1988-ம் வருட விபத்து

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

வெங்கட் சாமிநாதன்



எனது கீழ்ப்படியாமைக்கும், அவ்வப்போது பதில் பேசும், கேள்வி கேட்கும் குணத்திற்கும், தண்டனையாக என் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த யூனிட்டுக்கு மாற்றப்பட்டேன். எப்போதும் என் அலுவலக மேலாண்மை எனக்கு அளிக்கும் தண்டனைகள் எனக்கு தண்டனையாக இருப்பதில்லை. இது எனக்கு பழக்கமாகி வந்தது. இப்போது மாற்றப்பட்ட இடத்தில் வெகு சுகமாக என் காலம் கழிந்தது. இப்போதைய அலுவலகம் என் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தது. பதினைந்து நிமிட நடை தான். அனேக சமயங்களில் நான் என் இஷ்டத்திற்கு வேலை செய்து கொள்ளலாம். இவையெல்லாம் போக, மிக அன்னியோன்யமான நண்பர் ஒருவரும் கிடைத்தார். அவர் பஞ்சாபி. பாகிஸ்தான் பிரிவினையின் போது கராச்சியிலிருந்து தில்லிக்குக் குடிபெயர்ந்தது அவர் குடும்பம். அவருடைய மிக அன்னியோன்னியமான பஞ்சாபி நண்பர்கள் லாகூரியாக்கள் பஞ்சாபி என்று சொன்ன மாத்திரத்திலேயே மனதில் எழும் பிம்பத்திற்கு முற்றிலும் எதிரான குணத்தவர். நல்ல சங்கீதம், நல்ல சினிமா, நாடகம், நாட்டியம் இவற்றில் பிரியம் கொண்டவர். நாங்கள் மிக நெருக்கமாவதற்கு இவையே காரணமாகியது. இதற்கும் மேல் உரத்துப் பேசாதவர். பஞ்சாபிகள் பேச ஆரம்பித்தால் அவர்கள் பேச்சில் பாதி கெட்ட வார்த்தைகளாகவே இருக்கும்.

(ஒரு சின்ன இடையீடு: கிரிக்கெட் மைதானத்தில் கூட பஞ்சாபிகளுக்கு சுலபமாக வருவது திட்டுவது தான். அதுவும் அவர்களுக்கு யோசிக்காமலேயே தன் இயல்பில் வந்து விழும் வார்த்தைகளில். அது எதிரே இருப்பது ஆங்கிலத்தையே வாய்க்குள் சவைத்து புரியாமல் செய்யும் ஆஸ்திரேலியனாக இருந்தால் கூட. என்னை மங்கி (குரங்கு) என்று திட்டி விட்டான் பாஜ்ஜி என்பது சைமண்டின் குற்றச் சாட்டு. இல்லை நான் ‘மங்கி’ என்று சொல்லவில்லை ‘…..மா(ன்)கி….. என்று சொன்னது அவன் காதில் ‘மங்கி’ என்று சொன்னால் நான் என்ன செய்ய? என்பது நம் ஜலந்தர் சர்தார்ஜியின் வாதம். அதாவது திட்டவில்லையாம். பஞ்சாபியில் “….. மா(ன்)கி ….” என்றால் தமிழில் நம்மூர் ஒரு தரத்து மக்கள் நாவில் புழங்கும் “…..ஒங்காத்தா….” என்று பொருள். இது மிக சகஜமாக பெண்கள் முன்னிலையிலேயே கூட பஞ்சாபிகள் புழங்கும் பொது மொழி. அதனால் தான் அப்படி நான் என்ன சொல்லிப்பிட்டேன் சர்தார்ஜிக்குச் சொல்லத் தோன்றியிருக்கிறது. BCCI-ம் அதை மன்னித்துவிட்டது. ‘…மா(ன்)கி….ன்னுதான் சொன்னியா? அப்படியானால் போனால் போகிறது போ. மங்கி என்று சொல்லவில்லையே என்று சைமண்டு சமாதானமாகிவிட்டதாக செய்தி. ஒரே கூத்து தான். வேடிக்கையாக இல்லையா?)

இனி விஷயத்திற்கு வரலாம். என் நண்பர், ஷாந்தி சாகர் டண்டன், இனி சுருக்கமாக, டண்டன், இந்த 15 வருட நெருங்கிய பழக்கத்தில் ஒரு கெட்ட வார்த்தைகூட பேசி நான் கேட்டதில்லை. அவருடன் பழக்க மேற்பட்டதிலிருந்து, மாலை மணி 5 ஆனதும் அலுவலகத்தில் இருக்க மாட்டோம். எங்களுக்கு மாதத்தின் முப்பது நாட்களில் பதினைந்து அல்லது இருபது நாட்கள் ஏதோ நாடகம், சினிமா, சங்கீதம் கேட்க இருக்கும். அவருடைய ஸ்கூட்டரில் நானும் பின்னால் உட்கார்ந்து கிளம்பிவிடுவோம். வழியில் ஒரு பத்து-பதினைந்து நிமிடங்கள் ஏதாவது சாப்பிட கிடைக்கும். சரியாக 6.00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் இருப்போம். இது சுமார் 15 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாங்கள் போகுமிடம், நிகழ்ச்சிகள் நடக்குமிடம் அனேகமாக ஒரு திசையில் தான் இருக்கும். இந்தியா கேட் தாண்டி, திலக் மார்க் வழியாக இந்திர பிரஸ்தா எஸ்டேட். இந்த மைய வட்டத்திற்குள் தான் எல்லா நிகழ்வுகளும். திரும்ப இரவு நிகழ்வு முடிந்ததும் 8.30 அல்லது 9.00 மணிக்கு ஸ்கூட்டரில் அதே பாதையில் வீடு திரும்பும் பயணம் தொடங்கும். திலக் மார்கின் கடைசி பஸ் நிறுத்தமான பாடியாலா ஹவுஸில் நான் இறங்கிக் கொள்வேன். அந்த புள்ளி வரை தான் நாங்கள் சேர்ந்து பயணம் செய்ய முடியும். அதற்கு அப்பால் அவர் வீடு போகும் திசை வேறு. என் வீடு திரும்பும் திசை வேறு. அதற்குப் பின் நான் வேறு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டாலும் அவை அருகிலேயே வேறு கட்டிடங்களிலேயே இருந்ததால் எங்கள் கூட்டுச் செயல்பாடு தொடர்ந்தது. அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் எங்களை, சினேகபாவத்தோடு தான், கேலி செய்யும் அளவுக்கு இந்த நட்பு தொடர்ந்தது. 15 வருடங்களோ அல்லது அதற்கும் மேலே தொடர்ந்து வந்த இந்த மாலை நேர கூட்டுப் பயணத்திற்கு விதி ஒரு நாள் திடீரென முடிவு வைத்தது. 1988-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு நாள் முன் இரவுப் போதில்.

டெல்லி ·பில்ம் சொசைடி திரையிட்ட படம் ஒன்றைப் பார்த்துவிட்டு எப்போதும் போல திலக் மார்க் வழியாக திரும்பிக் கொண்டிருந்தோம். பாடியால ஹவுஸ் நிறுத்தத்தில் என்னை இறக்கி விடுவதற்காக ஸ்கூட்டரின் வேகத்தைக் குறைத்து நடைபாதையை ஒட்டி மெதுவாகச் சென்று கொண்டிருந்தார் டண்டன். நடை பாதையில் ஏதோ மராமத்து வேலை நடப்பதன் காரணமாக நடைபாதையை மறைத்து அதன் சாலை எல்லையோரமாக அஸ்பெஸ்டாஸ் மறைப்பு வைக்கப்பட்டிருந்தது கொஞ்ச தூரத்திற்கு. திலக் மார்கில் இருக்கும் பங்களாக்களின் எதிரே மாத்திரம் அந்த மறைப்பில் இடைவெளி இருக்கும். பங்களாக்குள்ளிருந்தும் வெளிபோக வர பாதை வசதியாக. நடை பாதையை ஒட்டி மெதுவாக வந்துகொண்டிருந்த ஸ்கூட்டரை திடீரென பங்களா ஒன்றிலிருந்து ரோடுக்கு விரைந்த வேன் ஒன்று மோதி ஸ்கூட்டர் தூக்கி எறியப்பட்டது. பின் இருக்கையில் உட்கார்ந்திருட்ந்த நானும் ரோடில் எங்கோ தூக்கி எறியப்பட்டது தான் எனக்குத் தெரியும். என் இடது கால் எலும்பு உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது நான் தூக்கப்பட்டபோது தான் தெரிந்தது. டண்டன் சிறிது சிராய்ப்போடு தப்பினார் என்பது அவரும் உடன் கூடி விட்ட இன்னும் சிலரும் அங்கு வரும் வண்டி எதையாவது நிறுத்தி என்னை ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்ல முயன்று கொண்டதிலிருந்து தெரிந்தது. எங்களை மோதித் தூக்கி எறிந்த வேன் வந்தது அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனிலிருந்து. அது அனேக மாக போலீஸ் வேனாகத்தான் என்று யூகிக்கத் தான் முடியுமே தவிர நிச்சயமாகச் சொல்ல இயலாது. போலீஸ் வேனாகவே இருக்கட்டுமே. எல்லோரையும் போல அதுவும் மோதிய பின் அங்கு காத்திருக்கவில்லை. வழக்கம்போல அது வெகு விரைவில் மறைந்தும் விட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இருப்பவர் யாரும் அது தங்கள் வேன் தான் என்று சொல்லும் சத்திய சந்தர்கள் இல்லை. சாதாரண மக்களை விட மோசமாக அவர்களை ஆக்குவது அவர்கள் சீருடை அவர்களுக்கு அளிக்கும் அதிகாரம். அவர்கள் வேலை, சம்பளத்துக்குச் செய்யும் ஒன்றல்ல, பணி என்பதை அறிந்த போலீஸ் காரர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைவு தான் இந்தியா முழுதும்.

அந்த முன் இரவு நேரத்தில் (8.45-9.00 மணி) அந்த ரோடு, திலக் மார்க், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை. புது தில்லியையும் பழைய தில்லியையும் இணைக்கும் சாலைகளில் மையமான சாலை. நான் கால் ஒடிந்து இரத்தம் சொட்ட சாலையின் நடுவில் விழுந்து கிடக்கிறேன், வண்டிகள் விரைந்து செல்லும் சாலையில். யாரும் நிறுத்த மாட்டார்கள். ஒன்று ஆஸ்பத்திரிக்கு இட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இரண்டு போலீஸில் சாட்சி சொல்ல நிர்பந்திக்கப்படலாம். அது ஒரு பெரிய வேதனை. மூன்றாவது, கார் இரத்தக் கறை படிந்து விடும். இவ்வளவு உத்பாதங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் உதவியைச் செய்ய ஒரு மனிதர் முன் வந்தது தான் ஆச்சரியம். வந்தார். பின் இருக்கையில் என்னைப்படுக்க வைத்தார். எங்கே போக வேண்டும் என்று கேட்டார். ஆல் இந்தியா மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டுக்கு (அன்பு மணி ராமதாஸ் – டாக்டர் வேணுகோபால் புகழ் நிறுவனம்) எடுத்துச் செல்லுங்கள் என்று நானே கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் அதற்கு எதிரே இருக்கும், அரசாங்க அலுவலகர்கள் சாதாரணமாகச் செல்லும் ச·ப்தர்ஜங் ஹாஸ்பிடலில் பத்து நாள் கிடந்த அனுபவம் எனக்கு இருந்தது. டண்டன் என்னுடன் வந்தார். போலீஸ் வேன் என் காலை உடைத்து நிறுத்தாமல் ஓடினாலும், டண்டனின் ஸ்கூட்டரை போலீஸ் ஸ்டேஷன் கைப்பற்றி வைத்துக் கொண்டது.

என்னை மெடிகல் இன்ஸ்டிட்யூட் அவசர சிகித்சைப் பிரிவில் விட்டு விட்டு தன் வழி சென்று விட்டார், அந்த முகமறியாத கார் சொந்தக் காரர். இப்படியும் சிலர் உலகில் இருக்கத் தான் செய்கிறார்கள். அவசர சிகித்சைப் பிரிவில் ட்யூட்டியில் இருக்க வேண்டிய டாக்டர்கள் யாரும் இல்லை. அவர்கள் இரவில் ட்யூட்டி பார்ப்பதற்காக தனி அலவன்ஸ் வாங்குபவர்கள். மெடிகல் இன்ஸ்டிட்யூட் காம்பவுண்டுக்குள்ளேயே அவர்களுக்கு வீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் ட்யூட்டியில் இல்லை. அவசர சிகித்சைப் பிரிவுக்காரர் வீட்டில் இருக்கிறார். அவருக்குச் செய்தி போயிருக்கிறது என்றுசொன்னார்கள் அங்கிருந்த சாதாரண வேலையாட்கள். டண்டனிடம் நான் சொன்னேன். இரண்டு காரியங்கள். ஒன்று: வீட்டுக்கு டெலி·போன் செய்து விஷயத்தைத் தெரிவியுங்கள். இரண்டு அலுவலகத்தில் எங்கள் பிரிவின் டைரக்டருக்கும் டெலி·போன் செய்து, நான் காலையில் வருவதாகச் சொன்னேன். வரமுடியாது போவதற்குக் காரணம் இது என்று சொல்லுங்கள் என்றேன். நான் இருந்த வீடு அங்கிருந்து அதிக தூரத்தில் இல்லை. சுமார் 2 கிமீ தூரத்தில் இருந்தது. அவர் ஒரு ஆடோ எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று என் மனைவியையும் மகனையும் அழைத்து வந்தார். எங்கள் டைரக்டருக்கும் செய்தி சொன்னது பல விஷயங்களுக்கு சௌகரியமாகப் போயிற்று. அவர் மெடிகல் இன்ஸ்டிட்யூட்டுக்குப் பக்கத்தில் உள்ள எங்கள் அலுவலக யூனிட்டுக்கு டெலி·போன் செய்து மெடிகல் இன்ஸ்டிட்யூட் அவசர சிகித்சைப் பிரிவுக்குச் சென்று எனக்கு என்ன உதவி தேவையோ கேட்டு உதவச் சொல்லி உத்தரவு இட்டிருக்கிறார். அங்கிருந்து வந்த மனிதர் உடனே டாக்டரை வீட்டிலிருந்து வரவழைத்து எனக்குச் செய்ய வேண்டிய அவசர சிகித்சை செய்ய எல்லோரையும் முடுக்கி விட்டிருக்கிறார். டாக்டர் வந்தார். எக்ஸ் ரே எடுதார்கள். கால் எலும்பு இரண்டு துண்டாக முறிந்து கிடந்திருந்தது. முதலில் ப்ளாஸ்டர் போட்டுக் கட்டுகிறேன். மற்றவற்றை சீனியர் சர்ஜன் என்ன செய்யவேண்டுமென்று பார்த்துச் செய்வார் என்று சொன்னார். பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு நினைவு இழந்திருந்தேன். காலையில் கண் விழித்த போது இடது கால் முழுதும் ப்ளாஸ்டர் போடப்பட்டு வெளி வார்டு ஒன்றின் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தேன். இரவு பூராவும் மனைவியும் மகன் கணேசனும் விழித்திருந்திருக்கிறார்கள். நான் விழித்ததைப் பார்த்ததும் மனைவி டீ வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் சென்றாள். அந்த ஏரியாவின் எங்கள் அலுவலக யூனிட்டிலிருந்து வந்த மனிதர் இரவு 12 மணிக்கு மேல் வீடு சென்று காலையில் வருவதாகச் சொன்னவர் ஒரு காருடன் வந்தார். டண்டனும் வந்தார். இரவு ட்யூட்டியில் இருந்த டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் வரவேண்டும் என்றும், சீனியர் சர்ஜன் என்னைப் பார்ப்பார் என்றும் சொல்லியிருக்கிறார். நான் அரசாங்க ஊழியனாதலால் மறுமுறை வரும்போது என் CGHS கார்டையும் உடன் எடுத்து வரவேண்டும் என்றும் சொன்னதாகச் சொன்னார்கள். வாங்க வேண்டிய மருந்துகள் பற்றிய ப்ரிஸ்கிரிப்ஸனைக்கொடுத்து, அந்த டாக்டர் சொன்ன அறிவுரை தான் புதிதாக இருந்தது. இங்கு இந்த இன்ஸ்டிட்யூட் டுக்குள் இருக்கும் மருந்துக் கடையில் வாங்கவேண்டாம். எங்காவது வெளியில் உங்களுக்கு பழக்கமான கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது அவர் கொடுத்த அறிவுரை.

எங்கள் அலுவலக யூனிட் ஆள் கொண்டு வந்த காரில் நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம். மறுநாள் காலையில் டைரக்டர் வீட்டுக்கு வந்தார். வீட்டில் உதவிக்கு ஆள் அனுப்புகிறேன். மெடிகல் இன்ஸ்டிட்யூட்டுக்கு போகவேண்டிய அன்று காரும் உதவிக்கு ஆளும் அனுப்புகிறேன், கவலைப் படவேண்டாம் என்று சொல்லிச் சென்றார். படுக்கையில் மல்லாக்கப் படுத்தவாறே கிடக்க வேண்டும். அசைய, புரள முடியாது. கஷ்டம் தான். எப்படி இனி வரும் நாட்கள் கழியப் போகின்றனவோ, எப்படி நான் எதிர்கொள்ளப் போகிறேனோ என்ற கவலை. முதலில் அசையாது புரளாது மல்லாக்கப் படுக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

மூன்றாம் நாள் கார் வந்தது. உதவிக்கு அலுவலகத்திலிருந்து ஒரு இன்ஸ்பெக்டரும் வந்திருந்தார். சொல்லப்பட்ட தேதிக்கு மெடிகல் இன்ஸ்டிட்யூட் போனோம். ட்யூட்டியில் இருந்த டாக்டர் ப்ளாஸ்டரை கிழித்துப் பிரித்துப் பார்த்தார். மறுபடியும் ஒரு எக்ஸ் ரே எடுக்கப்பட்டது. சீனியர் சர்ஜனிடம் காண்பித்து வருகிறேன் என்று சொல்லிச் சென்றவர், திரும்பி வந்த்போது சீனியர் சர்ஜன் எழுதிக் கொடுத்த ப்ரிஸ்கிருப்ஸன் காகிதத்தைக் கொடுத்துச் சொன்னார். “நீங்கள் இப்போது வீட்டுக்குப் போகலாம். வெள்ளிக்கிழமை காலையில் எட்டு மணிக்குள் நேரே இங்கே வந்து விடுங்கள். நான் உங்களை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப் போகிறேன். சீனியர் சர்ஜன் உங்களுக்கு ஆபரேஷன் செய்வார். அதைத் தான் எழுதிக் கொடுத்திருக்கிறார்” என்று என்னைக் கவனித்த ஜூனியர் டாக்டர் சொன்னார்.கெனக்குத் திகைப்பாக இருந்தது. அந்த சீனியர் டாக்டர் என்னைப் பார்க்கக் கூட இல்லை. நேரே எப்படி தான் பார்க்காத நோயாளியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து வரச் சொல்கிறார். எனக்கு இருந்த முன் அனுபவத்தில் ஆபரேஷனுக்கு முன்னால் நோயாளியைத் தயார் படுத்த வேண்டும். குடல் சுத்தப் படுத்த வேண்டும். முதல் நாள் இரவு பட்டினி கிடக்கச் சொல்வார்கள். நோயாளிக்கு வேறு ஏதும் சக்கரை வியாதி, ரத்த அழுத்தம் இப்படி பல சமாச்சாரங்கள் ஆபரேஷனுக்கு முன்னால் சோதிக்க வேண்டியவை இருக்கின்றன. அப்படி இருக்கு இந்த சீனியர் டாக்டர்? அதுவும் இந்த மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனம் போன்ற ஒரு புகழ் பெற்ற ஸ்தாபனத்தில் இருப்பவர்கள்? திரும்பக் கேட்டேன், “ஆபரேஷன் என்றால் நான் இங்கு அட்மிட் ஆகவேண்டாமா, வீட்டிலிருந்து நேரே ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தால் போதும் என்றா சொன்னார்? அதற்குக் கிடைத்த பதில், “அதான் டாக்டரே எழுதியிருக்கிறாரே” என்று சீனியர் டாக்டர் எழுதியிருந்ததை விரலால் சுட்டிக் காண்பித்தார். நான் அவரையும் உதவிக்கு வந்த இன்ஸ்பெக்டரையும் மாறி மாறிப் பார்த்தேன். “சரி, வீட்டுக்குப் போகலாம் வாருங்கள்” என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

இந்த விஷயம் இன்ஸ்பெக்டர் மூலம் டைரக்டருக்குச் சொல்லப்பட்டது. ‘வெள்ளிக்கிழமை அன்று மெடிகல் இன்ஸ்டிட்யூட் போகவேண்டாம். நான் வேறு ஏற்பாடுசெய்கிறேன்’ என்று அவர் சொன்னதாக எங்களுக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவருக்கும் அது சரியாகப் படவில்லை. ஆனால் மெடிகல் இன்ச்டிட்யூட்டில் உள்ளவர்களை நாம் எப்படிக் கேள்வி கேட்பது? அதனால், எங்கள் அலுவலக டைரக்டருக்கு நெருங்கிய உறவினர் பொறுப்பான இடத்தில் இருக்கும் வடக்கு தில்லியில் தில்லி நகர கார்ப்பரேஷன் நடத்தும் பாடா ஹிந்து ராவ் ஹாஸ்பிடலில் நான் சேர்க்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் இருந்தது தெற்கு தில்லியின் அரசு அலுவலகர் குடியிருப்பு ஒன்றில். பாடா ஹிந்து ராவ் ஹாஸ்பிடல் இருப்பது தில்லியின் வடக்குக் கோடி.

பாடா ஹிந்து ராவ் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டேன். சுமார் ஒன்றே கால் ஆண்டுகாலம் நீடித்தது என் முறிந்த கால் எலும்பை ஒன்று சேர்க்க தேவைப்பட்ட சிகித்சை. நான்கு முறை ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். ஒரு முறை இரத்தத்தில் சர்க்கரை என்றும், அடுத்த முறை வேறு ஏதோ காரணத்திற்கும் ஆபரேஷன் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ஆபரேஷன் தடைபட்டது. புகழ் பெற்ற மருத்துவ விஞ்ஞான மனையின் சீனியர் டாக்டர் தான் பார்த்தும் இராத நோயாளியை ஏன் நேராக ஆபரேஷனுக்கு வரச் சொன்னார்? தெரியவில்லை.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான மனை மிகப் பெரிய ஆராய்ச்சி, சிகித்சைக் கூடம். மௌலானா ஆஜாத் அவர்கள் கண்ட கனவு பலித்ததன் சாட்சியம். இங்கு மருத்துவத் துறை ஆராய்ச்சி மாத்திரமல்ல, சிகித்சையும் தரப்படுகிறது. விஞ்ஞான ஆராய்ச்சி, ஹடயோகிகளின் சாதனையையும் ஆராய்வுக்குட்படுத்துகிறது. சிகித்சை என்று சொல்லப்போனால், தில்லியே விஐபிக்கள் நிறைந்த ஊராயிற்றே. . இங்குள்ள எல்லா விஜபிக்களும் சிகித்சைக்கு உடனே ஓடும் இடம் அது. எந்நேரமும் வேறு எங்கும் காணாத அளவு கூட்டம் நிரம்பி வழியும் அங்கு. ஏழைகள் நடுத்தர மக்களின் கூட்டம். ஏழைகளுக்கு அங்கு இலவசமாக சிகித்சை தரப்படுகிறது. பக்கத்து ஹரியானா, உத்தரபிரதேசம் மட்டுமல்ல, பீஹார், மத்திய பிரதேசம் போன்ற தூரத்து மாநிலங்களிலிருந்தெல்லாம் ஏழை மக்கள் சிகித்சைக்காக அங்கு கூடுவார்கள். எப்போதோ பதிவு செய்து, இன்ன தேதிக்கு வரச்சொல்லி அவர்கள் பிரயாணத்திற்குப் பணம் சேர்த்து இங்கு குடும்பத்தோடு வந்திருப்பார்கள். இதன் நிஜ சொரூபத்தை, இந்த நிறுவனத்தின் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் திடீரெனெ வேலை நிறுத்தம் செய்துவிடும்போது, இந்த நிறுவனத்தின் முன் இருக்கும் பரந்த புல்வெளியில் குடும்பத்தோடு முகாமிடும் பீஹார், உ.பி. ஹரியானா மக்கள் கூட்டத்தைப் பார்த்து பிரமிப்பும் வேதனையும் அடைவோம். எப்போது வேலை நிறுத்தம் முடியும், சிகித்சை அளிப்பார்கள் என்று காத்திருப்பார்கள். அவர்கள் குடும்பத்தோடு புல்வெளியில் உண்டு படுத்துக் காத்திருப்பதைப் பார்க்க மிக பரிதாபமாக இருக்கும். இம்மருத்துவ நிறுவனத்தின் வேறுபட்டுக்காணும் எல்லா முகங்களும் உண்மைதான்.

நான் அறிந்த வரை நம்மூர் அரசு மருத்துவ மனைகளில் காணும் கடைநிலை வேலையாட்கள் உதவியாளர்களின் லஞ்ச ஆதிக்கத்தை அங்கு நான் கண்டதில்லை. ஆனால் என்னை மிகவும் உறுத்திய செய்தி ஒன்றைச் சொல்ல வேண்டும். முன் சொன்ன மருத்துவர்களின் வேலை நிறுத்த கால கட்டத்தில்தான், மருத்துவ மனையைச் சுற்றிய வெளியில் எங்கும் வெளி மாநில ஏழை மக்கள் எப்போது வேலை நிறுத்தம் முடியும், எப்போது சிகித்சை பெறுவோம் என்று காத்திருக்கும் கட்டத்தில், ஒரு நாள் அகில இந்திய பொது உடமைக் கட்சியின் பெரிய தலை ஒருவர், சுற்றியிருந்த ஏழைகளின் கூட்டத்தை விலக்கிக் கொண்டு மருத்தவ மனையின் உள்ளே சென்றார். அவருக்கு என சிறப்பு சிகித்சை அளிக்கப்பட்டது. வாழ்நாள் முழுதும் பாட்டாளி மக்களின் துயரைத் துடைக்கவும், அதிகார வர்க்கத்தின் கொடுங்கோல் ஆட்சியைத் தகர்க்கவும் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த, அந்தப் பெரும் தலைவருக்கு சுற்றிக் குழுமியிருந்த நூற்றுக் கணக்கில் சிகித்சைக்காகக் காத்திருக்கும் ஏழை மக்களைப் பற்றி ஒரு கணமாவது நினைத்துப் பார்த்திருப்பாரா என்று யோசிக்கிறேன். அவர் வயதானவர். அவருக்கு சிகித்சை தேவைதான். வேறு மருத்துவ மனைகளா இல்லை தில்லியில் அவருக்கு? இங்கு தான் தனிப்பட்ட சிறப்பு சிகித்சை தேவையா அவருக்கு? ஒரு காலத்தில் வயிற்று வலி, தலைவலி என்றால் மாஸ்கோ பிரயாணம் மேற்கொண்ட புரட்சி ஜாதியைச் சேர்ந்தவர் அவர். கம்யூனிஸ்ட் தலைமைகளின் சுயரூபத்தை அன்றும் பார்த்தேன். இன்னமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நம்மூர் அரசியல் வாதிகள் எப்படி தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக உயிரையே 1968-லிருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அப்படிதான் இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்காக உயிரைக் கொடுப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்த அரசியல் வாதிகளுக்கு உள்ள முகங்களும் ஒன்றல்ல பல. அவ்வளவும் வேறு வேறு தோற்றம் கொண்டவை.

இது தான் ஒரு லட்சிய மனிதர், அரசியல் வாதி ஒரு காலத்தில் கண்ட கனவின் இன்றைய நிதர்சனம். ஏழைகளுக்கும் அங்கு புகலிடம் இருந்தது. வெகு கஷ்டங்களுக்கு இடையே. பொது உடமை கட்சியின் தேசத் தலைவருக்கும் எந்த நிலையிலும் அனுமதி உண்டு அங்கு. கவலையே இல்லாமல் உள்ளே செல்லலாம், சுற்றியிருக்கும் ஏழைகளின் கூட்டத்தை விலக்கிக் கொண்டு. முன்னைப் போல் மாஸ்கோவுக்குப் பறக்க முடியாத நிலையில் அவர் பாவம் என்ன செய்வார்? ஏன்? பெய்ஜிங்குக்குப் போகத் தோன்றவில்லை?

வெங்கட் சாமிநாதன்/17.5.08


Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்