நினைவுகளின் தடத்தில் – 12

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

வெங்கட் சாமிநாதன்



பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தப் பிரியத்தின் காரணமாகத்தான் என்னை நிலக்கோட்டைக்கு தன்னுடன் அழைத்து வந்துவிட்டாள். மிகச் சிறிய வயதிலேயே. என் நினைப்பு, எனக்கு இரண்டு வயது சிறியவளான என் தங்கை பிறந்த பிறகு, என்னைப் பாட்டி தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்திருப்பாள் என்று. இல்லையெனில் பாட்டிக்கும் என்னைப் பிரித்து அழைத்துக்கொண்டுவர மனம் இருந்திராது. என் அம்மாவும் அப்பாவும் அதற்குச் சம்மதித்திருக்கமாட்டார்கள். இதெல்லாம் என் யூகம் தான். இப்போது இதை எழுதும் போது எழும் யூகங்கள். நான் இதுபற்றியெல்லாம் அப்போதும் சரி, பின்னரும் சரி சிந்தித்ததும் இல்லை. யாரிடமும் கேட்டதும் இல்லை. உடையாளுரில் படிக்க வசதி ஏதும் இல்லையாதலால், ஒன்றாம் வகுப்பு படிக்கக் கூட பள்ளிக்கூடம் இருந்ததில்லை, அதற்கு மூன்று மைல் கப்பி ரோடில் மாட்டு வண்டியில் சென்றடையக்கூடிய வலங்கிமான் போகவேண்டும். கும்பகோணத்திற்குப் போக முடியாது. வயல் வரப்புகளின் மீது நடந்து மூன்று ஆறுகளைக்கடந்து தான் கும்பகோணம் போக முடியும்.

மாமாவுக்கு என் படிப்பில் மாத்திரம் இல்லை, பள்ளிப் பையன்கள் எல்லோரும் நல்லபடியாக படித்து பரிட்சையில் பாஸ் செய்யவேண்டுமே என்கிற கவலை அதிகம். அதில் தான் தனக்கும் நல்ல பெயர். தான் தலைமை ஆசிரியராக இருக்கும் பள்ளிக்கூடத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும். நான் அப்படி ஒன்றும் பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரப் பையன் இல்லை. ஒண்ணாங்கிளாஸில் கடைசி வரிசையில் வாத்தியாருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டு வகுப்புக்கு வெளியே இருந்த வேப்ப மரத்தின் காக்கைகளையும் குருவிகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாரிமுத்து வாத்தியார் கை என் பின் மண்டையைத் தாக்கியது. வகுப்பு பூராவும் சிரித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. மாரிமுத்து வாத்தியாரும் சிரித்தார். அன்று எனக்கு மிகுந்த கோபம். வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் என் சின்ன மாமாவும் நானும் சேர்ந்து வரும்போது சின்ன மாமாவுடன் எனக்குச் சண்டை. சின்ன மாமாவிடமிருந்த ஏதோ ஒரு படத்தை எனக்கு வேண்டுமென்று நான் அடம் பிடிக்க சண்டை, அழுகை, அடி எல்லாம் வரிசையாகக் கிடைத்தன. அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் போது மாரிமுத்து வாத்தியார், “இந்தா இது உனக்குத் தான் மாமாகிட்டே கொடுத்துராதே” என்று சொல்லி ஒரு படத்தை எனக்குக் கொடுத்தார். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. அது ராமர் வனவாசத்தின் போது லட்சுமணனும் வானரங்களும் புடைசூழ்ந்திருக்க அனுமனிடமோ அல்லது சுக்ரீவனுடனோ ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அல்லது அவர்கள்தான் ராமனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ.

நான் ஒன்றும் மோசமில்லை. அந்த சின்ன வகுப்புகளை ·பெயிலாகாது கடந்து தான் வந்திருக்கிறேன். அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த வாத்தியார்களில், நிறைய கட்டுக்குடுமியோடு இருந்த மூக்கையா வாத்தியாரை எனக்குப் பிடிக்கும். ஐந்தாம் வகுப்பில் ரங்க சுப்பிரமணியம் என்ற வாத்தியாரையும் எனக்குப் பிடிக்கும். அவர் நன்றாகப் பாடுவார். எங்கள் தெருவின் கோடி வீட்டில், பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த கடைசி வீட்டில் இருந்தார். அவரிடம் பாட்டுச் சொல்லிக் கொள்ள பெருமாள் கோவில் பக்கத்திலிருந்து இரண்டு சிறுமிகள் வருவார்கள். ஒரு சமயம், ” கடைக்குப் போய் மூக்குப் பொடி வாங்கி வரயா, வாங்கி வந்தால், உனக்கு பரிட்சைக்கு வரும் கேள்விகளில் மூன்று சொல்லித் தருவேன். உனக்கே உனக்கு மாத்திரம்” என்றார். அந்த லஞ்சம் இல்லாமலேயே அவருக்கு வாங்கிக் கொண்டு வந்திருப்பேன். வகுப்பில் யாரும் செய்வார்கள். இரண்டாம் வகுப்பு வாத்தியாராக வெங்கட் ராமய்யர் என்பவர் இருந்தார். நீண்ட குடுமி. பஞ்சகச்சம் வைத்துத்தான் வேட்டி கட்டியிருப்பார். பெரிய குடும்பம். சத்திரத்தை ஒட்டிய ஒரு வீட்டில் இருந்தார். நாங்கள் பள்ளிக்கூடம் போகும் வழியில் அவர் வீடு. அவர் ஏதோ வேலையில் இருப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டே போவோம். பள்ளிக்கூடத்துக்கு தாமதமாகத் தான் வருவார். எல்லோருடனும் சண்டை போடுவார். அடிக்கடி அவர் மாமாவையும் மற்ற வாத்தியார்களையும் ஏதோ சொல்லிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டிருப்பார். அவருடைய பிரச்சினைகள் அவருக்கு என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.

மூன்றாம் வகுப்பு வாத்தியார் என்று நினைக்கிறேன். ஜெயராஜ். நல்ல ஆகிருதியான தேகம். தேகப் பயிற்சி செய்து பெற்ற உடல் வளம். எங்கள் பள்ளிக்கே டிரில் வாத்தியாராக இருந்தார். சிரித்த முகத்தோடு தான் எப்போது காணப்படுவார். இடையில் அவர் வாத்தியார் உத்யோகத்தை விட்டு விட்டார். வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும் பாதி வழியில் ஓடையைத் தாண்டிய பிறகு வரும் கடைத்தெருவில் நாடார் ஸ்கூலுக்குக் கொஞ்சம் தள்ளிய ஒரு இடத்தில் ஒரு கோவாப்பரேட்டிவ் பாங்கு ஒன்று துவங்கப்பட்டிருந்தது. அதில் அவரைப் பார்த்தேன் ஸ்கூலுக்குப் போகும் வழியில். பிறகு சில மாதங்கள் கழித்து அந்தக் பாங்கு வாசலில் சில போலீஸ்காரர்களுடன் அவரைப் பார்த்தேன். அவர்களுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அன்று காலையில் அவர் பாங்கைத் திறக்க வந்தபோது பாங்கின் பலகைகள் இரண்டு திறந்திருந்ததாகவும் உள்ளே இருந்த பணப்பெட்டி உடைந்து கிடக்க பணம் திருட்டுப் போய்விட்டது. அதைப் பார்த்த அவர் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டதாகவும் சொன்னார்கள். அந்த சிரித்த முகத்தை நான் பின்னர் பார்க்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து அவரை நிலக்கோட்டை சப்-ஜெயிலின் முன்னிருந்த புல் வெளியில் மற்ற கைதிகளோடு போலீஸ் காரர்கள் ஏதோ சொல்ல அதன் படி ஏதோ செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகிவிட்டால் நான் வரும் குறுக்கு வழியில் தான் தாலுக்கா ஆபீஸ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆபீஸ், மாஜிஸ்ட்டிரேட் கோர்ட், ஜெயில் எல்லாம் இருந்தன. ஒரு சின்ன காம்பவுண்ட் சுவரைத் தாண்டிச் சென்றால் பள்ளிக்கூடத்திற்குச் சீக்கிரம் போய்விடலாம்.

அம்பி வாத்தியாரிடம் எனக்கு பயம் தான் உண்டு. அவர் எனக்கு என்றுமே வகுப்பு வாத்தியாராக இருந்ததில்லை. நாங்கள் இருந்த தெருவிலேயே மிக அருகிலேயே இருந்ததும், மாமாவுக்கு அநேக சமயங்களில் ஒத்தாசையாக இருந்தது, அவருக்கு தான் நினைத்த சமயத்தில் என்னை அதட்டும் அதிகாரம் கிடைத்திருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவர் ஒன்றும் அப்படி முரடர் இல்லை. என் தவறுகள் அவர் கண்களில் அதிகம் படும். அவர் கண்டிப்பார். அவ்வளவே. அப்படிப்பட்டவர் எனக்குப் பிரியமாக எப்படி இருக்கமுடியும். எனக்கு ரொம்பவும் பிரியாக இருந்தவர் புதிதாக வந்து சேர்ந்த, எனக்கு ஏழாம் வகுப்பில் வாத்தியாராக இருந்த டேவிட் ஜெயராஜ் டேனியல் என்பவர். மிக இனிமையானவர். சிரிக்கச் சிரிக்க பேசிக்கொண்டே யிருப்பார். நன்றாகவும் பாடங்கள் சொல்லிக் கொடுப்பார். பையன்கள் அவரோடு விளையாடவும் செய்யலாம்.

மாமா கண்டிப்பானவர். வகுப்புப் பாடங்களும் நடத்த வேண்டும். வாத்தியார்களையும் கட்டி மேய்க்கவேண்டும். மானேஜருக்கும் பதில் சொல்லியாக வேண்டும். வீடும் அவருக்கு நிம்மதி அளித்ததில்லை. அவர் தலைமை ஆசிரியரான பிறகு எட்டாம் வகுப்பை அவர்தான் நடத்துவார். நான் எட்டாம் வகுப்புக்கு வந்ததற்கு முன் வருடத்திலிருந்து என்று நினைப்பு, அல்லது அந்த வருடத்திலிருந்து தானோ என்னவோ, எலிமெண்டரி ஸ்கூலின் எட்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு அரசே பரிட்சை நடத்தும் என்று அரசு ஆணை வந்திருந்தது. எஸ்.எஸ்.எல்.ஸி மாதிரி இது இ,.எஸ்.எல்.ஸி பரிட்சை. ஆக மாணவர்கள் தேர்வது அந்தந்த பள்ளி வாத்தியார்களின் கையில் இல்லை. நிறைய பேர் பாஸ் செய்ய வேண்டும். பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேர் கிடைக்கவேண்டும்.

பரிட்சைக்கு மூன்று நான்கு மாதங்கள் முன்பே மாமா வீட்டிலேயே டியூஷன் நடத்த ஆரம்பித்தார். எப்போதும் உண்டு, எல்லா வகுப்புகளுக்கும் வேண்டியவர்களுக்கு ட்யூஷன் உண்டு என்ற போதிலும் இதில் அரசு நடத்தும் பொது பரிட்சையாதலால் ஜபர்தஸ்தும் கெடுபிடியும் அதிகம். ட்யூஷன் படிக்க வரும் பையன்கள் இரவு ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். இரவு பத்து மணி வரை பாடங்கள் நடக்கும். சிலர் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்து எங்கள் வீட்டுத் திண்னையிலேயே படுத்துக் கொள்வார்கள். அவர்களை (என்னையும் சேர்த்து) காலை ஐந்து மணிக்கு அவர்களை எழுப்பி மாமா பாடம் கேட்பார்.

ட்யூஷன் படிக்க வந்தவர்களில் பிச்சை என்பவன் எங்களில் எல்லாம் மூன்று வயதோ என்னவோ மூத்தவன். எங்களை விட உயரமானவன். நல்ல வாளிப்பான உடம்பு அவனுக்கு. ஒழுங்காகப் படிக்கத் தான் மாட்டான். அதைத் தவிர மற்ற உலக விவகாரங்களில் மிக கெட்டிக்காரன். தைரியசாலி. நாங்கள் படித்துக்கொண்டிருப்போம். அவன் திடீரென எழுந்து போய்விடுவான். பின் அரை மணி முக்கால் மணி கழித்துத் தான் வருவான். கேட்டால் ஒண்ணுக்குப் போகப் போனேன் என்பான். இல்லை வேறு ஏதோ சொல்வான். ஒரு நாள் அவனால் தன் பிரதாபங்களைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. ‘ட’ வடிவிலான எங்கள் தெருவின் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் முனையில், குளத்துக்கு எதிராக ஒரு தாசி வீடு இருந்தது அதை அடுத்து இரண்டு வீடுகள் அதில் வாடகைக்கு வருவார் போவார் உண்டு என்று சொல்லிருந்தேனே அதில் ஒரு வீட்டில் ரெவென்யு இன்ஸ்பெக்டர் ஒருவர் வாடகைக்கு அப்போது குடி வந்திருந்தார். அவருடைய பெண், சுந்தரி என்று பெயர் என்று ஞாபகம், அவள் வாசற்படியில் உட்கார்ந்திருப்பாள். நாங்கள் மாலையில் பள்ளியிலிருந்து வரும் போது அவளைக் காணலாம். அந்த சுந்தரிக்கு பிச்சையைப் பிடித்து விட்டதாம். அவளைத் தாண்டா பாக்கப் போனேன் என்று ஒரு நாள் பிச்சை சொன்னான். அவள் நல்ல சிகப்பு. பிச்சை நல்ல கருப்பு. வாட்ட சாட்டமாக வளர்ந்திருப்பான். எங்களிலேயே அவன் தான் பலசாலி. சும்மா அளக்கறானோ பிச்சை என்று தோன்றும். ஒரு வேளை நிஜமாகவும் இருக்கலாம் என்றும் நினைப்போம். ஒரு நாள் நானும் இன்னும் இரண்டு பேரும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது, தூரத்திலேயே வாசற்படியில் சுந்தரி உட்கார்ந்து இருந்தது தெரிந்தது. எங்களுக்குள் ஒரு சதியாலோசனை நடந்தது. ரோடிலிருந்து ஒடைப் பாலத்தைத் தாண்டி தெரு முனைக்கு வந்ததும், எங்களுக்கு கொச்சம் சத்தமாக எங்களுக்குள் பேசிக்கொண்டோம். “பாவம்டா பிச்சை. ·புட் பால் விளையாடற போது கல் தடுக்கி விழுந்துட்டானே. நல்லா சிராச்சிட்டதுடா. ஒரே ரத்தமாக் கொட்டிடுத்து. இன்னிக்கு ட்யூஷனுக்கு ஒரு வேளை வருவானோ என்னமோ தெரியலே டா” என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அந்தக் கதை சுந்தரி வீடு வரும் முன் ஆரம்பித்து வீட்டைக் கடந்த பின் முடிந்தும் விட்டது. பிச்சைக்கு என்ன கேடு. அவன் ட்யூஷனுக்கு வந்திருந்தான். இடையில் மாமா தலை மறைந்ததும், (அவர் ‘படிங்கடா நான் இதோ வந்துட்டேன்” என்று வீட்டு வேலை எதற்காவது அரை மணி போய்விடுவார்) பிச்சை வழக்கம் போல கிளம்பினான். அரை மணி கழித்து திரும்பிய போது, அவன் என்னிடம் கேட்டான்” ஏண்டா டேய், எனக்கு கால்லே அடிபட்டு ரத்தமா கொட்டித்துன்னு பேசிக்கிடே வந்தீங்களாடா?” என்று கோபமாகக் கேட்டான். அதற்குள் மாமா திரும்பி வந்துவிடவே நான் தப்பினேன் என்று சொல்ல வேண்டும்.

இந்த அழகில் தான் நாங்கள் அரசாங்க பொதுப் பரிட்சைக்குப் படித்தோம் என்றில்லை. எங்கள் படிப்பு எப்போதும் போல் தான் இருந்தது. ரொம்ப மோசமுமில்லை. ஏதும் பிரமாதமாகவும் இல்லை. ஆனால் அந்த காலத்து சினிமாப் படங்களில் வரும் ‘என் எஸ் கிருஷ்ணன், புளிமூட்டை ராமசாமி காமிக்’குகள் போல இந்த மாதிரியும் சில இடையில் சுவாரஸ்யமூட்டின.


வெங்கட் சாமிநாதன்/6.11.07

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்