Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

ரா.கிரிதரன்


யூத மக்களின் வேதனைகளைப் பற்றி கணக்கில்லாத ஆவணங்கள் இருக்கின்றன. பைபிள் புதிய ஏற்பாட்டைக் கூட யூத மக்களின் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உலகம் சொந்தமில்லையா? காலங்காலமாய் மேட்டிமை மக்களாகவே இருந்து , அறிவுசார் துறைகளிலும், வணிகத்துறையிலும் மற்றவர்களை விட திறமையாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் குறிப்பிட்ட காலத்தில் பருவ மாற்றங்களுக்கேற்ப மிருகங்கள் ஓரிடத்திலிருந்து தங்களுக்கு அனுகூலமான இடத்திற்கு கூட்டங் கூட்டமாகச் செல்லும் ஆவணப் படங்களைப் பார்த்திருக்கிறேன்.
அளவு வித்தியாசமில்லாமல் யானையிலிருந்து , சின்ன மீஸில்ஸ் வரை தங்கள் கூட்டத்துடன் இடமாறிக்கொண்டிருக்கும். பிபிஸி ‘மைக்ரேஷன் ஆஃப் அனிமல்ஸ் (Migration of Animals)’ என ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளது. மனிதர்களும் இப்படிப்பட்ட இட நெருக்கடி, வாழ்வியல் பிரச்சனைகளினால் இடங்களை மாற்றிய படி இருந்துள்ளனர். இது, மனிதன் தொடங்கியதிலிருந்து நடந்து வந்தாலும், யூதர்களுக்கு தங்கள் இருப்பிடமாக, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரேல் ஆனது.
இப்படிப்பட்ட இடமாற்றத்தால் வரும் இன்னல்கள் ஒரு பக்கமிருந்தாலும், உணர்வு பூர்வமாய் அவர்கள் மனங்களில் நிகழும் மாற்றங்களை நிறைய ஆராய்ச்சி செய்துள்ளனர். சிலருக்கு தாழ்வு மனப்பான்மையால் சமூகத்துடன் பழக முடியாமல் போயிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகம், நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என மற்றவர்களிடம் விலகியே இருப்பது. சிலருக்கு உணர்வுகள் மரத்துப்போய் சிநேக மனோபாவமே மறந்து போயுள்ளது. வேறு சிலரோ யூத வகுப்பின் மேன்மையை நம்பி,மற்றவர்களுடன் சேராமல் விட்டேரியாகவே இருக்கும் மனோபாவத்தை வளர்த்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளாய் நாடோடி போல் இருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா இவர்களை ஏற்றுக் கொண்டது. சிங்கப்பூரை நம்மவர்கள் கட்டியதுபோல், அமெரிக்காவின் வியாபாரம், ஆராய்ச்சி கூடங்கள் யூதர்களால் நிரம்பி செழிக்க ஆரம்பித்தது.
அமெரிக்கா இவர்களை கொண்டாடியது. மற்றவர்கள் வெறுப்பு,இரக்கம் போன்ற patronising குணத்திலிர்ந்தார்கள்.
அமெரிக்க சமூக வாழ்வில் ஒரு அங்கமாக இவர்கள் உணரத்தொடங்கும் சமயத்தில் புதிய சிக்கல்கள் உருவாயின. பொதுவாகவே சாப்பாடு, இறை, காதல், திருமணம் போன்றவற்றில் ஒரு சுதந்திர மனோபாவத்தை அமெரிக்க மக்கள் கையாண்டு வந்திருக்கிறார்கள்.யூத இனத்திலோ இப்படித்தான் இருக்க வேண்டும், சில உணவுகளை உண்ண மறுப்பது என கட்டுக்கோப்பான வரையறைகளை கொண்டது.
இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு வீட்டில் கட்டுப்பாடிருந்தாலும், வெளியே வந்து அமெரிக்க வாழ்வைப் பார்த்து ஏங்கத் தொடங்கினர். குழப்பம், பயம், சுதந்திரத்தை உடைக்க உந்தும் சமூகம், கட்டுப்பாடான வளர்ப்பு என அதிக குழப்பங்களுக்கு ஆளானார்கள். அதனாலேயே அவர்களின் சிந்தனை, செயல்களில் ஒவ்வாமை வநதது.
சிலர் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்க அவற்றின் எல்லைகளைத் தாண்டத் தொடங்கினர்.
இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவில் வளரும் இந்தியக் குழந்தைகளுக்கும் இது போன்ற குழப்பம் உண்டு. ABCD(American Born Confused Desi), BBCD(British Born Confused Desi) எனக் கேளியாகச் சொன்னாலும், இந்த சுதந்திரம்-கட்டுப்பாடான வளர்ப்பு என்ற தராசில் எப்படி சமன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்பது பலருக்கும் இருக்கும் குழப்பமே.
போர்ட்நோயின் கம்ப்ளைண்ட் (Portnoy’s Complaint)
இந்த பிண்ணனியில் வெளியான ஃபிலிப் ரோத் (Philip Roth) எழுதிய Portnoy’s Complaint ஒரு முக்கிய அமெரிக்காவில் பிறந்த ஒரு யூதக் குழந்தைப் பற்றிய புதினம். வெளியான ஆண்டு : 1969.
என்னென்ன விதங்களில் குடும்பத்தில் கட்டுப்பாட்டை வளர்க்க முடியும்?ஏதேனும் போதித்துக் கொண்டேயிருப்பது, சரி/தவறு போன்றவற்றை சின்னச் சின்ன விஷயங்களிலும் பெற்றோரின் முடிவைத் திணிப்பது, காதல்/காமம் போன்றவற்றை தப்பு எனச் சொல்லிவருவது (இது எல்லாமே நம் வாழ்விலும் நடக்கும் விஷயங்களே)
நாவல் முழுவதும் அலெக்ஸ் போர்ட்நோய் என்பவன் தன் வைத்தியரிடம் புலம்புவது போல் இருக்கும் ஓரங்கம். தன் சின்ன வயதிலிருந்தே போர்ட்நோய்க்கு சுதந்திரத்தின் மேல் இருக்கும் மோகமும், அவற்றை மீற முடியாமல் தன் அம்மா உருவாக்கும் கட்டுப்பாடுகளும் பிரச்சனையாக இருக்கிறது.
தான் யூதன் என்பதை எல்லா செயல்களிலும் உணர்த்தி வரும் பெற்றோர். அலெக்ஸுக்கோ கட்டுப்பாடு, சொன்ன சொல் கேட்கும் தன் அக்கா, அப்பாவின் சேல்ஸ்மேன் தொழிலில் தெரியும் புத்தியென பார்ப்பதெல்லாம் இம்சையாகவே இருக்கிறது. இதெல்லாம் தாண்டி Oedipus complex பிரச்சனையையும் சந்திக்கிறான்.
அலெக்ஸுக்கு மிதமிஞ்சிய காம விவரணைகளில் ஏற்படும் ஈர்ப்பினால் இவற்றை சமாளிக்கிறான். தன் யூத அடையாளத்தை அழிக்க அமெரிக்காவின் கட்டற்ற சுதந்திரத்தை சாக்காகக் கொண்டு காம கற்பனைகளின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறான்.சிறு வயதிலே பாத்ரூமுக்குள் சுயமைதூனம், அதை பற்றி கேட்கும் அம்மாவிடம் சொல்லும் பொய், தன் நண்பனுடன் யூதர்கள் சாப்பிடக்கூடாத பன்றிக்கறி சாப்பிடுதல் என தாய் தந்த தன் அடையாளத்தை அழிக்க முற்படுகின்றான்.
தன் இருபதாவது வயதுகளில், ஐரோப்பாவிற்கு தன் வீட்டிடம் சொல்லாமல் பயணம் போகிறான். ஐரோப்பாவின் அளவு கடந்த சுதந்திரம் தன் காமக் கற்பனைகளுக்குத் தடை போடாது எனத் தெரிந்ததால் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறான். பல தரப்பட்ட வேசிகளுடன் பழகினாலும், அவர்கள் அனைவரும் அவன் யூதன் எனக் கண்டுபிடித்து விடுகிறார்கள். (இதற்கான காரணம் சரியாக விளக்கப்படவில்லை) ஆனால் தன் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என நம்புகிறான்.
கனவுகளின் மிதக்கும் தன் நண்பர்களிடன் தன் அடையாளத்தை அழிக்க யோசனைக் கேட்கிறான். அமெரிக்காவில் ஒரு யூதன், இஸ்ரேலில் எப்படி மதிப்பார்கள் எனப் பார்க்கும் ஆசை வருகிறது. இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறான். அங்கிருக்கும் தெருகளில் நடக்கவே பயமாக உணர்கிறார். தன்னிடம் நேரம் கேட்கும் சில யூதகளைப் பார்த்தாலே பயம் வர – இஸ்ரேலை விட்டு அமெரிக்காவுக்குத் திரும்புகிறான்.
கதை முழுவதும் ஒரு மருத்துவரிடம் விவரிக்கும் தொனியில் வருவதால் அலெக்ஸுக்கு மன நலம் குன்றிப்போகிறது என்ற முடிவுக்கே நம்மால் வர முடியும்.
சுய அடையாளத்தை அழிப்பது மிகக் கடினமானது. எவராலும் அதை அடைய முடிந்ததில்லை. இந்த நாவலைப் படிக்கும்போது சல்மான் ருஷ்டியின் Midnight’s Children நினைவில் வராமல் போகாது. சமீல் சினாய் அடைய முற்படுவதும் அடையாள அழிப்பு மட்டுமே. யூதர்கள், இந்தியர்கள் என்றில்லாமல் நாம் அனைவரும் நம் உடலிலும், பேச்சிலும் ஏதாவதொரு அடையாளத்தை தொக்க வைத்துள்ளோம். அடையாளத்தை அழிக்க முற்படுபவர்கள் தங்களையே அழிக்க முற்பட்டவர்களாகிறார்கள்.
அடையாளத்தை மீற முடியும். அது வேறொரு அடையாளத்திலேயே சென்றடையும். 1947 முன் இந்தியர்களாக இருந்த நாம், பின்னர் பாகிஸ்தானி, பங்களாதேசி, இந்தியன் எனப் பிரிந்தது போல, மித மிஞ்சிய அறிவும், ஒழுக்கமும் உடையவர்கள் எனப் பார்க்கப்பட்ட யூதர்களை, ஜெர்மனியர்கள் இரண்டாம் யுத்தத்தில் நடத்திய கொடுமை – என தினமும் நம் அடையாளம் மாறிக்கொண்டே வருகின்றது.
அலெக்ஸ் போர்ட்நோய் அதற்கு பலியான ஒரு யூதன். ஒரு மனிதன் மட்டுமே.

girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்