல பேர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறில்லை. ஆனால் சில நபர்கள் சட்டப்படி மக்களுக்கு கொடுக்க வேண்டியதை தானம் செய்வது போல் கொடுப்பதும், அதை வாங்கிக் கொள்ளும் மக்கள் கொடுத்தவருக்கு விழா எடுப்பதும் தமிழகத்தில் நடக்கும் போது இதில் உள்ள உண்மைகள் ஏன் யாருக்கும் உரைப்பதில்லை எனத் தெரியவில்லை.

அரசியல்வாதிகள் பொதுவாகவே மக்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். அதற்காக அவர்கள் சில சலுகைகளை அறிவித்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. இந்த கட்டாயத்தில் இருந்து விடுபட சட்டப்படி அவர்கள் கடமையாற்ற வேண்டிய விசயங்களையே, அவர்கள் மக்களுக்குச் செய்யும் உதவியாக மாற்றிவிட்டார்கள். இதனால் இந்த அரசாங்கம் தன் கடமையை செய்கிறது என்ற சிந்தனை போய், இந்த நபர் மக்களுக்காக இன்னின்ன உதவிகளைச் செய்தார் என்ற சிந்தனை மேலோங்கி விட்டது. இப்படி இவர்கள் அவ்வப்போது அறிவிக்கும் சலுகைகள், மக்கள் கூட்டம் அவர்களை விட்டு விலகிச் செல்லாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது. கடமையாற்றுவார்கள் என காத்திருந்து ஏமாந்து போன மக்களுக்கு இவர்கள் செய்யும் கடமைகள்கூட தனிப்பட்ட நபர்கள் செய்யும் உதவிகளாக தோண்ற ஆரம்பித்து விட்டன. காலப்போக்கில் கேட்டுப் பெற வேண்டிய உரிமைகளை, கெஞ்சிப் பெரும் உதவியாக மாறிவிட்டது. செய்ய வேண்டிய கடமைகளை செய்தற்காக விழா எடுக்கும் செயல்கள் தற்போது தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உயர்வதற்கு உதவாத உதவி:

அரசியல்வாதிகள் மக்களுக்காக சலுகைகளை வழங்கும்போது கூர்ந்து கவணித்தால் அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் வெளிப்படும். இவர்கள் செய்யும் உதவியின் மூலமாக யாரும் முன்னேறிவிட முடியாதபடி கவணமாக பார்த்துக்கொள்வார்கள். எந்த மாதிரி உதவிகள் செய்தால் மக்கள் மீண்டும் மீண்டும் நம்மிடமே வருவார்கள் என்பதை கவணித்தே செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் முன்னேறி விட்டால் இவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் முன்னேறவும் விடாமல் அதே சமயத்தில் அவர்களின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் வித்தை அரங்கேறி வருகிறது. அதாவது தேவைக்கு ஏற்ப மீன் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் மீன் பிடிப்பது எப்படி என்பதை யாருக்கும் கற்றுக்கொடுக்க வில்லை. அப்படி யாராவது கற்றுக் கொண்டுவிட்டால் இவர்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும் அல்லவா.

”எந்த உழைப்பும் தேவையில்லை எது வேண்டுமானாலும் உழைப்பில்லாமல் கிடைக்கிறது”. கேற்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறதே தவிர, இது மிகவும் ஆபாத்தான வாழ்க்கை முறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதை நாம் உணர்ந்ததாக தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை விசயங்கள் அனைத்தும் இலவசமாக கொடுக்கிறார்கள். இலவசம் என்றாலே மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நாம் உணர வேண்டும். இப்படி அனைத்து விசயங்களும் இலவசமாக பெற்று பழகிய நமக்கு காலப்போக்கில் இந்த இலவசப் பொருட்களை உழைத்துச் சம்பாதிக்க திரானி இல்லாமல் போய் முழுக்க முழுக்க அவர்களையே நம்பிக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டால் இந்த திட்டங்களை செயல்படுத்துபவர்களுக்கு முழு வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை.

தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு மக்கள் முறையிடத்தான் வேண்டும். ஆனால் அவை இப்படி இலவசங்களாக இருக்க கூடாது. ஆக்க பூர்வமாக தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள அல்லது இருக்கிற திறமையை பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக அவர்களுடைய கோரிக்கை அமைய வேண்டும். வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்ற ரீதியில் இப்போது யாரும் பேசுவதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் அதற்கு உனக்கு என்ன இலவசமாக வேண்டும். என்று டீலா நோ டிலா என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது தற்போதைய நிலமை. தேர்தல் வரும் போது ஒவ்வருடைய தேர்தல் அறிக்கையை படித்தால் யார் எவ்வளவு இலவசங்களை தருகிறார்கள் என்ற ரீதியில் தான் இருக்கிறதே ஒழிய பொருளாதார நிலமை இப்படி இருக்கிறது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவ்வளவு சதவீதம் பொருளாதார வளர்ச்சியை உண்டாக்குவோம் என்ற ரீதியில் யாருடைய அறிக்கையும் இல்லை.

நம் கடமை:

உழைக்காமல் பெரும் பொருளால் நம்முடைய தன்மானம் பாதிக்கப்படும் என்பதை நாம் உணர வேண்டும். யாரிடமும் நாம் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் மரியாதையை இழந்து யாரைப்பற்றியும் நாம் துதிபாட தேவையில்லை. கொடுப்பதை பெருவோம் என்ற கொள்கை ரீதியில் சென்றால் கடைசி வரைக்கும் கிடைத்ததை உண்டு வாழும் நாய் பிழைப்பு பிழைக்க வேண்டிய சூழ்நிலை வெகு விரைவில் உருவாகிவிடும்.

உண்மையாகவே நம்முடைய வாழ்வை வளர்ச்சியடைய செய்யும் சழுகைகளைத்தான் நாம் எதிர்பார்க்க வேண்டுமே தவிர நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் சழுகைகளை நாம் எதிர்பார்க்கவோ, எதிர் கொள்ளவோ கூடாது. பொருளாதார ரீதியாக யார் நம்மை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை கவணித்து அவர்களை ஆதரிக்க வேண்டும். அப்படி யாரும் இல்லை என்றால், அப்படிப்பட்டவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி