மக்களாட்சியும் மணிமண்டபங்களும்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


“மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம்”. இது மக்களாட்சி என்னும் சொல்லுக்கு அரசியலமைப்பு சட்டத்தாலும் அவ்வப்போது மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுகின்ற விளக்கம். இந்த இந்திய தேசம் மக்களாட்சி முறையை உள்வாங்கிக் கொண்டு அரை நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பொதுவுடைமைவாதி என்று தன்னை அறிவித்துக்கொண்ட நேரு முதல் ஏகாதிபத்திய வெறிபிடித்த அமெரிக்க அதிபர்களின் கண்களில் எல்லாம் வெறும் காதலை மட்டுமே காண்கின்ற மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக்காலம் வரை மக்களாட்சி என்னும் மந்திரச் சொல் ஏட்டில் மட்டுமே இருக்கிறதேயொழிய நடைமுறைக்கு வரவேயில்லை என்பதை “வறுமை ஒழிப்பு” என்ற வழக்கமான கோஷத்தை நேரு காலம் முதல் மன்மோகன் சிங் காலம் வரை சொல்லிக் கொண்டிருக்கும் அரசாங்கங்களை வைத்து எவரும் அறிந்து கொள்ளலாம்.

மக்களாட்சி தத்துவத்தின்படி தெரிவுசெய்யப்படும் அரசுகளின் ஆட்சிக்காலமான 60 மாதங்களில் 59 மாதங்கள் ஆட்சியாளர்களின் தரிசனத்திற்கு மக்கள் காத்துக்கிடக்க, மீதமிருக்கும் ஒரு மாதம் மக்களின் காலடியில் ஆட்சியாளர்களும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி வீழ்ந்து கிடக்கின்ற அவலநிலை தொடரவே செய்கின்றது. மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு ஆட்சி புரிவதனால்தான் தேர்தல் சமயத்தில் பணபலத்தையும், அதிகார பலத்தையும் நம்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. தேர்தல் நேரங்களில் அரசு அதிகார பலம் எந்தளவிற்கு செயல்படும் என்பதை உணர்ந்த ஒரு சில எதிர்க்கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு நிலை எடுப்பதற்கும் இதுவே காரணமாகும். இதே எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போதும் இந்த அதிகார பலத்தை துஷ்பிரயோகம் பண்ணியதை நம்மால் மறுக்கவோ மறக்கவோ இயலாது. அதிகார துஷ்பிரயோகத்தின் அளவுகள் அரசியல் கட்சிகளின் தரத்திற்கு ஏற்ப மாறலாமேயொழிய அறவே இல்லை என்று சொல்லிவிட இயலாது.

ஐந்து வருடத்திற்கு மட்டும் ஆட்சி செய்ய மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரியணையில் அமரும் ஆட்சியாளர்கள் ஏதோ மன்னராட்சியே தம் வசம் வந்துவிட்டது போல ஆட்சிக்கட்டிலை குடும்பச் சொத்தாகப் பாவிக்கும் குணாதிசயத்தை பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்ளாகவே பெற்று விடுகின்றனர் என்பது இந்த தேசத்தின் ஜனநாயகம் என்னும் அழகிய சித்திரத்தில் தீட்டப்பட்ட கரும்புள்ளியாகவே இருக்கின்றது. இதற்கு மத்திய, மாநில என்ற எல்லைப் பிரச்சனைகளெல்லாம் கிடையாது.

மக்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை தீட்டி மக்களுக்கு சேவையாற்றி மக்களின் இதயங்களில் இடம் பெற வேண்டிய ஆட்சியாளர்கள் மணிமண்டபங்களையும் சிலைகளையும் மக்கள் வரிப்பணத்தில் நிறுவி அதை திறந்து வைத்து அங்கிருக்கும் கல்வெட்டில் தம் பெயரை இடம் பெறச் செய்ய முனைவது வினோதமான வேடிக்கையாகவே இருக்கிறது. கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகளை நிறுவிய முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பெயர் கல்வெட்டுகளில் அதிகம் இல்லாமலிருக்கலாம். ஆனால் கிராமப் பாடசாலைகளில் படித்த ஒவ்வொரு மனிதர்களின் இதயக் கல்வெட்டுகளில் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் மாயாவதி எழுப்பியிருக்கும் மணிமண்டபங்களும், அவருடைய கட்சியின் சின்னமான யானைச் சிலைகளை அரசு செலவில் நிறுவுதலும் போன்ற செயற்பாடுகள் இந்த தேசத்தின் ஆட்சியாளர்களால் மக்களின் வரிப்பணம் எந்தளவிற்கு வீணடிக்கப்படுகிறது என்பதற்கான ஒரு சிறு ஆதாரமாகும். மறைந்த தலைவர்களின் பெயரில் மணிமண்டபம் கட்டுவதினால் என்ன விதமான நன்மைகள் மக்களுக்கு கிடைக்கின்றன என்பதை மணிமண்டபங்கள் கட்டும் அரசுகள் மக்களுக்கு கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். தாம் கட்டிய மணிமண்டபங்களை தலித்தியத்தின் எழுச்சியாகக் காட்ட முனையும் மாயாவதி அவர்களின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. இத்தகைய மணிமண்டபங்களினாலோ அல்லது சிலைகளினாலோ எம்முடைய தலித் மக்கள் அனுபவிக்கும் தீண்டாமை முடிவுக்கு வந்துவிடுமா? அல்லது அவர் தம் வாழ்வில் மறுமலர்ச்சிதான் ஏற்படுத்தி விடுமா? அம்பேத்கர், காந்தி, நேதாஜி போன்ற தேசத் தலைவர்களின் பல நல்ல கொள்கைகளைத் தொலைத்துவிட்டு அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதினால் என்ன பயன்?

தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் கர்நாடக முதல்வரை சந்தித்தபோது தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனையான காவிரி நதி நீர் பிரச்சனையை பற்றியோ ஒகனேக்கல் பிரச்சனையைப் பற்றியோ பேசாமல் பெங்களூரில் திறக்கப்படாமல் இருக்கும் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு பேசியதில் என்ன பயன் மக்களுக்கு இருக்கிறது? மாறாக பெங்களூரில் திறக்கப்பட இருக்கும் வள்ளுவர் சிலையினாலும் சென்னையில் திறக்கப்பட இருக்கும் சர்வஞர் சிலையினாலும் இரண்டு மாநிலங்களிலும் அமைதி கெடுவதற்கான வாய்ப்புகள் வேண்டுமானால் உண்டு. ஏனெனில் சமூக விரோத சக்திகள் கலவரத்தைத் தூண்டச் செய்கின்ற முதல் வேலையே சிலைகளை சேதப்படுத்துவதுதான். கலவரக்காரர்களிடமிருந்து ஓடித் தப்பிக்கத் தெரிந்த மனிதர்களையே பாடாய்ப்படுத்தும் சமூக விரோத கும்பல்களிடம், ஓடத்தெரியாத இந்த சிலைகள் என்ன பாடுபடப் போகிறதோ என்று தெரியவில்லை. இனிவரும் காலங்களில் இரண்டு மாநில காவல்துறைகளுக்கும் இந்த சிலைகளைப் பாதுகாப்பது கூடுதல் பொறுப்பாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வள்ளுவன் சிலையை திறந்து வைக்கப்போகும் தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தின் ஆட்சியாளர்களுக்கெல்லாம் வள்ளுவன் சொல்லுகின்ற செய்தி இதுதான்.
“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.”
திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதிய மூத்த தமிழறிஞர் முதல்வர் அவர்களுக்கு இக்குறளை நாம் விளக்கத் தேவையில்லை.

– பி.ஏ.ஷேக் தாவூத்
pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்