முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


இந்த ஆண்டு, பேராசிரியர் ஜெகதீசன் பிறந்து நூறாண்டுகள் ஆகிறது. யார் யாருக்கோ நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். ஜெகதீசனைக் கொண்டாடுவார் யாருமில்லை. அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் யாருமில்லை என்பதால், விழாக் கொண்டாட்டங்கள் இல்லை என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. சென்ற ஞாயிறன்று, மழவந்தாங்கலில், மிகச் சிறியதாக அவரது ஓவியத் திறப்போடு அவரது நூற்றாண்டு விழா எளிமையாக தொடங்கியது.

மழவந்தாங்கல், அடுக்கம் என்ற ஊர்களின் பெயர்களைச் சொன்னவுடன், ஒரு சிலருக்கு ஜெகதீசனை சட்டென்று ஞாபகம் வந்திருக்கலாம். விழுப்புரத்துக்கு அருகே 32 கிலோமீட்டர் தூரத்தில் மழவந்தாங்கல் இருக்கிறது. அங்கேதான் கஸ்தூர்பா குஷ்ட நிவாரண நிலையம் இருக்கிறது. இந்தியாவெங்கும் இருக்கும் 33 கஸ்தூர்பா மையங்களில் இதுவும் ஒன்று.

மிக அமைதியான இடம். ஒருபக்கம் மலைகள். மற்றொரு பக்கம் மரங்கள் சூழந்த பசுமையான கிராமம். அதுதான் மழவந்தாங்கலின் முகவரி. அங்கேதான் தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை மையம் இருக்கிறது. இம்மையத்திலேயே 40 தொழுநோய் பெற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சனிக்கிழமைகளில், சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து, அவுட் பேஷண்டுகளாக ஏராளமான நோயாளிகள் இங்கே வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.

இம்மையத்தையும், இந்த இடத்தையும், இவ்வளவு வசதிகளையும் தன்னலமே இல்லாமல் உருவாக்கியவர்தான் பேரா. ஜெகதீசன்.

அவரது சுயசரிதையான Fulfilment Through Leprosy என்ற நூலைப் படிக்க படிக்க, வாழ்க்கையின் மேல் இன்னும் பிடிப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சிதம்பரத்தில் எளிய அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஜெகதீசன், பின்னர் படித்துப் பட்டம் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 11 ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்கள். பேராசிரியர் அன்பழகன், மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் இவரது மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் அவருக்குத் தொழுநோய் பாதித்து இருக்கிறது.

பதினோரு ஆண்டுகள் ஆசிரியப் பணிக்குப் பின், அதை விட்டு விலகி, தன் தொழுநோயைக் குணப்படுத்திக்கொள்ளும் முனைப்போடு பல்வேறு சிகிச்சைகளுக்கு சென்றிருக்கிறார் ஜெகதீசன். இன்றைக்கு இருப்பது போல், தொழுநோயுக்கான மருந்துகளோ, வசதிகளோ 40களிலும் 50களிலும் இல்லை. மேலும் தொழுநோயைப் பற்றிய தப்பான சிந்தனைகளே அப்போது அதிகம் இருந்த காலகட்டம். அதைப் ‘பெருவியாதி’ என்றே அப்போது குறிப்பிட்டிருக்கிறார்கள். பல இடங்களில், வாசல்களில், ‘பெருவியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது’ என்றே பலகை எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கும்.

தன் நோயைக் குணப்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல், இந்த நோய் உள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல வெளிநாட்டு அமைப்புகளோடும் மருத்துவர்களோடும் ஜெகதீசன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். மேலும் தக்கர் பாபாவோடு ஜெகதீசனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரியாரோடு அவ்வளவு நெருக்கம்.

1945, பிப்ரவரி 8ஆம் நாள், ஜெகதீசன், வார்தா போய் மகாத்மா காந்தியைச் சந்திக்கிறார். ஜெகதீசன், தமிழகத்தில் தொழுநோய் நிவாரண மையம் ஒன்றைத் தொடங்கவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதை அறிந்து காந்திக்கு மிக்க மகிழ்ச்சி. அதற்குத் தன் முழு ஆதரவையும் தந்து வழிகாட்டியும் அனுப்புகிறார். மீண்டும் சென்னை வந்த ஜெகதீசன், எங்கே இம்மையத்தைத் தொடங்குவது என்பதைப் பற்றி ஆலோசிக்கும்போது, அப்போது, தமிழகத்தில் தொழுநோய் அதிகம் பரவியிருந்த இடமாக பழைய தென்னாற்காடு மாவட்டம் இருந்திருத்திருக்கிறது. தன் பணியைத் தொடங்க இதுவே சரியான மாவட்டம் என்பதை முடிவு செய்துகொண்டவர், மழவந்தாங்கலைத் தேர்வு செய்து, அங்கே இருந்த ஒரு பழைய அரசு பங்களாவைப் புதுப்பித்து, மருத்துவமனையாக மாற்ற ஆரம்பித்தார். அதனோடு சேர்த்து, அப்போது முதல்வராக இருந்த டி.பிரகாசத்தின் உதவியோடு, மழவந்தாங்கலை ஒட்டி 51 ஏக்��!
�ர்
நிலத்தை, இந்தத் தொழுநோய் சிகிச்சை மைத்தை விரிவுபடுத்த லீசாகப் பெற்றுக்கொண்டு இருக்கிறார்.

இதெல்லாம் நடக்கும்போதே, காந்தியின் அன்புக் கட்டளைக்கு இணங்க, ஜெகதீசன், ஹரிஜன் இதழில், தொழுநோய் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார்கள். கட்டட வேலைகள் முடிந்து, 1948, ஆகஸ்ட் 17ஆம் தேதி, இந்த நிவாரண நிலையம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதைத் திறந்துவைக்க, ஜெகதீசன், மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதுயிருக்கிறார். காந்தி போட்ட பதில்தான் இதில் இன்னும் சுவாரசியமானது:

‘Get someone to open it; opening a hospital is not a big matter, but I shall come to close it’ என்று பதில் எழுதியிருக்கிறார் காந்தி. தொழுநோயே இல்லாமல், மருத்துவமனைக்குத் தேவையே இல்லாமல் போகவேண்டும் என்பதுதான் மகாத்மாவின் ஒரே நோக்கம்.

மழவந்தாங்கல் – அடுக்கத்தில் தொடங்கப்பட்ட இம்மையம், அங்கேயே இல்லை. ஒற்றை மாட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு, சுற்றி இருந்த 133 கிராமங்களுக்கும் போய், தொழுநோய் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள் இங்கிருக்கும் மருத்துவர்கள்.

வாழ்நாள் முழுவதும் தொழுநோய், அதன் சிகிச்சை முறைகள், மேம்பாடுகள், சுகாதாரமான வாழ்வு என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார் ஜெகதீசன். அவரோடு அவரது மனைவியும் இந்தத் தொண்டில் முழு மனத்தோடு பங்கெடுத்துப் பணியாற்றி இருக்கிறார்.

1991ல் பேரா. ஜெகதீசன் மறைந்தார். அவரது உடல் இதே மழவந்தாங்கலில் புதைக்கப்பட்டு, அதன் மேல் நினைவு வளாகம் எழுப்பப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் அவரோடு பழகியவர்கள் மழவந்தாங்கலில் இருக்கிறார்கள். ஆஜானுபாகுவான தோற்றம், உயரம், அத்தோடு அனைவர் தோளிலும் கைபோட்டுக்கொண்டு மிகவும் சகஜமாகப் பழகும் சுபாவம் என்று கதை கதையாக சொல்லுகிறார்கள் மழவந்தாங்கல்வாசிகள்.

யார் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, இங்கே இருக்கும் தொழுநோயாளிகளும் கிராமவாசிகளும் ஜெகதீசனை மறக்கவே இல்லை. அவருடைய தளராத சேவைதான் இவர்களை எல்லாம் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

சேவை வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு மரணம் ஏது?

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்