தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

மலர் மன்னன்


சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தொடக்க நிலையில்தான் உள்ளது. சிலர் நினைப்பதுபோல் முக்கால்வாசி நிறைவேறியாகவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் அது தானாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் கமிஷன் தொகை முழுவதுமாகக் கைக்கு வந்து சேரவேண்டும் என்றால் நிதி ஒதுக்கீட்டுக்குத் தாமதம் இன்றி ஏற்பாடு செய்தாக வேண்டும் என்கிற அவசரத்தில் சிலருக்கு உடனடியாக ஸ்ரீ ராமர் பாலத்தை உடைத்துப் போட்டு வேலை தொடர வேண்டும் என்கிற தவிப்பு உள்ளது என எண்ண வேண்டியுள்ளது.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அதன் சாதக பாதகங்களுடன் முழுமையாக உருவாக்கப்பட்டதல்ல. தேர்தல் கோஷத்திற்காக அவசர கதியில் தயாரிக்கப்பட்ட அரைகுறைத் திட்டம்தான் அது. புவிஇயல் பாதிப்பு, சுற்றுப்புறச் சூழல், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு, மீனவர் வாழ்வாதாரம் முதலான அடிப்படை அம்சங்கள் எதுவும் திட்ட முன்வரைவில் கவனிக்கப்படவில்லை. திட்டம் நிறைவேறி முடிவதற்கான கால அவகாசத்தைக் கருத்தில்கொண்டு மொத்த திட்டச் செலவு எவ்வளவு என்றும் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. இவ்வாறு செலவாகும் தொகை வட்டியும் முதலுமாகத் திரும்ப ஈட்டப் படுவதற்கு எத்தனை காலம் ஆகும் என்கிற கணக்கும் இல்லை. திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனைப் பயன்படுத்த்திக்கொள்ள முன்வருவதாக சர்வ தேசக் கப்பல் போக்குவரத்து நிறுவனம் எதுவும் இசைவு தெரிவிக்கவில்லை. விரைவில் மிகப் பிரமாண்டமான சரக்குக் கப்பல்கள் மட்டுமே கடல் போக்குவரத்தில் பயன்படுத்தப்
படும் என்கிற உண்மை கருத்தில் கொள்ளப்படவில்லை. தேசப்பாதுகாப்பு குறித்து கப்பற்படை நிபுணர்களிடமும் கருத்துக்கேட்கப்படவில்லை. கால்வாய் திட்டம் நிறைவேறிய பிறகும் எரிபொருள், கால அவகாசம் ஆகியவற்றில் மீதம் செய்ய இயலாது என்பதோடு செலவு கூடுதலாகவும் வாய்ப்பு இருப்பதாகக் கப்பல் போக்குவரத்துத் துறையில் அனுபவம் உள்ளவர்கள் கருதுகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்
பட்டிருந்தால் மட்டுமே லாபகரமாக இருந்திருக்ககூடிய திட்டம்தான் இது. விரைந்து சரக்குகள் அனுப்ப வேண்டிய அவசியம் காரணமாக அத்தியவசியப் பண்டங்கள் யாவும் ஆகாய மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் காலம் இது. ஒருசில பொருள்கள் மட்டுமே இன்று தொடர்ந்து கடல் மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் நிலை உள்ளது. அவ்வாறான பொருள்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் அவற்றின் கொள்ளளவு காரணமாக சேது கால்வாய்க்குள் நுழைவது சாத்தியமா என்பது சந்தேகம். மிகவும் கூடுதலான நுழைவுக் கட்டணம் விதித்தால்தான் மணல் அள்ளி ஆழப்படுத்துவது போன்ற தொடர் பராமரிப்புச் செலவுகளையும் நிர்வாகச் செலவினங்களையும் சமாளிக்க இயலும். அவ்வாறு கூடுதல் கட்டணம் செலுத்தி, குறுகலான பாதையில் வேகம் குறைத்து அதிக அவகாசம் எடுத்துப் பயணம் செய்வதைவிட இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்வதே மேல் எனக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தீர்மானித்தால் அவற்றைக் கால்வாயைப் பயன்படுத்தித்தான் தீரவேண்டும் என்று நம்மால் கட்டாயப்படுத்த இயலாது.

குறுகலான இடைவெளியாக இருக்கும் சேது சமுத்திரக் கால்வாய்ப் பகுதியில் இந்து மாக் கடலிலிருந்து மணல் இடைவிடாது நிரப்பப்பட்டு வருவதால்தான் அங்கு கடலின் ஆழம் மிக மிகக் குறைவாக உள்ளது. எனவே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்
பட்டாலும் அங்கு மணலை அள்ளி ஆழப்படுத்தும் பணி ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கும். இதனால் பராமரிப்புச் செலவு கூடுவதோடு, போக்குவரத்தும் அவ்வப்போது நிறுத்தப்படும். இதனால் வருமானம் பாதிக்கப்படுவதோடு, கால்வாய்ப் பாதையின் போக்குவரத்துக்கு உள்ள நிச்சயமற்ற நிலையின் காரணமாகக் கப்பல்கள் அதனைப் புறக்கணித்து முன்போல இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்வதே உத்தமம் எனக் கருதக் கூடும்.

மேலும், சேதுக் கால்வாய் உள்ள கடல் பகுதி சூறாவளிக் காறு வீசும் பகுதி. வேகம் குறைந்து செல்லும் கப்பல்களாலும் நங்கூரமிட்ட கப்பல்களாலும் சூறாவளிக்காற்றுக்குத் தாக்குப்
பிடிக்க இயலாது.

இந்த அம்சங்களையெல்லாம் ஆராய்ந்து தீர்வு காணாமலேயே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அவசர கதியில் வகுக்கப்பட்டிருக்கிறது. திட்டம் வகுத்தவர்களை நீதி மன்றங்கள் விசாரிக்குமேயானால் இவையெல்லாம் வெளிப்பட்டுவிடும்.

முன் யோசனை இன்றி வகுக்கப்பட்டதாலும், நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாகவும் நாடு முழுவதும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டபின்னரும் பயன்பாடு இன்றி வீண் விரையமாகிக் கொண்டுள்ளன. மருத்துவமனை போன்ற பல கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டபிறகும் பணி தொடங்கப் பெறாமல் பாழடைந்து சிதிலமாகி வருவதைக் காண்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட பல இயந்திரங்களும், கருவிகளும் இயக்கத் தெரிந்தவர்கள் இல்லாததாலும் திறமையற்றோர் கையாண்டமையாலும் வீணாக முடங்கித் துருப்பிடித்துக் கிடக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு வெறும் வீம்புக்காக மேலும் மக்கள் பணத்தை விரையம் செய்யாமல் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு இதுவரை ஆன செலவைப் புத்திக் கொள்முதல்
கணக்கில் எழுதி திட்டத்தைக் கை கழுவிவிடுவதே அறிவுடைமை.

பாரதிய ஜனதா ஆட்சிச் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் என்று அரசியல் பேசுவதில் அர்த்தமில்லை. அந்த ஆட்சியிலும் தி மு கவின் பங்கு இருந்தது. அதன் பாலுவும் அமைச்சரவையில் இருந்தார். அன்றைய பாஜக ஆட்சியிலும் தி முக வுக்குச் செல்வாக்கு இருக்கத்தான் செய்தது. எனவே தி மு கவின் வற்புறுத்தலால் அங்கீகாரம் பெற்ற திட்டம் என இதனைக் கருத இடம் உண்டு. பாஜக தலைமையிலான அரசு அங்கீகரித்திருப்பினும், இன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செயல் படுத்த ஆரம்பித்திருந்தாலும் நாட்டு நலன் கருதி திட்டத்தைக் கைவிடுவதே அரசியல் நோக்கமில்லாத மக்கள் பணியாக இருக்கும்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்பதுதான் மகாகவி பாரதியின் விழைவு. அது ஸ்ரீராமர் பாலம் காலப் போக்கில் சீர்
குலைந்துவிடாமல் காத்து மேம்படுத்திப் பராமரிக்கப்பட வேண்டும் என்கிற விழைவேயன்றி, பாலத்தை உடைத்துப் போடுவது அல்ல. ஆகவே அந்த விழைவு வரவேற்கப்பட வேண்டியதேயன்றி எதிர்க்கப் படவேண்டியதுமல்ல! பாரதியின் காலத்தில் இலங்கை, பர்மா முதலானவை ஹிந்துஸ்தானத்தின் அங்கங்களாக இருந்தன என்பதும் எனவே தேசப் பாதுகாப்பு என்கிற கேள்விக்கே அன்று இடமிருக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் காலத்திற்கு ஒவ்வாத, தேவையில்லாத, பலவாறான தொல்லைகளுக்கு வழிசெய்யக் கூடிய வீணான திட்டம் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் இன்று தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. ஆனது வரை ஆனதாக இருக்கட்டும், போனது வரை போகட்டும் என்று உடனடியாக இத்திட்டைக் கைவிடுவதே ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்