வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


காங்கிரஸின் பாரம்பரிய சொத்தாக விளங்கும் கோஷ்டிப் பூசலால் இன்றைய நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கட்சி, காங்கிரஸ் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு சமீபகால அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்ற முடிவுக்கு வந்து விடலாம். ஏனெனில் கதர்க்கூடாரத்தை விட இப்போது காவிக்கூடாரத்தில்தான் கோஷ்டிப் பூசல் அதிகமாக இருக்கிறது. அதுவும் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அங்கு நடக்கின்ற விவாதங்களும் விடயங்களும் தெருமுனையில் பெண்கள் நடத்தும் குழாயடிச் சண்டையை விஞ்சும் அளவிற்கு இருக்கின்றது. பா.ஜ.க வின் இளம் தலைவர் வருண் காந்தி முதல் பெருந்தலைகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் வரை அக்கட்சியைச் சார்ந்தவர்களால் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கபடுகின்றனர். தேசியத் தலைமைக்குக் கட்டுப்பட மறுக்கும் மாநிலத் தலைமைகள் அங்கே இப்பொழுது சர்வ சாதாரணமாயிருக்கின்றன. இராஜஸ்தானின் முன்னாள் முதல்வரும் மன்னர் பரம்பரையைச் சார்ந்தவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, பா.ஜ.க வின் மேல்மட்டத் தலைவர்களை மருந்துக்குக் கூட மதிக்காதவராக இன்னும் மன்னராட்சி மனோபாவத்திலேயே இருந்து வருகிறார். பதவி விலகச் சொன்ன தேசியத் தலைமையை அவர் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலும் ஒரு இடியாக பா.ஜ.க வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் எழுதிய “ஜின்னா – இந்தியா, சுதந்திரம், பிரிவினை” என்னும் புத்தகம் காவிக் கூடாரத்தில் பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்னும் பழமொழிக்கேற்ப பா.ஜ.க வை பதம் பார்க்கும் மற்றொரு அம்பாகவே ஜஸ்வந்த் சிங்கின் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சில உண்மைகளைக் கண்டு கதர் கூடாரமும் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. இதுவரை இந்திய சுதந்திர வரலாற்றில் புனிதர்களாக நமக்குக் காட்டப்பட்ட ஜவஹர்லால் நேருவும் வல்லபாய் பட்டேலும் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான காரணகர்த்தாக்களில் சிலர் என்ற உண்மை இந்தப் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டிருப்பது கதர் கூடாரத்தையும் கலக்கமடையச் செய்திருக்கிறது. அறுபது வருடங்களாக போட்டுக்கொண்ட மதச்சார்பற்ற வேடம் எங்கே களைந்து விடுமோ என்ற ஓர் அச்சமும் காங்கிரஸை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினை சம்பந்தமாக விடை தெரியா வினாக்கள் பலவற்றை இந்த புத்தகம் மீண்டும் கிளறி விட்டிருக்கிறது. வரலாற்றுப் புத்தகங்களில் ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக் மட்டுமே பிரிவினைக்கான மொத்த காரணம் என்று படித்திருப்பதை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்குகிறது இந்த புத்தகம். இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதி அவருடைய முப்பதாண்டு காலத்துக்குப் பிறகு வரவேண்டும் என்று அவரே எழுதி வைக்கின்ற மனநிலைக்கு அவரைத் தள்ளிய சூழலை உருவாக்கிய காங்கிரஸ் தலைவர்கள் யார் யார்? ஏனெனில் சுதந்திரத்துக்கு முந்தைய சக்தி வாய்ந்த காங்கிரசின் தலைவராக இருந்தவர் அபுல்கலாம் ஆசாத் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட உயர்மட்ட தலைவரையே சுதந்திரமாக கருத்து சொல்லவிடாமல் தடுத்த அந்த தலைவர்கள் யார் என்பது இங்கு விடை தெரியாத வினாக்களின் பட்டியலில் உள்ள ஒரு கேள்வியாக இருக்கின்றது. பிரிவினையில் நேரு மற்றும் பட்டேலின் பங்கு எத்தகையது என்பதை இந்தத் தலைமுறைக்கு வரலாறாக சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை இந்த புத்தகம் உருவாக்காது என்றாலும் அதைப்பற்றிய ஒரு விவாதத்தையாவது அறிவுஜீவிகள் மத்தியில் உருவாக்க வேண்டும். அதன் மூலம் புனிதர்கள் வேடம் தரித்து கொண்டிருக்கும் சிலரின் கருப்புப் பக்கங்கள் வெளிவர வேண்டும். “Truth is not only violated by falsehood; it may be equally outraged by silence.” – Henri Frederic Amiel. உண்மை தவறான செய்திகளால் மட்டுமல்ல நீண்ட மௌனங்களாலும் சாகடிக்கப்படுகிறது. அத்தகைய ஒரு மௌனத்தை இந்திய அறிவுஜீவிகள் ஏன் கொண்டிருந்தார்கள் என்னும் கேள்விக்கு விடை காண்பது அரிதாகவே இருக்கிறது.

பிரிவினையின் மொத்தக் காரணமாக ஜின்னாவும், முஸ்லிம் லீக்கும் குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர்கள் மட்டுமே இதற்குக் காரணமில்லை என்பதை பின்வரும் வரலாற்று உண்மைகள் நமக்கு விளக்குகின்றன. 1929ல் இந்து மகாசபையைச் சார்ந்த பாய்பரமானந்தா “இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்” என்று சொன்னார்(Hindu National Movement, Lahore, 1929). அதைத் தொடர்ந்து 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தான் 1940ல் லாகூரில் நடந்த மாநாட்டில் “இரண்டு தேசங்கள் வேண்டும்” என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆகவே பிரிவினைக்கு முதலில் அடித்தளமிட்டவர் இந்து மகா சபையை சேர்ந்த பாய் பரமானந்தா அவர்களே. ஜின்னா இயல்பாகவே மேலைக் கலாச்சாரத்தில் ஊறியவர். அப்படிப்பட்டவரை மத அடிப்படையில் நாடு வேண்டும் என்ற நிலைக்கு மாற்றிய சூழ்நிலைகள் என்னவென்பதையும் நாம் அறிந்துகொள்ள முயற்சித்தல் வேண்டும்.

ஜஸ்வந்த் சிங்கை பா.ஜ.க தன்னுடைய கட்சியிலிருந்து வெளியேற்றி விட்டது. வெளியேற்றியதற்கு அந்த கட்சி சொல்லும் காரணம்தான் நகைப்பிற்குரிய விடயமாக இருக்கிறது. ஜின்னாவை புகழ்ந்ததால் வெளியேற்றம் என்றால் முதலில் வெளியேற்றப்பட வேண்டியவர் திருவாளர் அத்வானி அவர்களே. ஏனெனில் அவர் தான் தற்காலத்தில் காவிக்கூடாரத்தில் ஜின்னாவை புகழ்ந்த முதல் நபர். ஜஸ்வந்த் சிங்கின் வெளியேற்றத்திற்கு காரணம் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இருந்த சில உண்மைகளை ஊடகங்களின் பார்வைக்கு கொண்டு வந்ததேயாகும்.

இஸ்லாத்தை இழிவு படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கோடு வெற்று புனைவுக் கதைகளையும், ஆபாச எழுத்துகளையும் மட்டுமே அடிப்படையாக கொண்டு எழுதப்படுகின்ற சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் ஆகிய எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கோரிக்கை வைக்கும்போது எல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று கூப்பாடு போட்ட பல மேல்வர்க்க அறிவுஜீவிகள் இன்று ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்தை குஜராத் அரசு தடை செய்திருப்பதைப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் நீண்டதொரு அமைதியை கடைப்பிடித்து வருவது அவர்களின் கருத்து சுதந்திர அளவுகோல் என்னவென்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

திருவாளர் ஜஸ்வந்த் சிங் அவர்களின் இந்தப் புத்தகம் வெறுமனே அரசியல் கூப்பாடுகளில் மறைந்தும், மக்களால் மறந்தும் போய்விடலாம். தனக்குத் தெரிந்த பல உண்மைகளில் ஒரு சிலவற்றை அவர் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருப்பதை கண்டிப்பாகப் பாராட்டியே தீரவேண்டும்.

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.”
என்று வள்ளுவன் சொன்னது போல, அவருடைய நெஞ்சு இவ்வளவு காலம் உண்மையை மறைக்கின்றோமே என்று சுட்டாலும் சுட்டிருக்கும். அதனால்தான் தன்னுடைய அந்திமக் காலத்தில் சில உண்மைகளை போட்டுடைத்திருக்கிறார். மிகத் தாமதமாக வெளிவந்ததால் உண்மை பொய்யாகி விடுமா என்ன?

– பி.ஏ.ஷேக் தாவூத்
pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்