சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

தமிழர் சமூகநீதி பேரவை



இடம் : எல்லைப்போராளி ம.பொ.சி. அரங்கம்

நாள் : ஆடவை திங்கள் 13ம் நாள் (27.06.2008)

தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் “உலக சுற்றுச்சூழல் நாள்”, ம.பொ.சி நூற்றாண்டு, உ.வே.சா., தியாகி விசுவநாத தாசு, காயிதே மில்லத், கக்கன் ஆகியோரின் பிறந்தநாள், பெருஞ்சித்தரனார் நினைவு நாள், நெல்ல எழுச்சியின் நூற்றாண்டு ஆகியவற்றை நினைவுகூறும் விதமாக, “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற சிறப்புக் கருத்தரங்கத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று, கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்க த.ச.பேரவையின் து.செயலர் தோழர் நிலவன் அவர்களையும் முன்னிலை வகிக்க த.ச.பேரவையின் ஆலோசகர் தோழர்.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்களையும், சிறப்பு அழைப்பாளராகவும் கருத்தரங்கத்திற்கு சிறப்புரையாற்றவும் பொறிஞர்.இளங்கோவன் அவர்களையும் மேடைக்கு அழைத்தார் த.ச.பேரவையின் தலைவர் தோழர்.தமிழ்நாடன் அவர்கள்.

தலைமையேற்ற தோழர் நிலவன் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கத்தையும், அரங்கில் ஒட்டப்பட்டிருந்த தமிழ்த்தலைவர்களின் சிறப்புக்களையும் கூறி முதல் அமர்வின் முதல் பேச்சாளராகப் பேச த.ச.பேரவையின் து.தலைவர் தோழர் வயி.பி.மதியழகன் அவர்களை அழைத்தார்கள்.

தோழர் வயி.பி.மதியழகன் தனது உரையில், ஊமைத்துரையின் போராட்ட வரலாற்றைக் கூறி அவை இந்திய விடுதலைபோரில் அவை சரியாகப் பதிவு செய்யப்படாததையும், அதற்கு தமிழர்களும், தமிழக அரசும் முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். அடுத்து வ.உ.சியின் ஆங்கில அரசு எதிப்பு போராட்டத்தினையும் தியாகி விசுவநாத தாசின் சிறப்புக்களையும் விரிவாக எடுத்துக் கூறி இச்செய்திகளை பகிர்ந்து கொள்வதின் நோக்கத்தையும், அவற்றை நாம் உள்வாங்கி செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கூறி விடைபெற்றார்கள்.

இதைத் தொடர்ந்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இயற்றிய “உலகத் தமிழர் பண்” பாடலை எழுச்சியோடு பாடினார்கள்.

அடுத்த பேச வந்த த.ச.பேரவையின் பொ.செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் அவர்கள், ம.பொ.சியின் எல்லைப் போராட்டத்தையும் கக்கன் அவர்களின் தூய்மையான அரசியல் வாழ்வினையும் விளக்கிக் கூறினார்கள்.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் தமிழ்ப்பணிகளையும், அரசியல் சிறப்புக்களையும் த.ச.பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். அமானுல்லா அவர்கள் தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.

அரசியல் ஆளுமைகள் குறித்த கையேட்டினை த.ச.பேரவையின் பொருளாலர் தோழர்.நாஞ்சில் சுரேசு அவர்கள் வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் தோழர்.அன்பரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இதையடுத்து தோழர்.இராமகிருட்டினன் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட, தோழர். பழ.கிருட்டிணமூர்த்தியின் முன்னிலை உரையோடு முதல் அமர்வு நிறைவுற்றது.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர்.இரா.க.சரவணன் அவர்கள் படிக்க பலத்த கரவொலி எழுப்பி அரங்கத்தினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றினர்.

இரண்டாம் அமர்வின் தொடக்கமாக “Hell for leather” என்ற ஆவணப்படத்தை தோழர்.சித்தார்த் அவர்கள் திரையிட்டு அது கூறும் சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளையும், அதன் பாதிப்புக்களையும் விளக்கி “யாதும் ஊரே, யாதும் கேளீர்” என்ற மொழியக் கேட்டுக்கொண்ட தேவதேவனையும் மேற்கோள் காட்டினார்கள்.

இதையடுத்து சுற்றுச்சூழல் குறித்த கையேட்டினை தோழர்.தமிழ்நாடன் வெளியிட பொறிஞர்.இளங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தோழர்.சுகந்த் பிரியதாசன் அவர்களின் கவிதையைத் தொடர்ந்து,பேச வந்த தோழர்.தமிழ்நாடன் அவர்கள், சுற்றுச்சூழல் தினம் அய்க்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத் துறையின் சார்பாக கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், அது சார்ந்து செயல்படும் தமிழர்களை அறிமுகப்படுத்தி அதே போன்று நாம் அனைவரும் செயல்படக் கேட்டுக்கொண்டார்கள். அதையடுத்து சுற்றுச்சூழல்நாள் உறுதிமொழியினை படிக்க அரங்கத்தினர் அனைவரும் உடன் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கும் வழிமுறைகளையும் கூறி தனது உரையை முடித்துக்கொள்ள, இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை த.ச.பேரவையின் து.பொருளாலரும், செயற்குழு உறுப்பினருமான தோழர். முனு.சிவசங்கரன் அவர்கள் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி தீர்மானங்களை ஆதரித்தனர்.

நிறைவாக சிறப்புரையாற்ற வந்த பொறிஞர். இளங்கோவன் அவர்கள், தமிழர் சமூகநீதி பேரவையின் செயல்பாடுகளைப் பாராட்டி அது செயல்பட வேண்டியப் பாதையையும், அதற்கான தேவையையும் கூறினார்கள். அதே போன்று இன்றைய நிகழ்வினையும் விரிவாக ஆய்ந்து அதன் சிறப்புக்களைக்கூறி அதற்காக தமது பாராட்டுதலையும் ஆதரவினையும் வழங்கினார்கள். தனது உரையின் போது தமிழகத்தில் கல்விக்கென வாடும் ஏழைச்சிறுவர்களுக்கு தாம் செய்து வரும் தொண்டினையும், அதைக் கண்டு பெரும் எண்ணிக்கையிலான நண்பர்கள் தங்களது பொருளுதவினை நல்கி ஆதரிப்பதையும் கூறி, தமிழ்ச்சமூகம் இன்றளவும் பெரும் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் அதற்கென வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்ற தமிழர்கள் உதவிட வேண்டியதன் அவசியத்தைகூறி அதற்காக தாம் ஒரு பாலமாக இருந்து செயல்படப் போவதாகவும் கூறினார்கள்.

கருத்தரங்க வெளியீடுகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தோழர்.செந்திகுமார் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட அனைவருக்கும் சிற்றுண்டி பறிமாறியபின் தோழர்.நாஞ்சில் சுரேசு நன்றி உரையாற்ற

விழா இனிதே நிறைவுற்றது.

தமிழர் சமூகநீதி பேரவை, குவைத்
www.tspkuwait.blogspot.com

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்