நல்லாசிரியர்

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

பா பூபதி


ஆசிரியர் அடித்ததனால் மாணவர் பலி, மாணவனை அடித்து துன்புறுத்தினார், படிக்காததனால் மாணவனை அவமானப்படுத்தினார், ஆசிரியருக்கு பயந்து மாணவர் தற்கொலை முயற்சி… இது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் ஆசிரியர் மீது அவ்வப்போது வழக்குகள் போடப்படுகிறது. இது போன்ற வழக்குகளில் ஆசிரியரை மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல, தவறுகள் நடக்காதவகையில் சரியான அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுக்காதவர்களும் குற்றவாளிகள்தான்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் உணர்வு பூர்வமாக குற்றம் சாட்டும்போது, மக்களின் ஒட்டுமொத்த கவணமும் ஆசிரியர் தவறு செய்துவிட்டார் என்ற சிந்தனையில்தான் செல்லும். ஆனால் இந்த பிரச்சனையை உணர்வு பூர்வமாக சிந்திக்காமல் சற்று நிதானமாக யோசித்தோமானால் ஒரு விசயம் நமக்கு தெரியவரும். இந்த பிரச்சனை நேற்றோ இன்றோ தோன்றியது அல்ல, இன்றோ நாளையோ தீர்ந்துவிடும் பிரச்சனையும் அல்ல. பல காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் விசயம் இது. ஒரு பிரச்சனை தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால், பிரச்சனைக்கு காரணமானவரைவீட அதை தடுக்க வேண்டியவரின் மீதுதான் அதிகம் தவறு இருக்கிறது. ஏனெனில் ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த பிரச்சனை ஏற்பட்ட போதே அதற்கு சரியான தீர்வை கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததன் விளைவே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது போன்ற குற்றங்களை தடுக்க அரசு அவ்வப்போது சட்டரீதியான தீர்வுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சட்டத்தின் மூலமாக சில பிரச்சனைகளில் நேரடியான விளைவுகளை ஏற்படுத்த இயலாது. திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது என்ற பழைய பாடலில் உள்ள பொருள் உண்மையானது. சட்டத்தின் மூலமாக பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லலாம் அல்லது தண்டிக்கலாம், பிரச்சனையே ஏற்படாதவண்ணம் செய்ய இயலாது. அப்படி செய்ய வேண்டுமானால் சம்மந்தப்பட்டவர்களின் மனதில்தான் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அப்படிப்பட்ட மாற்றத்தை எதிர்பார்த்துதான் சிறைச்சாலைகளில் ஒழுக்கக் கல்வியை போதித்து வருகிறார்கள். எனவே ஆசிரியரை தண்டிப்பதனால் பிரச்சனை தீர்ந்துவிடாது. இதுபோன்ற பிரச்சனை இனி ஏற்படாதிருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்பினால், இந்த பிரச்சனையில் தன்னுடைய அனுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள்மீதான சிந்தனை:

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களின் வளர்ச்சி பற்றிய சிந்தனை சமுதாயத்தில் மேலோங்கி இருகிறது. பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும், நான் இவ்வளவு மதிப்பெண்களை பெற்றுள்ளேன் அடுத்து நான் என்ன செய்யட்டும் என்று அப்பாவித்தனமாக கேள்வி கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் இப்போது ஆசாத்தியமான வளர்ச்சியை அடைந்துள்ளார்கள். தாங்கள் என்ன படிக்க வேண்டும், அந்த படிப்பை எங்கு படிக்க வேண்டும், அதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன, படித்து முடித்ததும் எந்து துறையில், எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்கிற அளவிற்கு முன்னேறிவிட்டார்கள். பெற்றோர்களின் உதவிகூட இப்போது அவர்களுக்கு தேவையில்லை. மாணவர்களின் இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு காரணம், மாணவர்களுக்கு வழிகாட்ட ஏராளமான அமைப்புகள் இப்போது தோண்றிவிட்டன இதன் மூலமாக அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கிறார்கள், தவிர இணையத்தளம் போன்ற தொழில் நுட்ப சாதனங்களையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பதால் தகவல்களை பெற்றுக்கொண்டு முன்னேறுவதில் அவர்களுக்கு எந்த தடையுமில்லை. இப்படி மாணவர்களின் வளர்ச்சி பற்றிய சிந்தனையே மேலோங்கியிருந்ததாலோ என்னவோ ஆசிரியரின் நிலை பற்றி யாரும் யோசிப்பதில்லை, ஊதியம் உயர்வு மட்டும்தான் ஆசிரியரின் தேவை என்று கருதிவிட்டார்கள்போல் உள்ளது. ஆசிரியருக்கு தரவேண்டிய மரியாதை, மாணவன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் என சில விசயங்களை நிர்ணயித்துவிட்டாலே பிரச்சனை எதுவும் ஏற்படாது என்று எண்ணிவிட்டார்கள்.

வரையருக்கப்பட்ட பண்புகள்:

கல்வி கற்றுத்தருபவரை நாம் குரு, உபாத்யார், ஆசிரியர் என வேறுபாடில்லாமல் அழைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த மூன்று வார்த்தைகளும் வேறு வேறு அர்த்தம் உள்ளது. மநுதர்மத்தில் இந்த மூன்று வார்த்தைகளுக்கும் கீழ்கண்டவாறு அர்த்தம் உள்ளது:

கல்வி அறிவிப்பவன், வேத மந்திரம் கற்பிப்பவன் “ஆச்சார்யன்”
பொருள் பெற்றுக் கொண்டு கல்வி கற்பிப்போன் “உபாத்யாயன்”
பிறவியையும் வாழும் வழியையும் பயிற்றுவோன் “குரு”

மநுதர்மத்தின்படி பார்த்தால் தற்போது நமக்கு கல்வி கற்றுத்தருபவர்களை உபாத்யார் என அழைக்கலாம். மேலும் மநுதமத்தில் கல்வி கற்றுத்தருபவர்களுக்கும், கற்றுக்கொள்பவர்களுக்கும் இருக்க வேண்டிய பண்புகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்:
கல்வி கற்பிக்கும் ஆசிரியரைக் கானும் பொழுதெல்லாம் வணங்க வேண்டும்.
தனக்கு எத்துன்பம் வரினும் ஆசிரியரை அவமதிக்கக் கூடாது.

ஆசிரியர்கள்:
நல்லாசிரியர் நல்லொழுக்கம் பயிற்றும் பொழுது பிரம்பால் அடிக்கக் கூடாது. அன்னையின் பரிவுடன், மனத்தினாலும் மொழியாலும் பொய் புகலாது, வன்சொல் கூறாது, விருப்பு வெறுப்பு கொள்ளாமல், தூயனாய் ஒழுக வேண்டும். அதுவே வேதம் ஓதும் ஆசிரியருக்கு மேன்மையைத் தரும். – மநுதர்மம்

மநுதர்ம காலத்திலேயே கற்றுக்கொடுக்கும் போது பிரம்பால் அடிக்க கூடாது, அன்னையின் பரிவுடன் சொல்லித்தர வேண்டும் என்று வழியுருத்தி இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஆசிரியர்களுக்காக வரையருத்துள்ள இந்த தகுதிதான் இன்றுவரை அவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. அடிக்க கூடாது, அன்னையின் பரிவுடன் நடக்க வேண்டும் என்பது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கும். நடைமுறையில் இது சாத்தியமில்லை, சாத்தியப்படுவதற்கான அடித்தளத்தை நாமும், நம்முடைய அரசாங்கம் ஏற்படுத்தவில்லை. நம்முடைய சிந்தனையெல்லாம் மாணவனை எப்படி உயர்த்துவது என்பதோடு நின்றுவிடுகிறது.

கோபத்தை தூண்டும் மாணவ சக்தி:

அண்ணையின் பரிவுடன் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டும், மாணவர்களை அடிக்கக்கூடாது என மநுதர்மத்தில் சொல்லப்படிருக்கிறது என்பதற்காக அண்ணையர்கள் குழந்தைகளை அடிப்பதில்லை என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கண்ணே மணியே என்று தங்களை கொஞ்சும் அண்ணையர்களிடம் அடிபட்டு, மிதிபட்டு பல குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப்போய் இருக்கிறார்கள், தாய் தந்தையின் அடிக்கு பயந்து பல குழந்தைகள் மன உளச்சளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் அடிப்பதில் பேற்றோர், ஆசிரியர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இருவருமே அடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் ஆசிரியர் அடித்துவிட்டால் என் குழந்தையை நீ எப்படி அடிக்கலாம் என்ற உணர்ச்சிபூர்வமான கோபம் தான் பெற்றோர்களுக்கு எழுமே தவிர, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் குழந்தையை அடிக்க மாட்டோம் என்று சொல்ல இயலாது. பெற்றோர்களுக்கும் குழந்தையை அடிக்காமல் வளர்த்துவதெப்படி என்று தெரியாது என்பதுதான் உண்மை. குழந்தைகளை அடித்த பிறகு சிறிது நேரம் கழித்து, ஏன் இப்படி செய்கிறாய், உன் நல்லதுக்குதானே நாங்க சொல்கிறோம் என்று சமாதானம் பேசி அந்த சிறுவனுக்கு பிடித்தமான எதாவது ஒன்றை வாங்கிக்கொடுத்து பிரச்சனையை அப்போதைக்கு முடிவிற்கு கொண்டுவருகிறார்களே தவிர குழந்தைகளை தொடர்ந்து அடிக்காமலிருப்பதில்லை.

பெற்றோர், ஆசிரியர் என யாராக இருந்தாலும் சரி அவர்களை மிக எளிதாக தங்களுடைய விளையாட்டுத்தனத்தால் கோபப்படுத்திவிடும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. எந்த ஒரு கவலையுமில்லாமல், எந்த ஒரு திட்டமிடலுமில்லாமல் விளையாட்டுத்தனமாக இருக்கும் குழந்தைகளிடம் சக்தி அதிகமாக இருக்கும். பல கவலைகளை கொண்டிருக்கும் பெரியவர்கள் மிகவும் களைத்துப்போய் சக்தியற்று இருப்பார்கள் இதனால் எளிதாக மன உளைச்சலுக்கும், கோபத்திற்கும் ஆளாகிவிடுகிறார்கள். குழந்தைகளின் வேகத்திற்கு பெரியவர்களால் ஈடுகொடுக்க முடியாது. பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அவர்களுடைய ஆற்றலுக்கு அப்படிப்பட்ட தன்மை உண்டு. மற்றவர்களை கோபப்படுத்த முயற்சிப்பவர்களை பற்றி அறிஞர் அண்ணா அழகான ஒரு கதையின் மூலம் நமக்கு விளகியிருக்கிறார்.

ஒரு குருவி அவ்வழியே சென்று கொண்டிருந்த மன்னனுக்கு கேட்குமாறு கீழ்கண்டவாறு கூவிற்றாம்

“எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்” என்று

மன்னன் புன்னகையுடன் இக்காட்சியை கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி – கீச்சுக் கீச் சென்று விடாமல் கத்திற்றாம்.

“எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்” என்று

வேடிக்கையாக மன்னன் ‘எனக்குத்தான் கொடேன்’ என்று கேட்டானாம். குருவி உடனே
ஐயயே, ஒரு ராஜாவுக்கு காசு வேனுமாம், என் காசு வேனுமாம்” என்று கூவிற்றாம். சேச்சே! மெத்தக் குரும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக் கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான். குருவி விடவில்லை.

“எனக்கு பயந்து
எடுத்தான் ஓட்டம்
இதோ ஒரு ராஜா!” என்று பாடிற்றாம்.

போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் – குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான் இல்லை!

“குருவியை கொல்ல
வருகிற ராஜா
பறந்து வா, பார்ப்போம்!”
என்று சவால் விட்டதாம்.

மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான் குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை.

“எனக்கு பயந்து
ஓடிப் போனான்
ஏமாந்த ராஜா!”
என்று கூவிற்றாம்.

இந்த கதையில் வரும் குருவியைவீட நூறு மடங்கு அதிக குறுபுத்தனம் கொண்டவர்கள் குழந்தைகள். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது போல குழந்தைகளின் ஆற்றலை அடக்கவோ அமைதிப்படுத்வோ யாராலும் முடியாது. அபரிதமான சக்திகொண்டவர்கள் குழந்தைகள். எல்லோராலும் இந்த கதையில் வரும் ராஜா போல செல்லமாக பேசிக்கொண்டிருக்க முடியாது. பெற்றோர்களின் கோபம் எல்லை மீறும்போது குழந்தைகளை அடித்து கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். தாய், தந்தையை போல வேறு யாராலும் குழந்தைகள் மீது அன்பு செலுத்த முடியாது, ஆனால் அவர்களே பொறுமையிழந்து பிள்ளைகளை அடித்துவிடும்போது, தங்களிடம் இல்லாத அந்த பொறுமையை பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லித்தருபவர்களிடம் எதிர்பார்பது மிகவும் தவறு. தன் குழந்தையை அடித்துவிட்டார்கள் என கோபப்படும் பெற்றோர்கள் தங்களால் சாத்வீகமான முறையில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர முடியுமா என சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதற்காக பள்ளிகளில் மாணவர்களை அடிப்பது சரி என்று ஆகிவிடாது. இந்த பிரச்சனையை போக்க சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தேவை.

பொறுமையை வளர்க்கும் பயிற்சி:

நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும் சரி, அந்த துறையில் மிகச்சிறந்த அனுபவம் உங்களுக்கு இருந்தாலும் அதற்கான சான்றிதல் கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான அந்த துறை சார்ந்த வேலைகளுக்கு நீங்கள் செல்ல முடியும். என்னிடல் சான்றிதல் எதுமில்லை ஆனால் அனைத்து விசயங்களும் தெரியும் என்று கூறிக்கொண்டு புதியதொரு நிருவணத்தை நீங்கள் அனுக முடியாது. இந்த சான்றிதலுக்கு தரும் முக்கியத்துவமானது நாளடைவில் ஒரு மாறுதலை கொண்டுவந்தது அதாவது உங்களுக்கு போதுமான அனுபவம் இருக்கிறதோ இல்லையோ தேவையான சான்றிதல் உங்களிடமிருந்தால் உங்களுக்கு வேலைகிடைத்துவிடும். இதனால் தரமான அனுபவமுள்ள பணியாளர்கள் யார் என்று கண்டுகொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது இதை போக்குவதற்காக பல முக்கியமான துறைகளில் சான்றிதல் உங்களிடம் இருந்தாலும்கூட குறிப்பிட்ட காலம் வரை அந்த துறையில் அனுபவம் உள்ள நபரின்கீழ் பணியாற்றி அனுபவம் பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. துரதிஷ்டவசமாக ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதில் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல்போய் விட்டது. குறிப்பிட்ட கால படிப்பும், சில நாட்கள் பாடம் சொல்லித்தரும் அனுபவமும் அதற்குண்டான சான்றிதலும் இருந்தால் பொதும் என்ற நிலையே உள்ளது.

ஆசிரியருக்கு உண்டான படிப்படிபை படித்துவிட்டேன் எனக்கு வேலை கிடைத்துவிட்டது எனவே இப்போதிலிருந்து நானும் ஒரு ஆசிரியர் என்ற நிலை இருக்கும் வரை, ஆசிரியர் மாணவரை அடிக்கும் பிரச்சனை இருந்துகொண்டேதான் இருக்கும். வியாபாரத்தில் பொருட்களின் விபரங்களை நன்றாக அறிந்தவனைவீட, வாடிக்கையாளரை நன்றாக கையாளுபவந்தான் சிறந்தவனாக விளங்கமுடியும் அதைப்போல நன்றாக பாடம் சொல்லித்தருபவரெல்லாம் நல்லாசிரியர் ஆகிவிடமுடியாது, நல்ல முதிர்ச்சியான பக்குவத்துடன் மணவர்களை அனுகுபவர்தான் நல்லாசிரியராக விளங்க முடியும்.

ஆசிரியர் மனதில் சொந்தப்பிரச்சனைகள் இருக்கும்போது மாணவர்கள் ஆசிரியரை கோபப்படுத்தினாலும் கூட பொறுமையை கையாளும் பக்குவம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பொறுமையை வளர்க்கும் பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த பயிற்சி முறைகள் சாத்தியப்படாத விசயம் அல்ல, வியாபரத்தில் மிக சாதாரணமாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டுடிருக்கும் பயிற்சிகள்தான் இவை. வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் பணியிலிருப்பவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவணம் வாடிக்கையாளர்களை எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சியை கொடுத்திருப்பார்கள். இதனால் எவ்வளவு கோபப்படுத்தினாலும் அந்த பணியாளர்கள் சிரித்துக்கொண்டே பதிளளிப்பார்கள். துணிக்கடைக்கு சென்று போதுமானவரை துணிகளை எடுத்துக்காண்பிக்க சொல்லிவிட்டு எதுவும் பிடிக்கவில்லை என்று திரும்பி வாருங்கள் உங்களிடம் யாரும் கோபப்படமாட்டார்கள். சிரித்துக்கொண்டே அடுத்த முறை வாருங்கள் வாங்கிவைக்கிறோம் என்று கூறுவார்கள். உண்மையில் அவர்களுக்கு கோபம் வரும் ஆனால் அதை உங்களிடம் காண்பிக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு அந்த பணியாளர்கள் பக்குவப்பட்டிருப்பார்கள். ஒரு வேலை அந்த பணியாளர் உங்களிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினால் அந்த பணிக்கு அவர் பொருத்தமில்லாதவர் என கூறி பணியிலிருந்து நீக்கி விடுவார்கள். இதுபோன்று பலவிதமான பணிகளை உதாரணமாக கூறலாம்.

கோபம் வருகிறது என்பது சதாரணமாக விசயம் ஆனால் அதை வெளிப்படுத்துவதில்தான் ஒருவருடைய பக்குவம் இருக்கிறது. அந்த பக்குவத்தை நாம் ஆசிரியர்களிடம் உண்டாக்க வேண்டும். நிறுவணங்களில் பணிபுரியும் பணியாளர்களிடம் இதுபோன்ற பக்குவத்தை உண்டாக்கி வியாபாரத்தை பெருக்குகிறோம். வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் அவர்களை எப்படி அனுக வேண்டும் என்பதை விளக்கி பல புத்தங்கள் எழுதப்பட்டுள்ளன. தொழிலை பெருக்குவதில் இவ்வளவு கவணம் செலுத்தும் நாம் சிறப்பான மாணவர்களை உருவாக்க காரணமாக ஆசிரியரின் பயிற்சியில் எவ்வளவு கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

ஆசிரியர் படிப்பு என்பது வெறும் புத்தகங்கள் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் நடைமுறை பயிற்சி சம்பந்தப்பட்டதாக அமைய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய பொறுமையை இழக்காதவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அதற்கு உண்டான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். மனநிலையை கட்டுப்படுத்தும் பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு கொடுக்காமல், தவறு ஏற்படும்போதெல்லாம் அவர்களை தண்டிப்பதனால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். ஏனெனில் கோபம் என்பது மனித இயல்பு அதற்கு ஆசிரியர்கள் விதிவிலக்கு அல்ல.

saireader@gmail.com

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி