தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

மலர் மன்னன்


“நலந்தானா’ என்று அண்ணாவிடம் கண்ணதாசன் தன் பாடலால் விசாரித்ததுபற்றி ஒரு நெகிழ்ச்சியான மன நிலையில் எழுதப் போக, ஏராளமான மின்னஞ்சலகள் வந்து குவிந்து விட்டன. “இந்தத் தலைமுறையினருக்கு அண்ணாவின் அறிமுகம் சரியாக இல்லை, உங்களால்தான் அப்படியொரு சரியான அறிமுகத்தைச் செய்து தரமுடியும்’ என்ற அடிப்படையான கருத்தை வெளியிடுவதாகப் பெரும்பாலான அஞ்சல்கள் இருந்தன. போதாக் குறைக்கு “அண்ணா பேரவை ‘ இணைய தளத்திலும் அந்தக் கட்டுரை வெளியாகி, அதில் எனது தொலைபேசி எண்ணும் தரப்பட்டு விட்டிருந்ததால் அதைப் படித்துவிட்டுத் தொலைபேசி மூலமாகவும் பலர் அண்ணாவைப் பற்றி எனக்குத் தெரிந்ததையெல்லாம் வெளியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள்.

தொடர்பு கொண்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு பிறந்தவர்கள். சிலர் அண்ணா காலமானபோது விவரம் அறியாப் பருவத்தினராக இருந்தவர்கள்.

“இது அண்ணாவின் நூற்றாண்டு. எனவே அவரைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எழுதிக் கொண்டே இருங்கள்’ என்று அண்ணாவின் காலத்தில் வாழ்ந்த முதியவர்கள் சிலரும் தொலைபேசியில் பேசும்போது சொன்னார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்ணாவின் காலதில் தி.மு.கழகத்தில் தீவிரமாக ஈடுபட்
டிருந்துவிட்டு, அவரது மறைவிற்குப்பின் கட்சியின் புதிய போக்கிற்கு ஈடுகொடுக்க மனமின்றிச் சிறுகச் சிறுக தாமாகவே ஒதுங்கிகொண்டவர்கள்.

இவ்வளவையும் சொல்வதற்குக் காரணம், அண்ணாவை இழக்க நேர்ந்தமைக்காக வருந்து பவர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு பிறந்து வளர்ந்த மாணிக்கம் என்ற வாசகர், “இன்று காட்டுமிராண்டிகள் காலத்தில் வாழ்வதாகத் தோன்றுகிறது’ என்று கட்டுரையைப் படித்துவிட்டு மனம் வெதும்பி எழுதியதைப் படித்தபோது, பொது வாழ்க்கை தூயதாக அமைய வேண்டும் என்கிற ஏக்கம் இளந் தலைமுறையினரிடையே எவ்வளவு தீவிரமாக இருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இன்று அவர்கள் வளரும்போதே தங்களைச் சுற்றி எல்லாவிதமான முறைகேடுகளையும் காணநேர்வதால்தான் காட்டு
மிராண்டிகள் காலத்தில் வாழ்வதுபோன்ற உணர்வுக்கு ஆளாகும்படி நேர்ந்து விட்டது. சிலருக்கோ முறைகேடுகளின் சூழலில் இருந்து பழகி, எதிர்ப்பு சக்தி குன்றிப்போய் ஏற்பு சக்தி வந்துவிட்டது.

அண்ணாவைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் தகவல்கள் ஏராளமாகவே உண்டுதான். அவற்றில் பல மற்றவர்கள் சொல்ல விரும்பாதவையும்தாம். அண்ணாவுக்கு நான் காவி கட்டி அழகு பார்ப்பதாக அவர்கள் சொல்லக் கூடும். அத்தகைய விமர்சங்களுக்கு என்னிடம் பதில்கள் உள்ளன. அவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போது பல வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்க அண்ணாவின் பரிமாணங்களில் ஒன்றைப் பார்ப்போம்.

மிகக் குறுகிய காலமே மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த அண்ணா, சொற்ப அளவிலேயே அங்கு நீண்ட நேர உரைகளை நிகழ்த்தினார்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் அண்ணா உரை நிகழ்த்தப் போவது முன்கூட்டியே தெரிய வந்து, அவர் உரை நிகழ்த்தும் போது அவையானது உறுப்பினர்களால் நிரம்பி வழியும். காரணம் அன்றைய மாநிலங்களவையில் பெரும்பாலும் விவரம் அறிந்தவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது இன்று போல் ஆறுதல் பரிசாகவோ, அதிருப்தியாளரைச் சரிக்கட்டும் ஏற்பாடாகவோ ஒரு சாதகத்திற்கான பதில் சாதகம் செய்யும் பண்ட மாற்றகவோ அன்று இருக்கவில்லை.

மாநிலங்களவையை “எல்டர்ஸ் ஹவுஸ்’ என்று அழைப்பதுண்டு. அறிவிலும் அனுபவத்
திலும் மூத்தவர்களின் அவை என்பதன் குறிப்பு அது. அதற்குப் பொருத்தமாகத்தான் அன்றைய மாநிலங்களவை இருந்தது. வயது ஐம்பதைக் கடந்துவிட்டிருந்த அண்ணாவும் அப்போது அந்த அவைக்குப் பொருத்தமானவராகிவிட்டிருந்தார் (இதைச் சொல்லும்போது எனக்கு ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்தக் கால கட்டத்தில் ஒரு முறை எங்களுடன் பேசிக்கொண்டிருந்த அண்ணா, “முன்பெல்லாம் நாம் சொல்வதைப் பெரியவர்கள் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள். அறியா வயதுப் பிள்ளைகள் பேசுவதாக அலட்சியம் செய்வார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. “அட, வயதில் பெரியவர்கள்கூட நாம் சொல்வதைக் கவனமாகக் கேட்கிறார்களே’ என்று அதிசயப் படுவேன். அப்புறம் நமக்குந்தான் வயதாகிறது, தலையிலும் மீசையிலும் நரை காண்கிறது என்பது உறைக்கும்’ என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்கள்).

பிரிட்டிஷ் பாராளுமன்ற சம்பிரதாயப்படி அமைந்த நமது பாராளுமன்றம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உள்ளதுபோலவே மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ள ஓர் அவையும் மாநில சட்டமன்றங்களி லுள்ள உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டும், நேரடி நியமனமாகவும் இடம் பெறும் உறுப்பினர்கள் கொண்ட இன்னொரு அவையும் கொண்டுள்ளது. பிரிட்டனில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்று இருப்பதைத்தான் நாம் மக்களவை, மாநிலங்களவை என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியல், சட்டம், பொருளாதாரம், சமூகவியல், அறிவியல், கலைகள், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் உள்ள விற்பன்னர்கள் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதில்லை. அப்படியே அவர்கள் போட்டியிட்டாலும் மக்களவை உறுப்பினர்களாக வெற்றிபெறுவது அவர்களுக்குச் சாத்தியமாக இருப்பதில்லை (அரசியல் சாசனக் குழுவின் தலைவராகவே இருந்த டாக்டர் அம்பேத்கர் ஒரு தேர்தலில்கூட வெற்றிபெற முடிந்ததில்லை!) ஆனால் அத்தகையவர்களின் நேரடி ஆலோசனைகள் ஆட்சி செய்பவர்களுக்கு அவசியம் என்ற நல்லெண்ணம் காரணமாகத்தான் இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று மாநிலங்களவைக்கு நியமிக்கப்படுபவர்களும், தத்தம் உறுப்பினர்களாகப் போட்டியிட அரசியல் கட்சிகளால் தேர்வு செய்யப்படுபவர்களும் பெரும்பாலும் எத்தகையவர்களாக உள்ளனர் என்று பார்க்கிற பொழுது மனம் சோர்ந்து போகிறது. அண்ணா காலத்தில் நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.

மாநிலங்களைவியில் அண்ணா நிகழ்த்திய நீண்ட நேர உரைகளுள் மிக முக்கியமானவை இரண்டு. ஒன்று மெட்ராஸ் மாநிலம் என்று அன்று அழைக்கப்பட்ட தமிழ் நாடு மாநிலத்
திற்குத் தமிழ் நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தனிநபர் தீர்மானத்தின் மீது நிகழ்த்திய உரை. அண்ணாவின் ஆங்கிலப் புலமையும் , தமிழ்ப் புலமையும் அவரது சமயோசிதப் பதிலடியும் , இயல்பான நகைச்சுவையும் ஒருங்கே வெளிப்பட்ட உரை அது. இன்னொரு உரை, பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரப் பட வேண்டும் எனக் கோரும் தனிநபர் தீர்மானம் மீதானது. அதுவும் அண்ணாவின் சொற்பிரயோக அழகையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியது. மேலும் அந்த உரையின்போது காங்கிரஸ் குறுக்கிட்ட போதெல்லாம் ஜன சங்க உறுப்பினர் அடல் பிஹாரி வாஜ்பாயியும், கம்யூனிஸ்ட் கட்சியின் பூபேஷ் குப்தாவும் மாற்றி மாற்றி பதிலடி கொடுத்து அண்ணா உரையைத் தொடர்வதற்குப் பக்க பலமாக இருந்தது ஒரு கண் கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் திராவிடர் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் வேறுபாடு தெரியாமல் அண்ணாவின் உரையில் குறுக்கிட்டுக் குட்டையைக் குழப்பியபோது, அண்ணா விளக்கம் அளிபதற்கு முன்பாகவே வாஜ்பாயி தலையிட்டு அண்ணாவின் கட்சி வேறு, திராவிடர் கழகம் வேறு என்று சுட்டிக் காட்டி, தமிழ் நாட்டில் திராவிடர் கழகம் உங்கள் கட்சியைத்தான் (காங்கிரஸ்)ஆதரிக்கிற்து என்று அம்பலப் படுத்தினார். இவையெல்லாம் அவைக் குறிப்பில் உள்ளவைதாம். என்னிடம் மாநிலங்களவையில் பிரிவைனைத் தடைச் சட்டம் கோரும் தீர்மானத்தின் மீது அண்ணா நிகழ்த்திய உரையும் உள்ளது. முடிந்தால் அந்த உரை தொடர்பான கட்டுரையையும் எழுதுவேன்.

மெட்ராஸ் மாநிலத்திற்குத் தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரும் அரசின் அதிகாரப் பூர்வமற்ற தனி நபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டு வந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பூபேஷ் குப்தாதான். தீர்மானம் 1963ல் கொண்டு வரப் பட்டது.

பூபேஷ் குப்தா அவையில் வைத்த தீர்மானத்தை ஆதரித்துப் பேச எழுந்த அண்ணா சொன்ன முதல் வாக்கியமே பூபேஷ் குப்தா உள்ளிட்ட அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

“என் நண்பர் திரு பூபேஷ் குப்தாவுடன் நான் முழுமையாக ஒத்துப் போவது மிகவும் துர்லபம். ஆனால் இன்று அவரை முழு மனதுடன், முழுமையாகவும் உண்மை
யுடனும் ஆதரிக்க எழுந்துள்ளேன்’ (ஐ ச்ட் ணூச்ணூஞுடூதூ டிண ஞூதடூடூ ச்ஞ்ணூஞுஞுட்ஞுணt தீடிtட ட்தூ ஞூணூடிஞுணஞீ Mணூ.ஆடதணீஞுண்ட எதணீtச், ஞதt tணிஞீச்தூ ஐ ணூடிண்ஞு tணி ண்தணீணீணிணூt டடிட் தீடணிடூஞுடஞுச்ணூtஞுஞீடூதூ, ஞூதடூடூதூ ச்ணஞீ ண்டிணஞிஞுணூஞுடூதூ)
என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

மேலும், “இது நான் கொண்டு வந்திருக்க வேண்டிய தீர்மானம். என்னை முந்திக் கொண்டு அவர் கொண்டு வந்து விட்டதில்தான் எனக்கு ஆட்சேபம்’ என்று அண்ணா சொன்ன போது அவையில் சிரிப்பலை எழுந்தது(மாநிலங்களவையில் மட்டுமின்றி, தமிழக சட்ட மன்றத்திலும் அண்ணாவின் நகைச் சுவை கொடி கட்டிப் பறந்தது. 1957 முதல் 1962 தொடக்கம் வரை அண்ணா தமிழக சட்ட மன்றத்தில் ஓர் உறுப்பினராகத் தம்முடன் பதினான்கு பேரையும் சேர்த்துக் கொண்டு சட்ட மன்ற தி. மு.க.வின் தலைவராக அமர்ந்திருந்தார்கள். உறுப்பினர் எண்ணிக்கை குறைவாக உள்ள கட்சி என்பதால் அதிகாரப் பூர்வமான எதிர்க் கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்து அவருக்கு இல்லை. தி.மு.க. வை விட இரண்டு உறுப்பினர்கள் கூடுதலாகப் பெற்றிருந்த சீர்திருத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராமசாமி முதலியாருக்குக் கூட அந்த அந்தஸ்து இல்லை. எனினும் அன்றைய சட்ட சபையில் அண்ணா ஓர் தகுதி வாய்ந்த எதிர்க் கட்சித் தலைவராகவே மதிக்கப்பட்டு வந்தார். எனினும் அப்போது கல்வி, நிதி ஆகிய துறைகளுக்குப் பொறுப்பு வகித்து வந்த அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஒரு சந்தர்ப்பத்தில் சட்டசபையில் பேசும்போது, ” தி.மு.க.வினர் சட்ட மன்றத்திற்குப் புதியவர்கள். அவர்களுக்குச் சபையின் மரபுகளைப் பின்பற்றத் தெரியவில்லை. ஒரு முறையான எதிர்க் கட்சியாக சட்ட சபையில் பேசவோ நடந்துகொள்ளவோ அவர்களுக்குத் தெரியவில்லை” என்று ஏளன தொனியில் கூறினார். அண்ணா அவர்களுக்குப் பேசும் முறை வந்தபொழுது சுப்பிரமணியம் கூறியதைக் குறிப்பிட்டு. “நாங்கள் பொதுக் கூட்டம் போட்டுப் பேசிக் கோண்டிருந்த போது வெட்ட வெளியில் பேசிக் கொண்டிருக்காதே, முடிந்தால் உள்ளே வந்து பேசு என்றார்கள். சரி என்று உள்ளே வந்தோம். இங்கே பேசுவதைக் கேட்டு உனக்கு ஒரு எதிர்க் கட்சி எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசத் தெரியவில்லை என்கிறீர்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஒரு எதிர்க் கட்சி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வெகு சீக்கிரமே நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் போலிருக்கிறது’ என்று சொன்னதும் சுப்பிரமணியமும் தொழில் அமைச்சர் வெங்கடராமனும் அடக்க மாட்டாமல் பெரிதாகச் சிரித்தார்கள். முகத்தை எப்போதும் கடுகடுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் காமராஜரால்கூட சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அண்ணா நகைச் சுவையாக அப்படிக் கூறியது ஒரு தீர்க்க தரிசனம் போல வெகு விரைவிலேயே தமிழக சட்ட மன்றத்தில் காங்கிரசை ஒரு எதிர்க் கட்சியாக உட்கார வைத்துவிட்டது).

மாநிலங்களைவையில் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தின் மீது அண்ணா நிகழ்த்திய நீண்ட உரையும் என்னிடம் உள்ளது என்றாலும் அதனை முழுமையாகத் தமிழாக்கம் செய்து வெளியிட எனக்கு அவகாசம் இல்லை. அவ்வாறு வெளியிட்டால் இந்தக் கட்டுரையும் மிகவும் நீண்டு சலிப்பூட்டிவிடும். ஆகையால் சுவையான சில பகுதிகளை மட்டும் எனது தகவலாக அளிக்க முற்படுகிறேன்.

தமிழ் நாடு மாநிலத்திற்குத் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று ஒரு தனி நபர் தீர்மானம் 1961 லேயே தமிழக சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தவர் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் (ஈரோடு சின்னதுரை என்று ஞாபகம்). தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அதனை ஆதரித்தன. அதன் விளைவாக அன்று காமராஜர் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசு, அரசின் ஆவணங்கள் தமிழில் அளிக்கப் படும்போது தமிழ்நாடு அரசாங்கம் என்று குறிப்பிடப்படும் என்றும் ஆங்கில மொழி பயன்படுத்தப் படுகையில் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரே தொடர்ந்து கையாளப்படும் என்றும் அறிவித்து, அதனை நடைமுறைப் படுத்தலாயிற்று. மேலும், அந்தத் தீர்மானம் குறித்து அரசுத் தரப்பில் சி. சுப்பிரமணியம் பேசுகையில், மாநிலத்தின் பெயரில் மாற்றம் செய்ய வேண்டுமானால் அரசியல் சாசனத்தில் பெயர்த் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் ஆகையால் அது பாராளுமன்றத்தில் வைக்கப் படவேண்டிய தீர்மானம் என்றும் சொன்னார். அதன் பேரில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, அனைத்து எதிர்க் கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன.

அண்ணா அவர்கள் மாநிலங்களைவையில் பேசும்போது ஆங்கிலத்தில் எழுதுகையில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் எழுதும்போது தமிழ்நாடு மாநிலம் என்றும் பின்பற்றப்படும் தமிழக அரசின் நடைமுறையைக் குறிப்பிட்டு, “இதற்குக் காரணம் நமது தலைமை அரசுக்கு எதையும் நமக்கு ஒன்று, பிறருக்கு ஒன்று என்பதாக இரண்டிரண்டாக வைத்துக் கொள்வதில் சுவாரசியம் இருக்கிறது. இந்தியா, பாரத் என்று இரண்டு பெயர்களை வைத்துக் கொள்கிறோம். தேசிய கீதமாக ஜன கண மன வும் பாடுகிறோம், வந்தே மாதரமும் பாடுகிறோம். நமக்கு எல்லாமும் இரண்டு தொகுப்புகளாக வேண்டும். இங்கிருந்து ஒன்று, அங்கிருந்து ஒன்று என எடுத்துக் கொண்டு உபயோகிக்கிறோம்’ என்று சொல்லி வந்த அண்ணா, இரு தொகுப்புகள் என்பதற்கு “டூ ப்ளாக்ஸ்’ என்று குறிப்பிடுகையில் வேண்டுமென்றே “டூ புல்லாக்ஸ்’ என்று குறும்பாகக் குறிப்பிட்டுவிட்டுப் பிறகு ப்ளாக்ஸ் என்று திருத்திக் கொண்டார்கள் (எதற்கெடுத்தாலும் நமக்கு இரு எருதுகள் தேவைப்படுகின்றன என்று அண்ணா சொன்னதற்குக் காரணம், அன்றைய கால கட்டத்தில் காங்கிரஸின் தேர்தல் சின்னம் இரட்டைக் காளைகள் என்பதாக இருந்தது. எனவே அண்ணா அப்படிக் கூறவும் அவையில் சிரிப்பு பீறிட்டெழுந்தது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் முடிந்தபோதெல்லாம் தனது சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முற்படுகிறது என்கிற கிண்டல் அதில் பொதிந்திருப்பதைப் புரிந்து கொண்டதால்தான் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரித்தார்கள்).

விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் க. சந்தானம் (பழம் பெரும் காங்கிரஸ்காரர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், லெடினண்ட் கவர்னர் என்றெல்லாம் இருந்தவர் ), “சென்னையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது. சென்னைக்காகப் போராட்டம் எல்லாம் நடத்த வேண்டியதாயிற்று’ என்று கூறி, பெயர் மாற்றம் தேவையில்லை என்று பேசினார். அண்ணா அவர்கள் அதனைக் குறிப்பிட்டு, “அந்தப் போராட்டத்தில் எனக்கும் ஒரு பங்கு இருந்தது. ஆனால் அப்போது என்னோடு நண்பர் சந்தானம் இருந்திடக் காணேன்’ என்றார்கள். மேலும் பேசுகையில், “அது சென்னையைத் தமிழ் நாட்டோடு இருத்திக் கொண்ட விவகாரம். இது தமிழ் நாடு மாநிலத்திற்கு சென்னை என்பதற்குப் பதிலாகத் தமிழ் நாடு எனப் பெயர் மாற்றக் கோரும் தீர்மானம் என்று வேறுபாட்டைச் சுட்டிக் காட்டினார்கள். சென்னையைத் தமிழ் நாட்டோடு தக்க வைத்துக் கொண்டது பற்றி அண்ணா குறிப்பிட்ட போது, அக்பர் அலிகான் என்ற உறுப்பினர் குறுக்கிட்டு ஆந்திராவைக் கொடுத்துவிட்டு சென்னையைத் தக்க வைத்துக் கொண்டீர்கள் என்று ஏளனமாக க் குறிப்பிட்டதும், “ஆந்திரத்தின் சம்மதத்துடன்’ என்று உடனுக்குடன் அதனை அண்ணா திருத்தினார்கள். அப்போது அவையில் பாராட்டொலி எழுந்தது. காரணம், அக்பர் அலிகான் “அட் தி காஸ்ட் ஆஃப் ஆந்திரா’ என்று சொன்ன அடுத்த கணமே “வித் த கன்ஸன்ட் ஆஃப் ஆந்திரா’ என்று அண்ணா அழகாகத் திருத்தியது
தான். மொழி வழி மாநில அடிப்படையில் ஆந்திரம் சென்னை மாகாணத்திலிருந்து தனி மாநிலமாகப் பிரிந்திருக்கையில் அதைக் கொடுத்துவிட்டு சென்னையைத் தக்க வைத்துக் கொண்டதாகக் கூறுவதன் அபத்தத்தை அண்ணா அவ்வாறு நயமாகச் சுட்டிக் காட்டினார்கள்.

தமிழ் நாடு என்ற பெயர் எதிலும் இல்லை என்று தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரே சொன்னபோது, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து அண்ணா தமிழ் நாடு என்ற பிரயோகம் இருப்பதை எடுத்துக் கூறினார்கள்.

“தமிழ் நாடு என்ற பெயர் மாற்றம் கோரி நடந்த போராட்டங்களையெல்லாம் நாங்கள் சந்தித்து விட்டோம். ஒருவர் அதற்காக உண்ணாவிராதம் இருந்து இறந்தே போனார். அதன் பிறகும் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள்’ என்று ராஜகோபலன் என்ற உறுப்பினர் குறுக்கிட்டுப் பெருமை பேசினார்.

“ஆம், ஒருவர் இதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தே போனார். அவர் பெயர் சங்கர லிங்க நாடார். எந்தக் கட்சியையும் சாராத அவர் எங்கள் மாநில முதல்வரின் உறவினருங்கூட. அதன் பிறகுங் கூட உங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய மனம் வரவில்லை என்றால், அதனை ஒரு பெருமையாகக் கூறிக்கொள்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு இருக்கிற மனிதாபிமானத்தைக் காட்டுகிறது’ என்று அண்ணா சொன்ன போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். “அதன் பிறகும் காங்கிரசுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்றால் அது ஒரு துயரம் மிக்க பிரத்தியட்ச நிலவரம் என்று அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசுகையில் சொன்னதும், “உங்களுக்கு துயரமாகத் தோன்றும் நிலவரம் இங்கு நிரந்தரமாக இருக்கும்’ என்று ஸி. ஆர். பட்டாபிராமன் முதலிய உறுப்பினர்கள் கிண்டலாகக் கூறினார்கள்.

தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரர் எவரும் தமிழ் நாடு பெயர் மாற்றம் தேவையில்லை என்று மக்கள் முன்பு பொதுக் கூட்டத்தில் இன்று பேச முடியாது என்று அறைகூவல் விடுப்பதுபோலக் கூறிய அண்ணா, “பெயர் மாற்றம் வேண்டுமென்று அங்கு சொன்னால் இங்கு சொல்ல வேண்டும் என்கிறீர்கள், இங்கு சொன்னால் அங்கு சொல்லவேண்டும் என்கிறீர்கள். ஏனென்றால் இரண்டு இடங்களிலுமே நீங்கள் காலூன்றிக் கொண்டிருக்
கிறீர்கள். இது ஒரு சங்கடமான நிலைமை’ என்று மேலும் சொன்னபோது, காங்கிரஸ் உறுப்பினர்களான பட்டாபிராமனும் ராஜகோபாலனும் ” உங்களுக்கு இந்தச் சங்கடமான நிலைமை என்றுமே நீடித்துக்கொண்டுதானிருக்கும்’ என்று ஏளனம் செய்தார்கள். அப்போது அண்ணா மிகவும் உருக்கமாக,” இதனை காங்கிரஸ், தி.மு.க. என்கிற கட்சிக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம், ஒரு மாநில மக்களின் அபிலாஷை என்று பாருங்கள்’ என்று சொன்னார்கள்.

அந்தச் சமயத்தில் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களும் ஒரு காங்கிரஸ் உறுப்பினராக அவையில் அமர்ந்திருந்தார். தமிழ் நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன ஆதாயம் என்று அவர் குறுக்கிட்டுக் கேட்டார். அப்போது அண்ணா அவர்கள் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் கூறியதை அண்ணாவின் ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

“What do I gain? What have you gained by renaming Parliament as Lok Sabha? What have you gained by renaming Council of States as Rajya Sabha? What have you gained by renaming President as Rastrapathi? Therefore I say what do you loose? This is important because if you were to loose something precious, we would not press for it. If you do not loose something fundamental, we will press for it. The other point was raised, what do you gain? We gain satisfaction sentimentally; we gain satisfaction that an ancient name is inculcated in the hearts of millions and scores of millions of people. Is that not enough compensation for the small trouble of changing the name?’

“எனக்கு என்ன ஆதாயமா? லோக் சபா, ரஜ்ய சபா, ராஷ்ட்ரபதி என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ததால் கிட்டிய ஆதாயம் என்ன’ என்று கேட்ட அண்ணா, “மாறாகப் பெயர் மாற்றத்தால் என்ன இழப்பு ஏற்படும்? மிக முக்கிய இழப்பு அதனால் ஏற்படும் என்றால் விட்டுவிடலாம்’ என்றார். “அடிப்படையில் இழப்பு ஏதும் இல்லை என்றால் நாம் பெயர் மாற்றத்தை வலியுறுத்துவோம். அதன் மூலம் உணர்வு பூர்வமான மன நிறைவு கிட்டும் என்பதுதான் இதில் ஆதாயம். ஒரு தொன்மையான பெயர் மீட்டெடுக்கப்பட்டு மக்கள் மனதில் பதிய வைக்கப் படுவதுதான் ஆதாயம். பெயர் மாற்றம் என்கிற ஒரு சிறிய சிரமத்தை மேற்கொள்வதற்கு இவ்வளவு சரியீடு போதாதா? ‘ என்று அண்ணா மேலும் சொன்னார்கள்.

தமிழ் நாட்டிற்கு சென்னை மாநிலம் என்ற பெயர்தான் இருக்கும் என்றால் கேரளத்திற்குத் திருவனந்தபுரம், ஆந்திரத்திற்கு ஹைதராபாத், குஜராத்திற்கு ஆமதாபாத் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று அண்ணா சொன்னபோதும் அவையில் சிரிப்பு தவழ்ந்தது.

சென்னை என்பது தமிழ் நாடு என்ற மாநிலத்தின் தலைநகரம். மாநிலத்திற்கும் அதுவே பெயர் என்றால் அது குழப்பமூட்டுவதாகும் என்று அண்ணா மேலும் விளக்கினார். எனினும் இறுதியில் தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் தோற்கடித்தார்கள். எண்ணம் இருந்திருக்குமேயானால் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள், நாங்களே அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம் என்று அரசுத் தரப்பில் சொல்லியிருக்கலாம் அல்லவா? அண்ணாவும் தைக் குறிப்பிடாமல் இல்லை. தீர்மானம் கொண்டு வந்தவரின் (கம்யூனிஸ்ட் கட்சிக்குரிய சிவப்பு) நிறத்தைப் பார்த்துத்தான் நீங்கள் எதிர்க்கிறீர்கள், நோக்காத்திற்காக அல்ல, ஆகவே நீங்களாகவே பெயர் மாற்றத் தீர்மனத்தைக் கொண்டு வந்து விடுங்கள் என்று அண்ணா ஆளும் தரப்பை வேண்டினார்கள்.

தமிழ் நாட்டிற்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே தமிழ் நாடு என்ற பெயர் சூட்டப்படுவதற்கு அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியிருந்தது.

மொழியின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பது விவேகமற்ற செயல் என்பதுதான் என்றுமே எனது தனிப்பட்ட கருத்தாக இருந்து வந்துள்ளது. ஹிந்துஸ்தானம் நிர்வாக வசதிக்காக தெற்கு , வடக்கு, கிழக்கு, மேற்கு என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டு, ஆங்காங்கு வழங்கும் மொழிகளுக்கெல்லாம் சம வாய்ப்பும், சம அந்தஸ்தும், சம பயன்பாடும் இருக்கும்படியான ஏற்பாட்டைச் செய்திருந்தால் இன்றைக்குத் தலையெடுத்து விட்டிருக்கிற எத்தனையோ பிரச்சினைகளுக்கு இடமில்லாமலேயே போயிருக்கும். நெஞ்சில் உறுதியும், தேசிய உணர்வும், அப்பழுக்கில்லாத பொது வாழ்க்கையும் கொண்டிருந்த கோவிந்த வல்லப பந்த் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, ஐம்பதுகளின் இறுதியில் அப்படியொரு யோசனையும் எழுந்தது.
தெற்கில் உள்ள நான்கு மாநிலங்களையும் இணைத்து, அதற்கு தட்சிணப் பிரதேசம் என்று பெயரிடலாம் என்று கூறப்பட்டது. வேண்டுமானால் “திராவிடஸ்தான்’ என்று கூட அதற்குப் பெயரிடலாம் என்றும் பந்த் கூறினார்கள்.

இதனை ராஜாஜியும் ஆதரித்தார்கள். காமராஜர் முதலமைச்சராக இருக்கும் வாய்ப்பை இழக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜாஜி இதை ஆதரிக்கிறார் என்று அப்போது அவர் மீது பழி சுமத்தினார்கள். தட்சிணப் பிரதேசம் என்ற கருதுகோள் திராவிட நாடு என்ற உங்களது கோட்பாட்டிற்கு உடன்பாடானதுதானே, இவ்வாறு அமைவதை ஒரு தொடக்கமாகக் கொண்டு ஆதரித்தால் என்ன என்று கேட்டபோது அண்ணா அதற்கு பதில் அளிக்காமல் புன்னகைத்தார்கள். பல சந்தர்ப்பங்களில் அண்ணா அவர்கள் வெறும் புன்னகையையே பதிலாக அளித்துவிடுவார்கள். “சரிதான் ஆனால் ஏற்க இயலாத நிலைமை இருக்கிறது’ என்று அதற்கு அர்த்தம். ஏனென்றால் துரதிருஷ்ட வசமாக அண்ணா அவர்கள் ஓர் அரசியல்வாதியாகவும் இருந்தார்கள். ராஜாஜியும் ஓர் அரசியல்வாதியாக இருந்த போதிலும், எத்தகைய அபகீர்த்தியையும், பழிச் சொல்லையும் தாங்கிக்கொள்ளும் படிநிலையை அடைந்துவிட்டிருந்ததாலும், மக்கள் நலனுக்கான காரியத்தை மேற்கொள்ள மக்கள் ஆதரவு தேவையில்லை என்று கருதுகிறவராக இருந்ததாலும் தமக்குச் சரியென்று பட்டதை வெளியில் சொல்லவோ செயல்படுத்தவோ என்றுமே தயங்கியதில்லை.

+++++

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்