மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்)


ஸ்பீகல்: புதிதாக ஒன்று படைக்கப்படும் போதெல்லாம் அதற்கு டார்வினியம்தான் காரணமா ? உதாரணமாக பிரபஞ்ச உருவாக்கம் கூடவா ?

டெனெட்: இயற்பியலில் கூட அரைகுறை அல்லது போலி-டார்வினிய கருத்துகள் பிரபலமாக இருப்பதைப் பார்க்கும் போது, சுவாரசியமாகவாவது இருக்கிறது. ஒரு பெரும் கலவையிலிருந்து, ஒரு விதத்தில், ஒரு தேர்வு நடந்திருப்பதாக அவர்கள் கருத்து சொல்கிறார்கள்[41]. அதன் விளைவாகவே நாம் இங்கு இருக்கிறோம், நம்மால் கான முடிவதெல்லாம் அப் பிரும்மாண்டமான கலவையிலிருந்து ஒரு பகுதியையே. இது டார்வினுடைய கருத்து அல்ல என்றாலும் அதனுடன் உறவுள்ள ஒன்றே. தத்துவவாதி ஃப்ரெடரிக் நீட்சேயிடம் முடிவேயில்லாத மீள்நிகழ்வு[42] என்ற ஒரு கருத்து இருந்தது — [இதற்கு] டார்வினுடைய தாக்கம் காரணமாக இருந்திருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். இதன்படி, எல்லா விதமான சாத்தியக்கூறுகளும் நடக்கின்றன, அதிலும் காலம் என்பது முடிவற்றதாகவும், பருப்பொருள்[43] என்பதும் தீர்ந்தே போகாததாகவும் இருக்குமானால், அனைத்து சாத்தியங்களும் ஒரு தடவை அல்ல, டிரிலியன்[44] தடவைகள் முயலப்படுகின்றன.

ஸ்பீகல்: கடவுள் இறந்துவிட்டார் என்பது நீட்சேயின் மற்றொரு கருத்து. டார்வினியத் தர்க்கம் அடையும் முடிவும் இதுதானா ?

டெனெட்: இது ஒரு மிகத் தெளிவான பின்விளைவே. படைப்புத் திட்டத்துக்கு ஆதரவான வாதமே கடவுளின் இருப்புக்கு ஆதாரமான வாதங்களில் சிறந்த வாதமாக வெகு காலமாக இருந்து வந்தது என்று நான் கருதுகிறேன். டார்வின் வந்ததும், அந்த வாதத்தின் ஆதாரத்தையே தகர்த்து விடுகிறார்.

ஸ்பீகல்: வேறு மாதிரி சொன்னால், பரிணாமத்தில் கடவுளுக்கு இடமேதும் இல்லை, அப்படித்தானே ?

டெனெட்: காலம் காலமாகவே கடவுளின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முன்னர் சொன்னபடி, ஆரம்பத்தில் நாம் கடவுளை – ஆதாமையும் பிற உயிரினங்களையும் தம் கைகளாலேயே உருவாக்குபவராகவும், ஆதாமின் விலா எலும்பை உருவி எடுத்து அதிலிருந்து ஏவாளை உருவாக்குபவராகவும் வைத்திருந்தோம். பின்னர் அந்தக் கடவுளைக் கொடுத்துவிட்டு மாறாக, பரிணாமத்தை இயங்க விட்ட கடவுளை வாங்கினோம்.[45]. இப்போதோ — சட்டங்களைத் தரும் — அந்தக் கடவுளையும் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். காரணம், பிரபஞ்சவியலில்[46] கிடைக்கும் பல கருத்துகளை நாம் கவனத்தில் கொள்வோமானால், பல்வேறு இடங்களும், பல்வேறு விதிகளும் இருக்கின்றன என்பதையும், எங்கெல்லாம் சாத்தியமாகிறதோ அங்கெல்லாம் வாழ்க்கை என்பது பரிணமிக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளவே வேண்டும். ஆகவே இப்போது நம்முடைய கடவுள் விதிகளைக் கண்டு பிடிப்பவராகவோ அல்லது விதிகளை [சட்டங்களை] கொடுப்பவராகவோ இருக்க முடியாமல், ஒப்புக்கு மேலாளராக அல்லது விழாத் தலைவராக மட்டுமே சுருங்கிவிடுகிறார். எப்போது கடவுள் சடங்குகளின் தலைவராக, பிரபஞ்சத்தில் வேறு எதிலும் பங்கெடுக்காதவராக ஆகி விடுகிறாரோ, அப்போதே அவர் ஒரு வகையில் உருவம் சுருங்கியவராகவும்[47], எதிலும் எப்படியும் தலையிடாதவராகவும் மாறி விடுகிறார்.

ஸ்பீகல்: அப்படியானால், இயற்கை விஞ்ஞானிகளில் பலர் மத நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது எப்படி ? அந்த நம்பிக்கை எப்படி அவர்களுடைய பணியுடன் ஒத்துப்போகிறது ?

டெனெட்: அது ஒத்துப்போகிறதா என்பதைக் கூர்ந்து கவனிக்காமல் இருப்பதாலேயே அப்படிச் சேர்ந்திருக்கிறது. அந்த வித்தையை நம்மில் எவரும் செய்ய முடியும். எல்லாருமே நம் வாழ்வுகளைப் பிரித்து அடுக்குகளாக[48] அமைத்துக் கொண்டு, முடிந்தவரை முரண்பாடுகளை எதிர் கொண்டு தீர்வு காண வேண்டிய அவசியமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம்.

ஸ்பீகல்: ஆனால், இப்படி அடுக்குகளாக அமைத்துக் கொள்ளும் முறைக்கு ஒரு நல்ல பக்கமும் இருக்கிறது: இயற்கை விஞ்ஞானம் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் மதம் வாழ்வின் அர்த்தம் பற்றி பேசுகிறது.

டெனெட்: நல்லது. [அது] ஓர் எல்லைக்கோடு. ஆனால், பிரச்சினை எதிலென்றால், அந்த எல்லைக்கோடு நகர்ந்து கொண்டே இருப்பதில்தான். அது நகர நகர, கடவுளின் வேலையாகச் சொல்லப்படுவதன் அளவும் குறைந்து கொண்டே போகிறது. நானும் கூட பிரபஞ்சத்தைப் பார்த்து அசந்துதான் நிற்கிறேன். இது [பிரபஞ்சம்] மிகவும் பிரமிப்பூட்டுவதாக இருப்பதால், நான் இங்கு இருப்பதைப் பற்றி பேருவகை அடைகிறேன். இங்குள்ள எல்லா பிழைகளையும் பார்த்த போதும், இது ஒரு பிரமாதமான இடம் என்றே கருதுகிறேன். எனக்கு உயிர் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் பிரச்சினை இதுதான்: இதற்காக [நாம்] யாருக்கும் நன்றிக்கடன் படவில்லை. நாம் நன்றி தெரிவிக்க யாரும் அங்கு இல்லவும் இல்லை.

ஸ்பீகல்: ஆனால் மதம் நமக்கு ஒழுக்க முறைகளையும், நன்னடத்தைக்கான வழிகாட்டுதலையும் கொடுக்கிறதே ?

டெனெட்: மதம் அதைச் செய்கிறது என்றால், மதம் ஒரு மடத்தனமான கருத்தாக்கம் அல்ல என்று நான் கருதலாம். ஆனால், அது அப்படிச் செய்யவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் மதங்கள் சிறந்த சமூக அமைப்பாளர்களாக[50] செயல்படுகின்றன. அவை ஒழுக்கமுள்ள கூட்டுமுயற்சியை[51], இருப்பதை விட வீரியம் கூடிய சக்தியாக ஆக்குகின்றன. ஆனால், அவை இரு பக்கமும் வெட்டும் கத்தியாக இருக்கின்றன. ஏனெனில், ஒழுக்கமுள்ள கூட்டுமுயற்சி என்பது, ஒழுக்கம் சம்பந்தமான உங்களுடைய சொந்த முடிவுகளில் பெரும்பாலானவற்றை ஒரு குழுவின் அதிகாரத்திடம் ஒப்படைத்து விடுதல் என்பதையே சார்ந்துள்ளது. அது மிகவும் ஆபத்தானதாக ஆகக் கூடியது என்பதை நாம் அறிவோம்.

ஸ்பீகல்: ஆனாலும், ஒழுக்க தராதரங்களை[52] உருவாக்க மதம் இன்னமும் உதவுகிறது.

டெனெட்: ஆனால், நமக்கு மேலுலகில் வெகுமதி கிடைக்கும் என்பதற்காகத்தான் நாம் நல்லொழுக்கமுள்ளவராக இருக்கிறோமா; நம் பாவங்களுக்காகக் கடவுள் நம்மைத் தண்டிப்பார் அல்லது நல்ல குணங்களுக்காக நமக்கு வெகுமதி அளிப்பார் என்பதற்காகத்தானா ? இது கருத்தளவிலே கூட நமக்கு ஆதரவு காட்டுவது போலப் பசப்புவதாகவே[53] எனக்குத் தெரிகிறது. மக்கள் ஒழுக்கம் மிகுந்தவர்களாக இருப்பதற்கு இது [வெகுமதியும், தண்டனையும்] மட்டுமே காரணம் என்று கருதுவதே மிகவும் அருவருப்பூட்டும் கருத்தாக இருக்கிறது. உதாரணமாக, துறக்கத்தில்[54] 76 கன்னியர் கிடைப்பர் என்பதற்காகத்தான் நாம் நன்னடத்தையோடு இருக்கிறோமா ? இந்தக் கருத்தை மேலை நாட்டு மக்கள் பலரும் எள்ளலோடுதான் பார்ப்பார்கள்.

ஸ்பீகல்: அப்படியானால், பெரும்பாலும் அனைத்துப் பண்பாடுகளிலுமே மதம் இருப்பது ஏன் ?

டெனெட்: இதற்கான பதிலின் ஒரு பகுதி வரலாற்றைச் சேர்ந்தது. அதாவது, காலத்தில் எஞ்சிய பாரம்பரியங்கள், தாம் பிழைக்கத் தேவையான மாற்றங்களை பரிணமித்துக் கொள்கின்றன என்றே நினைக்கிறேன். ஆக, மதங்களே தொடர்ந்து பிழைத்திருக்கும் வகையில் பரிணமித்துள்ள, மிகச் செவ்வனே அமைந்த பண்பாட்டுச் சிறப்பு நிகழ்வுகள்[55] ஆகின்றன.

ஸ்பீகல்: ஓர் உயிரினத்தைப் போல.

டெனெட்: நிச்சயமாக. எப்படி விலங்குகள், தாவரங்களின் வடிவமைப்பு முற்றிலும் பிரக்ஞையற்ற[56] ஒன்றோ அதே போலவே ஒரு மதத்தின் வடிவமைப்பும் பிரக்ஞையற்ற ஒன்றே.

ஸ்பீகல்: வெற்றிகரமான மதங்களிடையே ஒத்த தன்மைகள் உண்டா ?

டெனெட்: தம் சொந்த அடையாளத்தைத் தக்க வைக்க அவை சில தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் — மேலும், இந்தத் தன்மைகளில் பல உண்மையிலேயே உயிரினங்களின் இயல்புகளை ஒத்திருப்பதுதான் மேலும் சுவாரசியமானது.

ஸ்பீகல்: ஓர் உதாரணம் சொல்ல முடியுமா ?

டெனெட்: எழுத்து என்பது தோன்றும் முன்னரே மதங்கள் பல தோன்றிவிட்டன. மூலப் பாடங்களை[57] உள்ளடக்கம் மாறாமல் காப்பது என்பது பாடப் பதிப்புகள் தோன்றும் முன்னரே எப்படிச் சாத்தியமாயிற்று ? குழுப் பாடல்கள், உருப் போட்டு ஒப்புவித்தல்[58] ஆகியவைதான் தகவலைப் பாதுகாக்கவும் பரப்பவும் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பான வழிமுறைகள். கூடவே வேறு சில அம்சங்களும் இருந்தன, மெய்யாகவே விளங்கிக் கொள்ள முடியாதவையாக சில பகுதிகள் மதங்களில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டன போலவும் தோன்றுகிறது.

ஸ்பீகல்: ஏன் ?

டெனெட்: ஏனென்றால், அப்போது மக்கள் புரிந்து கொள்ளாமல் உருப்போடுவதில்[59] இருந்து தப்ப முடியாது. யூகாரிய அப்பங்கள்[60] இதற்குச் சிறந்த உதாரணம்: அந்த ரொட்டி கிறிஸ்துவின் உடலின் அடையாளம், திராட்சை மது[61] கிறிஸ்துவின் ரத்தத்தின் அடையாளம் என்ற கருத்து போதிய அளவு பரபரப்பூட்டுவதில்லை. இந்தக் கருத்தை விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக கண்டிப்பாக ஆக்க வேண்டும்: ரொட்டி கிறிஸ்துவின் உடலே, திராட்சை மது கிறிஸ்துவின் ரத்தமே என்றாக வேண்டும். அப்போதே அது உங்கள் கவனத்தைக் கவரும். பின்னர் இதை விடச் சலிப்பூட்டக் கூடிய கருத்துகளுடனான போட்டியில் அது வெற்றி பெறும். ஏனெனில், அதைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் தெளிவு பெற முடியாது. உங்களுக்கு நோவெடுக்கும் பல் ஒன்று இருக்கும்போது, உங்கள் நாக்கை அதிலிருந்து விலக்க முடியாதது போன்றதே அது. என்ன ஆனாலும் ஒவ்வொரு நல்ல முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுதே தீரவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பீகல்: நீங்கள் அதையுமே, மதம் பிழைத்திருக்க உதவும் ஒரு பரிணாமரீதியிலான தொலைநோக்குத் திட்டமாகவே[62] பார்க்கிறீர்களா ?

டெனெட்: அது அப்படியும் இருக்கலாம். இஸ்ரேல் நாட்டின் பரிணாம உயிரியலாளர் அமோட்ஸ் ஜஹாவி[63] இப்படி வாதிடுகிறார்- எந்த நடத்தைகள் செய்வதற்கு அரியவையோ — எவற்றை மற்றவர் பின்பற்றல் கடினமோ — அவைதாம் [மரபாக, எளிதில் மாறாத வழிமுறையாக] கைமாற்றித் தரக் தக்கவை; ஏனென்றால் எளிய சைகைகளுக்கு [நடத்தைகளுக்கு] போலியான மாற்றுகள் எழுவது சுலபம் என்பதால் அத்தகைய போலிகள் கட்டாயம் உருவாகும். இந்த அரிய நடத்தைகள் பற்றிய கோட்பாடு[64] உயிரியலில் நன்றாக நிறுவப்பட்டுள்ளது. அதுவே மதத்திலும் இருக்கிறது. தியாகங்கள் செய்வது மிக முக்கியமானது. [நடைமுறையில்] அரிதாக உள்ளதைக் குறைப்படுத்த[65] முயல்வது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். இமாம்கள் ஒன்றுகூடி அப்படி ஓர் அரிய அம்சத்தை நீக்க முடிவு செய்வார்களேயானால், இஸ்லாம் தழுவிய வழிமுறைகளிலேயே[66] மிகச் சக்தி வாய்ந்த ஒன்றை அவர்கள் சிதைத்து விடுவார்கள்.

ஸ்பீகல்: இந்த வாதங்கள் மூலம் இறுதியில் வெல்லப் போவது எந்த மதங்கள் என்று உங்களால் கணிக்க முடியுமா ?

டெனெட்: சில மதங்கள் ஏன் வேகமாகப் பரவுகின்றன, மற்ற மதங்கள் ஏன் அப்படி இல்லை என என்னுடன் பணிபுரியும் ராட்னி ஸ்டார்க்கும்[67] ராஜர் ஃபின்கெயும்[68] ஆராய்ந்துள்ளனர். வழங்குதல் பக்கப் பொருளாதாரத்தை[69] அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை நடத்திய அவர்கள், மதங்கள் கொடுக்கக் கூடியவற்றிற்கு – அவை விலை மிக்கதாக இருக்கும் பட்சத்தில் மட்டற்ற சந்தை இருப்பதாகச் சொல்கின்றனர். மிகவும் மந்தமானதும் தாராளமானதுமான பேதக[70] மதங்கள் ஏன் தம் உறுப்பினர்களை இழந்துகொண்டிருக்கின்றன என்பதற்கும், மிகவும் தீவிரமான உக்கிரமான மதங்கள் ஏன் தம் உறுப்பினர்களை அதிகரிக்கின்றன என்பதற்கும் அவர்களிடம் ஓர் விளக்கம் கிடைக்கிறது.

ஸ்பீகல்: மதிவழி படைப்புத் திட்டத்திற்கு அமெரிக்காவில் கிடைத்த அளவு பரவலான நம்பிக்கை வேறெங்கும் கிடைக்காததற்கு உங்களிடம் விளக்கம் எதுவும் இருக்கிறதா ?

டெனெட்: இல்லை, துரதிஷ்டவசமாக அப்படி எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் நான் சொல்லக் கூடியது இதுதான், இறுகிய மரபுவாதிகளுக்கும் அல்லது எவாஞ்சலிக மதத்துக்கும், வலதுசாரி அரசியலுக்கும் இடையிலான கூட்டணியே மிகவும் தொல்லை தரும் நிகழ்வு. இதுவே அதற்கான [அமெரிக்காவில் இப்படி ஒரு நம்பிக்கை பரவ] பல வலிமையான காரணங்களுள் ஒன்று. மேலும் அச்சமூட்டுவது என்னவென்றால் [மதிவழி படைப்புத் திட்டத்தை] நம்புபவர்களில் பலர் [இயேசுவின்] இரண்டாம் வருகை[71] நெருங்கிவிட்டது என்று நினைக்கத் தொடங்கி இருப்பதும் — எது என்னவானால் என்ன, எப்படியும் இறுதிப் பேரழிவுப் போர்[72] இப்போதே வரப்போகிறதே என்று கருதுவதும்தான். அது சமூகப் பொறுப்பின்மையின் உச்ச கட்டம் என்றே நான் உணர்கிறேன். இது திகிலூட்டும் விஷயம்.

ஸ்பீகல்: பேராசிரியர் டெனெட் அவர்களே, இந்த நேர்காணலுக்காக மிகவும் நன்றி.

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

(ஸ்பீகல் பத்திரிகைக்காக இந்த நேர்காணலை நடத்தியவர்கள் ஜர்க் ப்ளெஹ் மற்றும் யோஹான் க்ரால் ஆகியோர்.)

[41] Postulate
[42] Eternal recurrence
[43] Matter
[44] Trillion = 1,000,000,000,000. இந்தியக் கணக்கீட்டு முறையில் ‘லட்சம் கோடி ‘ என்று சொல்லலாமா ?

[45] Trade-in
[46] Cosmology
[47] Diminished
[48] Compartmentalizing

[50] Social organizers
[51] Moral teamwork
[52] Moral Standards
[53] Patronizing
[54] Paradise

[55] Cultural phenomena

[56] Unconscious

[57] Writing
[58] Recitation

[59] Rote Memorization
[60] Eucharist
[61] Wine

[62] Strategy
[63] Amotz Zahavi
[64] Principle of costly behaviors
[65] Tamper
[66] Adaptations

[67] Rodney Stark
[68] Roger Finke
[69] supply side economics
[70] Protestant – தம்மை ‘திருச்சபை பேதகம் ‘ என்று ப்ராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் கொல்லிக்கொண்டது பற்றி தரங்கம்பாடியில், 18-ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் வெளியிடப்பட்ட பிரசுரங்கள் வாயிலாகத் தெரியவருகிறது. ப்ராடஸ்டண்ட் கிறிஸ்தவர்களைக் கடுமையாக விமர்சிக்கும் ‘பேதகம் மறுத்தல் ‘, ‘லுத்தேரினத்தியல்பு ‘ போன்ற புத்தகங்களை கத்தோலிக்கரான பெஸ்கி (வீரமாமுனிவர்) 18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதினார். கத்தோலிக்கர்களுக்கும், பேதகர்களுக்கும் இடையிலான 24 முக்கியமான வேறுபாடுகளை இந்தப் புத்தகங்களில் பெஸ்கி சொல்லியுள்ளார். ஆகவே முந்தைய தமிழ் வழக்கை ஒட்டி ப்ராடஸ்டண்ட் வழி கிறிஸ்தவத்தை ‘பேதகம்’ என்று இங்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

[71] Second Coming
[72] Armageddon – விவிலிய மரபுப் படி நன்மைக்கும் தீமைக்குமான இறுதிப் போர் நடக்கும் இடம்.

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்

மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்)


(மதிவழி படைப்புத் திட்டம்1 மறுபடியும் அமெரிக்காவில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால், இதில் என்ன கவர்ச்சி ? படைப்புவாதத்திற்கு2 உள்ள கவர்ச்சி, மதம் எப்படி டார்வினிய சிந்தனைகளுக்கு இரையாயிற்று, மதவழி அமெரிக்க வலதுசாரிகளின் சமூகப் பொறுப்பின்மை ஆகியவை பற்றி பரிணாம தத்துவவியலாளர் டேனியல் டெனெட் ஸ்பீகல் பத்திரிகையிடம் பேசுகிறார்.

டார்வியனியத்தை மிகுந்த ஊக்கத்துடன் ஆதரிப்பவர்களில் ஒருவர் டேனியல் டெனெட். அமெரிக்காவில், மாஸச்சூஸெட்ஸ் மாநிலத்தின் பாஸ்டன் மாநகரில் இருக்கும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர் மனிதர்களையும், மனித ஆன்மாவையும், பண்பாட்டையும் மூலமுதல் ஆழியின்3 இயற்கை விளைபொருளாக விவரிக்கிறார். நியூயார்க் வைகிங் பதிப்பக வெளியீடாக வரும் பிப்ரவரி மாதம் வர இருக்கும், ‘மாயை விலக்கு ‘ அல்லது ‘வசிய தகர்ப்பு ‘4 என்ற புத்தகத்தில், 63 வயதுக்காரரான டெனெட், தீவிரவாத மதங்கள் ஏன் அவ்வளவு வெற்றி பெறுகின்றன என்பதனை பரிணாமப் பார்வை கொண்டு விளக்கியுள்ளார்.)

ஸ்பீகல்: பேராசிரியர் டெனெட் அவர்களே, கடவுள் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆதாமை சேற்றிலிருந்தும், ஏவாளை ஆதாமின் விலா எலும்பிலிருந்தும் படைத்தார் என்று 12-கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். இந்த 12 கோடி பேர்களில் யாரையாவது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியுமா ?

டெனெட்: ஆம். ஆனால் படைப்புத் தத்துவவாதிகள் எவரும் பொதுவாக அதைப் பற்றி பேச விரும்புவதில்லை. ஆனால் மதிவழி படைப்புத் திட்டம் மீது உண்மையான ஆர்வமுள்ளவர்களோ அதைப் பற்றி முடிவே இல்லாமல் பேசித் தீர்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவர்களிடம் தவறான தகவல்களே நிறைந்துள்ளன. ஆனால் அவர்கள் மிகவும் நம்பகக்கூடியதாகத் தோன்றும் ஊடகங்களிலிருந்தே இந்தத் தவறான தகவல்களைப் பெறுகின்றனர். இதை ஏதோ அவர்களுக்கு அவர்களுடைய மதபோதகர்5 மட்டுமே சொல்கிறார் என்பதில்லை. அவர்கள் வெளியிலிருந்து பிரபல பதிப்பாளர்களால் வெளியிடப்படும் புத்தகங்களை வாங்குகிறார்கள். அல்லது, மதவழி வலதுசாரிகளின் நிதி உதவியால் சியாடில் நகரிலிருந்து நடத்தப்படும் டிஸ்கவரி நிறுவனம்6 இணைய தளங்களில் தந்திரமாகச் செய்யும் பிரச்சாரத்தை நாடுகிறார்கள்.

ஸ்பீகல்: இந்த விவாதத்தின் மையமாக இருப்பது பரிணாமக் கோட்பாடே. அறிவியலின் பிற கோட்பாடுகளான பெருவெடிப்பு7 அல்லது குவாண்ட இயக்கவியல்8 போன்றவற்றை விட பரிணாம வாதமே அதிக எதிர்ப்புக்கு உள்ளாவது போலத் தெரிவது ஏன் ?

டெனெட்: கடந்த சில நூறாண்டுகளில் நடந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில், மிகவும் மனதை உறுத்தும் கண்டுபிடிப்பாக இருப்பது பரிணாம வாதமே என்று நான் நினைக்கிறேன். நம்மிடம் இருப்பனவவற்றுள் மிகப் பழமையான – நம் [மனித] இனத்துக்கு முந்தியதாகவே இருந்திருக்கக் கூடிய – கருத்து ஒன்றை அது மறுக்கிறது.

ஸ்பீகல்: அது என்ன, துல்லியமாகச் சொல்ல முடியுமா ?

டெனெட்: பெரிய, சிக்கலான, திறம் மிகுந்த அறிவால்தான் மற்றொரு குறைநிலைப் பொருளை9 உருவாக்க முடியும் என்ற கருத்தே அது. நான் இதைச் சொட்டுச் சொட்டாக கீழ் வடியும் படைப்புக் கோட்பாடு10 என்று சொல்கிறேன். ஒரு வேல் கம்பு11 அதன் தயாரிப்பாளரை உருவாக்குவதை என்றுமே உங்களால் காணமுடியாது. ஒரு குதிரை லாடம் ஒரு கொல்லரை12 உருவாக்குவதை ஒருபோதும் உங்களால் பார்க்க முடியாது. ஒரு பானை குயவரை உருவாக்குவதை தவறிக் கூட உங்களால் பார்க்க முடியாது. இதெல்லாம் எப்போதுமே எதிர் போக்காகவே செல்வன, இது அவ்வளவு வெள்ளிடை மலையாக இருப்பதால் இந்தக் கோட்பாடு மேல் பார்வைக்கு அறிவார்ந்ததாகவே தெரியும்.

ஸ்பீகல்: மனிதக் குரங்குகளிடமே கூட இந்தக் கருத்து நிலவியதாக நீங்கள் கருதுகிறீர்களா ?

டெனெட்: ஒரு வேளை, 2 மிலியன் வருடங்களுக்கு முன்பே கற்கருவிகளை உருவாக்கத் தொடங்கிய கைவினைஞனான ஹோமோ ஹாபிலஸ் எனப்படும் ஆதிமனிதனிடம் இருந்திருக்கலாம். தம் கைவினைப் பொருட்களை விடத் தாங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதான உணர்வை அவர்கள் கொண்டிருந்தனர். ஆகவே படைப்பவர் ஒருவர் – தான் படைக்கும் பொருட்களை விட சிறந்தவராக இருக்கிறார் என்னும் கருத்து, ஆழ்ந்த உள்ளுணர்வு சார்ந்த ஒன்று என்றே நான் கருதுகிறேன். ‘கொத்தனார் இல்லாத கட்டிடம் ஒன்றையோ, ஓவியர் தீட்டாத ஓவியம் ஒன்றையோ நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா ‘ என்று மதிவழி படைப்புத் திட்டம் என்னும் கருத்தை முன்னெடுத்து வைப்பவர்கள் கேட்கும்போது, அவர்கள் இதே கருத்தையே சொல்கிறார்கள். எந்த ஒரு வடிவமைப்பும் [படைப்பும்] இலவசமாகக் கிடைப்பதில்லை [தானாக உருவாவதில்லை] என்ற ஆழ்ந்த உள்ளுணர்வு சார்ந்த கருத்தை அது துல்லியமாக ஏற்படுத்துகிறது.

ஸ்பீகல்: ஒரு பழைய இறையியல் வாதம்13

டெனெட்: … அதை டார்வின் தன்னுடைய இயற்கைத் தெரிவு கோட்பாட்டைக்14 கொண்டு கடுமையாக மறுக்கிறார். அது கிடக்கட்டும், வடிவமைக்கப்படாத பொருட்களிலிருந்து உங்களால் வடிவமைப்பைப் பெற முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், அந்த வடிவமைப்பின்மை15-யிலிருந்து வடிவமைப்பாளர்களின் பரிணாம வளர்ச்சியையும் உங்களால் பெற முடியும் என்று கூடக் காட்டுகிறார். [இந்தப் போக்கின் ஒரு கட்டத்தில்] நம் கையில் எஞ்சி நிற்பவை – [புத்தக] ஆசிரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள், பிற பொருட்களை வடிவமைப்பவர்கள், பிற படைப்பாளிகள் — போன்ற வாழ்க்கை என்ற விருட்சத்தின் புதிய கனிகளே. வாழ்க்கைக்கே அர்த்தமுண்டு என்று மனிதர் இயல்பாகக் கருதிப் போவதை இது கேள்விக்கு உள்ளாக்குகிறது.

ஸ்பீகல்: மனிதத்தன்மையே — அவனுடைய ஆன்மாவே — இப்படித்தானே உருவாக்கப்படுகிறது ?

டெனெட்: ஆம். பல-உயிரணுக்களால்16 ஆன, நடமாடும் உயிரின் வடிவாக இருக்கும் உங்களுக்கு மனம் என்பது தேவைப்படுகிறது. ஏனென்றால், எங்கே போகிறோம் என்று நீங்கள் கவனித்தபடியே இருக்க வேண்டியிருக்கிறது. உலகிலிருந்து தகவல்களை விரைவாக வெளியிழுத்து, அந்தத் தகவல்களைச் சுத்திகரித்து, அதை உடனடியாகப் பயன்படுத்தி உங்கள் நடத்தையை வழி நடத்தும் நரம்பு அமைப்பு ஒன்று உங்களுக்கு அவசியம் தேவை. எல்லா விலங்குகளுக்கும் இருக்கும் ஓர் அடிப்படைப் பிரச்சினையே எப்படித் தமக்குத் தேவையானதை [தேடி] அடைவது, தமக்கு ஆபத்தானவற்றைத் தவிர்ப்பது, அவற்றை தம் எதிரிகளையும் போட்டியாளர்களையும் விட விரைவாகச் செய்வது என்பதே. டார்வின் இந்த விதியை அறிந்திருந்ததோடு, இந்த வித வளர்ச்சியானது பல நூறு மிலியன் ஆண்டுகளாக நடந்து மேலும் மேலும் இயந்திர மனிதருடையது17 போன்ற மனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் புரிந்து கொண்டிருந்தார்.

ஸ்பீகல்: ஆனாலும் கூட, மனிதர்கள் தோன்றிய போது வழக்கத்தை மீறிய ஏதோ ஒன்று நிகழ்ந்தது.

டெனெட்: உண்மைதான். மனிதர்கள் மொழியைக் கண்டுபிடித்தனர் — அதன் வழியே தம் மனங்களின் வல்லமையில் பெரும் வெடிப்பாகிய முடுக்கத்தை18 அடைந்தனர். ஏனெனில், இப்போது நீங்கள் உங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து மட்டுமே கற்றுக் கொள்வதில்லை, இரண்டாம் கையாக மாற்றித் தரப்பட்ட19 பிறருடைய அனுபவங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் சந்தித்தே இராத மனிதர்களிடமிருந்தும் [கூட]. நெடுங்காலம் முன்பு இறந்த முன்னோர்களிடமிருந்தும் [கூட]. ஆக, மனிதப் பண்பாடு என்பதே கூட தீர்க்கமான பரிணாம சக்தியாக ஆகியுள்ளது. இதுவே அறிவின் ஆதாரத்தை, அறியும் முறைகளையே ஆராயும் முறையால்20 உருவாக்கப்பட்ட மிக மிகப் பெரிய ஒரு தொடுவானத்தை நமக்குத் தருகிறது. இது வேறெந்த உயிரினத்திடமும் இல்லாத ஒரு பெரும் வெளி. நாம் யார் என்பதையும், நாம் பரிணமித்துள்ளோம் என்பதையும் அறிந்த ஒரே உயிரினம் நாம் மட்டுமே. நம் பாடல்கள், கலை, புத்தகங்கள், மத நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் முற்றிலுமாகப் பரிணாம வழியமைப்பு21களின் விளைபொருளே. அது சிலருக்கு மனவெழுச்சி தருவதாகவும், பிறருக்கு மனச்சோர்வு தருவதாகவும் இருக்கிறது.

ஸ்பீகல்: வேறு எதையும் விட, டிஎன்ஏ குறியீடுகளிலேயே22 பரிணாமம் மிகவும் அதிகமாகப் புலப்படுகிறது. எனினும், மதிவழி படைப்புத் திட்டத்தை நம்புபவர்களை, டார்வினின் கருத்துகளை விட டிஎன்ஏ குறியீடுகள் குறைவாகவே தொல்லை செய்கின்றன. அது ஏன் ?

டெனெட்: எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால், டார்வினுடைய கோட்பாட்டின் உண்மையை நிறுவ நம்மிடம் இருக்கும் மிகச் சிறந்த ஆதாரமே ஒவ்வொரு நாளும் உயிர்-தகவலியல்23 வாயிலாக நமக்குக் கிடைத்து வரும் சான்றுகளும், டிஎன்ஏ-குறியீடுகளைப் பற்றிய புரிதலும்தான். டார்வினியத்தை விமர்சிப்பவர்கள் மூலக்கூறுகளும், என்சைம்களும்24, புரதங்களுமே சிந்தனையைச் சாத்தியமாக்குகின்றன என்ற உண்மையை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஆம், நமக்கு ஆன்மா இருக்கிறது. ஆனால், அது மிகச் சிறிய இயந்திரங்கள் [ரோபாட்டுகள்] பலவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்பீகல்: உயிரை உயிரியலாளர்களிடம்25 விடுவோம், ஆன்மாவை மதங்கள் கவனித்துக் கொள்ளட்டும் என்று இருப்பது சாத்தியம் என்று ஏன் நீங்கள் நினைக்கக் கூடாது ?

டெனெட்: அதைத்தான் போப் இரண்டாம் ஜான் பால் வலியுறுத்திக் கொண்டிருந்தார். அடிக்கடி உதாரணம் காட்டப்படும் (ரோமன் கத்தாலிக்கத் தலைமை குருமார்களுக்கு) அவர் அனுப்பிய ஒரு கடிதத்தில் பரிணாமம் என்பது ஒரு மெய்நிகழ்வே26 என்றாலும் மனித ஆன்மா என்பதற்கு அது பொருந்தாது என்று அவர் சொன்னார். இந்தக் கூற்றில் ஏதோ உள்ளீடு இருப்பது போலத் தோன்றலாம், ஆனால் அது பொய்யானதே. ‘நம் உடல்கள் உயிரியல் பொருட்களால் ஆனவை, ஆனால் கணையம்27 மட்டும் அப்படி அல்ல ‘ என்று சொன்னால் அது எப்படிப் பொய்யாகுமோ, அதே போன்றதே இது. [மனித] மூளை என்பதும் நுரையீரல் அல்லது ஈரல் போன்ற திசுவே28 தவிர வேறேதும் அதிசயமானது அல்ல. அதுவும் ஒரு திசுதான்.

ஸ்பீகல்: டார்வினின் கருத்துகள் இன வெறியர்களாலும், இன மேம்பாட்டியலாளர்களாலும்29 தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. டார்வினியம் தீவிரமாகத் தாக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமா ?

டெனெட்: ஆம். உறுத்தாமல் இதைச் சொல்வதானால், டார்வினின் கருத்து மிகவும் சுலபமானது — நீங்கள் அதை ஒரு நிமிடத்தில் எவருக்கும் விளக்கிவிட முடியும். ஆனால், அதே காரணத்தாலேயே பகடிக்கும், தவறான பயன்படுத்தலுக்கும் அது சுலபமாக இரையாகிறது. நான் என் மாணவர்களுக்குப் பரிணாம கோட்பாட்டின் அடிப்படைகளை மிகப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தாலும், பின்னர் நான் சொன்னவற்றையே சீர்திருத்த நேர்கிறது. ஏனென்றால், அதன் மீது அவர்களுக்கு ஆர்வம் மேலோங்கி விடவே, இந்த விதமான தவறான புரிதல்களில் தொடர்ந்து சிக்கி விடுகின்றனர். டார்வினியம் என்பதோ அறிவுக்கு இனிப்பாக30 இருப்பது. அது மிகவும் சுவையானது. ஆனால், அளவுக்கு அதிகமான இனிப்பு என்பது உண்மையிலிருந்து [கவனத்தை] திசைதிருப்பக் கூடியது. இதுதான் இனவாதிகளிடமும், பாலாதிக்கவாதிகளிடமும்31 சிக்கிக் கொள்ள வழி வகுக்கிறது. ஆகவே நீங்கள் எப்போதும் ஒரு விதமான அறிவு நலம் பேணும் வழியை32 எந்நேரமும் கடைபிடிக்க வேண்டி இருக்கிறது.

ஸ்பீகல்: இப்போது, கள்ளப் பாலுறவிலிருந்து படுகொலை வரை, அனைத்தும் பரிணாமம் என்பதன் வெளிச்சத்தில் அலசப்படுவதுபோலத் தெரிகிறது. முனைப்பான ஆராய்ச்சியை வெற்றுக் கேளிக்கைகளிலிருந்து எப்படிப் பிரிப்பது ?

டெனெட்: நீங்கள் தக்க மெய்நிகழ்வுகளை மிகக் கவனமாக சேகரிப்பவராக இருப்பதோடு, அவற்றை நெறிப்படுத்துபவராகவும்33, அந்த ஒழுங்கிலிருந்து சோதனை மூலம் உறுதிப்படுத்தக்கூடிய அல்லது மறுக்கப்படக்கூடிய தேற்றம்34 ஒன்றை உருவாக்குபவராகவும் இருக்கவேண்டும். அதைத்தான் டார்வின் செய்தார்.

ஸ்பீகல்: உங்களுடன் பணிபுரியும் மைக்கெல் ரூஸ்35, நீங்கள் அறிவியல் களத்திற்கு வெளியே போய் உங்கள் கோட்பாடுகள் வாயிலாக சமூக-அறிவியலிலும், மதத்திலும் நுழைவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் விளைவாக, கவனமில்லாமல் நீங்கள் மதிவழி படைப்புத் திட்டத்துக்குத் துணை போவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

டெனெட்: டார்வினின் அகதரிசனங்கள்36 சுரீரென்று சுட்டிக் காட்டுவதை சற்று மசமசப்பாக ஆக்கி37, மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், பரிணாம உயிரியலின்38 பார்வைக்கும், மக்கள் பாரம்பரியமாகச் சிந்திக்கும் வழிகளுக்கும் இடையில் பெரிய முரண்பாடு ஏதுமில்லை என்பது போலக் காட்ட மைக்கெல் விரும்புகிறார்.

ஸ்பீகல்: நீங்கள் மதிவழி படைப்புத் திட்டத்துக்குத் துணை போவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி ?

டெனெட்: இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். பரிணாம உயிரியல் பார்வையில் மதத்தைப் பார்க்கும் புத்தகம் ஒன்றை நான் இப்போதுதான் எழுதி முடித்திருக்கிறேன். நீங்கள் இந்தப் பாதையில் செல்லக் கூடும், செல்ல வேண்டும், ஏன் – சென்றுதான் தீரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மற்றவர்களோ, ‘இல்லை, கையை எடு! சமூக அறிவியலுக்குப் பக்கத்தில் கூட பரிணாமத்தைக் கொணராதே ‘ என்கிறார்கள். அது மோசமான அறிவுரை என்றே நான் கருதுகிறேன். நாம் சமூக அறிவியலையும், மானுடத்தையும்39 பரிணாமச் சிந்தனை தீண்டாமல் காக்க வேண்டும் என்ற கருத்து பெரும் அழிவுக்குதான் வழி [வகுக்கும்].

ஸ்பீகல்: ஏன் ?

டெனெட்: நம்மில் எவரும் கொண்டிருந்த கருத்துகளிலேயே தலைசிறந்த கருத்துக்கான தங்கப் பதக்கத்தை நான் டார்வினுக்கே கொடுப்பேன். அர்த்தங்களாலும் குறிக்கோள்களாலும் இலக்குகளாலும் சுதந்திரத்தாலும் ஆன உலகத்தை, அறிவியல் உலகுடன், அதுவும் இயற்பொருள் அறிவியல்களுடன்40 ஒருங்கிணைப்பது அவருடைய கருத்தே. நான் சொல்வது இதுதான் – நாம் சமூக அறிவியலுக்கும் இயற்கை அறிவியலுக்கும் இடையிலுள்ள பெரும் இடைவெளி பற்றிப் பேசுகிறோம், ஆனால் அந்த இடைவெளியை நிரப்புவது எது ? டார்வின்தான் — குறிக்கோளும் படைப்புத் திட்டமும், அர்த்தங்களும் எப்படிக் குறிக்கோளின்மையிலிருந்து வெளிப்பட முடியும், அறிவற்ற பொருட்களிலிருந்தே வெளிப்பட முடியும் என்பதை நமக்குக் காட்டினார்.

(தொடரும்)

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

[1] Intelligent Design
[2] Creationism
[3] Primordial soup
[4] Breaking the Spell

[5] Pastor
[6] Discovery Institute www.discovery.org, Faith Based Encyclopaedia

[7] Big Bang
[8] Quantum mechanics

[9] Lesser thing
[10] trickle-down theory: A theory that financial benefits given to big business will in turn pass down to smaller businesses and consumers
[11] Spear
[12] Blacksmith

[13] Theological argument
[14] Theory of natural selection
[15] Un-design

[16] Multi-cellular
[17] Android

[18] Explosive Acceleration
[19] Vicariously
[20] Epistemological – the study or a theory of the nature and grounds of knowledge especially with reference to its limits and validity
[21] Evolutionary Algorithms

[22] DNA Code
[23] Bioinformatics: உயிர்-தகவலியல் என்ற சொல் ஓரளவு சரியானதே. ஆனால் ‘தகவலியல் ‘ என்பதில் application of Information technology to biological information என்பது வெளிப்படுகிறதா ? Bio information analysis or studies என்பதே ‘தகவலியல் ‘. Technology என்பது ‘தொழில் நுட்ப ஆய்வு ‘ அல்லது ‘தொழில் துறை அறிவியல் ‘ என்கிறது பல்கலை அகராதி. ‘உயிர்தகவல் தொழில் துறை ஆய்வியல் ‘ என்று மொழிபெயர்ப்பது பல்லை உடைக்கிறது.
[24] Enzymes

[25] Biologists
[26] Fact
[27] Pancreas
[28] Tissue

[29] Eugenicists – Eugenics: a science that deals with the improvement (as by control of human mating) of hereditary qualities of a race or breed
[30] Mind candy
[31] Sexist – Sexism: prejudice or discrimination based on sex
[32] Intellectual hygiene

[33] Marshal
[34] Hypothesis

[35] Michael Ruse
[36] Insight
[37] Soft focus
[38] Evolutionary biology

[39] Humanity

[40] Physical sciences

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்